‘மூன்று விரல்’ மோகம்! – இரா.முருகனின் நாவல்பற்றி.

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

வே.சபாநாயகம்


நூல் வாசிப்பு பற்றி கி.ரா ஒருதடவை எழுதியதாக ஞாபகம். ‘புஸ்தத்துக்குள் நுழையாலாம்னுதான்
பாக்ககுறேன். ஆனா உள்ள நொழைய விட மாட்டேங்குறானே! காலைப் பிடிச்சு இழுக்குறானே!’ என்பது போல வாசிப்புக்கு இடம் தராத எழுத்து பற்றிச் சொன்னதாக நினைவு. இரா.முருகனின் எழுத்தில் அந்தச் சங்கடமே இல்லை. உள்ளே நுழைய வேண்டியதுதான் – முதலை தண்ணீருக்குள் இழுத்துக்கொண்டு அடிஆழத்துக்குக் கொண்டுபோகிறமாதிரி அவரது எழுத்து நம்மை மெய்மறக்கச் செய்து தன்னுள் ஆழ்த்தி
விடும்! அதற்கு சரியான எடுத்துக்காட்டு ‘கிழக்கு பதிப்பகம்’ வெளியிட்டுள்ள அவரது ‘மூன்று விரல்’ என்கிற
நாவல். ‘கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்கமுடியாது’ என்பது உயர்வு நவிற்சியல்ல – இந்த நாவலைப் பற்றியவரை உண்மை!

‘சிலிகன் வேலி’ என்கிற கணினி உலகத்து உத்தியோகம் பற்றி நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கும்
மோகத்தைச் சிதைக்க வைப்பதாய் – அசலான அந்த உலகத்தின் பிரச்சினைகள், மாயைகள், வலிகள் பற்றிய
யதார்த்தத்தை, அத்துறையில் வல்லுனரான, அதில் பணியாற்றிய வெளிநாட்டு அனுபவங்களின் அடிப்படையில், இரா.முருகன் அற்புதமாக இந்நாவலைப் படைத்துள்ளார். சுஜாதாவை நினைவூட்டுகிற – அவரை விடவும்
இன்னும் அதிகமான புருவ உயர்த்தலுக்கு வாசகனை ஆளாக்குகிற, வரிக்கு வரி மென்னகை பூக்க வைக்கிற,
திகட்ட வைக்கிற நடை!

‘சிலிகன் வேலி’ மோகமும் அதன் விபரீத யதார்த்தமும் பற்றி தான் எழுத நேர்ந்ததுபற்றி இரா.முருகனே தனது முன்னுரையில் இப்படிக் கூறுகிறார்: ‘மற்ற எந்தத் தொழிலில் இருப்பவர்களையும்விட, முழுக்க முழுக்கக் கற்பித்துக் கொண்ட பிம்பங்களின் அடிப்படையில் தமிழ்ப் படைப்புகளில் சித்தரிக்கப்படுகிறவர்கள் கம்ப்யூட்டர்
சா•ப்ட்வேர் துறையில் இருப்பவர்கள்தாம். கணினி மென்பொருள் தொழில்நுட்பப் பணியாளர்கள் பெரும்
பாலும் இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும். இந்த வயதுவரம்பு, கம்ப்யூட்டர் என்ற பழைய மந்திரச் சொல்லின் பரவலான எச்சச்சொச்ச கவன ஈர்ப்பு. அங்கோலாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பறந்து இறங்கிக் கூடு கட்டி இந்த மென்பொருள் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் – இந்தியச் சராசரி வருமானத்தைவிடப் பலமடங்கு கூடுதலானது என்று பலராலும் கருதப்படும் – வருமானங் களைப்பற்றிப் பலுனாக ஊதப்பட்ட வண்ணவண்ண இமேஜ்கள் தமிழ்க் கதைகளில் ஆரம்பித்தபோது,
இதெல்லாம் சீக்கிரமே தரைக்கு வந்துவிடும் என்று நினைத்து நான் என்பாட்டுக்கு கம்ப்யூட்டர் தொழிலிலும்
அதோடு சம்பந்தப்படாத என் படைப்புலகத்திலும் மூழ்கி இருந்தேன். ஆனால், தமிழில் ஒரு படைப்புக்கூட
இதுவரை மென்பொருளாளர்களைப்பற்றிய இப்படிப்பட்ட தட்டையான படிமத்தை உடைத்து அந்தத்
தொழிலில் ஈடுபட்டவர்களை நகமும் சதையுமாகச் சித்தரித்து அவர்களின் தொழில் சார்ந்த சிக்கல்களையோ,
தினமும் சந்திக்க வேண்டி இருக்கும் சவால்களைப் பற்றியோ பேசவே இல்லை என்று எனக்குப் பட்டபோது, கம்ப்யூட்டர் துறையில் இருக்கும் தமிழ்ப் படைப்பாளன் என்ற முறையில் இவர்க¨ளைப் பற்றிய ஒரு முறை
யான பதிவை, என் படைப்பாக்கங்களின் ஒரு பகுதியாக முன் வைக்க உத்தேசித்தேன்’.

இக்கதையில் வரும் சுதர்சன் மத்தியதர வர்க்கத்தின் பிரதிநிதி; சாண் ஏறினால் முழம் சறுக்குகிற வகையைச் சேர்ந்தவன். இங்கிலாந்து, தாய்லாந்து, அமெரிக்கா என விமானத்தில் பறந்து சென்று மென்
பொருள் தயாரித்துக் கொடுக்கிறவன். தற்செயலாக ஒரு விமானப்பயணத்தின்போது பக்கத்து இருக்கையில்
இருந்த அவ்தார்சிங் என்கிற சா•ப்வேர் கம்பனி முதலாளியின் பார்வையில் பட்டு அவரது வேலைக்காக தாய்லாந்துக்கு பிராஜெக்ட் மானேஜராக தன்னுடன் ஒரு கோஷ்டி சா•ப்ட்வேர் ஆட்களுடன் போகிறான். அங்கே அவனுக்கேற்படும் வெற்றிகளும், வித்தியாசமான பிரச்சினைகளும், இடையே அமெரிக்கப் பெண்
ஒருத்தியிடம் ஏற்படும் காதலும், ஊரில் இருக்கும் ஆசாரமான அப்பா அம்மாவின் பாசமும், ஊரில் இவனை
விரும்பும் பெண்ணின் நினைவும் என வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறான பிரச்சினைகளில் சிக்கித் தடுமாறுகிறான். விதியின் விளையாட்டுக்கு மென்பொருள் விற்பன்னனும் விதிவிலக்கு அல்ல என்று காட்டுவது
போல எதிர்பாராதவிதமாய் சிகரத்தை எட்டியவன் தலைகுப்புற விழுகிறான். காதலியும், முதலாளியும்
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தகர்ப்பில் ஈடுபட்ட விமானத்தில் சிக்கி இறக்கிறார்கள். ஊரில் இவனுக்காகக் காத்திருக்கும் பெண்ணையும் முன்பே உதறியாயிற்று. இவனது வாழ்க்கையே புரண்டு போகிறது. பிராஜெக்ட் மானேஜராக இருந்தவன் வெறும் புரொகிராமராக, தான் நிராகரித்த உள்ளூர்ப் பெண்ணின் தயவில் பிழைக்கிற அவலத்துக்கு ஆளாகிறான். சரசரவென்று உச்சாணிக்கு ஏறிக்கொண்டிருந்தவன், சடசடவென மரம் முறிந்து விழுகிறமாதிரி சரிய, வெகுசுவாரஸ்யமாய் ஓடிக் கொண்டிருந்த கதை மகா சோகத்தில் முடிவது
நெஞ்சில் வலியை ஏற்படுத்துகிறது.

‘திடீரென்று இயக்கம் மறந்து உறைவதும், திரும்பச் செயல்படத் தொடங்குவதும் கம்ப்யூட்டர்
குணாதிசயம் மட்டுமில்லை, அதோடு சம்மந்தப்பட்டவர்களின் வாழ்க்கை நியதியும் கூட’ என்பதை இந்நாவலின் மூலம் முருகன் உணர்த்துகிறார். கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள் நம்மில் பெரும்பாலோர் நினக்கிறபடி
தலையில் கொம்பு முளைத்த, சட்டைபையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுகள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும், நுனி நாக்கு ஆங்கிலமுமாக சூயிங்கம் மென்றபபடி தரைக்கு மேலே சரியாகப் பத்து செண்டிமீட்டர் உயரத்தில் பறக்கிற’ அசாதாரண மனிதர்கள் இல்லை. அவர்கள் சாதாரண மனிதர்கள் தாம்; மென்பொருள் பிழைப்பு என்பது நாய் படாத பாடு என்று நமக்குத் தெரியப்படுத்துகிறது நாவல்.

நாவலின் அநாயசமான ஓட்டம் நம்மையும் உடனிழுத்துக் கொண்டு ஓடுகிறது. ‘இரா.முருகனின்
நேர்த்தியான கதை சொல்லலில் நாமும் நிரந்தரமில்லாத மென்பொருள் உலகத்தில் குதிக்கிறோம். காசுக்காக
உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பறக்கிறோம்’. ‘நேரம், காலம், சுற்றுப்புறம், கலாச்சாரம், சொந்த வாழ்க்கை
என்று எதையும் சட்டை செய்யக்கூட நேரமில்லை. குறிப்பிட்ட டெட்லைனுக்குள் புராஜெக்ட் முடியவேண்டும்.
மென்பொருள் சரியாக வேலை செய்ய வேண்டும். கிளையண்ட் பணம் தர வேண்டும். அது ஒன்றுதான்
முதலாளிக்குக் குறி. அவனது ஏவல் நாயான நமக்கும் அதுதான் குறியாகிறது,’ என்கிற சா•ப்ட்வேர்காரர்களின் அவசரமும் அவஸ்தையும் நம்மையும் பற்றிக்கொள்கிறது.

வேலைக்கிடையே என்னகாரணத்தாலோ ஸ்தம்பித்துப் போகிற கணினியை ரீபூட் செய்ய ‘கன்ட்ரோல்-ஆல்ட்-டெலிட்’ என்கிற ‘மூன்று விரல் இயக்கத்’தை மேற்கொள்வது போல, வாழ்க்கையின் பல கணங்களிலும் எதிர்கொள்ள கடினமான பிரச்சினையிலிருந்து விலகி மீண்டும் புதுமையாக உயிர்த்துவிட முடியாதா என்கிற ஏக்கத்தின் குறியீடாக நாவலின் தலைப்பு அமைந்திருக்கிறது.

‘அரசூர் வம்சம்’ நாவலில் வந்த மாதிரி இந்நாவலிலும் பாத்திரங்கள் காதருகில் வந்து கற்பனையில் பேசுகின்றன. முன்னதில் பின்நவீனத்துவ உக்தியாகக் கையாளப்பட்டது இதில் நனவோடை உக்தியாகக்
கையாளப்பட்டிருப்பது ரசிக்கத் தக்கதாக உள்ளது. சுதர்சன் போனில் அம்மாவிடம் பேசும்போதும், அவனது காதல், காமம் நினைவுகளினூடேயும் அவனது காதலி சந்தியா குறுக்கிட்டு காதருகில் வந்து எச்சரிப்பது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது போன்றவை மென்னகை பூக்க வைக்கின்றன.

அவரது வித்தியாசமான சுவாரஸ்யம் கூட்டும் நடைக்கு ஒரூ உதாரணம்: வாசல் கதவுக்குக் கீழே
பத்திரிகை உள்ளே வரலாமாப்பா இல்லே இன்னும் கொஞ்சம் தூங்கப் போறியா என்று எட்டிப் பார்த்து
விசாரித்தது.’ அவர் கையாளும் உவமைகளும் ரசமானவை: ‘பெரிய கான்கிரீட் வனமாகக் கோலாலம்பூர் விமான
நிலையம் ஆள் அரவமில்லாமல் அச்சமூட்டிக் கொண்டிருந்தது.’

‘ஒரு விபத்தின் பயங்கரத்தை அசலாக உணர வேண்டுமென்றால் விபத்து நடந்த வண்டிக்குள் நீங்கள் இருந்தாக வேண்டும்’ என்று காண்டேகர் சொன்னது போல – ‘வரிக்கு வரி நகைச்சுவையும், மனதைச் சுண்டுகிற உவமைகளுமாய் நிறைந்திருக்கிற இந்நாவலைப் படிப்பதே தனி சுகம்தான்’ என்று நான் என்னதான் திருப்பித் திருப்பிச் சொன்னாலும். அதை நீங்கள் திகட்டத் திகட்ட அனுபவிக்க நாவலை முழுதுமாய்ப் படிப்பதுதான் ஒரே வழி!

‘எல்லாப் படைப்புகளும் எழுதியவனை மீறி ஏதோ சொல்ல முற்படுகின்றன. முற்பட வேண்டும். அவற்றோடு ஊடாடும் வாசகர்கள், சொல்லப்பட்ட கதையையும் கடந்து தங்கள் எண்ண ஓட்டங்களை
விரிக்க வழி செய்வதோடு எழுதியவனின் கடமை முடிந்துவிடுகிறது’ என்கிறார் முருகன் தன் முன்னுரையில்.
உண்மைதான். கதை முடிந்த பின்னும் நம் எண்ண ஓட்டங்கள் விரிந்து பரவுவதைத் தவிர்க்க
முடியவில்லைதான்!. 0

நூல்: மூன்று விரல்.
ஆசிரியர்: இரா.முருகன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், சென்னை.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்