கே.பாலமுருகனின் ‘அதிகாலை பொழுதும் ஆப்பே – தவுக்கே – மணியம் பேருந்துகளும்’ – சிறுகதை விமர்சனம்

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா



சில தினங்களுக்கு முன் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் ‘அதிகாலை பொழுதும் ஆப்பே – தவுக்கே – மணியம் பேருந்துகளும்’ கதையைப் படித்தேன். அண்மையில் படித்த கதை என்பதால் என் நினைவுகளில் இன்னும் துளிர்த்துக் கொண்டிருக்கின்றது. முந்தைய காலைப்பொழுதுகளின் பள்ளிப்பேருந்து பயணங்களைத் தொட்டு இக்கதை நகர்வது அருமை. பள்ளி வாழ்க்கையில் காலைப் பேருந்து பயணம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்பதை மறுக்க இயலாது. மாணவர்களின் சோம்பல் முறித்த அதிகாலையும் புதிர் மிகுந்த நாளைக் கடக்க எடுத்து வைக்கும் தொடக்க அடிகளும் ஒன்று சேர கதையுனூடாக நம்முள் கலந்து தட்டி எழுப்புகின்றன.
கதைசொல்லியின் பாத்திரம் அதிகாலை நோக்கிய மாணவப் பருவத்தை எட்டிப் பார்க்கின்றது. மாணவர்கள் பேருந்து மூலமாகவே பள்ளி சென்று வருகின்றனர். பேருந்து ஓட்டுனர் மணியம் தன் பேருந்தில் ஏறும் மாணவர்களிடம் கண்டிப்புடன் இருக்கிறார். பேருந்து கட்டணத்தைச் செலுத்த இயலாத காந்தராவ், பேருந்து ஓட்டுனர் மணியத்தின் காரமான சொற்களால் அவமானத்திற்கும் பயத்திற்கும் உள்ளாகின்றான். பேருந்து கட்டணப் பாக்கியைச் செலுத்தாவிட்டால் பேருந்திலிருந்து தான் தூக்கி எறியப்படக்கூடும் என பால்ய மனதில் தோன்றும் அச்சம் நெகிழ வைக்கின்றது. பணம் ஒன்றை மட்டும் முக்கியம் என கருதும் மனதுக்கு பிற மனங்களின் மென்மையும் அருமையும் புரிவதில்லை.
பணம், பதவி, புகழ் என்பதை மட்டும் முன்னிலைப்படுத்தி துரத்திச் செல்பவர்களுக்கு அன்பு புரிவதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அதனால்தான் தன்னைச் சுற்றிப் படர்ந்திருக்கும் மனங்களின் மீது எளிதாக புறக்கணிப்பை வீச முடிகின்றது என நம்புகின்றேன். பணம், பதவி, புகழ் யாவும் இன்றைய நடைமுறை வாழ்க்கைக்குத் தேவை என்பதை மறுக்க இயலாது. ஆனால் அதை மட்டுமே வாழ்க்கை என கொண்டு மனித உறவுகளை மறப்பதும் புறக்கணிப்பதும் எனக்குச் சரியென தோன்றவில்லை.
மணியத்தின் சொற்கள் காந்தராவை அழ செய்கின்றன. காந்தராவின் முதிர்ச்சி நிறைந்த அழுகை கதைகளில் சொல்லப்படாத அவனது குடும்பத்தையும் குடும்ப சூழ்நிலைகளையும் கூர்ந்து எண்ண வைக்கும்படியாக உள்ளது. ஒரு நாள் முழுதும் அழுகையுடன் வலம் வந்த காந்தராவின் உடல், உள்ளம் எவ்வாறு சிதைப்பட்டிருக்கும் என்ற சிந்தனை உருவாகும்போது என்னையும் அறியாமல் கண்கள் மீது மெல்லிய வெண்திரை படர்கின்றது.
மணியத்தின் பார்வையிலிருந்து தப்பி பேருந்திலிருந்து விரைவாய் இறங்க எண்ணி மாணவர்களின் வரிசையில் முன் நிற்கின்றான். தவிர்க்க நினைக்கும் மணியத்தின் பார்வை காந்தராவின் மீது விழ, மணியத்தின் கேள்வியினால் பேருந்திலிருந்து அவன் அடி தடுமாறுகின்றது. பயத்தினால் ஏற்பட்ட காந்தராவின் பதற்றம் அவனை மரணத்திற்குள் இட்டு செல்வது மனதில் ஆழ்ந்த சோகத்தைப் பரவ செய்கின்றது. பேருந்து கட்டணத்தைக் காந்தராவின் உயிர் செலுத்திவிட்டதோ? ஓர் இள உயிரின் விலை வெறும் பேருந்து கட்டண பாக்கியா? ‘கட்டணப் பாக்கியை இப்பொழுது நான் செலுத்தினால் காந்தராவின் உயிர் திரும்ப கிடைக்குமா போன்ற கேள்விகள் என்னுள் உருவாக்கம் பெற்று இன்றைய உலகைப் பார்வையின் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. உயிருக்கும் விலை பேசும் காலம் நெருங்கிவிட்டதாய் ஓர் உணர்வு எனக்கு அச்சத்தை உண்டாக்குகின்றது. காலைப்பொழுதுகளில் காதுகளில் விழும் காந்தராவின் பயம் நனைந்த சொற்கள் கதையின் முடிவில் நம்மையும் சூழ்ந்து கொள்கின்றது.
வாழ்க்கைப்பாதையில் சிலவித அச்சங்கள் நம்மைக் கவ்விக்கொள்ளும் வேளையில் நம் பயணங்கள் தடைப்படுகின்றன. அச்சங்களின் அழுத்தம் மிகும் தருணங்களில் இருளுக்குள் தள்ளப்பட்டு பாதை தெரியாது அங்கேயே அமிழ்ந்து போவதும் உண்டு. இவை யாவும் என் எண்ணத் தளத்தில் கதை பதித்த தடங்கள் மட்டுமே.
க.ராஜம்ரஞ்சனி, மலேசியா
ktrajamranjini@yahoo.co.in

Series Navigation

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா