டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் – ‘ஒரு சுமாரான கணவன்’

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா


படிக்கும் சில சிறுகதைகள் என் ஆழ்மனதினுள் மூழ்கிவிடுவதுண்டு. அவ்வப்போது மனதின் மேலெழும்பி தாங்கள் இன்னும் உயிருடன் உள்ளதைத் தெரிவிக்கும் தருணங்கள் என்னை மகிழ்ச்சியில் பூரிப்படைய செய்யும். அவ்வாறு பூரிப்படைய செய்த கதைகளில் ஒன்று ‘ஒரு சுமாரான கணவன்’. மலேசிய முன்னனி எழுத்தாளரான டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் சிந்தனையில் உதித்து எழுத்தாய் உருவாகியிருக்கும் சிறுகதைகளில் ஒன்றின் தலைப்புதான் அது. (திண்ணையில் இக்கதையைப் படிக்க http://www.thinnai.com/?module=displaystory&story_id=10309253&format=html). எளிய கதையோட்டம் சிறப்பான முறையில் கருவைச் சுமந்து நகர்கின்றது.
கோலாலம்பூரில் பிறந்து வளர்ந்த அன்னம்மாள் தியாகுவைத் திருமணம் செய்து பினாங்கு வருகிறாள். பினாங்கும் கோலாலம்பூரும் சூழல்களால் வேறுப்பட்டு நிற்கின்றன. புகுந்த வீடு செல்லும் புது மணப்பெண்ணின் முற்றிலும் புதிய உணர்வாய் இக்கணம் உணர முடிகின்றது. வாகன ஓட்டுனரான தியாகு ஒரு வார திருமண விடுமுறை முடிந்து மனைவியை அழைத்துக் கொண்டு நண்பனுடன் காலை பினாங்கை வந்தடைகின்றான். பத்தாவது மாடியில் வாடகை எடுத்த வீடு. அன்னம்மாளின் தாய் வீட்டை விட வாடகை வீடு வசதியில்லாததுபோல் அவளுக்கு எண்ணம் தோன்றுகின்றது. தன் குடும்பத்திலுள்ள தந்தை, அக்கா கணவரிடம் இல்லாத கனிவு, தியாகுவின் இருப்பதைக் கண்டு கல்யாணப் பேச்சு வார்த்தைகளின் போதே பெருமிதப்படுகிறாள். ஆண்களிடம் இல்லாத கனிவைத் தியாகுவிடம் கண்டு காதலுறுவது அன்னம்மாளின் அன்பிற்கு ஏங்கிய மனதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. ஆண்களின் புகைப்பிடிக்கும் பழக்கம், அதிகார தோரணை போன்றவற்றை எல்லா பெண்களுமே விரும்புவதில்லை. திரைப்படங்களில் தாக்கப்பட்ட சில பெண்கள் மட்டும் புகைப்பிடிப்பதை ஒரு ஸ்டைல் என கருதி காதல் கொள்வதும் உண்டு.
புதிய இடத்தில் வாடகைக்குடியிருப்பில் தனிமையில் அன்னம்மாளுக்குக் கணவனின் நிதானமின்மை, படபடப்பு, தன்னிடம் அன்பாய் சொல்லாமல் வேலைக்கு ஓடும் நிலை, வாடகை வீட்டை தேர்வு செய்ய இயலாத திறமை என யாவும் விரக்தியாய் வெளிபடுகின்றன. தன்னை வாழ்நாளேல்லாம் தியாகுவினால் காப்பாற்ற இயலுமா என்ற கேள்வி அவளிடம் உள்புகுகின்றது. தியாகு கேட்டுகொண்டதற்கிணங்க கீழ்த்தளத்தின் உணவுக்கடை சிறுவன் அவளிடம் காலை சிற்றுண்டியைத் தந்துவிட்டு செல்கின்றான். மதிய உணவையும் தியாகு கொடுக்குமாறு தன்னிடம் கேட்டு கொண்டதாக சொல்லி செல்கின்றான். மறுகணமே ‘புதிய இடமாய் இருந்தால் என்ன ? இது என் வீடு. என்ன பயப்படுவது ? எல்லாரும் மனிதர்கள்தான்’ என அவள் மனம் எளிதாய் உள்ளிருக்கும் குழப்பங்களையும் திருப்தியின்மையையும் வெளித் தள்ளுகின்றது.
ஆண்களிடத்தில் அன்பு இல்லாமல் இல்லை. ஆனாலும் ஆண்கள் தங்கள் அன்பை ஒளித்து வைக்கவே பெரிதும் விரும்புகின்றனர். பெரும்பாலும் மனைவின்பால் காட்டும் அன்பிற்கே இவ்வித பேரிடர் நிகழ்கின்றது. காதலிக்கும் தருணங்களில் அன்பைக் காதலியின் மேல் பொழிந்து திணரச் செய்யும் காதலன், ‘கணவன்’ என்ற பெயரை அடையும்போது அன்பு மனதிலிருந்து வெளியேறாமல் கவனமாக மனதை இறுகப் பூட்டி வைக்கின்றான். இவ்விடத்தில் காதல் என்பது போலித்தனமான அன்பென எண்ண தோன்றுகின்றது. போலித்தனம் நீடிப்பதில்லை என்பது என் மனதில் சிந்தனை பதித்த விதை.
திருமணத்திற்கு முன் தாய்தந்தை, சகோதரர்கள், உறவுகளின் பாச வலையில் புரளும் பெண்ணானவள் திருமணத்திற்குப் பின் எல்லா உறவுகளின் மொத்த அன்பின் சுரப்பைக் கணவனிடம் எதிர்ப்பார்ப்பது பெண்களின் இயல்பு. அதைப் புரிந்து கொள்ள இயலாத ஆண்களின் தன்மை எவ்வாறு கொடுமையானது என்பதை அன்னம்மாள் தனித்துவிடப்பட்ட மனம்படும் பாடு காட்டுகின்றது. அன்பைச் செயல் வாயிலாகவும் பேச்சின் வாயிலாகவும் கணவன் வெளிப்படுத்துவதில் பெண் மனம் மகிழ்ச்சி கொள்கின்றது. அவ்வாறு பெண்ணை வந்தடையும் அன்பிற்கு மிகப்பெரிய சக்தி உண்டு. முதலாளியின் பாராட்டுதலைவிட கணவரின் பாராட்டு பெண்களை இன்னும் முன்னேற செய்கின்றது. மருத்துவரின் மருந்தைவிட கணவரின் கவனிப்பு பெண்ணின் உடல் நலக்குறைவை விரைவாய் தீர்க்கின்றது. இவை யாவும் அன்றாட வாழ்க்கையில் பலரும் அறியாத உணரவியலாத உணர்வுகள். இவை யாவற்றையும் நம்மைச் சிந்திக்க வைக்கும் அருமையான கதை.

Series Navigation

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா