மாறும் மனச்சித்திரங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


உரையாசிரியர் நிறைய பேர்கள் இருந்திருக்கிறார்கள். அதுவும் திருக்குறளுக்கு உரை எழுதுகிறேன் என்று பலர் முயன்று இருக்கிறார்கள். ஒரு மூலநூலுக்கு எப்படி இத்தனை பேர்கள் உரையெழுத முடியும் என்று யோசித்திருக்கிறேன். ஒவ்வொருத்தருடைய பார்வை, கோணம், நோக்கம் சார்ந்து உரைகள் மாற முடியும் என்பதைப் பின்னர் புரிந்துகொண்டேன். திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரையையும் மு.வ. எழுதிய உரையையும் கலைஞர் எழுதிய உரையையும் படித்துப் பார்த்தேன். ஒவ்வொருவரும் தாம் வந்த பின்னணி, சார்ந்திருக்கும் கருத்துகளை ஒட்டியே உரையெழுதியிருக்கிறார்கள்.

வெறுமனே பொருள் சொல்லும் திருக்குறள் உரைகள் நிறைய கிடைக்கின்றன. அதன் நோக்கம் வெறும் விளக்கம்தான். ஆனால், நோக்கமோ பின்னணியோ இதுபோன்ற உரைகளுக்குக் கிடையாது. உரை எழுதுவதிலேயே இப்படிப்பட்ட ஒரு பன்முகத்தன்மை இருக்கும்போது, மூலநூல்களுக்கு, படைப்புகளுக்கு எப்படிப்பட்ட பன்மைத்தன்மை இருக்கவேண்டும்?

உண்மையில் அச்சடித்த எழுத்து என்பது ஒரு எலும்புக்கூடு. அது ரத்தமும் உயிரும் பெறுவது வாசகர் மனத்தில். ஒரு எழுத்தாளன் எலும்புக்கூட்டை எவ்வளவு சிறப்பாக உருவாக்குகிறான் என்பதில் தேர்ச்சி பெற வேண்டும். நடை, உத்தி, மொழி எல்லாம் எலும்புக்கூட்டுக்கு வடிவம் கொடுக்கும் அம்சங்கள்.

வாசகன் படிக்கும்போது, ஒரு படைப்பு முழுமை பெறுகிறது. தேர்ந்த வாசகன், தொடர்ந்து படித்து வரும் வாசகன், வித்தியாசமான முறையில் எழுத்தாளனை மதிப்பிடுகிறான். எழுத்தாளனால், தன்னுள் எப்படிப்பட்ட எண்ண அலைகளை, கற்பனைச் சித்திரத்தை உருவாக்க முடிகிறது என்றே மதிப்பிடுகிறான். வாசகனின் அனுபவ உலகத்தை எழுத்தாளானால் தட்டி எழுப்ப முடியவேண்டும். அவனுக்குள் பொதிந்து இருக்கும் நினைவுகள், அறிந்த சம்பவங்கள், பார்த்திருக்கக்கூடிய நபர்கள் எல்லோரையும் எழுத்தாளனின் படைப்பு சுட்டிக் காட்ட வேண்டும்.

இப்படி எழுப்பக்கூடிய சித்திரமும் வாசகனுக்கு வாசகன் வேறுபடும். இருவேறு வாசகர்களுக்கு ஒரே சித்திரம் கிடைக்க வாய்ப்பில்லை. வாசகனின் அனுபவ உலகம் எவ்வளவு விரிவானதோ, அவ்வளவு விரிவானது படைப்பும். ஒரு படைப்பில் உள்ள வர்ணனைகள், சித்திரத்தை உருவாக்க உதவுபவை. சிந்தனை ஓட்டம், பாத்திரங்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவை.

ஆனால், எந்தக் காலத்திலும் எழுத்தாளன், நான் எழுதியதை என் வாசகர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. எழுத்தாளன் சொன்னதை அல்ல, வாசகன் தான் புரிந்துகொள்ள விரும்பியதையே புரிந்துகொண்டு இருக்கிறான்.

வாசகனின் மன சித்திரங்கள் காலவோட்டத்தில் மாறுதல் அடைந்துகொண்டே வருகின்றன. எத்தனையோ புறக்காரணிகள், அகச்சித்திரத்தை வடிவமைக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையிலும் அகச்சித்திரம் வேறு வேறாக இருக்கின்றன. ஆனால் ஒரு சில சரடுகள் தொடர்ந்து வருகின்றன. உதாரணமாக, இன்றைய தலைமுறை பெண்களும், எழுத்தாளர் லட்சுமியின் படைப்புகளைப் படிக்கின்றனர். நா. பார்த்தசாரதியைப் படிக்கின்றனர். பெண்ணைக் குறித்து இருக்கும் மனச்சித்திரம், லட்சியவாதத்தின் தேவையை உணரும் ஒரு தலைமுறைக்கு இருக்கும் மனச்சித்திரங்கள், இந்த எழுத்தாளர்களை இன்றும் ஏற்கத்தக்கவர்களாக ஆக்கியிருக்கிறது.

மனச்சித்திரங்களின் மாறுதல்களைத் திரைப்படங்களில் இன்னும் தெளிவாகப் பார்க்கலாம். ஒரு காலத்தில் சினிமாவில் அழுகை காட்சிகள் நிறைய இருக்கும். அப்புறம் அத்தகைய காட்சிகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டன. இன்றைய இளைஞர்களுக்கு ஆட்டம் பாட்டம்தான் பிடித்திருக்கிறது. அவர்களுக்குச் சோக சுவை வேண்டாம் என்று சினிமாகாரர்கள் ஒதுக்கிவிட்டார்கள். சோகம் என்றால் தனிமை, வெறுப்பு, இருட்டு என்ற சூழல்களை மாற்றி, அதையும் இன்றைய சினிமா ஒரு கொண்டாட்டமாக மாற்றிவிட்டது. விஷ்ணுவர்த்தனின் ஒரு படத்தில் இதைப் பார்த்தேன்.

சமீப உதாரணம், வாரணம் ஆயிரம் படத்தில் வரும் பாடல், ‘நான் தேடி வந்த அஞ்சலை.’ சோகத்திலும் கும்மாளம் போடுகிறான் ஹீரோ. பழைய ரசிகர்களுக்கு இப்பாடல் ஆச்சரியம் அளிக்கலாம். ஆனால், இன்றைய ரசிகர்களின் மனச்சித்திரம் இது. அந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்.

இன்னொரு படம், இயக்குநர் ஜீவாவின் ‘ உன்னாலே உன்னாலே.’ அதாவது எதையும் சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது, ஆண் பெண் பழக்கம் உட்பட. தங்களைத் தாங்களே சுயஎள்ளல் செய்துகொண்ட படம், ‘சென்னை 28.’

மாறுதல் அடைந்துகொண்டே இருக்கும் மனச்சித்திரங்களே, நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. நாம் கெட்டித் தட்டிப் போகாமல் இருக்கவும் வாழ்க்கையை அனுபவிக்கவுமே மனச்சித்திரங்கள் உதவுகின்றன. படைப்புகள் இந்த மாற்றங்களைத் தொடர்ந்து பிரதிபலிக்கின்றன. நவீன இந்திய நாவலாசிரியர்களின் படைப்புகளில் இந்த மாறுதல்கள் நன்கு தெரிகின்றன. அத்வைதா கலா, சேத்தன் பகத் எல்லோரும் நவீன மனச்சித்திரங்களை தட்டி எழுப்புபவர்களாக இருக்கிறார்கள்.

ஜீ. முருகனின் ‘மரம்’ நாவல் இந்தத் திசையில் கொஞ்சம் முன்னேறியிருக்கிறது. எனக்கு அந்த நாவல் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால், முதல் முறையாக ஒரு தமிழ் நாவலில், இண்டர்நெட், கணினி, அதில் போர்னோகிராபியைச் சேமித்து வைப்பது, இணைய போர்னோ ஏற்படுத்தும் மனச்சிக்கல்கள் எல்லாம் மரம் நாவலில் பேசப்படுகின்றன. அது புதிதாக எனக்குத் தோன்றியது. இந்த விஷயங்கள் எல்லாம் முற்றிலும் இன்றைய காலகட்டத்தின் மனச்சித்திரங்கள்.

மற்றபடி இன்றைய சிறுகதைகளில், நாவல்களில் இன்றைய காலகட்டத்தின் மனச்சித்திரங்களை இன்னும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
==========

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்