பச்சைத் தோட்டத்திலிருந்து அறிவுக்கனிதேடி அலைந்த பறவை

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

ஹெச்.ஜி.ரசூல்


நினைவில் வாழும் சிவ.பொன்னீலவடிவு(நாவலாசிரியர் பொன்னீலனின் தந்தையார்)அவர்களின் 50 – வது நினைவுநாள் 18௰௨ – 10- 2009 ஞாயிறு மாலை நாகர்கோவில் அசிசி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு செம்பவளம் ஆய்வுவட்டம் இயக்குநர் செந்தீநடராஜன் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பத்திரிகையாளர் ஹாமீம் முஸ்தபா நிகழ்த்தினார்.

நினைவில்வாழும் பொன்னீலவடிவு கவலை என்ற தன்வரலாற்றுநாவல் மூலம் தமிழ் இலக்கியவரலாற்றில் தனது பதிவை விட்டுச் சென்ற அழகியநாயகி அம்மாள் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு டாக்டர் அமுதா மாலை அணிவித்து தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். காந்தியவாதியாகவும், சமூக சிந்தனையாளராகவும் ,அவ்வூருக்கு கல்விக்கூடம் வர தன் சொந்தநிலத்தை அளித்து சேவைபுரிந்த குறிப்புகளையும் அவர் விவரித்தார்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக பகுத்தறிவுச் சிந்தனையாளரும், ஒய்வுபெற்ற நல்லாசிரியருமானஎஸ்.கே. அகமது அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. நாவலாசிரியர் பொன்னீலன் பொன்னாடை அணிவித்து பாராட்டுரை நிகழ்த்தினார்.

பாளையங்கோட்டை புனிதசவேரியார்கல்லூரி பேராசிரியர் முனைவர் நா.இராமச்சந்திரன் எஸ்.கே.அகமதுவின் பகுத்தறிவு நோக்கையும் தமிழ்ச்சூழலில் அது உருவான போக்கையும் இப்போக்கு பண்பாட்டு இயக்கங்களுக்குள்செயல்பட்ட விதத்தையும் ,நாட்டுபுறவியல் சிந்தனை இந்த பகுத்தறிவுவாதத்தோடு முரண்படும் உடன்படும் போக்கினையும் சுட்டிக் காட்டினார்.

ஹெச்.ஜி.ரசூல் தனது பாராட்டுரையில் இடதுசாரிசிந்தனைப்போக்கும், பகுத்தறிவுவாதப் போக்கும் சந்திக்கும் ஒரு முக்கியப் புள்ளியாக எஸ்கே அகமதுசார் இருந்ததாக குறிப்பிட்டார். தமிழ்சமூகம் அறியப்படாத ஒரு உலகம் அகமதுசாரிடம் புதைந்துகிடப்பதாகவும் அது முஸ்லிம்சமூகத்திற்குள் ஒரு பகுத்தறிவுவாதியின் நெருக்கடி நிறைந்த பயணமாக இருப்பதை தான் உணர்வதாகவும் குறிப்பிட்டார். இந்த மறைக்கப்பட்ட பக்கங்கள் எழுத்துவடிவில் வெளிக்கொண்டுவரப் படவேண்டுமென்றும் அதை அகமதுசார் நிறைவேற்றுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.மேலும் தக்கலையில் கலை இலக்கியப் பெருமன்றத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி நடத்திக் கொண்டிருந்த போது அகமதுசாரின் இடைவிடாத பங்களிப்பு முக்கியமாக இருந்தது என்றார்.

நிகழ்வுக்கு வருகைதந்திருந்த அகமது சாரின் நண்பரும் மற்றுமொரு பகுத்தறிவுவாதியுமான அகமதுகண்சாரும் தனது அனுபவங்களை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பகிர்ந்து கொண்டார்.

எஸ்கே.அகமது அவர்கள் தனது ஏற்புரையில் கேரளயுக்திவாதசங்கத்தின் தொடர்பு தனது பகுத்தறிவுப்பாதையை உருவாக்கி கொடுத்ததாகவும், ஒன்றுபட்டிருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கருத்துக்களின் தாக்கம் உருவானது குறித்தும், உயிரின் தோற்றம்,விஞ்ஞான அரங்குகள் நடத்திய அனுபவங்கள் குறித்தும் பேசினார்.

பகுத்தறிவு திருமணம் நடைபெற்றதும் பிற்கு ஏற்பட்ட உறவுச் சிக்கல்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார்.இதுபோன்று இயக்கங்களில் செயல்படுவோர் ஏன் தங்கள் குடும்பங்களை இக் கொள்கையின்பால் ஈர்க்கமுடியவில்லை என கேள்வி எழுப்பினார்.

தற்போது வெவ்வேறு பாதைகளில் பயணம் செய்தாலும் தம் பிள்ளைகள் தங்களுக்கான சுதந்திரத்தை அனுபவித்துக் கொள்ளவும், அவர்களது இயக்கத்தேர்வுக்கு தான் எந்த தடையாகவும் இல்லாமல் முழுச் சுதந்திரத்தை அளித்ததை ஒரு தந்தையாகவும் அரங்கில் பதிவு செய்தார்.

நிகழ்ச்சிக்கு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளர் வி.சிவராமன் நன்றி கூறினார்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்