ஊடக உலகின் உட்புகுந்து நுண்ணோக்கும் எக்ஸ் கதிர்கள்:

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

அன்பாதவன்.



(புதியமாதவியின் கட்டுரைகள் “செய்திகளின் அதிர்வலைகள்” நூல்மதிப்புரை)

பின் நவீனத்தின் ஒரு கூறாக வரலாற்றை மறுவாசிப்பு செய்வதும், கட்டுடைப்பதும்
புதிய அர்த்தங்களைத் தேடிக் கண்டடைவதும் இருக்கிறதெனில் சமகால நிகழ்வுகளையும்
மறுவாசிப்ப்ய்க்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு சமூகவியலார்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக சமகால ஊடகங்களின் மொழி, செய்தியளிப்பு, நுண்ணரசியல் போன்றவற்றை மிக
கவனமுடன் அவதானிக்க வேண்டியிருக்கிறது.

இன்றையச் சூழலில் ஊடகங்கள் ஒன்றுகூடி ஒரு செய்தியை கட்டமைத்தால் ஏன், எதற்கு, எப்படி
என சிறைய வினாக்கள் கூட எழுப்பாமல் அப்படியே ஏற்கும் மனநிலையில் பெரும்பான்மை மக்கள் திரள்
இருப்பதை மறுக்கவியலாது. ஆனால் சமூக நோக்கோடு சிந்திக்கும் சிலராவது ஊடகங்களின் கட்டமைத்தலின்மீது
கேள்விகளை எழுப்பவே செய்வர்.

மும்பையிலிருந்தபடி, தனது சமூக இலக்கிய பணிகளைத் தொடரும் புதியமாதவி சமகால ஊடக உலகின்
உட்புகுந்து சில செய்திகள் மீது தனது எக்ஸ்ரே பார்வைகளைப் பதித்து மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறார்.
அத்தகைய 16 கட்டுரைகளின் தொகுப்பே ” செய்திகளின் அதிர்வலைகள்”.

ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னணியில் அரசியல் இருப்பதாய்க் கூறுவார் பேராசான் மார்க்ஸ்.
ஊடகங்களைப் பொறுத்தவரை அது ஆயிரம் சதம் உண்மை. எடுத்துக்காட்டாக இசுலாமிய தீவிரவாதம்
குறித்து பேசும் போதெல்லாம் இந்தியாவில் உள்ள அனைத்து இசுலாமிய மக்களும்
கையில் வெடிகுண்டுடனும் துப்பாக்கியுடனும் அலைவதைப் போன்ற சித்தரிப்பை உருவாக்கும் ஊடகங்கள்
இந்து தீவிரவாதம் குறித்து கவனமாக மவுனம் சாதிக்கின்றன. அது போலவே விடுதலைப் புலிகள் குறித்து
மிக கடுமையான விமர்சனம் செய்த இதழ்கள் கூட சமீபத்திய அவர்களின் பின்னடைவுக்குப் பின்,
புலிகளின் வரலாறு, ஈழத்தமிழர் வரலாறு, புகைப்படங்கள் என வெளியிட்டு காசு பார்த்துவிடுகின்றன.
எவ்வித கேள்விகளுமின்றி யாருக்காக செய்தி தருகிறோம் என்கிற பிரக்ஞையுமின்றி ஊடக விபச்சாரம் நடப்பதை
தனது கட்டுரைகளின் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார் புதியமாதவி.

‘செய்திகளின் அதிர்வலைகள்’ என்ற இந்நூலின் பெரும்பான்மைக் கட்டுரைகள் ‘திண்ணை’ மின்னிதழில் வெளிவந்தவை.
மற்றவர்களின் கேள்விகள், விமர்சனங்களுக்கேற்ப புதியமாதவியின் பதில்கள் பதிவாகியிருப்பது புரியவருகிறது.
இந்நூலின் 16 கட்டுரைகளையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கலாம்.
> மும்பைத் தமிழர் வாழ்வுச் சூழல்

> வன்முறையின் நெடியிலிருந்து மீளும் மும்பை மக்களின் தன்னம்பிக்கை.

மும்பைத் தமிழர் குறித்த பதிவுகளில் மிக முக்கியமானது தமிழர்களின் ஒப்பற்ற தலைமையாய் விளங்கிய
வரதராஜ முதலியார் என்கிற வரதாபாய் அவர்களின் வாழ்வுப் பதிவுகள்.
‘நாயகன்’ திரைப்படம் வந்த பொது வர்தாபாய் குறித்து சிறிது பேசப்பட்டது. இந்நூலில் அவருடைய மும்பை
வருகை, வளர்ச்சி, வாழ்க்கை என ஒரு பறவைப் பார்வையில் சாமான்யன் ஒருவன் சரித்திரமாக உருவாகிய
வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார் புதியமாதவி. அதுபோலவே தமிழருக்குப் பக்கபலமாக பாதுகாப்பு அரணாக
இருந்திருக்க வேண்டிய ‘பம்பாய்த் தமிழர் பேரவை’ கட்டெறும்பாகி சிற்றெறும்பாகி சிறுத்து போனதையும் காய்த்தல்
உவத்தலின்றி பதிவு செய்துள்ளார்.

மும்பைத் தமிழர்களும் தமிழக அரசியல் கட்சிகளும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம், மும்பைத் தமிழர்களின்
வாழ்க்கை குறித்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் அக்கறையின்மை, தமிழர் பெரும்பான்மையாக வாழும்
தாராவிப் பகுதியில் பாதையோரங்களில் கழிந்து வைத்திருக்கும் மலக்குவியலைவிடவும் அதிகமான
ரசிகர் மன்றங்கள் சாதி அமைப்புகள் என தமிழரின் பலவீனங்கள் மீது குட்டு வைக்கவும் தயங்கவில்லை புதியமாதவி.

மும்பை – இந்திய பொருளாதர தலைநகரில் தமது ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள வன்முறையைக் கருவியாகப்
பயன்படுத்தும் ‘தாக்கரே குடும்பம்’ குறித்த விமர்சனங்கள் பல உண்மைகளின் பட்டவர்த்தனப் பதிவு.

மும்பையின் முக்கிய அடையாளமாகிய ‘டப்பாவாலாக்கள்’ குறித்த கட்டுரை மிக முக்கியமானப் பதிவு.
எளிய உழைக்கும் மக்களின் கூட்டம் மேலாண்மை குருக்களுக்கு பாடமாகிய வரலாற்று பதிவு.

மும்பையில் தீவிரவாத தாக்குதல்கள் குறித்த பதிவுகளைப் பொறுத்தவரை 1992க்குப் பிறகு என்று தான்
கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனேனில் இந்துத்துவாவின் வதயாத்திரை தொடங்கியது அப்போதுதான்.
1993ல் நிகழ்ந்த கொடூரமான குண்டு வெடிப்புகள் பாபர் மசூதி தகர்ப்பின் பக்கவிளைவு என்றே கூறலாம்.

11/7/2006 அன்று மாலை நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் சமீபத்திய கொடூரமான துப்பாக்கி தாக்குதல்களுக்குப்
பிறகும் மிகுந்த தன்னம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் எழும் ‘அம்ச்சி மும்பை மானுஷ்’ குறித்த பெருமித பதிவுகள்
நம்பிக்கையூட்டுகின்றன.

மிக முக்கியமான சமகால வரலாற்று ஆவணமாக உருவாகியிருக்கும் இந்நூலில் சிறுகுறையாக உணர்வது
“அவசரம்”. ஒரு படைப்பாளியின் பார்வையில் ஆழமானப் பார்வையில் தேர்ந்த மொழியில் பதிவாக வேண்டிய
கட்டுரைகள், செய்திக்கட்டுரைகளின் அவசரகதியோடு மேலோட்டமான மொழியில் எழுதப்பட்டுள்ளன.
புதியமாதவி ஒரு தேர்ந்த படைப்பாளியாகவுமிருப்பதாலெயே இந்த விமர்சனம்.

அதுபோலவே படைப்பாளி புதியமாதவிக்கு இரண்டு விண்ணப்ப(கட்டளை)ங்கள்:
> தமிழர்களின் உந்து சக்தியாக விளங்கிய வரதராஜ முதலியார் குறித்த முழுமையான பதிவுகள்

> மும்பை நூற்பாலைகளுக்காக தென்கோடி தமிழர்கள் மும்பைக்கு வந்திறங்கியதும் அரசியல் சூழ்ச்சியில்
ஆலைகள் மூடப்பட்டதும் தொழிலாளர் வாழ்வுச் சூழல் திசைமாறிப் போனதையும் ஒரு புதினமாக
புதியமாதவி தரவேண்டும். அவரால் தர முடியும்!.

தரமான நூலொன்றை தந்தமைக்காக புதியமாதவி பெருமைப் பட்டுக்கொள்ளலாம். நூலை வாசிக்கையில்
வாசகனுக்கும் கூட அந்தப் பெருமிதம் பரவும் சாத்தியமுண்டு.

வெளியீடு: வள்ளி சுந்தர் பதிப்பகம்,
சென்னை 14
பக்: 104 விலை: ரூ 55/

Series Navigation

அன்பாதவன்.

அன்பாதவன்.