கடவுள் கொல்ல பார்த்தார் – மஹாத்மன் சிறுகதை விமர்சனம்- பாகம் 2

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue


(தொடர் மதிப்பீடுகளின் பலவீனங்களால் உடைப்படும் படைப்பின் குரல்)

உண்மை அல்லது தெளிவு என்பது அவ்வளவு சாத்தியமானதல்ல அல்லது இலகுவானதல்ல. உண்மை அதுவாகவே இருக்கிறது. கண்டடைய அது எங்கும் ஒளிந்திருக்கவில்லை. தேடி எடுக்க அது எந்தப் பாதாளத்திலும் வீழ்ந்துகிடக்கவில்லை. முறையாக விளக்கமளிக்க அது ஒழுங்கமைவின் அளவுகோளிற்கேற்ப நேர்த்தி செய்யப்பட்டவை அல்ல, களைந்து அளிக்கப்பட அது சிக்கலானவை அல்ல, உண்மை அதுவாக இருக்கிறது. அதை உணர முடியும், உணர்ந்ததை விளக்கமளிக்க முடியாது, காரணம் உண்மை பிராச்சாரத்திற்குரியது அல்ல. அதை அதுவாகவே உணரக்கூடியது.

உண்மையைப் பற்றி ஒஷோ இந்தக் கருத்தை முன்வைக்கும்போது, ஒவ்வொரு படைப்பும் உண்மையைக் கொண்டிருப்பதாகவும், அது படைப்பின் நிதர்சனத்தில் அதுவாகவே இருப்பதாகவும், அதை உணர, படைப்பிற்குள் நுழைய வேண்டும் எனவும் தோன்றும். படைப்பிற்குள் நுழையும் ஒவ்வொருவரும் தனிதனி உணர்வைப் பெறுவதைத்தான் வாசகப் பார்வை என்கிறோம். உண்மையைத் தேடப் போய் நாம் கண்டடைந்த ஏமாற்றம்தான் இந்த வாசகப் பார்வையோ என்கிற அச்சமும் பரவுகிறது. படைப்பாளன் படைப்பைக் கொடுக்கும்போது அவன் தன் அனுபவங்களை தன்னை, தன் அகங்காரத்தை, தன் கருத்தியலை, எண்ணங்களை, உணர்வுகளைக் கொடுக்கிறான். இவையனைத்தையும் ஒத்திசைக்கும் ஒரு கரு அந்தப் படைப்பிற்குள் இருக்கும், அந்தக் கருவை கண்டு அடையும் வாசகன், அதை எப்படிவேண்டுமானாலும் உள்வாங்கிக் கொள்ளலாம், புரிந்து கொள்ளலாம், அடையாமலும் போகலாம். கானல் நீரைப் பார்த்து அதை நீராகக் கற்பித்துக் கொள்வது போல ஒன்றைக் கற்பனை செய்துகொண்டு வெளியேறுகிறான். ஆகையால் படைப்பை நான் படைத்தது போலத்தான் அணுகப்பட வேண்டும் என்றும், என் படைப்பின் சாரம் இதுவாகத்தான் எல்லாராலும் உணரப்படும் என்றும் வலிந்து கற்பிப்பது அபத்தம் என்றுகூட படுகிறது.

மஹாதமன் எழுதிய கடவுள் கொல்லப் பார்த்தார் எனும் கதை அதுவாகவே இருக்க, ஒரு வாசகனாக அதனுள் நுழைந்து வெளியேறுகிறேன். அதன் உண்மை எனக்கு முரணாகப் பட்டிருக்கலாம், ஆனால் படைப்பின் உண்மை அதுவாகவே நிலைத்திருக்கிறது. இந்த விமர்சனம் அதன் போக்கில் அதன் சாயலில் அமைப்பு பற்றிய அக்கறையைக் கவனிக்காமல் செல்லக்கூடும். அல்லது விமர்சனத்திற்கு எதிர் விமர்சனம் உருவாக, இன்னொரு பார்வையைக் கிளறிவிட, தொடர் விவாதத்திற்கு இட்டுச்செல்ல வாய்ப்புகளைக் கொண்டிருக்கக்கூடும்.

1

வாழ்வு தனிமனித நுகர்வின் இருப்பு. நுகர்வின் இருத்தலியலை / இயங்குத்தளத்தை முன்வைத்து வாழ்வின் தடங்களையும் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கண்டறிய முடியும். நுகர்வுகளுக்குப் பரிணாமங்கள் உள்ளன. பாரதியின் நுகர்வு தனிமனித விடுதலையிலும் ஆண்டான் அடிமைத்தனங்களின் உடைவிலும் படர்ந்து வந்து தனக்கான அடையாளத்தை நிறுவியது, ஆங்கிலேய ஒடுக்குமுறையின் எதிர்க்குரலாக பகவத் சிங்கின் நுகர்வு தனக்குரிய அடையாளத்தை நிறுவிக் கொண்டது. அளிக்கப்பட்ட அடையாளங்களைச் சுயமதிப்பீட்டின் மூலமே அடையாளங்கண்டு அதைத் தீர்மானிக்க மீள் உருவாக்கம் செய்ய முடிகிறது. சுயமதிப்பீடு எப்பொழுது வருகிறது? தன் இருப்பை/ தன்னை உடைத்துக் காட்டுவதன் மூலம்.

அகம் ஒரு சிறு பிரக்ஞையென அல்லது பெறப்பட்ட அறிவின் நிரப்புதலுக்கேற்ப ஒரு துண்டாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஒரு வயதிற்குப் பிறகு சுய அடையாளங்களைத் தானே கட்டமைக்கப் பழகிக் கொள்வதன் மூலம் தன் மீது சுமத்தப்பட்ட கற்பிதங்களைச் சுயமதிப்பீட்டின் மூலம் அகற்றுவதற்கும் எறிவதற்கும் இலகுவாக ஒரு முதிர்ச்சி மெல்ல வளர்கிறது. தன் அடையாளங்களுக்குப் பெயரிட்டவர்கள், ஒரு வரையறையை அடர் பின்பற்றுதலாக ஒரு விதியென பொருத்தியிருக்கிறார்கள்.

கடவுள் கொல்ல பார்த்தார் எனும் கதை முதல் மானுட உடைவை கலாச்சாரத்திற்கு எதிராக முன் வைக்கிறது. வாழ்வின் இறுக்கம் அளித்த பொழுதுகளிலிருந்து அல்லது பிராந்திய பிடியிலிருந்து தனது சுயமதிப்பீட்டின் மூலம் தன்னை அகற்றிக்கொள்ளும் ஒருவன், தனக்கான களத்தில் கடவுளைத் தேடும் முயற்சிகளை முன்வைக்கிறான். நிர்வாணமாகத் தன்னை ஆக்கிக்கொண்டு வனத்தினுள் நுழைகிறான் கடவுளைத் தேடி. படைத்தவனை நோக்கி தனது வார்த்தைகளை, புலம்பல்களை எறிகிறான்.

“படைப்பு நான், படைத்தவன் நீர், இங்கு வந்தே ஆக வேண்டும்” என்கிற கதையின் தொடக்கம், இந்தக் கதாபாத்திரம் குறிப்பிடும் கடவுள் யாரென்று ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல் தீர்மானிக்க முடிகிறது.

கடவுள் என்கிற சொற்பிரயோகம் தனி ஒரு குழுவிற்கோ அல்லது இனத்திற்கோ சொந்தமானது அல்ல என்ற மாயையைக் களையும்போது, அதன் மீது படிந்திருக்கும் இந்துத்துவம் தொடங்கி வேத கலாச்சாரம்வரை, காலத்திற்குக் காலம் உடைந்து உடைந்து புத்தாக்க விவாத பொருளுடன் கொண்டு வரப்பட்டு, தொடர் மதிப்பீட்டின் பிடியில் சிக்கிக் கிடப்பதை உணரலாம். வேத கலாச்சாரங்களில் பிடிமானம் உள்ள ஒரு சராசரி மனிதன், தன் முன்னோர்களால் கட்டமைக்கப்பட்ட போதனைகளுக்கேற்ப கடவுளை ஒரு புறப்பொருளாகத் தரிசிக்கக்கூடிய மனோநிலையில்தான், “கடவுள் கொல்லப் பார்த்தார்” எனும் கதையில் கடவுள் கொண்டு வரப்படுகிறார். கடவுள் என்கிற ஆக்கிரமிப்பு ஆற்றல் இல்லாமல் படைப்பு சாத்தியமில்லை என்கிற தன் முதல் நம்பிக்கையை கதையில் உறுதிப்படுத்துகிறார் கடவுளைத் தேடி வந்தவர்.

தனது தோல்விகளுக்கு எதிர் குறியீடாக கடவுளைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் எல்லாவற்றையும் சரிகட்டிவிடலாம் என்கிற தனது இயலாமைகள்தான் முற்றிலும் இந்தக் கதையில் படைப்பாக்கப்பட்டுள்ளது. கதையில் உதிக்கும் அவனது குரல் முழுக்க பயத்தினால் ஆனதாகவும் தரிசிக்க முடியும், ஆனால் மேலோட்டமாக அவன் கடவுளைக் கேள்விக்குள்ளாக்குகிறான், படைத்தவனைத் தேடுகிறான் என்று தோன்றலாம். அப்படியொரு கட்டமைப்பைக் கொடுக்க முயன்றும் அந்தக் குரலின் அடிநாதம் அடையாளங்களை நோக்கி தவம் கிடக்கும் ஒரு சராசரி மனோபாவத்தையே காட்டுகிறது. நிதர்சன வாழ்வின் தோல்விகள் அவனுக்கு பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

”இதுவரையில் வாழ்ந்தோர் ஒருவராகிலும் ஒரு பாவமும் செய்யாமல் ஜீவித்திருக்கிறார்களா?”
“ஒரு மனிதனை ஒருமுறை மட்டுமே வாழ அனுமதித்திருக்கும் படைத்தவனை உடனே பார்க்க வேண்டும்” என்கிற வசனங்களில் படைப்பின் அதிருப்திகளும், தன் அடையாளம் சிதைந்து போனதன் மாசுப்பட்டுப் போனதன் குமுறல்கள் வெளிப்படுகிறது. வாழ்வின் மீதிருந்த பிடிப்பு பலவீனம் அடைந்து ஒரு பதற்றமாகி, அதனை எதிர்க்கொள்ள முடியாததால், அதற்கு எதிர்க்குரல் போன்ற தொனியில் ஒலிக்கும் இயலாமையின் குரல் இதுவே தவிர வேறெதுவும் இல்லை எனப்படுகிறது. தன் இயலாமையை வெளிப்படுத்துவது அபத்தம் கிடையாது, ஆனால் அதை மாற்று மாயையில் இயலாமையாக அல்லாமல் ஒரு சவாலாகக் காட்டி காத்திரமான சொற்பிரயோகங்கள் மூலம் ஒரு தேடலாகக் காட்டியிருப்பது படைப்போடு பயணிக்கையில் திடீரென்று வெளியே நிறுத்தி வைப்பது போல தோன்றுகிறது.

2

“படைப்பு நான், படைத்தவன் நீர்”

என்று தொடங்கும் கதை முழுக்க கடவுள் என்கிற குறியீட்டை எந்த மதத்துடனும் சார்ந்திருக்காமல் தன் நுகர்விற்கேற்ப காட்ட முயன்றிருந்தாலும், கடைசிவரை எந்தக் கடவுள் என்றும் எந்தப் பெயரையும் வெளிப்படுத்தாமல் இருந்தும், ஒருவேளை இந்தக் கடவுள் இந்து வேதக்கலாச்சாரத்தின்படி விளக்கப்படுகிறாரா அல்லது கிறித்துவ மரபுபடி உணரப்படுகிறாரா என்கிற ஐயம் இடைஇடையே எழுகிறது. கடவுள் என்கிற குறியீடு மதம் சார்ந்த கற்பிதங்களுக்குள் நுழைவது போன்ற புரிதலும் ஏற்பட வாய்ப்புண்டு.

உதாரணம்: 1. உம்மைப் போல என்னையும் படைத்துவிட்டு. .
(ஆக கடவுளுக்கு நம்மைப் போலவே உருவம் இருப்பதாக, சிலை வழிப்பாட்டை ஆதரிப்பது போன்ற தடுமாற்றம் ஏற்படுகிறது)

உதாரணம் 2: எமக்குத் தெரிந்து உனக்கு ஏழு உலகங்கள்( கிறிஸ்த்துவ மதத்தின்படி நியாய தீர்ப்பு நாளுக்குப் பிறகு நல்லவர்கள் பற்பல உலகங்களுக்குப் போவார்கள், ஒவ்வொரு உலகமும் கடவுளுடையது என்ற ஒரு விஷயத்தை பைபிள் புதிய ஏற்பாட்டில் பார்த்ததாக ஞாபகம்- முழுமையாகத் தெரியவில்லை)

உதாரணம் 3: தலை எப்படியோ வாலும் அப்படித்தானே ( கீதையில் கடவுளும் மனிதனும் குணத்தால் ஒரே மாதிரியாகவும் அளவால் வித்தியாசப்படுவதாகவும் சொல்லப்படும் – கடலின் அளவு பெரியது, ஆனால் அதன் ஒரு துளிக்கூட கடலில் தன்மையைப் பெற்றிருக்கும்)

உதாரணம் 4: அதனால்தான் கோயில்களை விட்டு வந்திருக்கிறேன்

ஆக, இந்தக் கதையில் வரும் குரலின் அசல், ஏதோ ஒரு மதத்தைச் சார்ந்ததாகவும், இதில் வரும் கடவுள் அந்த மதத்தின் கடவுளாகவும் வெளிப்படையாகக் காட்டப்படாவிட்டாலும் ஆங்காங்கே அடையாளம்காணப்படுகின்றன. தன் மதம் சார்ந்த கடவுளின் மீது ஏற்பட்ட வெறுப்பின் குரலாகவும் இதைப் புரிந்துகொள்ளக்கூடும். அப்படியிருப்பதிலும் எந்தவிதத் தடையும் கிடையாது. குரலின் அசலை உடைத்துக் காட்டவே இந்த விளக்கம்.

“கடவுள் கொல்லப் பார்த்தார்” என்கிற இந்த வரியை அவ்வளவு சாதாரணமாக வெறும் புனைவென கருதிவிடவும் முடியாத நிலையில், கதையை எழுதியவரின் பின்புலத்தைக் கொண்டு பைபிளை ஆராய்ந்தபோது, பைபிள் பழைய ஏற்பாட்டில் இந்த வரி இடம்பெற்றிருப்பதைக் கண்டறிய முடிந்தது. மோசஸ் கடவுளின் பணியை நிறைவேற்றுவதற்காக அழைக்கப்படுவான். அதற்கேற்ப இவனும் தன் மனைவி குழந்தைகளுடன் கடவுளின் பணியை நிறைவேற்ற புறப்பட்டுச் செல்வான். போகும் வழியில் கடவுள் அவனைக் கொல்லப் பார்ப்பார். இதன் காரணத்தை அறிந்த அவனுடைய மனைவி ஒரு கூறான கல்லின் மூலம் அவனது ஆண்குறியின் நுனி தோளை வெட்டி, மண்ணில் வீசிவிட்டு உடன்படிக்கையை நிறைவேற்றிவிட்டேன் என்றதும், கடவுள் அவனைக் கொல்லாதபடிக்கு அவனைவிட்டு விலகுவார், என்று எழுதப்பட்டிருக்கும். விரிவாக அதன் காரணத்தை ஆராய நேரம் வேண்டும்.

கடவுள் பணிக்கு அழைக்கப்பட்டவன் அந்தக் கடவுளாலே கொல்லப்படுவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால் இது ஒரு தூரோகம் என்ற அளவில் புரிந்துகொள்ளப்படும் போது, அந்தக் கடவுளை நோக்கி, அதாவது பைபளில் விவரிக்கப்பட்டிருக்கும் அந்தக் “கடவுள்தான் இந்தக் கதையிலும் மத அடையாளத்துடன் பிரவேசிக்கிறார் போல என்கிற சந்தேகமும் எழுகிறது.

3

கதையில் வரும் அவன், தன்னை நிர்வாணமாக்கிக் கொண்டான், படைத்தவனைச் சந்திக்க வனத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான், தனியாக இருப்பதையே கடைசிவரை உறுதி செய்து கொள்கிறான், புலம்புகிறான், இவையனைத்தும் அவன் பயத்தில் இருப்பதைக் காட்டுகிறது. யதார்த்தத்திலிருந்து தப்பித்து, வாழ்க்கையைவிட்டு அதிருப்தியில், விரக்தியில் ஓடுவதைக் காட்டுகிறது. அப்படியிருக்க இங்கு படைத்தவன் வேண்டாம், படைப்பு தனக்களிக்கப்பட்ட வாழ்வின் மீது கொண்ட சலிப்பையும் விரக்தியையும் கோபத்தையும், ஒரு சோகத்தின் குரலாக, ஒரு வரண்ட நம்பிக்கையின் குரலாக எறிகிறான். அப்படி எறியும் போது கடவுள் வெறும் தலையை முட்டிக் கொள்ள ஒரு சுவர்போலவே விரிந்து மாயமாகப் போகிறார். அதாவது கடவுளை நோக்கிய குரலாக இருந்தாலும், கடவுள் என்கிற பிம்பம் மாயையாக வந்து அழுத்தமில்லாமல், புலம்புவதற்கு ஒரு எதிர்ப்பிப்ம்பமாக மட்டுமே வைக்கப்பட்டு காணாமல் போகிறது.

மரணத்தைக் கண்டு ஓடும் சில இடங்களில் பிற படைப்புகளைக் கேலி செய்யும் சந்தர்ப்பங்களும் கதையில் தொனிக்கிறது.

உதாரணம் 1: “போயும் போயும் இந்தப் பன்றிக்கா இரையாக வேண்டும். .ச்சே! கேவலம் மகா கேவலம்” (பன்றியின் மீது காட்டப்படும் அதீத வெறுப்பிற்குப் பின்னால் மத அரசியல் இருக்கிறதா என்றுகூட பார்க்க நேரிடுகிறது)

உதாரணம் 2 : “ச்சே. . ஒரு சிற்றுயிரிடமா என்னைப் பலிக்கொடுப்பது”
சிற்றுயிர்களின் மீது இழிவான பார்வை விழும் இடத்தில் இன்னொன்றும் புரிப்படுகிறது, அது விரக்தியின் குரல், தோல்வியின் குரல், அதில் மனிதாபிமானமோ நியாயமோ எதிர்ப்பார்ப்பதும் முடியாதது.

4

கதையின் ஒரு சில இடங்களில் சிறு நெருடல் உருவாகுவதையும் தவிர்க்க முடியவில்லை. எடுத்துக்காட்டாக, ஏழாவது வயதில் மரத்திலிருந்து விழுந்து ஆணி புகுந்த பாதத்தை, சுருட்டைப் பற்ர வைத்துச் சூடுபோட்டு உரசிவிட்ட தாத்தா முதல் என்னை விடுவிக்கத் தன் வாழ்வைப் பணையம் வைத்த உடன்பிறப்புவரை இவ்வளவு அன்பான உறவுகள் இருந்தும், ஏன் இத்தகையதொரு விரக்தி இவன் வாழ்வில் ஏற்பட்டுள்ளது என்பதன் கேள்வி நமக்கு எழுந்தால், அதற்கான விடை கதையில் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த விரக்திக்கான, விரக்தியின் குரலுக்கான காரணங்கள் ஏதும் விவரிக்கப்படவில்லை என்றாலும், படைப்பைச் செதுக்கியவரின் தேர்வு இதுவாக இருந்தாலும், வாசகனின் குறுக்கீடல் இந்த இடத்தில் அத்துமீறி நுழையப் பார்க்கிறது, அவ்வளவே.

கதையின் இறுதி கட்டத்தில் அவனின் குரல் திடீரென்று இப்படி மாறும் பொழுது இதுவரை கட்டமைக்கப்பட்ட குரல் முழுவதும் சுக்குநூறாக உடைகிறது. பிரக்ஞையைத் தவறவிடும் விளிம்பில் கிடக்கும் அவனை ஒரு காட்டுவாசி பெண் மூங்கிலைச் சுமந்துகொண்டு ஓடுவது போல வேகமான ஓடும் போது, “ மெல்லிய வெண்ணிற ஆடை தரித்த, இரக்கம் நிறைந்த, வலிக்காமல் ஏந்திச் செல்லும் ஒரு தேவைதையை எதிர்ப்பார்த்திருந்தேன்” என்று அவனின் உள்ளார்ந்த குரல் ஒலிக்க, கதை முடிவடைகிறது. என்னைப் பொருத்தவரையில் இதுவரை படைத்தவனுடன் அவன் ஆற்றிய உரையாடலில்கூட கண்டுகொள்ள முடியாத அவனை இந்த முடிவில் அடையாளங்காண்பது போல அவன் மீது ஒரு புதிய மதிப்பீடு விழுவதாக உணர்கிறேன்.

அவன் வாழ்வை எப்படித் தரிசிக்கக்கூடியவன், வலியில்லாத, துன்பமில்லாத ஒரு வாழ்வை எதிர்ப்பார்க்கக்கூடியவனாகவோ அல்லது அதீத எதிர்ப்பார்ப்புகள் கொண்ட தனிநபர்வாதம் கொண்டவனாகவும், தன் வாழ்வு சுகமானதாக அமைந்தால் கடவுளைக்கூட விட்டு வைப்பேன் என்பது போன்ற சுயநலம் தொனியும் அந்தக் குரலுக்குப் பின்னால் ஒலிப்பது போலவும் படுகிறது.

““படைப்பு நான், படைத்தவன் நீர்” என்ற தொனியுடன் தொடங்கும் குரல் இறுதியில் ஒரு சராசரி மனோபவத்தில் சிக்கி உடைகிறது. எதிர்ப்பார்ப்புகள் நம்மைப் பலவீனமாக்கிவிடும் என்ற கருத்தியலை முன்வைத்து எழுதப்பட்ட முடிவாகவும் இது இருக்கக்கூடும்.

5

கடவுள் கொல்லப் பார்த்தார், விவாதிக்க வேண்டிய தொடர் உரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய ஒரு கதைக்களம். இந்தக் கடவுளும் இந்த மனிதனும் சமூக அங்கீகாரம்பெற்ற ஒரு மதத்தைச் சார்ந்தவர்களாகவே காட்டப்படுவதால், இது அப்பாற்பட்ட அனுபவம் என்று புறக்கணிக்க இயலாது. இதற்கான மதிப்பீட்டுக் கருவிகள் நமக்குப் பரிச்சியமானதாக இருப்பதால், இதைப் பொது அறிவுக்கூற்றில் வைத்து தனி தனி தர்க்கம் சார்ந்து விவாதித்தால் ஆரோக்கியமான திறப்புகள் கிடைக்கப் பெறவும் வாய்ப்புண்டு.

“அட இந்தக் கதையில் வரும் அவனால் வாழ முடிலே, அவன் எதிர்ப்பார்த்த வாழ்க்கை அவனுக்கு வழங்கப்படலே, அதனாலே வாழ்க்கையெ விட்டுக் காட்டுக்குள் ஓடி தப்பிக்க நினைக்கிறான், எவ்வளவு முயன்றும் அவன் அவனாகவே திரும்ப வாழ்க்கைக்குள் நுழைகிறான், இதுதான் கதை” என்று சடாரென்று சொல்லிவிட்டு நகர முடியவில்லை. படைப்பு மீதுள்ள நம்பிக்கை இன்னும் நெருங்கி வர இழுக்கிறது.

உண்மையைத் தர்க்கம் சார்ந்து அடைய முயற்சிக்கும்போது, தர்க்கம் என்பதே உண்மையைச் சிதைத்துவிடக்கூடியது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தர்க்கம் நமது பிரக்ஞையைச் சார்ந்தே கருத்தியலை அல்லது பொது அறிவுக்கூறை உருவாக்கும். ஒவ்வொரு தனிமனிதனின் பிரக்ஞையும் அதற்கான அளவை வளர்ச்சியைக் கொண்டிருப்பதால், தர்க்கம் பொதுவானதாக ஏற்றுக் கொள்ள முடியாது. புலனறிவை முதன்மைப்படுத்தும்போது அது வரையறைக்குட்பட்டது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆதலால் வெவ்வேறு வளர்ச்சிநிலைகளைக் கொண்ட புலனறிவால் தர்க்கங்களை முன்வைத்து உண்மையை விவாதிக்க முற்படும்போது, ஒரு இடத்திற்கு வந்ததும், நமது போதாமை வலு இழக்கக்கூடும், நின்ற இடத்திலிருந்து இதுதான் உண்மை என ஒரு கற்பிதத்தைத் தானே வகுத்துக் கொள்ளும்.

வாழ்வை அப்படியானதொரு நிலையில் பார்த்த அவன், எதுவரை தனது குரலை ஓங்கி எறிகிறானோ அதுவரைத்தான் அவனது தர்க்கமும் புலனறிவின் எல்லையும், அதன் பிறகு, அவனது போதாமையில் மோதிய அவனது குரல் மீண்டும் பழைய தடத்தை நோக்கி குரலை எதிரொலிக்கிறது. விரக்திற்குப் பிறகு மீண்டும் எதிர்ப்பார்ப்பு என்கிற விதத்தில். கடவுள் கொல்லப் பார்த்தார், தோல்வியடைந்த ஒரு வாழ்வின் பதற்றமான குரலாக உணர்கிறேன்.

நவீனத்துவம் முன்வைக்கும் வாதங்களில் கடவுள் என்கிற புனித பிம்ப உடைவுகளும் ஒன்றாகும். ஆனால் இந்தக் கதையில் கடவுளின் பிம்பத்தை உடைக்க முற்பட்டு தனது பிம்பத்தை உடையவிட்ட முரண் நிகழ்ந்துள்ளது. மஹாத்மனின் இந்தக் கதை முயற்சி, கடைசிவரை கடவுள் தன்னைக் கொல்லாதபடி மிக தீவிரமாக கதையைப் படைத்துள்ளார். மலேசிய சிறுகதை களத்தின் புதிய முயற்சி. வரவேற்போம்.

(வாய்ப்பிருந்தால் வாசகர்கள் மஹாத்மனின் சிறுகதை தொகுப்பை வாங்கிப் படிக்கவும், வல்லின பதிப்பகத்தின் வெளியீடாக அவரது தொகுப்பு வெளிவந்துள்ளது)

விமர்சனம் தொடரும்

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்