திலகபாமாவின் மறைவாள் வீச்சு

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

உங்கள் நூலகம்



கவிஞர் திலகபாமாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது . இத்தொகுப்பில் பன்னிரண்டு கதைகள் பதினொன்றாவது கதையான சுருக்கப் பட்ட வீடும் விரிக்கப்பட்ட மைதானமும் குழந்தைகளுக்கான கதை . மீதி பதினொன்றும் பெரியவர்களுக்கனவை

எல்லா கதைகளிலும் சாரம்சமாய் நிற்பது ஆண்களின் ஆதிக்கமும் சமத்துவத்திற்காக ஏங்கும் பெண்கள் காட்டும் எதிர்ப்புணர்வுமே குளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி மறைவாள் வீச்சு திசையணங்கு ஆகிய கதைகளில் மறு வாசிப்பு ஆகியிருக்கின்றன நம் பழைய கதைகள் . இரண்டு கதைகள் நவீன வாழ்வின் தவிர்க்க முடியாத கருவியான அலைபேசி(செல்லிடை பேசி) பற்றியவை

எல்லாக் கதைகளிலுமே வாசகரை உள் நுழைய சிரமப் படுத்துகின்ற சுருள் மொழி பயன்படுத்தப் பட்டிருக்கின்றது. ஆசிரியர் சித்தரிக்க முயலும் ஆண்பெண் உணர்ச்சிகள் மிக நுண்மையானவை. அவற்றை நுட்பமான மொழியிலும் , உரையாடலிலும் சித்தரிக்க முயலுகிறார். ஒன்றினுள் ஒன்றாகவும் ஒன்றோடு ஒன்றாகவும் பின்னிலும் இணைந்தும் செல்லும் மெல்லிய வரிகளின் நடுவே ஆசிரியர் சொல்ல வந்ததைக் கண்டு பிடிக்கக் கடுமையான சிரமம் ஏற்படுகிறது. நவீன ஓவியத்தின் வடிவமாகவே கதைகள் அமைந்துள்ளன. பழக்கப் பட்ட வாசகர்களைக் கூட திணற அடித்து விடுகின்றன.

இத்தொகுப்பில் சிறந்த கதைகளாக ‘கிணற்று நீர் ‘, ‘குளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி’ , அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள் ‘வண்ணங்களுக்குள் இருப்பது’ ஆகியன என எனக்குத் தோன்றுகின்றன. ‘மறைவாள் வீச்சு’ , மீள் வாசிப்பு செய்யப் படும் கண்ணகி கதை . இக்கதையின் முதல் பாதி கோவலனை ஆணாகவும் கண்ணகியைப் புதுமைப் பெண்ணாகவும் காட்டுகிறது. பின் பகுதி மறைவாள் வீச்சின் விளைகளமாக விரிந்து கிடக்கிறது. கோவலர்களைக் கொல்லும் மறைவாள் மனதில் படியாத ஒரு மாயவாளாக ஆசிரியரின் கையில் தனித்து நிற்பதாக தோன்றுகிறது.

கிணற்று நீர் சிறப்பான கதை. இன்றைய பெண்ணைக் கிணற்று நீராகக் காட்டியிருக்கும் சித்திரம் எட்டிப் பார்க்கப் பார்க்கத் தாண்டிப் போகிற ஆழமான ஒன்றாக அமைந்திருக்கிறது. இயல்பாய் ஊறிக் கிடக்கிற கேணியானது நிலம் தனியுடமையாக்கப் படும் போது தானும் தனியுடமையாகிப் போயிற்று என்பது மிக நெடிய வரலாற்றின் ஒரு வரிச் சித்திரம் உடைமையாக்கப் பட்ட நிலம் கடப்பாறையாலும் , மண் வெட்டியாலும் துகிலுரியப் படுகிறது என்னும் சித்தரிப்பும் ஆழ்ந்த பொருள் உள்ளது

கிணற்றினுள்ளே ஒரு குண்டுப் புறா குடியிருக்கிறது.. போதும் போதும் எனக் குடிக்க நீர் கிணற்றுக்குள்ளே இருந்த போதும் காலை நேரத்துத் தண்ணீர் பாய்ச்சலில் பூமி உறிஞ்சாது விட்டிருந்த துளிகளைத் தேடி அலைகிறது அது . மிக அருமையான படிமம்

இன்னொன்று கிணற்றின் அக வாழ்வு . பகலில் கிணற்றைக் கொஞ்சுகிறது சூரியன் . அதைத் தனக்குள் புதைத்துக் கொண்டு இரவில் நிலவைக் கொஞ்சுகிறது அது. இப்படிப் பாஞ்சாலியாக வாழுகிறது கிணறு தான் யாருக்கும் சொந்தமில்லை என நிறுவிய படி

சந்திரமதி கதையும் அகலமும் ஆழமும் கொண்டது இதைக் கதை என்பதை விட உடைத்து அடுக்கப் படாமல் குவித்துப் போடப் பட்ட ஒரு கவிதைக் குவியல் என்ரு சொல்வது பொருந்தும். இங்கும் சந்திரமதியின் உணர்வுகளின் ஊடாகச் சொல்லப் படுவது இன்றைய பெண்ணின் விடுதலை உணர்வுகளே . நிசும்ப சூதினி சந்திர மதி பாண்டியாடும் காட்சி, திறமை மிக்க நிசும்ப சூதினி சந்திரமதியிடம் தோற்பதன் உட்பொருள் ஆழ்ந்து யோசிக்க வைப்பவை சந்திரமதி சொல்லுவாள் “வெல்லத் தெரிந்தவர்கள் தோற்பது தியாகமல்ல , துரோகங்கள். காலம் துரோகங்களை மன்னிப்பதில்லை. தண்டித்து விடும்” இன்றைய ஆண் பெண் உறவுப் பங்கீட்டுப் பிரச்சினையில் நடக்கும் தப்புத் தாளங்களை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார் ஆசிரியர் . தொடர்ந்து பல வரிகள் தேர்ந்த உளவியல் வல்லுனரின் பார்வையோடும் நுட்பத் தோடும் அற்புதமான சிற்பியின் அழகுணர்வோடும் பதிவாகியுள்ளன சூரியப் பிரபைகள் தேய்ந்து சிவப்பாகி மறைந்து கருமைசேர கருநீலமென மாறி ஆங்காங்கே வித்துக்களின் சத்துக்களில் வழிந்த எண்ணெய்களில்” எனும் பகுதி ‘நிசும்ப சூதினியும் சந்திரமதியும் விட்டு வந்த பல்லாங் குழிகளின் மேடு பள்ளங்களை’ இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் அறுபத்து நாலு கலைகள் மூச்சி வாங்கிக் கிறங்கின , என்பது நிகரற்ற ஒரு கவிதைக் காட்சி கதையின் முடிவு வரை எப்படி வேண்டுமென்றாலும் வாசித்து அசை போட்டு ருசி தேட வற்புறுத்தும் அருமையான கதை இது.

அலைபேசி பற்றி இத்தொகுப்பில் இரண்டு கதைகள் உள்ளன இரண்டிலும் உள்ளடக்கம் என்பது ஆதிக்கத்தை விரிவுபடுத்த நினைக்கும் ஆண்மனமே “அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள் அவற்றில் நல்ல கதை. அலைபேசியை ஆண்கள் எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் . வார்த்தைகளில் தூது விட்டு அதில் பூசியிருக்கும் மயக்க மருந்தில் பிறரை வீழ்த்தி அந்த வெற்றியைத் தன் நண்பர்கள் வட்டாரத்தில் பெருமையாய் பேசித் திரியும் ஆண்கள் பற்றிக் கதை சிறப்பாகச் சொல்லுகிறது. பெண்மையின் தேவையை ‘அடுப்படிக் கனல் தாண்டி………… நேசக் கரம் தேவைப் பட்டது’ என் ஆசிரியர் சித்தரிப்பது ஆழமானது. இந்த ஏக்கத்தின் விளைவுகள் எப்படியெல்லாம் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது தான் கதை தொகுப்பில் ஒரு கதை மட்டுமல்ல ஒன்பது கதையிலும் இதுதான் செய்தி

“ வண்ணங்களுக்குள்ளிருப்பது “ மாமியார் அதிகாரம் பற்றிய கதை பெரும்பாலான இடங்களில் இன்று மருமக்கள் ஆட்சிக் கட்டிலில் ஏறிய சூழலில் இக்கதையை இருவருக்குமானதாக வாசிக்க முடியும். ஒரு படத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றி விட்ட குற்றத்துக்காக அடுத்தவர் அவரைக் கூண்டிலேற்றி விசாரணைச் செய்யும் கதை இது

கிட்டத் தட்ட எல்லாக் கதைகளிலும் ஆதிக்க உணர்வை அதை எதிர்த்து உடைத்து நிமிரும் அடக்கப் பட்ட உணர்வை மிக மெல்லிய கோடுகளால் வரைந்து காட்டுகிறார்.ஆசிரியர். சில கதைகளில் துலக்கிக் காட்டப் படவேண்டிய கோட்டைச் சுற்றி ஆவல் மிகுதியால் திரும்பத் திரும்ப நுண்கோடுகள் வரைய சித்திரம் கோட்டுக் குவியலாக இறுகிக் கிடப்பதுபோல் தோன்றுகிறது. புரிந்து கொள்ள வேண்டுமென்று கங்கணம் காட்டிக் கொண்டு சிக்கெடுப்போரின் பொறுமையும் விடாமுயற்சியற்சியும் மீண்டும் மீண்டும் சோதனைக் குள்ளாக்குகின்ற கதைகளும் உள்ளன

கதைகள் அத்தனையும் காகித மொழியில் எழுதப் பட்டுள்ளன வட்டார மொழி தலை காட்டவே இல்லை ஆனால் காகிதப் பொது மொழிக்குள்ளே ஆசிரியரின் வட்டாரச் உச்சரிப்பு சில இடங்களில் புதைந்து கிடந்து வாசிப்பு ருசியை உறுத்துகின்றன நகர்கிறான் என்பதற்குப் பதிலாக நகலுகிறான் என்கிறார். விழு என்பதற்குப் பதிலாக விழுக என்கிறார். நகர்ந்த என்பதற்குப் பதிலாக நகன்ற என எழுதுகிறார். இவை இலக்கியத் தேவையால் சொல்லப் படுகின்றனவா எனப் புரிய வில்லை

நவீனக் கவிதைக்கும் உரை நடைக்கும் பொதுவான தன்மைகள் பல இருந்தாலும் வேறுபாடுகளும் வலுவாகவே உள்ளன. கவிதையில் நிறுத்தற் குறிகள் தேவைப் படுவதில்லை. அவற்றிற்குப் பதிலாக சொற்களையும் சொற்றொடர்களையும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் ஒடித்து மடித்து அடுக்கிறார் கவிஞர் உரைநடையிலோ அடித்து அடுக்குதல் இல்லை. நிறுத்தற்புள்ளிகள் பொருள் தெளிவுக்குத் தேவை . அவற்றை ஆசிரியர் தவிர்த்திருப்பது நுகர்வுக்கு இடைஞ்சலாய் இருக்கின்றது. ஆழ்ந்து யோசித்தால் பன்னிரண்டு கதைகளும் பன்னிரண்டு நெடுங்கவிதைகளே கவிதையாக உடைத்து அடுக்கியிருந்தால் தெளிவும் அழகும் எளிமையும் இன்னும் கூடியிருக்கும் என்று தோன்றுகிறது.

தமிழ்ச்சிறுகதை உலகில் அழியாச் சுவடு பதித்த மா அரங்கநாதன் அவருடைய சிறுகதைகளில் நாவலிலும் கூட வருகின்ற முதன்மைப் பாத்திரம் முத்துக் கருப்பன் ஆதிக்கக் காரனாகவும் ஒடுக்கப் பட்டவனாகவும் படித்தவனாகவும் பாமரனாகவும் , போராளியாகவும் கோமாளியாகவும் எல்லாப் படைப்பிலும் வருகிறவன், இந்த ஒரே முத்துக் கருப்பனே. திலகபாமாவின் கதைகளில் முதன்மைப் பாத்திரமாக வருபவள் தீபா என்னும் ஒருத்தி இந்த தீபாவை விடுதலைக்காகவும் சமத்துவத்துக்காகவும் ஏங்கும் பெண்ணின் குறியீடாக உருவாக்கி இருக்கிறார் ஆசிரியர்.

எழுதியவையெல்லாம் சிறப்பாக அமைந்து விட்ட படைப்பாளியாக யாரும் இல்லை . அளவுக்கு மீறி புகழ் உயர்ந்து விடும் . சாரமற்ற படைப்புகளுக்குள்ளும் சாரம் தேடி விளக்குவதற்கு உரைகாரர்கள் எப்போதும் உண்டு சாதாரண நிலையில் பத்துச் சிறுகதைகள் உள்ள ஒரு தொகுப்பில் இரண்டு சிறுகதைகள் வெற்றி பெற்று விட்டாலே அந்தப் படைப்பு வெற்றி பெற்றதாகக் கருதலாம்.. இத்தொகுப்பில் நான்கு கதைகள் சிறந்தவைகளாக எனக்குப் படுகின்றன. ‘கிணற்று நீர் ‘, “குளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி” ஆகிய இரண்டும் தமிழ் சிறுகதை உலகத்துக்குக் கிடைத்த இரண்டு சிறந்த வைரங்கள் என்பது என் கணிப்பு. இன்னும் ஓரிரு முறை வாசித்து மறு வாசிப்பு செய்யப் பட்டிருக்கும் கதைகளோடு ஒப்பிட்டு புதிய ஆழங்களை கண்டு பிடிப்பதற்கான வாய்ப்புகள் தொகுப்பில் இருக்கக் கூடும். திலகபாமா இன்றைய புதிய எழுத்து முறைக்கு இந்தத் தொகுப்பின் மூலம் வலுவான பங்களிப்புச் செய்திருகிறார் என்பது என் கணிப்பு

Series Navigation

உங்கள் நூலகம்

உங்கள் நூலகம்