இவர்களது எழுத்துமுறை – 17 தி.ஜானகிராமன்

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

வே.சபாநாயகம்.


1. நான் பணத்திற்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும்
இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாட்சண்யத்திற்காக, எனக்கே
எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு,
யாருக்கு என்று தெரியாமல் – இப்படிப் பல மாதிரியாக எழுதுகிறேன்.

2. எனக்குத் தெரிந்தவர்களையும், தெரிந்ததுகளையும் பற்றி எழுதுகிறேன். நான்
பார்த்தவர்களையும், பார்த்ததுகளையும் பற்றி எழுகிறேன்…..அல்லது என்
கண்ணிலும் மனதிலும் பட்டவர்களையும் பட்டவைகளைப் பற்றியும் எழுகிறேன்.
சில சமயம் அம்மாமி பாஷையாய் இருக்கிறதே என்று சிலர் சொல்கிறார்கள்.
அதற்கு நான் என்ன செய்ய? அம்மாமிகளைத்தான் எனக்கு அதிகமாய்த் தெரியும்.
ஆத்தாள்களைப் பற்றி ஏதோ சிறிதளவுதான் தெரியும். தெரிந்த விகிதத்துக்குத்தான்
எழுத்தும் வரும்.

3. எப்படி எழுதுகிறேன் என்று சொல்வதைவிட எப்படி எழுத ஆரம்பிக்கும்
நிலைக்கு வருகிறேன் என்று சொல்வதுதான் இன்னும் பொருந்தும். புகையிலையை
மென்று கொண்டு சும்மா உட்கார்ந்து மனம் சுற்றிச்சுற்றி ஒன்றை முற்றுகையிடுகிற,
வழி காணாமல் தவிக்கிற, வழிகாணப் பறக்கிற ஆட்டங்களைப் பார்த்துக்
கொண்டே உட்கார்ந்திருக்கிறேன். சாப்பிடும்பொழுது, வேறு வேலை செய்யும்
பொழுது, யாருடனோ பேசும்பொழுது இந்த அமர்க்களமும், தவிப்பும், நடந்து
கொண்டுதான் இருக்கின்றன. நடப்பது தெரிகிறது. வழி தெரிந்ததும் எழுத
முடிகிறது. அவ்வளவுக்குமேல் அதைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

4. என் தவம் எத்தனைக்கெத்தனை தீவிரமாக ஒன்றிப்பிலும் தன் மறப்பிலும்
கனிந்து எரிகிறதோ அப்போது வடிவம் தானாக அமைந்து விடும். அது சில
சமயம் மூளியாகவோ குறையுள்ளதாகவோ இருக்கலாம். ஆனால் பூப்பு நிலையில்
பூவில் இட்ட முட்டை வண்டாக வளர்கிற மாதிரி, அதை நான் தடுத்திருக்க
முடியாது. தவிர்க்க முடியாத நிலையில் எழுதப்பட்ட விதி. இந்தக் கனிவில்தான்,
இந்தத் தவத்தில்தான் என் சுயரூபம் எனக்குத் தெரிகிறது.

5. என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரசனையை
எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன்.
என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக
சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப்
பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம்தான். அதைத்தான் நான் பகிர்ந்து
கொள்கிறேன்.

6. சிறுவயது முதலே என்னுடைய மனத்தில் “கன்வென்ஷன்” என்று சொல்லப்
படும்படியான கட்டுப்பாடுகளை எதிர்க்கும்படியான ஒரு மனோபாவம்
உருவாயிற்று. நம்முடைய மக்கள் மரபையும்(டிரெடிஷன்) கட்டுப்பாட்டையும்
ஒன்றுசேர்த்து குழப்பிக் கொள்ளுகிறார்கள் என்று நினைக்கிறேன். கட்டுப்பாடுகள்
காலத்துக்கு ஏற்றபடி மாறும் தன்மையுடையன. ஆனால் அவைகளுக்கு அன்றாட
வாழ்வில் நிரந்தரமான ஒரு இடத்தை அளிக்க முற்படும்போதுதான் தனி மனித
சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. ஒரு சமுதாய நாகரீகத்தின் உயிர்ப்புச்
சக்தியுடன் கூடிய ஜீவனானது இம்மாதிரியான கட்டுப்பாடுகளினால் நசித்துப்
போக ஏது இருக்கிறது. மனித உணர்ச்சிகளைப் பற்றி, மன விகாரங்களைப்
பற்றி எழுத முற்படும்போது கட்டுப்பாடுகளை அறுத்தெறிய வேண்டியிருக்கிறது.
“அம்மா வந்தாள்” பற்றி எனக்கு வேறு சொல்லத் தோன்றவில்லை. 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்