சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21

This entry is part of 34 in the series 20100704_Issue

சீதாலட்சுமி


தூக்கு மேடைக்குச் செல்ல இருக்கும் கைதியின் பெயர் நரசிம்மகாரு.
ஆந்திராவைச் சேர்ந்தவர். அவருடைய ஆசை முழுமையாக நிறைவேற வில்லை. காந்திஜியின் உருவம் செதுக்கிய பொழுது தலை முடிக்கும்முன் அவன் வாழ்வு முடிந்துவிட்டது. அந்தத் தலையில்லா காந்திஜியின் சிலை சத்திய மூர்த்தியை உறுத்திக் கொண்டிருந்தது.

முழுமை பெறாதவைகள் சிந்தனைக்கு முள்வேலிகள்..

அந்தச் சிறையில் இன்னொரு மனிதரை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.
அந்தச் சிறையின் மேலதிகாரி மூர்த்தி, நம் சத்தியமூர்த்தியுடன் பள்ளியில் படித்தவன். இங்கே அந்த நட்பைப் பார்க்க முடியுமா? அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர், எனவே இருவரது சந்திப்புகளும் வினோதமாக இருக்கும். சில நேரங்களில் அனுசரணையுடன் இருக்கும். சில நேரங்களில் ஒதுக்கமும் இறுக்கமும் தென்படும். சத்தியமூர்த்தி சிரித்துக் கொள்வான்.

ஜெயகாந்தனைப் பற்றி எழுதத் தொடங்கும் பொழுதே அவரின் தன்மைகளில் அவரின் உரையாடல் சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, வலிமை வாய்ந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றேன். என் வாழ்க்கையில் சந்தித்தவர்களில் உரையாடலில் சிறந்தவர் அவர் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன். கதைகளாயினும் கட்டுரையாயினும், அங்கே உரையாடலில் புகுந்து தன் எண்ணங்களைப் பதித்துவிடுவார்.

ஜெய ஜெய சங்கர தொடரில் உரையாடல்கள் அதிகம் இடம் பெறும்.
அதனை ஓர் கதை என்று சொல்வதைவிட வரலாற்றுச் சித்திரம் எனக் கூறலாம்.

சத்தியமூர்த்தி அந்தச் சிறைக்கு வரவிட்டுச் சூழலின் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது . தனி மதிப்பைப் பெற்று வலம் வந்து கொண்டிருந்தான். சிறையில் இருந்தாலும் மனிதர்கள், மனிதர்கள் தானே என்று நினைத்துக் கொள்வான்.

நாட்டில் நெருக்கடி நிலைமை.
சுதந்திர நாட்டில் சுதந்திரக் காற்றில்லை. புழுக்கத்தால் மனிதர்கள் வெந்து கொண்டிருந்தனர். எங்கும் நிலவுகிற இருட்டுக்கும் இந்தச் சிறையில் நிலவுகிற இருட்டுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. நாட்டில் நடக்கிற காரியங்கள் இந்தச் சிறையில் விஸ்தாரத்தைப் பெரிதாக்கி ஓரளவு தேசத்தையே சிறையாக்கி இருக்கின்றன.

சமீபத்தில் அரசியல் கைதிகள் அழைத்து வரப்பட்டு கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து கேட்கும் முணங்கல்கள் அங்கே நடக்கும் சித்திரவதைகளின் கொடுமையை உணர்த்துகின்றன.

உமாவைப் பற்றியோ அவன் தந்தையைப் பற்றியோ எந்த செய்தியும் தெரியாது தவிக்கின்றான் சத்திய மூர்த்தி. அதிகார வர்க்கத்தைக் கூலிப் படையென்று கடுமையாகச் சாடுகின்றான்.. சிறை அதிகாரி மூர்த்தியைச் சந்தித்து உண்மை நிலையை அறியத் தோன்றுகின்றது. சந்திப்பும் நிகழ்கின்றது. அங்கே நடக்கும் உரையாடல்கள் மனக் கொதிப்பின் வெளிப்பாடுகள்.

சத்தியமூர்த்தி எழுதிய புத்தகத்தைப் படித்துவருவதாகக் கூறும் மூர்த்தியைப் பார்க்கின்றான். அது தடை செய்யப்பட்ட புத்தகம்.
படித்து என்ன பயன்? ஒவ்வொருவரும் அவரவர் மனச்சாட்சியைக் கேட்க வேண்டிய கேள்வி.

“இங்கே துன்புறுத்தப்படும் அந்தக் கைதிகள் எல்லாம் எப்பேர்ப்பட்ட போராட்ட வீரர்கள் என்பதை நான் அறிவேன். .. அவர்களாவது போராடுவதாவது ?.. ராத்திரி யெல்லாம் ஒலிக்கிற அவர்களுடைய ஓலத்தில் வீரமோ ஆண்மையோ இல்லை .. ஆட்டுக் குட்டிகள் மாதிரி அவர்கள் அடிபட்டு அலறுகிறார்கள் .. கடவுளைக் கையெடுத்துக் கும்பிட மறுக்கின்றவர்கள் எல்லாம் கான்விக்ட் வார்டன்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சுகிறார்களாமே ! இதெல்லாம் ஏன் நடக்கிறது ? நாட்டில் நெருக்கடி என்றால் சிறையில் ஏன் இந்தக் கெடுபிடிகள் அதிகமாக வேண்டும் ?” தாழ்ந்த ஸ்தாயில் துருவித் துருவிக் கேட்டுக் கொண்டிருந்தான் சத்திய மூர்த்தி.

இதைப் படிக்கும் பொழுது என் மனப்பறவை கூச்சலிட்டது. நெருக்கடி நிலைமை காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலரை நான் அறிவேன்.
அந்த வலியின் வேதனையைப் பாதிக்கப் படாதவர்களாலேயே சொல்லப்பட்டு நேரில் கேட்ட அனுபவமும் உண்டு.

மனம் விட்டுப் பேச ஆரம்பித்தான் மூர்த்தி. சிறை அதிகாரிப் பதவி ஒரு வெட்டியானைப் போன்றது. மரண தண்டனை விதிப்பது நீதி மன்றம். ஆனால் அந்தக் கொலையைச் செய்ய வேண்டியது சிறை யதிகாரி. தண்டனை விதித்த நீதிபதியே வந்து இந்தக் கொலையையும் செய்ய வேண்டும் என்று சலித்துக் கொண்டான்.

கைதிகளை அடித்துத் துன்புறுத்துவதை நிறுத்தும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறுகின்றான் சத்திய மூர்த்தி.

ஒவ்வொரு அதிகாரியும் தனக்குச் சம்பந்த மில்லாத ஓர் எஜமானத்துவத்துக்கு அடிமை என்று கூறத் துடிக்கிறான் மூர்த்தி. ஆனாலும் அதனைச் சொல்லாது “இனிமேல் அந்தக் கொடுமை நடக்காது. அதிகாரிக்கு என்ற சில உரிமைகளும், கைதிக்கு என்று சில கட்டுப்பாடுகளும் உண்டு. தன் குறைகளைத் தீர்க்குமாறு கேட்க ஒரு கைதிக்கு உரிமை உண்டு. ஆனால் பிற கைதிகளுக்காகப் பரிந்து பேசும் உரிமை அவனுக்குக் கிடையாது” என்று கூறினான்.

அரசுப் பணியும் ஒருவிதக் கொத்தடிமை போன்று கட்டிப்போடுகின்றது.
இது அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஆட்சியில் அமரும் அரசியல் வாதிகள் கூட சில நேரங்களில் அரசு நிர்ணயச் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டியிருக்கும். இத்தகைய கட்டுப்பாடுகளிலும் மனிதன் நேர்மையில் உறுதியாக இருக்கவும் வாய்புண்டு.

மனித நேயமே குறிக்கோளாய் நேர்மையுடன் இருப்பவர்களிடம், நிர்ப்பந்தங்கள் வலிமையை இழந்துவிடுகின்றன.

“ஒருவனை அவனது லட்சியங்களே சுதந்திர மனிதனாக்குகின்றன” என்ற சத்திய மூர்த்தியின் கூற்றை ஒப்புக் கொள்கின்றான் மூர்த்தி.

சில தினங்களில் மூர்த்தி மன வெளி இல்லம் போகின்றான்.அந்த வீட்டில்
நெருக்கடி நிலமையை ஆதரிக்கும் ஒரு மனிதரையும் பார்க்கின்றான். உமாவின் தந்தை பண்டிதர் அங்கு வந்திருந்தார். அவர்தான் நெருக்கடி
நிலைமையில் நிர்வாகம் சீராக இருப்பதாகக் கூறிவருகின்றவர்.

கதாசிரியர் நிறைய கதா பாத்திரங்களைத் தோற்றுவித்து அவர்கள் வாயிலாகத் தன் எண்ணங்களைக் கொட்டியிருக்கின்றார். தாங்கள் பேசுவது
நியாயமானது என்று ஒவ்வொருவரும் வலியுறுத்துகின்றனர். ஏனோ எல்லோரும் நல்லவர்களாக, மனிதர் நலனில் அக்கறை கொண்டவர் களாகக் காட்டிச் செல்லுகின்றார். எல்லோரும் தத்துவம் பேசுகின்றார்கள்.

‘தேசம் என்னவானாலும், தனி மனுஷ்யர்களான நாம், நம்மை நெறியாக வைத்துக் கொள்வதுதான் முக்கியம் என்று நினைப்பவன் மகாலிங்கம்” என்று அவன் தாயார் தேவி கூறுகின்றாள்.

உமாவுடன் அவன் தலைமறைவாகி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். உலகத்தாருக்கு அவர்கள் தம்பதிகள் ஆனால் நிஜ வாழ்க்கையில் அண்ணன், தங்கை யாக வாழ்கின்றனர். ஏதோ ஒரு குறிக்கோளுக்காக வாழ்வதாகச் சொல்லுகின்றார்கள். ”மனிதன் சுயநல மகிழ்ச்சிக்காக வாழக் கூடாது” என்று அவர்கள் ஆசிரியர் சத்திய மூர்த்தி சொல்லிக் கொடுத்ததை ஏற்று, சமுதாய நன்மைக்காக திரைமறைவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆண்மகனுடன் ஓர் பெண் தனிமையாக வாழும் பொழுது மன உறுதியுடன் இருக்க முடியுமா? முடியும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.

லட்சியப் போராட்டத்தில் ஈடு படுகின்றவர்கள் தனிப்பட்ட உணர்ச்சிக்கு அப்பாற்பட்டவர்களாகக் காட்டுகின்றார். இதுதான் உண்மை.. ஓர் குறிக்கோளுடன் மனிதன் இயங்கும் பொழுது அவன் நினைவெல்லாம்
நிறைந்திருப்பது அந்த லட்சியங்களே. அங்கே சலனங்களுக்கு இடமில்லை.

மகாலிங்கம் கொடுத்தனுப்பிய கடித்தத்தின் சில வரிகள் பெற்றவர்களைப் பெருமையில் ஆழ்த்துகிறது.

“நமது மக்கள் எந்த யுகமாற்றத்தினாலும் அழிந்து போய்விட முடியாத மகா சத்திய நெருப்பை வளர்த்து, இந்த பூமினியில் உள்ள எல்லா உயிர்களின் மேன்மை கருதிப் பாதுகாத்து வருகின்றார்கள். அந்த மகா யக்ஞத்தில் தோன்றியவர்கள்தான் எனது பெற்றோரும், எனது பிதுர்க்களும், நானும், நமது சந்ததியினரும் ..ஆசாரிய ஸ்வாமிகளின் பாஷையில் சொன்னால் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையில் பிரிவோ தனிமையோ இல்லை.”

ஜெய ஜெய சங்கர தொடரில் ஒரே தத்துவ மழைதான் கதை என்றால் அதற்கு ஏதோ ஒரு முடிவு காட்ட வேண்டுமே.
ஆற்றங்கரையில் அவர்களின் எல்லைகளைத் தாண்டாமல் இரண்டு சிறுவர்களிடம் நட்பு பிறக்கின்றது. அப்பொழுது இனம் காரணமாக
ஆதியால் கிராமத்திற்குள் வருவது முடியாது. ஆனால் கதை முடிவில் அதே ஆதி சங்கர புரத்தில் நுழைய முடிகின்றது.

கால வெள்ளத்தில் சில நியதிகள் மாறத் தொடங்கிவிட்டன.

ஓர் சிறுகதையாய் இதனை முடித்திருக்கலாம் ஆனால் மூன்று பாகங்கள்
தொடர்ந்தன. அதற்கு அவர் கூறும் பதிலை அவர் வார்த்தைகளில் காண்போம்.

“ஓர் சிறுகதை என்று அழைப்பதே எனக்கும் விருப்பமாய் இருந்தது. அவ்விதமே அமைந்திருந்தால் இதன் கலைத் தன்மை உயர்ந்து நின்றிருக்கும் என்று உரைப்பாருமுளர். அவர்கள் அவ்விதமே நிற்கக் கடவர். இன்பம் எங்கெங்குண்டோ அங்கங்கே இருந்துவிடுதல் சிலரது இயல்பு. துன்பம் எங்கே எங்கே என்று துரத்திப் பிடித்து அத்துடன் துவந்தம் செய்வதே தர்மத்தின் இயல்பு. அப்படிப்பட்ட கால நிர்பந்தத்தால் தர்மங்களையே சார்ந்து நிற்கும் ஓர் அடிமையான வாழ்க்கையில், எப்படி அதன் சந்ததியினராலேயே பிரச்சனைகள் மூளும் என்றெல்லாம் எண்ணங்கள் மேலும் எழுந்த பொழுது மூன்று பாகங்கள் விளைந்தன. கட்டுக்கோப்பு கச்சிதமாக விழுந்துவிடுகிற பொழுது மேலே குவித்துச் சிகரம் கட்ட ஆசைபடுவதுதான் எழுதுபவனுக்கு ஏற்படுகிற
பேராசை”

இந்த நாவலை எழுத ஆரம்பித்த காலத்தில் தேசிய வாழ்க்கையில் என்ன சூழ்நிலை இருந்ததோ அந்தக் காலக் கட்டத்தை இறுதியாக வைத்துக் கொண்டு அதற்கு முன்னாலும் பின்னாலும் சிந்தனைகளைப் படரவிட்டு
இத்தொடரைப் படைத்திருக்கின்றார். அரை நூற்றாண்டு நிகழ்ச்சியினைக் கருத்திற்கொண்டு எழுதப்பட்ட தொடர்.

இத்தொடரில் வரும் பாத்திரங்கள் நல்ல நோக்கம் படைத்தவர்களாக, லட்சியத்துடன் வாழ்கின்றவர்களாகக் காட்டப்பட்டுள்ளன. அதற்கும் அவர் கொடுக்கும் விளக்கத்தை அவர் எழுத்துக்களில் காண்போம்

“எனது புரட்சிக்காரன் எவ்வளவு உத்தமமானவனோ அந்த அளவு உத்தமமானவனே எனது போலீஸ்காரனும். நான் தீயவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேனேயொழிய அவர்களைக் கண்டதில்லை. அவர்களை இலக்கியக்கண் கொண்டு நான் கண்ட மாத்திரத்தில் அவர்கள் நல்லவராக மாறுவர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதுதான் என்னிடமுள்ள மத நம்பிக்கை, இறை நம்பிக்கை என்று நம்புகிறேன்.

“வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும
தீமை இலாத சொலல்”

என்பது நமது இலக்கிய தர்மம்.அந்த நோக்கு நான் எழுதிய பலவற்றுள் இதில் நன்கு சமைந்தது.”

மகாப் பெரியவரின் அறிவுரைப்படி ஆன்மீகமும் சமுதாயநலனும் கைகோத்துக் கொண்டு எழுதும் பாக்கியத்தைப் பெற்றவராகப் பெருமை கொள்கின்றார் ஜெயகாந்தன்.

புரட்சி யென்றால் அது வன்முறை நோக்கிச் சென்றுவிடும் என்ற அச்சம்
பலருக்கும் உண்டு. காந்திஜியின் சத்தியாகிரஹப் புரட்சியை நாம் பார்த்திருக்கின்றோம். அவர் தன்னை வருத்தி இயக்கத்தினை முன்னின்று நடத்தினார். இன்றைய இயக்கங்களில் தொண்டர்களே மரிக்கின்றனர்.
தலைவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்வதைக் காண்கின்றோம். எந்த ஒன்றையும் பொது நிலைப்படுத்த முடிவதில்லை.

தொழிற்சங்கத்தில் 32 ஆண்டுகள் இருந்தேன். கீழே பணியாளராக நுழைந்து துறையின் மேலதிகாரியாக ஆனேன். இரட்டைக் குதிரை சவாரி செய்தேன். தொழில் சங்கத்தில் இருந்ததால் எத்தனை சாதிக்க முடிந்தது என்று அனுபவ பூர்வமாக அறிந்திருக்கின்றேன். இந்தத் தொடர் படிக்கும் பொழுது என் வாழ்க்கைப் பாதையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆனால் படிக்கின்ற எல்லோருக்கும் அனுபவங்கள் ஏற்படிட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே விமர்சனங்கள் பல
திக்குகளிலிருந்தும் வந்தன.

இதற்கு விமர்சனங்கள் வந்த பொழுது அவர் கூறியவை :

“ஆர்வத்தின் காரணமாகவும், அவசரத்தின் காரணமாகவும் விமர்சகர் எனப்படுவோர் புகழ் குவிக்கவும், புழுதி இறைக்கவும் செய்வர் என்பது நாம் எதிர்பார்த்ததே. அவர்களுக்கு நன்றியல்லாமல் வேறு ஏதும் நாம் உரைப்பதற்கில்லை. இந்நூலுக்கு விமர்சனக் காற்று சற்று மிகைதான். அந்தக் காற்றின் கதையிலேதான் எத்தனை லயங்கள் .. எத்தனைவிதங்கள் .. ரசித்தோம், ரசிப்போம்.”

விமர்சனக்காற்றுக்கு ஓர் கவிதையில் சில வரிகள்

தென்னையின் கீற்றுச் சல சல வென்றிட
செய்து வரும் காற்றே !
உன்னைக் குதிரை கொண்டு ஏறித் திரியுமோர்
உள்ளம் படைத்து விட்டோம் ..

ஜெயகாந்தனுக்கு விமர்சனங்கள் புதிதல்ல. சொல்லப் போனால் அவர் வளர்ந்ததே அந்தக் காற்றின் வேகத்தால்தான்.

அவர் எழுதிய பல கதைகள் கடும் விமர்சனத்திற்குள்ளானவை. அவைகளில் அவர் எழுதிய ரிஷிமூலம் பலரின் கோபத்திற்கும் கூட காரணமாயிற்று. சமுதாயமென்பது நல்லதும் கெட்டதும் கலந்ததே. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மிருகம் உறங்கிக் கிடக்கின்றது. அதனைப் பண்படுத்த சில நெறி முறைகளை வகுத்துக் கொண்டு வாழ்ந்து வர முயல்கின்றான்.. சிலரால் மட்டும் மனத்தை வெல்ல முடிகின்றது. பலர் அதன் வேகத்தில் அடிபட்டுப் போய்விடுகின்றனர்.

ரிஷிமூலத்தின் கதா நாயகன் மனவக்கிரம் கொண்டவன். இதைப் போன்று
அவர் எழுதிய குருபீட நாயகனிடமும் இக்குறையைக் காணலாம். அவன் பித்தனாய் வந்து பின் சித்தனாக்கபடுகின்றான். இங்கே ஒரு செய்தியைக் கூற விழைகின்றேன்.

திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டி என்று ஒரு கிராமம் உண்டு. அந்த ஊரில் ஓர் பித்தன் தோன்றி அவனைச் சித்தனாக்கி வழிப்பட்ட சம்பவம் உண்மையில் நிகழ்ந்தது. அது செவிவழிச் செய்தியாகப் பரவி எழுத்துக்குக் கருவாகி இருக்கலாம். அல்லது தனித்தனியே இப்படி ஒத்துப் போகும் நிகழ்வுகளாகவும் இருக்கலாம். பலருக்கும் இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் உணர்ந்து கொள்ளாமல் இருப்போம்.

ஏதோ ஒரு காட்சியைப் பார்க்கும் பொழுதோ அல்லது கேள்விப்படும் பொழுதோ ஏற்கனவே எங்கோ நிகழ்ந்ததாக அல்லது கேள்விப்பட்டதாகத் தோன்றும். இது இயற்கையின் விளையாட்டு. சம்பவங்கள் எங்கேங்கேயோ எப்படியோ பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. அல்லது பதிவானவை நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் புரியாத புதிர்கள் பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன.

கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய “ரிஷிமூலம் “ கதையைக் கொஞ்சம்
தெரிந்து கொள்வோமே

தொடரும்.

+++++++++++++++++++++++++++++++++
“seethaalakshmi subramanian”

Series Navigation