இ.பா வின் ‘வேதபுரத்து வியாபாரிகள்’- ஒரு அரசியல் அங்கத நாவல்.

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

வே.சபாநாயகம்


இன்று புதுமைப்பித்தனுக்குப் பிறகு அற்புதமான அங்கதம் அமைய எழுதுபவர் திரு. இந்திரா பார்த்தசாரதி
அவர்கள். இவரது சிறுகதைகள் மட்டுமல்லாமல் நாவல்களும் அங்கதச்சுவை மிக்கவை. புதுமைப்பித்தனின் அங்கதம் கடுமையாகவும் எள்ளலாகவும் இருக்கும். ஆனால் இ.பா வின் அங்கதம் மென்னகை பூக்க வைப்பதோடு, சில சமயங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைப்பதாகவும், மறைமுகமாகச் சாடுவதாகவும் இருக்கும். ‘கிழக்கு பதிப்பகம்’
வெளியிட்டிருக்கும் இவரது ‘வேதபுரத்து வியாபாரிகள்’ ஒரு மிகச் சிறப்பான அரசியல் அங்கத நாவல்.

கல்கியில் தொடராக வந்த இந்நாவலின் பிறப்பு பற்றி முன்னுரையில் குறிப்பிடும்போது, இ.பா அவர்கள் அங்கதம் எழுதுவது பற்றிச் சொல்கிறார்: “கல்கி ராஜேந்திரன் ‘கல்கி’க்கு ஒரு அரசியல் அங்கதத் தொடர் எழுதித் தரும்படி
கேட்டார். “அங்கதம் இனி எழுத முடியாது என்று தோன்றுகிறது’ என்று நான் அவரிடம் சொன்னேன். ‘ஏன்?’
என்றார் அவர். ‘நடப்பு நிகழ்வுகளை மிகைப்படுத்திக் கற்பனையுடன் நகைச்சுவை தோன்ற எழுதுவதுதான் அங்கதம்
என்றால், இப்போது நாட்டில் நடப்பன அனைத்துமே அங்கதம்தான். நான் அங்கதம் என்று நினைத்துக்கொண்டு
எழுதினால், அது படிப்பவர்களுக்கு வெறும் செய்தித் திரட்டாக இருக்கக் கூடும்’ என்றேன்.” அந்தளவு இன்றைய
அரசியல்வாதிகளின் செயல்கள் கற்பனயாக எழுத அவசியமில்லாமல் அப்படியே எழுதுவதே அங்கதம் மிக்கதாக
இருக்கும் என்று இன்றைய யதார்த்தத்தை எள்ளலுடன் குறிப்பிடுகிறார். அப்படி அவர் யதார்த்தமாக உணர்ந்தவற்றை
வரிக்குவரி அங்கதச்சுவை அமைய இந்நாவலைப் படைத்திருக்கிறார்.

‘எல்லா மொழிகளிலுமே ‘அங்கதங்களுக்கு’ ஒரு ஆயுள் வரையறை (morality rate) உண்டு. பதினெட்டாம்
நூற்றாண்டில், ஜானதன் ஸ்•ப்ட் (Jonatan SWift) ‘கலிவரின் பயணங்கள்’ என்ற ஒரு மகத்தான சமூக அங்கத
நாவல் எழுதினார். சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, ஜார்ஜ் ஆர்வெலின் ‘1984’, ‘விலங்குப்பண்ணை’ (Animal Form)
ஆகிய இரண்டு நாவல்களுமே மனித சுபாவம் பற்றிய உளவியல் படைப்புகளாகவே அறியப்படுகின்றனவே அன்றி,
கம்யூனிசக் கோட்பாடுகளை பற்றிய விமர்சனம் என்ற கருத்தோட்டம் மறைந்து வருகிறது’ என்று குறிப்பிடும் இ.பா
‘நல்ல வேளை, இந்திய, தமிழ்நாட்டு அரசியல், சமூக சூழ்நிலைகள் நான் இந்நாவலை எழுதிய பத்தாண்டு
காலத்தில் மாறுதல் இல்லாமலே இருந்து வருகின்றன என்பது இந்த நாவலின் அதிர்ஷ்டம்’ என்கிறா¡ர். ஏனெனல், எந்தக்காரணத்துக்காக இந்த அங்கதம் அன்று எழுதப்பட்டதோ அதே காரணத்துக்காக இன்றும் அங்கதமாகவே’ இதைப் படிக்க முடிவதற்குக் காரணம் நமது அரசியல்வாதிகளின் செயல்பாட்டுகள் பல ஆண்டுகளாக மாறாது கேலிக்குரியதாக இருப்பதுதான்.

அபூர்வா என்கிற தமிழின் மூலத்தைக் கொண்ட, அமெரிக்கப் பெண்ணொருத்தி தன் தாய் நாடான தமிழ்
நாட்டுக்கு – மக்களுடன் பழகி இந்நாட்டைப் பற்றி புத்தகம் எழுதும் எண்ணத்துடன் வருகிறாள். இங்கே வந்து
இங்குள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்கையில், அவள் வந்த நோக்கத்திலிருந்து விலகி, அவளது
விருப்பத்துக்கு மாறாக இந்த நாட்டு அரசியலில் பங்கேற்கவும் தலைவி ஆகவும் நேர்கிறது. ‘இக்கலாச்சாரத்தில்
உய்யவேண்டும் என்றால், ஆட்கொள்ளப்படுதலைத் தவிர வேறு வழியில்லை என்கிற ஓர் அவல நிலையை எய்துதல்தான், இந்நாவலின் துன்பியல் முடிவு’ என்கிறார் ஆசிரியர்.

இந்நாவலில் வரும் பாத்திரங்களும், இடங்களும் வாசிப்பவருக்கு எளிதில் அர்த்தமாகின்றன. வேதபுரம் என்பது
புதுச்சேரியின் பெயர்களில் ஒன்று என்றாலும், அது – தமிழ்நாட்டையும், ‘வேதபுரத்தில் வியாபாரம் பெருகுது’
என்ற பாரதியின் வார்த்தைகள் அங்கு நடக்கும் அரசியல் வியாபாரத்தையும் சுட்டுவதை உணர முடிகிறது.
‘இந்திரப்பிரஸ்தம்’ என்று நாவலில் வரும், நாட்டின் தலைநகர் ‘தில்லி’ என்பதையும் அறிய முடிகிறது. தலைநகர் ஒன்று உள்ளது என்ற பிரக்ஞையே இல்லாமல், வேதபுரத்தைத் தனி சுதந்திர நாடாகக் கருதி அங்கு ஆளும்
அரசியல் தலைவர்கள் முடியாட்சி நடத்தும் விசித்திரத்தையும், அங்கு நிலவும் கலாச்சாரச் சீரழிவையும் ஒளிவு மறைவின்றித் தத்ரூபமாய் நாவல் சித்தரிக்கிறது. தலைவரைச் சந்திக்க முடியாத, தலவரை நேரில் பார்க்க வியலாத
கீழ்மட்டத் தலைவர்களின் அவலத்தையும், காலில் விழும் கலாச்சாரத்தையும், தலைவருக்கு நெருக்கமான ஒருவரே எல்லாவற்றையும் இயக்குவதையும் கதை நாயகி அபூர்வா பார்க்கிறாள். எந்த நேரத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் அல்லது வீழ்ச்சி நிகழும் என்று தீர்மானிக்க இயலாத தலைவரின் விசித்திர நடவடிக்கை கண்டு வியக்கும் அவளுக்கே, அந்த அதிர்ச்சியான உயர்வும் விசித்திரங்களும் நேர்கின்றன. அவளும் சந்திக்க முடியாத அந்தத் தலைவரையும் அபூர்வவின் மூலப்பாத்திரத்தையும் நாம் இனங்கண்டு ரசிக்க முடிகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட
அரசியல் கட்சியையோ, அரசியல் தலைவரையோ கிண்டல் செய்வது தன் நோக்கமில்லை என்று ஆசிரியர்
சொன்னாலும், நமக்கு அந்தக் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் எளிதில் அடையாளம் காண முடிகிறது.
வரிக்குவரி கிண்டலும் கேலியுமாய் படிப்பவரை நாவல் பரவசப்படுத்துகிறது. எழுத்தாளர்களை இப்படியும் ஒரு அற்புதமான அங்கத எழுத்தை நம்மால் எழுத முடியுமா என்று ஏங்க வைக்கிறது.

என்னதான் நான் இ.பாவின் அங்கதச் சிறப்பை வளைத்து வளைத்து எழுதினாலும் நாவலைப் படித்தால் மட்டுமே பரிபூரண வாசிப்பு சுகத்தை அனுபவிக்க முடியும். இந்த வாசிப்பு சுகம் தி.ஜானகிராமன் போன்று, அபூர்வமாக ஒரு
சிலரது எழுத்துக்களில்தான் காணமுடியும். அப்படிப்பட்ட அபூர்வமான எழுத்து இ.பாவினுடையது. வாசகர்ளின்
வாசிப்புக்குப்புத் தூண்டும் விதமாக கீழ்க்கண்ட சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும்கூட கேலியும் கிண்டலும் தொனிக்கிற கற்பனையான எடுத்துக்காட்டு கள் – ‘வேதபுரத்தில்தான் தலைவர்களின் பாதங்களைத் தொட்டுக் கும்பிடுதல் என்ற மரபு ஏற்பட்டிருக்க முடியும்;
மேலைநாடுகளில் இம்மரபு தோன்றி இருக்க இயலாது. காரணம் அந்த நாடுகள் குளிர்ப்பிரதேசங்கள், காலில் எப்போதும் பூட்ஸ் போட்டிருப்பார்கள்; பாதங்களின் நேரடி தரிசனம் கிடைப்பது சாத்தியமில்லை’. (‘பாத பூஜை ஆய்வு’ – ஆசிரியர், எஸ்.எம்.ஆர்.என்.கிருஷ்ணசாமி. பக்.34-35)’ போன்று தரப்பட்டிருப்பதும் ரசனைக்குரியது.

‘வேதபுரத்துக்கு வந்த புதிதில், அவள் இங்கு நடைபெறுவது முடியாட்சிதான் என்று நினைத்தாள். தலையில்
கிரீடத்துடன் தெரு ஓரங்களை அலங்கரித்த ஆளுங்கட்சித் தலைவரின் விஸ்வரூப படத் தோற்றங்கள் அவளை அவ்வாறு நினைக்க வைத்தன.’

‘இடக்குத்தகை’ன்னா…. ஒவ்வொரு மூலையிலும் நம்ம தலைவரு ஜனங்களுக்கு தரிசனம் கொடுத்துக்கிட்டிருக் காரில்லே? அந்த இடத்தை ஏலத்துலே குத்தகைக்கு விடுறது. குத்தகைக்கு எடுத்தவரு அப்புறம் ஒவ்வொரு மூலையையும், தலைவரது உருவத்தை வைக்கப் பிரியப்படறவங்களுக்கு வாடகைக்கு விடுவாரு….’

‘எங்க நாட்டை நீங்க புரிஞ்சிக்கணும்னா, தேவைப்படுகிற அளவுகோலே வேற… பகுத்தறிவுக்கு டாட்டா
சொல்லணும். ஆனா நாங்க கொடுக்கிற பட்டங்களெல்லாம் ‘பகுத்தறிவுச் செம்மல்’, பகுத்தறிவு மறவன்’, அது இதுன்னுதான். சுயமரியாதைன்னு சொல்லுவோம், கால்லே விழுந்து காரியத்தைச் சாதிச்சுப்போம்.’

‘எங்கள் நாட்டில் யார் என்ன சொன்னாலும் அப்படியே அரசாங்கம் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு கமிஷன் அமைத்து விசாரிப்பதுதான் மரபு.’

‘நீங்க பகுத்தறிவு, பகுத்தறிவுன்னு பிரசாரம் பண்ணலாம். ஆனா, சாதாரண ஜனங்க விரும்பறது, பகுத்தறிவிலே
ருந்து விடுமுறை, ‘நம்பிக்கையின்மைய விரும்பிப்புறக்கணித்தல்’ங்கறது வேதபுரத்திலேதான் சாத்தியம்’.

– அரசியல்வாதியை மட்டுமல்ல ஆன்மீகவாதிகளையும் இ.பா விட்டு வைக்கவில்லை: ‘ஞானச்செல்வர் சிங்காரம்
அடிகளார், சிவப்பு வேட்டி, சிவப்பு சால்வை சகிதமாக அவள் (தலைவர்) வருகைக்காகக் காத்துக் கொண்டு மேடையருகே நின்றார்.

‘வேதபுரத்து மக்கள ஆளப்பட வேண்டிய இனமே தவிர, ஆள்ற இனமே இல்ல. எல்லோரும் இந்நாட்டு மன்னர்ங்கிறதெல்லாம் வேதபுரத்துக்குப் பொருந்தி வராது. ‘எங்களைப் போட்டு மிதிங்க, மிதிங்க’ன்னு சொல்லி,
ஒருத்தரைத் தலைவராகவோ, தலைவியாகவோ ஆக்கி, அவங்களாலே மிதிபடறதையே சொர்க்கமா நினைக்கிற
அப்பாவிக் கூட்டம்’.

‘அபூர்வா தேவி தர்ம தரிசனம் கொடுக்கத் தயாரான போது அவரெதிரெ, அவர் தோழி வனிதா தேவி, சர்வாலங்கார பூஷிதையாய், சரீரமே நகைக்கடையாய் வந்து நின்றாள்.’

அங்கதம் மட்டுமல்ல இ.பாவின் வருணனைகளும் அற்புதமானவை: ‘வீட்டுக்காரர் முற்றத்தில் நின்று கொண்டு
இருந்தார். இடுப்பை ஒரு சிறு துண்டு அலங்கரித்தது. மற்றபடி, ‘அல்லையாண்டு அமைந்து’, திறந்த திருமேனி.’

‘உள்ளே வந்தவர் நீளமான ஒரு சாய்ந்த நேர்க்கோடு போலிருந்தார். கண்ணாடி. மைனஸ் ஏழு அல்லது எட்டு இருக்கலாம். முகத்தில் தெரிந்தது புன்னைகையா, வேதனைக் குறிப்பா என்று கண்டு பிடிப்பது கஷ்டமாக இருந்தது.’

– இவ்வாறு நாவல் முழுதும் நிறைந்துள்ள அங்கதமும், சொல்லாடல்களும், வருணனைகளும், கலைத்தன்மையும் வாசகனது நெஞ்சில் பரவசத்தை ஊட்டுகின்றன.

‘இத்தகைய கலாச்சார சூழ்நிலை உருவாவதற்கு யார் காரணம்? நாம்தான். நமக்குத் தகுதியான அரசியலும் கலாச்சாரமுந்தான் நமக்குக் கிடைக்கிறது’ என்று சாடும் இ.பா இந்நாவலை எழுதியதற்கான காரணத்தைப்
பின்கண்டவாறு விவரிக்கிறார்:

‘பிந்தைய அறுபதுகளுக்குப் பிறகே நம் கலாச்சார வீழ்ச்சி தொடங்கியது என்று கூறமுடியும். தமிழகத்தில்
சினிமாவும் அரசியலும் இரண்டறக் கலந்தன. ”சினிமாவும் அரசியலும் இரண்டென்பர் அறிவிலார், அரசியலே
சினிமா என்றறிந்தபின், நிழலே நிஜம் என்றிருப்பாரே” என்ற ஒரு ‘ஆன்மிகக் கொள்கையின் அடிப்படையில்
ஒரு புது சமயம் உருவாயிற்று. அதை உருவாக்கிய ‘சித்தர்’களே அரசியல் தலைவர்களானார்கள். இதன்
வெளிப்பாடாக அமைந்ததுதான் தமிழ்நாட்டின் அன்றைய, இன்றைய கலாச்சாரம். இது எல்லாத் துறைகளையும்
பாதித்தது. இதைச் சுட்டிக் காட்டவே இந்நாவலை எழுதினேன்.’

‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்’ என்ற சமூகப் பிரக்ஞையுடனும் நமது கலாச்சாரத்தின் சீரழிவு பற்றிய கவலையுடனும் எழுதப்பட்ட இந்நாவலுக்கு 1997ஆம் ஆண்டின்
பாரதீய பாஷா பரிஷத் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 0

நூல்: வேதபுரத்து வியாபாரிகள்
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்