இவர்களது எழுத்துமுறை -19 -வல்லிக்கண்ணன்

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

வே.சபாநாயகம்.


1.எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற துடிப்போடுதான் நான் எழுதினேன்.
எழுதிப் பணம் பெற்று, பிழைப்பு நடத்த வேண்டும் – நடத்த முடியும் – என்ற
நோக்கத்தோடு நான் எழுதத் தொடங்கியதில்லை; இன்றும் எழுதவுமில்லை.

2. எழுத்து என்னை வசீகரித்தது. அதனிடம் நான் ஆட்பட்டேன். அதை
ஆளும் ஆற்றலும் பெற்றேன். அதுவே எனக்கு மாண்புமிகு வெற்றியாகத்
தோன்றியது. ‘எழுத்து எனக்குச் சோறு போடுமா? வாக்கை வசதிகள் பெற்றுத்
தருமா? பகட்டான உலகத்திலே படாடோபமாக வாழ்வதற்கு எழுத்து ஒரு
கருவியாகப் பயன்படுமா?’ என்று நான் யோசிக்கவே இல்லை.

3. எழுத்தை தொழில் (profession) ஆகக் கொண்டிருந்தால் நான் எழுதிய –
எழுதுகிற விஷயங்களே வேறுவேறாக இருந்திருக்கும். படிப்பதும் எழுதுவதும்
எனக்குத் தொழில் இல்லை. அதுவே என் வாழ்க்கை.

4. முதலில் நான் வாசகன்; அப்புறம்தான் எழுத்தாளன். படிப்பது எனக்குப்
பொழுதுபோக்கு அன்று; எழுதுவது எனக்கு வேலையும் இல்லை. படிப்பது –
எழுதுவது – ஊர்சுற்றுவது என்பதை ஒரு வாழ்க்கை முறையாகவே வகுத்துக்
கொண்டவன் நான். ‘ஊருக்கு நல்லநு சொல்வேன். உண்மை தெரிந்து
சொல்வேன்’ என்ற வாக்குத்தான் எனது நோக்கும் போக்கும் ஆகும்.

5. என் எழுத்துக்களை யார் யார் படிக்கிறார்கள், எப்படி வரவேற்கிறார்கள்
என்று அறிய நான் கவலைப்படுவதே இல்லை. ‘நான் இப்படி எழுதி
இருக்கிறேனே அதைப் படித்துப் பார்த்தீர்களா?’ என்று எவரிடமும் நான்
கேட்பதுமில்லை. எழுத வேண்டியவற்றை எழுதுகிறேன். படிக்க விருப்பமும்
வாய்ப்பும் இருக்கிறவர்கள் படிக்கட்டும்; அல்லது படிக்காமலே ஒதுக்கி
விடட்டும்; அதைப்பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்?

6. நான்ன ஏன் எழுதுகிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்ள
வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. ‘ஏன் எழுதவேண்டும் என்ற
விரக்தியும் எனக்கு ஏறபடவில்லை. மாறாக ‘ஐயோ எழுத நேரம் இல்லையே,
வசதிகள் போதுமானபடி இல்லையே, தான் இன்னும் எவ்வளவோ எழுதியாக
வேண்டுமே, நான் எழுத ஆசைப்படுகிறவற்றுள் – எழுத வேண்டும் என்று
திட்டமிட்டிருப்பனவற்றுள் அரைவாசி கூட இன்னும் எழுதப்படவில்லையே!’
என்ற வேதனைதான் என்னை வருத்துகிறது. 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்