நினைவுகளின் தடத்தில் – (35)

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

வெங்கட் சாமிநாதன்/



காந்தி இறந்து விட்டார், அதுவும் பிரார்த்தனையின் போது யாரோ ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கொஞ்சம் கொஞசமாக தெளிவாகி மனதை நிலை குலையச் செய்தது. ஒரு மிகப் பெரிய மனிதர் இனி நம்மிடையே இல்லை. சில வருஷங்களுக்கு முன் அவரைப் பார்க்க அம்மையநாயக்கனூருக்கு மூன்று மைல் ஒரு ஒற்றையடிப் பாதையில் குறுக்காகச் சென்றுபார்த்துவந்தது, பின் ஒரு வருடம் முன்பு மதுரையில் தமுக்கம் மைதானத்தில் அருணா ஆச•ப் அலி (காந்தி சொன்னதன் பேரில் தலைமறைவாக இருந்தவர் தானாகவே போலிஸிடம் சரணடைந்தவர்) பேச்சைக் கேட்கச் சென்றது, அவருடைய ஹிந்திப் பேச்சைக் கேட்க குழுமிய கூட்டம், தமிழ் நாட்டில் அவர் ஒன்றும் பிரபலமான தலைவர் இல்லை, இருந்த போதிலும், “இந்த மழையைக் கண்டு பயந்த நீங்கள் எப்படி சுதந்திரத்திற்காகப் போராடப் போகிறீர்கள்?” என்ற ஒரு வார்த்தையில் அந்தக் கூட்டம் மழையில் கலையாமல் உட்காரவைத்தது எல்லாம், காந்தியின் தாக்கம் என்பதைப் பின்னர் அறிந்து கொண்ட விஷயங்கள். பி.எஸ் ராமையா தன் மணிக்கொடி வரலாற்றில் எழுதியிருந்தார். தீபம் பத்திரிகையில் எழுதிய போது படித்தது. பி.எஸ். ராமையாவும் அவரது சகாக்களும் இரண்டாம் ஆட்டம் ஏதோ படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.அப்போது வழியில் சற்று தூரத்தில் ஒரு குடிசையின் முன் நின்றுகொண்டிருக்கும் வயதான பெண் ஒருத்தி ஒரு இளம் பெண்ணுக்குச் சொல்லுகிறாள்: “அதோ வராங்க பாரு, காந்திகாரங்க, அவங்க கூடப் போ. அவங்க துணைக்கிருக்கப் போ ஒரு பயமும் இல்லே” என்று சொல்கிறாள். எங்கோ பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு கிழவர், அவரை அடையாளம் காட்டும் ஒரு கதர் குல்லா போதும் இங்கு ஒரு குடிசை வாழும் பெண் நடு இரவின் தனிமையில் என்ற மாயத்தை எப்படிச் செய்தார் என்பதெல்லாம் பின்னர் நான் தெளிந்து வியந்தவை. சில நாட்கள் முன்பு கூட கொலை செய்யும் எண்ணத்தோடு ஒருவன் கூட்டத்தில் காணப்பட்டும் எனக்கு பாதுகாப்பு ஏதும் வேண்டாம் என்று சொன்ன மனிதர். இதெல்லாம் பின்னர் தெரிந்தவை. ஆனால் அன்று ஒரு பெரிய மனிதர் இனி இல்லை என்பது தான் மனதை என்னவோ செய்தது. அது ஒரு காலம். இன்று நாலு கருப்புப் பூனைகள் துப்பாக்கி சகிதம் காட்சி தருவது தன் பதவிக்கான அலங்கார அடையாளமாகியுள்ளதைப் பார்க்கும் போது, இது முற்றிலும் வேறு ஒரு காலம் என்று சலித்துக் கொள்ளத் தான் தோன்றுகிறது.

திங்கட் கிழமை பள்ளிக்கூடம் போன போது பள்ளிக்கூடத்தில் ஏதும் இரங்கல் என்ற பெயரில் ஏதும் நடந்ததா என்பது நினைவில் இல்லை. சுதந்திர தினத்தன்று கூட பள்ளியில் ஏதும் நிகழ்ந்த நினைவு இல்லை. சரித்திர பாடம் எடுக்கும் ‘சுந்தரம் பிள்ளை”, எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர், பாடம் நடத்துவதே உணர்ச்சி மயமாகத்தான் இருக்கும். அவர் தான் காந்தி பற்றி அவ்வப்போது ஒரு ஆவேசத்தோடு சொல்லி வருவார். பள்ளிக்கூடத்தில் கதர் வேட்டியும் கதர் ஜிப்பாவுமாக வரும் ஆசிரியர் அவர் ஒருத்தர் தான். மற்றது எதுவும் நினைவில் இல்லை. காந்தியின் அந்திம யாத்திரையும் அந்த மக்கள் வெள்ளத்தையும், பின்னர் யமுனை நதிக்கரையில் நடந்த தகனமும், செய்திப்படங்களில் பின்னர் பார்த்தது தான். மௌண்ட் பாட்டன் தம்பதியர் தரையில் சம்மனிட்டு உட்கார்ந்திருந்தது, அது தான் அவர்கள் தரையில் அப்படி உட்கார்ந்தது முதல் தடவையாக இருக்கவேண்டும், மனத்தில் ஒரு அழியாத சித்திரம். பின்னர் சில நாட்களுக்குப் பிறகு, ஒரு விசேஷ ரயில் மூலம் மகாத்மா காந்தியின் அஸ்தி கலசம் தில்லியிலிருந்து கன்னியாகுமரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது சமுத்திரத்தில் கரைக்க. அந்த வண்டியில் ராஜாஜியும் அவினாசி லிங்கம் செட்டியாரும் இருந்தனர் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் அந்த வண்டி நின்றது, மக்கள் கூட்டம் காத்து இருந்தனர். அஸ்தி கலசத்தைத் தரிசிக்க. எனக்கு இப்போது சரியாகச் சொல்ல முடியவில்லை. அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாகக் கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்ததும் அஸ்தி கலசத்தைத் தரிசித்ததுமாக ஒரு நினைவு பதிந்திருக்கிறது.

அந்த வாரக் கடைசியில் கிராமத்துக்குத் திரும்பிய போது கிராமத்துக்கு வந்த ஒரு புதியவரைச் சந்தித்தேன். உடையாளூர்க் காரர் தான். இருபத்து ஐந்து முப்பது வாலிப வயதினர். தில்லியிலிருந்து வந்தவர். அழகான முகம். கட்டுக்குடுமியோடு இருந்தார். நிறைய பேசுவார். என்னை மதித்து வெகு சகஜமாக என்னை அவருக்கு சமமாக எண்ணி பேசிக்கொண்டிருந்தாரே என்று இப்போது அது பற்றி நினைக்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தில்லி பற்றியும், காந்தி பற்றியும் பேசிக்கொண்டே இருந்தார். தனக்கு வந்த கடிதத்தைக் காட்டினார். ஆச்சரியமாக அது ஹிந்தியில் எழுதப் பட்டிருந்தது. அந்தக் கடிதத்தின் முதல் வரியே “காட்சே நாமக் ஏக் சண்டால் நே பாபுஜிகி ஹத்யா கர்தி” (காட்சே என்னும் ஒரு சண்டாளன் பாபுஜியைக் கொன்றுவிட்டான்) என்றுதான் ஆரம்பித்திருந்தது. அந்த கிராமத்தில், உலகத்தின் நவீன வசதிகள் எதுவும் அற்று ஏதோ ஒரு நூற்றாண்டில் வாழும் அந்த கிராமத்தில், கட்டுக் குடுமியுடன் ஒர் தில்லி வாழும் மனிதர் எதிர்ப்படுவார், அவர் உலகச் செய்திகளைப் பற்றிப் பேசுவார், அவருக்கு தில்லியிலிருந்து ஹிந்தியில் கடிதம் வரும் என்பதெல்லாம் ஆச்சரியமான விஷயங்கள். இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும் போதுகூட, எப்படி? என்று ஆச்சரியப்படத்தான் தோன்றுகிறது.

அப்படித் தான் இருந்தது உடையாளூர் கிராமமும் உடையாளூர் வாசிகளின் உலகமும். அந்தத் தீவாகிவிட்ட உலகத்துள் மிக சுவாரஸ்யமானதும் உடையாளூர்க் காரர்களுக்கு குதூகலம் தருவதுமான நேரங்கள் காலை உணவு பத்து பதினோறு மனீக்கு முடிந்ததும் ஒவ்வொரு தெருவிலும் ஏதோ ஒரு திண்ணையில் சிலர் கூடிவிடுவார்கள். எங்கள் தெருவில் அப்படிக் கூடும் திண்ணை ஊரின் நுழைவாயிலாக இருந்த எங்கள் தெருவின் இரண்டாவது வீட்டுத் திண்ணை. அங்கு தான் பகுதி நேர தபால் அலுவலகம் இருக்கும் என்று சொன்னேன். கும்பகோணம், வலங்கிமான், இல்லையெனில் ஊருக்கு சற்று தெற்கே இரண்டு மைல் தூரத்தில் இருக்கும் சற்று பெரிய கிராமமான சந்திரசேகரபுர்ம் போய்வந்தவர்கள் சொல்லும் புதிய கதைகள் பரிமாறிக்கொள்ளப்படும். ஒரு முறை நான் அந்த சர்ச்சைகளைக் கேட்கும் பாக்கியம் பெற்றிருந்தேன். தஞ்சாவூர் எவ்வளவு பெரிய ஊராகி விட்டது என்பதைப் பற்றியது அந்த சர்ச்சை. ஒன்றிரண்டு பேர் தஞ்சாவூரில் எந்த ரோடில் புதிதாகக் கட்டிடங்கள் முளைத்துவிட்டன என்பதைப் பற்றிச் சொன்னார்கள். ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்ததைச் சொல்ல, கடைசியில் ஒருத்தர், “என்னடா விஷயம் தெரியாம என்னென்னமோ அளந்துண்டே போனா கேட்கறவனுக்கு என்ன ஒண்ணும் தெரியாதுன்ணு நினைப்பா? நீ என்ன பஸ் ஸ்டாண்டிலேர்ந்து நேரே கோர்ட்டுக்குப் போவே. அடுத்த வாயதா என்னிக்கீன்னு கேட்டுட்டு உடனே டான்னு பஸ் ஸ்டாண்டுக்குத் திரும்பிடுவே. திருச்சி ரோடோடே போயிருக்கியோ, போயிருக்கியாடா, நான் கேக்கறேன், பேசாம முழிச்சிண்டிருக்கியே, …. என்று சத்தம் போடுவார் ஒருத்தர். “ராமேந்திரா, கொஞ்சம் நிதானிச்சு பேசு. வாய்தா கேக்க போனது கும்பகோணத்துக்கு. நீ திருச்சி ரோடைப்பத்தி பேசறதுக்கு தஞ்சாவூருக்குப் போயிட்டே. உன் பேச்சை எவன் கேப்பான், சொல்லு…” ஒரே கும்மாளமாக இருக்கும்.

அறுவடை ஆன பிறகு, கோடை மாதங்களில் அந்தத் தின்ணையில் சீட்டாட்டம் இரவு பூராவும் நடக்கும். ராத்திரி சாப்பாடானதும் தொடங்கும் சீட்டாட்டம் எப்போது முடியும் என்று தெரியாது. நான் பார்த்ததில்லை. அதில் ஒரு கை குறைகிறது என்றால் சேர்ந்து கொள்வார். அப்பா அந்த விவகாரத்துக்குப் போனதே இல்லை. அதைச் சொல்லி அப்பா அடிக்கடி சலித்துக்கொள்வார். “அவனுக்கென்ன, வேலையா, வெட்டியா, விடிய விடிய சீட்ட்டாடிண்டிருப்பான்” என்று. அந்த சீட்டுக் கச்சேரிக்கு ஒரு உதவியாள் தயாராக இருப்பார். வெத்திலை பாக்கு, கூஜா, டம்ளர், தயாராக் ஒரு குடம் தண்ணீர், எதுவும் எப்போதும் குறையாது வற்றாது பார்த்துக்கொள்ள வேண்டும். பக்கத்தில் சிவன் கோவிலிலும் அவருக்கு அது தான் வேலை. கிணற்றிலிருந்து அபிசேகத்துக்கு வேண்டிய நீர் இறைத்துக் கொடுப்பது, பூ, சந்தனம் இத்யாதி அர்ச்சனைப் பொருட்களை தயாராக்குவது எல்லாம் அவர் வேலையாக இருந்தது. சீட்டாட்டக் காரர்களுக்கு இந்த கைங்கர்யம் செய்தால் கொஞ்சம் உபரி வரும்படியும் கிடைக்கும். தனிக் கட்டை. கிடைப்பதை வைத்துக்கொண்டு வாழ்பவர்.

இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அவர்கள் எல்லோரும் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு திருவிழாக்காலங்களில் வசதி உள்ளவர்கள் கோயில் மண்டகப்படி இன்னிக்கு எனக்கு, நாளைக்கு உனக்கு என்று ஆர்வத்தோடு செயல்படுவார்கள். அதில் அவர்களுக்கு பெருமையும் உண்டு. ஊருக்கு இரண்டு மைல் தெற்கே ஒரு ஆறு தாண்டி அதன் மறுகரையில் சந்திரசேகர புரம் என்று சொன்னேனே, அந்தச் சற்றுப் பெரிய கிராமத்தில் ஒரு பெரிய கூட்டுறவுப் பண்டக சாலை இருந்தது. தஞ்சை ஜில்லாவிலேயே மிகப் புகழ் பெற்றது, வெற்றிகரமாக நடப்பது என்று சொல்வார்கள். அங்கு நான் ஒரு முறை நிறைய மளிகை சாமான்கள் வாங்கப் போயிருக்கிறேன். பெரிய ஊர்களில் இருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் மாதிரி அது பெரிதாக இருக்கும். அந்த கிராமத்துக்கு அதுமிகப் பெரியது தான். அது போல ஒன்று உடையாளுருக்கும் வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது. அப்பாவும் அதில் உறுப்பினர். பத்து ரூபாய் சந்தா செலுத்தியது எனக்குத் தெரியும். ஒரு முறை ஜெனரல் பாடி மீட்டிங்குக்குப் போய் வந்ததும் தெரியும். முதல் வருடம் அவருக்கு ஏதோ ஒரு ருபாய் சொச்சம் டிவிடெண்டு கிடைத்ததும் நினைவில் இருக்கிறது. உடையாளூரில் வேலிக்கணக்கில் நிலம் வைத்திருப்பவர்கள் ஒவ்வொருத்தரும் ஒரு வீட்டை வாங்கி காலியாக வைத்திருப்பார்கள். அறுவடை முடிந்ததும் நெல் மூட்டைகள் அடுக்கி வைப்பதற்கென்று. அந்த மாதிரி ஒரு வீட்டைத் தான் ஒருவர் இந்தக் கூட்டுறவுப் பண்டக சாலை நடத்தக் கொடுத்திருந்தார். இன்னொரு ஒரு புதிய வளர்ச்சி, ஐந்தாம் வகுப்பு வரை அங்கு ஒரு பள்ளிக்கூடமும் வந்திருந்தது நான் 1948-ல் உடையாளூருக்குப் போன போது. அதற்கு முன்னர் ஒரு திண்ணைப்பள்ளிக்கூடம் தான் இருந்தது. அதில் வகுப்பு விவகாரமெல்லாம் இருந்ததில்லை. ஒரு பெரியவர் உட்கார்ந்து கொண்டு :”பசங்களுக்கு ஒண்ணும் தெரியாம விட்டுடப் படாது” பசங்களின் வயதுக் கேற்ப ஏதோ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். எல்லாப் பசங்களும் திண்ணையில் ஒன்றாகத் தான் உட்கார்ந்திருப்பார்கள். அதில் எல்லா க்ளாசுகளும் இருக்கும். இப்போது ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கூடம் வந்துவிட்டது. நான் உடையாளுருக்கு வந்ததும், மாமாவோடு என் தம்பி ஐந்தாம் வகுப்பை உடையாளூரில் முடித்துக்கொண்டு மேல் படிப்புக்கு மாமாவோடு நிலக்கோட்டைக்குச் சென்றான். நிலக்கோட்டையில் என் இடத்தில் அவன். இங்கு உடையாளூரில் அவன் இடத்தில் நான். உடையாளூரும் சில மாற்றங்களை அடைந்து கொண்டு தான் இருந்தது, ஆனால் மிகவும் மெதுவாக.

வெங்கட் சாமிநாதன்/1.12.08

vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்