அழியாப் புகழ் பெறும் இடங்கள்

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


பஸ்ஸில் போவதும் நடந்துபோவதும் எனக்குப் பிடித்த பழக்கங்கள். காரிலோ, டூவீலரிலோ போகும்போதும் எல்லாமே சரக்கென்று காணாமல் ஓடிப்போய்விடுகின்றன. எந்த ஒரு காட்சியும் கட்டடமும் பெயர்ப்பலகையும் மனத்தில் பதிவதில்லை. பெரும்பாலும் சாலைப் பெயர்களைக் கூடப் படிக்க முடிவதில்லை.

நடை அப்படி இல்லை. பஸ்ஸும் அப்படி இல்லை. எதையும் நிதானமாகப் பார்த்துக்கொண்டு போக, மனத்தில் வாங்கிக்கொள்ள உதவி செய்பவை இந்த இரண்டு முறைகள். மூன்று நான்கு பெரிய கடைகள் நடுவே மாட்டிக்கொண்டு இருக்கும் அற்புதமான உணவகங்களை, டீக் கடைகளை, கைவினைஞர்களின் கடைகளை இப்படித்தான் நான் கண்டுபிடித்திருக்கிறேன். ஒவ்வொரு சாலையும் நிறைய நிறைய மர்மங்களை ஒளித்துவைத்திருக்கிறது. சரித்திரங்களை ஒளித்து வைத்திருக்கிறது. மனிதர்களை ஒளித்துவைத்திருக்கிறது.

அம்மாவை இழந்த சின்ன வயதில், என் பெரும்பாலான நேரம் இப்படிப்பட்ட பயணங்களில் கழிந்திருக்கிறது. அப்போது வடசென்னையில் செளகார்பேட்டை என்று சொல்லப்படும் கொண்டித்தோப்பு, (கொண்டியம்பதி) தங்க சாலை அருகே வீடு. பள்ளி விட்ட பின்பும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலாற எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடந்துபோய்விடுவேன்.

புதிய தெருக்களைக் கண்டுபிடிப்பது, புதிய இடங்களை, புதிய கடைகளை கண்டிபிடிப்பது அப்போது ஏற்பட்ட பழக்கம்தான். அதுவும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் முடிந்தபின்னர் என்ன செய்வது என்று தெரியாது. விடுமுறைகள் நாள்கள் நிறைய இருக்கும். எவ்வளவுதான் புத்தகங்கள் படித்துக்கொண்டு இருப்பது? முருகன் தியேட்டர் அருகே இருந்த அரசு நூலகத்தில் இருந்து இரண்டு மூன்று நூல்களை ஒரே நாளில் படித்த வேகம் ஞாபகம் உண்டு. படிக்க முடியாத போது, ஊர் சுற்றவது பழக்கம்.

பிளஸ் ஒன்னில் அப்பா, எனக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார். பல ஆண்டுகள் சைக்கிள் என் கனவு வாகனம். அந்தப் பக்கம் தண்டையார்பேட்டை தாண்டி, சுங்கச்சாவடி, எண்ணூர் முதல், இந்தப் பக்கம் கிண்டி வரை சென்னை முழுவதையும் சைக்கிளிலேயே சுற்றித் திரிந்த வயது அது.

புதிய சாலை எப்போதும் எனக்கு ஒருவித மயக்கத்தைத் தரும். எல்லா சாலைகளும் ஏதேனும் ஒரு பெரிய சாலையிலோ இன்னொரு சிறிய சந்திலோ போய் முடிவுபெறும். வடசென்னையில் ஏராளமான முட்டுச் சந்துகள் உண்டு. சாலை முடிந்துபோய்விடும். மீண்டும் திரும்பி, அடுத்த சாலையில் சைக்கிள் ஓட்டுவேன்.

இராயபுரம், தண்டையார்பேட்டை, கல்மண்டபம், ஏழு கிணறு, பிராட்வே, கொத்தவால்சாவடி, மண்ணடி, யானைகவுனி, செண்ட்ரல் ஸ்டேஷனை ஒட்டிய பகுதிகள் எல்லாம் எனக்கு விரல்நுனியில் அத்துபடி. சைக்கிள் வந்தபிறகு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சூளை, பெரியமேடு என்று இன்னும் சுற்ற ஆரம்பித்தேன்.

இதில் இன்னொரு மகிழ்ச்சி உண்டு. தெரியாத சாலைக்குள் போய்விட்டு, அது வளைந்து, நெளிந்து, மீண்டும் ஏதேனும் ஒரு பெரிய சாலைக்குள், தெரிந்த சாலைக்குள் வந்து முடியும்போது, ஏதோ வாஸ்கோடகாமா, மெகஸ்தினிஸ் மாதிரி உற்சாகமாக இருக்கும். புதிய வழித்தடத்தைக் கண்டுபிடித்த மகிழ்ச்சி அது. மர்ம முடிச்சை அவிழ்த்துவிட்ட உற்சாகம் அது.

இப்படி சுற்ற ஆரம்பித்ததற்கு பள்ளியில் நான் சாரணர் அணியில் இருந்ததும் ஒரு காரணம். சாரணர் இயக்கத்தில், ஏதேனும் ஒரு திறமையை வளர்த்துக்கொண்டு, அதில் சிறப்பாக செய்துகாட்டினால், ‘Proficiency Badge’ தருவார்கள். நான் இரண்டு கைகளிலும் ஏராளமான பேட்ஜ்கள் வாங்கியவன். அதில் ஒன்று ‘Pathfinder’ பேட்ஜ். அதற்கு ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாகப் போய், அந்தத் தெருவில் இருக்கும் முக்கிய இடங்கள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் எல்லாவற்றையும் குறித்துக்கொண்டு வரவேண்டும்.

பின்னர், அந்த முழுப் பகுதியையும் பெரிய சார்ட் பேப்பரில் வரைந்து சாலைகளைக் குறித்து, அதில் முக்கிய இடங்களைக் குறித்து, வழிகாட்ட வேண்டும். என் சுவாரசியம் இங்கிருந்துதான் தொடங்கியது. ஏற்கெனவே ஊர்சுற்றுவது என் பொழுதுபோக்கு. நான் கொண்டியம்பதி பகுதியை இப்படி வரைந்து, இடங்களைக் குறித்து, பாத்ஃபைண்டர் பேட்ஜ் வாங்கினேன். என் சார்ட்டை பல ஆண்டுகள் வைத்திருந்தேன். ஒரு பிள்ளையார் கோவில், ஒரு அம்மன் கோவில், ஒரு மரம், ஒரு விளையாட்டுத் திடல், ஒரு வளைவு என்று எதையும் விடாமல், அத்தனையையும் என் சார்டில் குறித்திருந்தேன்.

இப்போதும் எனக்கு இந்த பழக்கம் விடுவதில்லை. யாராவது எங்கேயாவது போகவேண்டும் என்று வழிகேட்டால், முதல் வேலையாக ஒரு பேப்பரை எடுத்து வைத்துக்கொண்டு வழி போட்டுக் காட்டிவிடுவேன். என் மகள், விவேக் பாணியில், ‘மேப் போட வந்துட்டார்யா’ என்பாள். இடையில் இருக்கும் முக்கிய இடங்களை எல்லாம் சுட்டிக் காட்டுவேன். அந்த இடத்துக்குப் போகும் பஸ், பஸ் நிறுத்தத்தின் பெயர் சொல்லுவேன்.

இடங்களை ஞாபகம் வைத்துக்கொள்வது அதைச் சுற்றி இருக்கும் தடங்களை வைத்துதான். கும்பகோணத்தை அடுத்திருக்கும் என் பெரியம்மாவின் ஊருக்குப் போகவேண்டுமென்றால், என் ஞாபகத்தில் இருப்பது, ஒரு பெரிய வளைவும் வளைவு முண்டில் இருக்கும் ஆலமரமும்தான். அந்த ஆலமரத்தில் மிகப் பெரிய பொந்து உண்டு. சென்னை சாலைகளுக்கும் நான் இப்படி வழி சொல்லுவேன். ‘அங்கே திரும்பினவுடனே ஒரு அயன் கடை இருக்கும். அந்தக் கடைக்கு மூணாவது வீட்டு ஃபர்ஸ்ட் ஃப்ளோர்லேருந்து மணி பிளாண்ட் தொங்கும். நேரா போனீங்கன்னா, ஒரு அடி பம்பு இருக்கும்…’

புது இடங்களைப் பார்ப்பது மாதிரியான சுவாரசியம் வேறில்லை. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு மர்மத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு இருக்கிறது. பயம் மட்டும் கூடவே கூடாது. பல சமயங்களில் நண்பர்களோடு காரில் போகும்போது, தெரியாத சாலைகளில் பயணம் போக பயப்படுவார்கள். என்னுடைய லாஜிக் இவ்வளவுதான்: எப்படியாக இருந்தாலும் இது ஏதோ ஒரு ஊருக்கு, இல்லை ஏதேனும் ஒரு பெரிய சாலைக்குப் போய் சேர்க்கும். எதற்கு கவலைப்படுவானேன்? அங்கே இருப்பவர்களும் நம்மைப் போல் மனிதர்கள்தான். நின்று பேசினால், பதில் சொல்லாமலா போய்விடுவார்கள்?

நடக்க அஞ்சவே கூடாது. காலில் வெந்நீரை கொட்டிக்கொண்டு ஓடவும் கூடாது. அப்படிப்பட்டவர்கள் இதுபோன்ற expeditionகளுக்கு லாயக்கே இல்லை. கிடைத்ததை ரசித்துச் சாப்பிடுவது இன்னொரு முக்கிய தகுதி. வெளியே சுற்றுவதின் உபமகிழ்ச்சி எல்லாவகையான உணவுகளையும் சுவைப்பது.

வேலைக்கு வந்தபிறகு வடகேரளம் முதல் தென் கேரளம் வரை, நான் சார்ந்த நிறுவனத்துக்காக ஒரு ஆங்கில ஆசிரியரை அழைத்துக்கொண்டு ஊர் ஊராகப் போய் ஆங்கிலம் சொல்லித் தருவது பற்றி பாடம் நடத்தியிருக்கிறேன். கேரளம் முழுவதும் புட்டும் கடலையையும் மட்டுமே சாப்பிட்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன். ஆந்திரம், கர்நாடகம் சுற்றியதும் இப்படித்தான். ஆந்திர காரம் இன்னும் நினைவு மடிப்புகளில் இருக்கிறது. பின்னர் பூனா, மும்பை சுற்றியபோதும் இந்தப் பழக்கம் விடவில்லை. அங்கே எங்கே போனாலும் வடாபாவ் கிடைத்துவிடும். நம்ம ஊர் பஜ்ஜியெல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும். எங்கே போனாலும் என் ஃபேவரிட் டீ கிடைத்துவிடும்.

இப்போதுதான் கொஞ்ச காலமாக, மனைவியின் அறிவுறுத்தலால், வெளியே சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறேன். ‘என்ன எண்ணையோ என்ன தண்ணியோ, கொஞ்சம் கூட ஹைஜீனிக்கே இல்லை,’ ‘நாப்பது வயசாகப் போகுது. ஏற்கெனவே டையபடிக். கொஞ்சம் ஜாக்கிரதை,’ ‘ரெண்டு பொண்ணு இருக்கு. ஞாபகம் இருக்கட்டும்’ என்று என் ஆர்வங்களில் லேசாக பயம் தெளித்து, என்னை மிடில்கிளாஸ் சம்சாரியாக்கியிருக்கிறார் அவர்.

வெளியே சாப்பிடுவதை மட்டும் நிறுத்திக்கொண்டு விட்டேன். சுற்றுவதை அல்ல. இப்போதும் வெளியூர்களுக்கு பஸ்ஸில் போவது என் விருப்பம். அதுவும் இரவு நேரப் பயணம், இன்னும் அமர்க்களம். ஜன்னலோரமாக உட்கார்ந்துகொண்டுவிட்டால், ஒவ்வொரு ஊரும் தன் வாசனையை, சுவையை, மெளனத்தைச் சொல்லிக்கொண்டே வரும். தூரத்து மினுக் மினுக் விளக்குகள், அதனுள் பொதிந்திருக்கும் ஜீவனைச் சுட்டிக்காட்டும். புலன்களைத் திறந்து வைத்துக்கொண்டுவிட்டால் போதும், அதில் வந்து கொட்டும் சேதிகள் எண்ணற்றவை.

பயணங்களில் மிகப்பெரிய சந்தோஷம், அதுதரும் அனுபவம்தான். நான் பல ஊர்களை அது தந்த அனுபவத்தின் வாயிலாகவே ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறேன். இந்த அனுபவம்தான் எனக்கான சேகரம், எனக்கான வளம். எனக்கான உந்துசக்தி. ஒவ்வொரு முறை கதை எழுத உட்காரும்போதும், இதுபோன்ற ஏதேனும் ஒரு தெருவை, ஊரை, வாசனையை, மெளனத்தை நினைத்துக்கொள்வேன். அங்கே பார்த்த நபர்கள் என் கதை மாந்தர்கள் ஆகிவிடுவார்கள். சுற்றி இருக்கும் இடங்கள் மெல்ல மெல்ல என் கதைக்குள் நுழைய ஆரம்பித்துவிடும்.

இடம் என்ற அம்சம் இல்லாமல் என்னால் கதை எழுத முடிந்ததில்லை. கதை மாந்தர்களை ஏதேனும் ஒரு தெருவில் பொருத்திவிடுவது இதனால்தான். அதற்கு பிறகு கதையை அந்த இடமே நகர்த்திச் சென்றுவிடும். இடம்தான் கதைக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. மார்க்குவேஸுக்கு மகண்டோ, சுஜாதாவுக்கு ஸ்ரீரங்கம், அசோகமித்திரனுக்கு ஹைதராபாத் எல்லாம் இப்படி நம்பகத்தன்மை வாய்ந்த இடங்கள். அவர்களுடைய கதைகள் அழியாப் புகழ் பெற்றதற்கு, இடமும் ஒரு முக்கியக் காரணமோ? இருக்கலாம்.

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்