சாந்திநாத தேசாயின் “ஓம் நமோ” (தமிழாக்கம்: பாவண்ணன்) தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும்

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

எஸ்.ஜெயஸ்ரீ


சாந்திநாத தேசாய் என்னும் கன்னட எழுத்தாளரால் எழுதப்பட்டு, பாவண்ணனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஓம் நமோ என்கிற நாவலின் தலைப்பு, மதம் தொடர்பான நூல் என்றோ அல்லது ஆன்மிகம் தொடர்பான நூல் என்றோ தொடக்கத்தில் எண்ணவைக்கிறது. படிக்கத் தொடங்கிய சில கணங்களில் அந்த எண்ணம் மறைந்துவிடுகிறது. நூல் ஜைனமதம் பற்றியும் அதன் தத்துவங்களைப்பற்றியும் ஒருபுறம் பேசுகிறது. தத்துவங்களின் மேன்மையைப்பற்றிப் பேசுகின்ற அதே வேளையில் அவற்றின் தன்மைகளை கேள்விக்குட்படுத்தவும் செய்கிறது. மறுபுறம், ஆன், ஆடம், ரோஜா மூவருக்குமிடையேயான முக்கோணக்காதலை முன்வைக்கிறது. காதல் என்பதை வெளிப்படையான சுதந்திரமான உணர்வாக இழையோட விடுவது நாவலின் சிறப்பு. ஆடம் மீது ஆன், ரோஜா இருவருக்குமே காதல் இருக்கிறது. எந்த இடத்திலும் தனக்குத்தான் இவன் என்ற பொறாமை இல்லாமல், மற்றவர் மேல்தான் காதல் என்றால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும்படிக் கூறுகிறார்கள். ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.

ஆனுக்கும் ஆடமுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடலின் இடையில் ஷேக்ஸ்பியரின் வரிகளைச் சொல்கிறான் ஆன். Love is not love: which alters when it alteration finds . இந்த உண்மையையே நாவல் அன்பு பற்றிய கருத்தாகவும் முன்வைக்கிறது.

ஆன் , தன் ஆராய்ச்சிக்காகவும் மகாமஸ்தாபிஷேகத்திற்காகவும் சிரவணபெலெகோலாவிற்குச் செல்கிறாள். அப்போது ஆடம் அங்கே செல்கிறான். அக்கணத்தில் நிகழும் உரையாடலில் மடம் ஆனைக் கட்டுப்படுத்துவதாகக் கூறுகிறான். கட்டுப்பாடுகள் ஒருவிதத்தில் ஆன்மதரிசனத்துக்கு உதவும் என்பதாகச் சொல்கிறாள் ஆன் .

காதல், ஆன்மிகம் எதுவாயினும் கட்டுப்பாடுகளுடன் கூடிய சுதந்திரம் என்பதும் எதன் மேலும் பற்றற்ற ஒரு சுதந்திரமும் மனிதனை உயர்வுபடுத்தும் என்பதன் குறியீடாக, கோமட்டீஸ்வரர் முற்றும் துறந்த நிர்வாணமநிலையில் சிரவணபெலெகோலாவில் வானளாவ உயர்ந்து நிற்கிறார் என்பதாகத் தோன்றுகிறது.

நாவல் ஜைன மதத்தைப்பற்றிச் சொல்லம் ஒவ்வொரு இடத்திலும் உடனுக்குடனாக அதன் மற்றொரு கோணத்தையும் முன்வைக்கிறது. தீட்சை பெறும் நிகழ்ச்சி மிகவும் கஷ்டமானதொன்றாக இருக்கிறது. அசைவத்தையும் அகிம்சையையும் போதிக்கின்ற ஒரு மதம் ஏன் இப்படி இம்சையை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறது என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. கிறிஸ்துவ மதத்தில் baptism போன்று இதுவும் ஒரு சடங்கு என்ற நியாயமும் சொல்லப்படுகிறது. வாசகருக்கும் எந்த மதமாயினும் ஏதோ சடங்குகள் இப்படி இருந்துகொண்டுதான் இருக்கின்றன என்றே எண்ணவைக்கிறது.

நிர்மல்குமார் , ஆன், தேவேந்திரப்பா, அப்பாசாகிப் போன்றோர் மூலம் ஜைன மதக்கொள்கைகளின் சடங்குகளின் நியாயங்களை எடுத்துக்கூறும் தேசாய், பரத், ரோஜா, ஆடம் போன்ற பாத்திரங்கள் மூலம் அவற்றைக் கேள்விக்குள்ளாக்குகிறார்.

அப்பாசாகிபின் மனைவி ஒரு இடத்தில் “யோசிச்சிப் பாத்தா எல்லாமதங்களும் ஒண்ணுதான். எல்லாருமே மனசை சுத்தமா வச்சிக்கறதப் பத்தித்தான் பேசறாங்க இல்லயா?” என்ற கேட்கிறாள். இந்த நாவலைப் படிக்கும்போது இந்த எண்ணமே எழுகிறது. எல்லாமதங்களிலும் சில நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன. ஜைனர்கள் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் சந்திரகிரி மலைக்கச் செல்ல நினைக்கிறார்கள். அந்த இடத்துக்குப் போய்வந்தால் மோட்சம் கிட்டும் என நம்புகிறார்கள். இந்துக்கள் கைலாய மலைக்கும் காசிக்கும் போகிறார்கள். கிறிஸ்துவர்கள் ஜெருசலேமுக்கும் இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரையும் சென்றுவருகிறார்கள். இதைப்போலவே விரதங்கள், சாஸ்திரங்கள் முதலானவையும். மதங்கள் எதுவாயிருந்தாலும் மனிதன் காமம், கோபம், லோபம் ஆகியவற்றை விட்டொழித்தால் உயர்நிலையை அடைய முடியும் என்பதே சுவை உணர்த்தும் பொருள்.

நாவலில் பரத் ஜைனனாக பிறந்துவளர்ந்தாலும் ஒழுக்க நெறிகளிலிருந்து மாறுபட்ட குணங்களை உடையவனாக இருக்கிறான். ஆடம் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தாலும் ஜைன-கிறிஸ்துவப் பெற்றோர்களாயினும், மனிதர்களைமதிப்பவனாகவும் ஜைன மதத்தின் பொருளற்ற செயல்களை கேள்வி கேட்டவனாகவும் இருக்கிறான். ஆன் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த போதிலும் ஜைன மதத்தின்மேல் ஆழ்ந்த பற்றுக்கொண்டவனாகவும் தீவிரமாய் அதைப்பற்றித் தெரிந்துகொள்பவளாகவும் இருக்கிறாள். அதே சமயம் இந்த நாட்டவரே ஆனாலும் பரத்தின் பல பெண்தோழியதர் மாறுபட்ட குணங்களை உடையவர்களாக இருக்கிறார்கள்.

ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்களாக இருந்தாலும் அப்பாசாகிப் ஒரு சிறிய குடும்பத்தை தனக்கென அமைத்துக்கொள்பவராகவும் , தேவேந்திரப்பா தன் மனைவி இறந்த பிறகு சல்லேகண விரதமிருந்து உயிர்விடத் தயாரான நிலைக்கு வருகிறவராகவும் மாறுகிறார்கள்.

தன் தந்தை நிர்மல்குமார் ஜைனமதத்தை ஆதரித்து அராய்ச்சி செய்பவராகவும் பிரசங்கங்கள் செய்பவராக இருக்கும் நிலையில், அவர் மகள் ரோஜா அதிலிருந்து மாறுபட்ட மார்க்சியக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறவராக இருக்கிறாள் .

இப்படி மாறுபட்ட குணங்களும் பழக்கவழக்கங்களும் கொண்ட மனிதர்கள் உலவும் இந்த நாவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது நெருங்கிய நண்பர்களாகவோ இருந்தாலும்கூட யாரும் யார் காவலிலும் இல்லை. தனித்துவத்துடனும் இல்லை. தனித்துவத்துவடன் இயங்குகிறார்கள்.

ஓரிடத்தில் சாந்திசாகர் பற்றிய குறிப்புகளில் இப்படி இடம்பெறுகிறது.

“உயிருக்குத் துணை யாருமில்லையப்பா
யாரும் இல்லை
உயிர் தனிமையில் இருக்கிறது
தனிமையில்
அதற்கு யாரும் இல்லை தனிமையில் அலைகிறது.
மோட்சத்துக்கும் தனிமையில் செல்கிறது.”

ஒரு விதத்தில் நாவலில் ஒவ்வொருவரின் தன்மையும் கூட இப்படி தனித்தே இருக்கிறது. இதுவே நாவலில் வாசகர்களுக்குப் பிடித்த விஷயமாக இருக்கிறது.

எல்லா மதங்களுமே பெண்களைக் குறைத்து மதிப்பிட்டு அவர்களை மட்டம் தட்டும் விதமாகவே கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஜைனமதமும் விதிவிலக்கல்ல. அப்பாசாகிப் மகன் நிர்மலா கைம்பெண்ணாக இருக்கிறாள். அவளுக்கு, அவர்கள் பஸ்தியின் (கோவிலின்) பண்டிதர் ஜினசேனன் மீது ஓர் ஈர்ப்பு இருக்கிறது. ஆனால் அவர்கள் இருவருமே திருமணம் செய்து கொண்டுவிடுவார்களோ என்பதாலேயே பண்டிதன் அங்கிருந்து பெலெகோலாவுக்கு விரட்டப்படுகிறான். நிர்மலா விதவையாக இருப்பதையே அப்பாசாகிப் விரும்புகிறார்.

நேமிநாதர் இங்கிலாந்துக்குச் செல்லும் முன்பாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். அந்தப் பெண்ணை அம்போ என விட்டுவிட்டு இங்கிலாந்தில் எமிலியாவைத் திருமணம் செய்துகொaள்கிறார். அந்தப் பெண் துறவியாகிவிடுகிறாள். ( கோவலனால் கைவிடப்பட்ட மாதவி துறவியாதை ஞாபகப்படுத்துகிறது.)

பெண் என்பவள் நேரிடையாக மோட்சத்துக்குச் செல்லமுடியாது. ஆணின் பிறவியெடுத்தே போகமுடியும் என்ற கருத்தை ஜைனமும் வலியுறுத்துகிறது அதுபோலவே, பெண்கள் வீட்டில் பெற்றோர் இறந்தால் , அந்த ஆன்மா சாக்கடை வழியாகவே பயணிக்கும் என்ற கருத்தும் ஜைனமதத்தில் இருக்கிறது. இதே கருத்து இந்துக்களின் மனுசாஸ்திரத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

ஆன் என்னதான் ஜைனமதத்தில் ஆழ்ந்த பற்றும் தேர்ச்சியும் கொண்டவளானாலும், அவள் அடிப்படையில் கிறிஸ்துவர் என்பதாலேயே மஸ்தாபிஷேகம் பற்றிய புத்தககக்குறிப்புகள் எழுதும் வேலைகள் அவளுக்கு மறுக்கப்படுகிறது. மடத்தில் அவள் பயிற்சிகள் எடுக்கும்போது, அவள் பெண் என்கிற பார்வையோடு, ஆண்களின் , ஆண் துறவிகளின் காமப்பார்வைகளையும் சந்திக்கநேர்கிறது.

ஓம் நமோ நாவலை வாசிப்பவருக்கு நிச்சயம் இப்படி பல கோணங்களிலிருந்தும் நாவலை அணுகக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. நாவலைப் படித்துமுடிக்கும்போது “யோசிச்சிப் பாத்தா எல்லா மதங்களும் ஒன்னுதான். எல்லாருமே மனச சுத்தமா வச்சிக்கறத பத்தித்தான் பேசறாங்க” என்ற எண்ணம் தானாகவே தோன்றி விடுகிறது.

நாவலில் மிகுந்த அழகுணர்ச்சியோ, சுண்டியிழுக்கும் வர்ணனைகளோ இல்லை. ஆனாலும் தொடர்ந்து வாசிக்கத்தூண்டும் விதமாக இருப்பதற்கான காரணம் சாந்திநாத தேசாய் அவர்களின் நடைய,ம் பாவண்ணன் அவரக்ளின் தங்குதடையற்ற மொழிபெயர்ப்பும். தேசாய் அவர்களின் குறுக்கீடு சரியான சமயங்களில் நாவலிடையே அமைந்திருப்பது ஒரு சிறப்பு. நாவலின் அட்டையில் அமைந்துள்ள அழகான ஒளியுடன் கூடிய கோமட்டீஸ்வரரின் படம் மனத்தைக் கவர்கிறது. புத்தகத்தை உடனடியாகப் படிக்கத் தூண்டுகிற மனநிலையை அது உருவாக்குகிறது. சாகித்திய அகாதெமி நிறுவனம் புத்தகத்தை அழகாக வெளியிட்டிருக்கிறது.

Series Navigation

எஸ்.ஜெயஸ்ரீ

எஸ்.ஜெயஸ்ரீ