புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

சு. குணேஸ்வரன்


அறிமுகம்
ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர் கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ் இலக்கியத்துக்கு ஊடாகப் பேசப்படுகிறது.

புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை: உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.

சொற்பிரயோகம்
‘புலம்பெயர்வு’ என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப் பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சூழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு அரசியல் சமூக பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களையே இங்கு ‘புலம்பெயர் இலக்கியம்’ அல்லது ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கின்றோம். இதனை ஆங்கிலத்தில் Diaspora Literature என குறிப்பிடுவர்.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள்
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள்; இங்கிலாந்து> பிரான்ஸ்> ஜேர்மனி> சுவிஸ்> நோர்வே> இத்தாலி> டென்மார்க்> நெதர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும்: வடஅமெரிக்காவில் கனடாவிலும், மற்றும் அவுஸ்திரேலியாவிலும் மிக அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றைய கணிப்பின்படி ஏறத்தாள ஆறு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. இந்நாடுகளில் இருந்து ஈழத்தமிழர்கள் படைக்கும் படைப்புக்களே ‘புலம்பெயர் இலக்கியம்’ என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

கால வரையறை
இலங்கையிலிருந்து 1960 களில் இருந்தே ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு ஆரம்பமாகின்றது. அக்காலத்தில் மலேசியா> அமெரிக்கா> இலண்டன் என தொழில் காரணமாக ஆங்கிலக் கல்வியினூடாக வந்தவர்கள் அதிகம் புலம்பெயர்ந்தனர். ஆனால் 80 களுக்குப் பின்னர் பெருமளவாக புலம்பெயர்ந்த தமிழர்களால் படைக்கப்படும் இலக்கியங்களே புலம்பெயர் இலக்கியம் என்ற சொற்றொடருக்கு அர்த்தத்தை ஏற்படுத்தியதாகும்.

எனவே 1983 யூலைக்கலவரங்களின் பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறிய ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வே இங்கு முக்கியமானதாகும். இற்றைக்கு இரண்டு தசாப்தங்களைக் கடந்து விட்ட பின்னரும் தொடர்கின்ற இந்நிலை தமிழர்களின் வாழ்வின் மத்தியிலும் அவர்களின் இலக்கியப் படைப்புக்களின் மத்தியிலும் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றமை அனைவரும் அறிந்த ஒன்றே.

புலம்பெயர் படைப்புக்கள்
புலம்பெயர் படைப்புக்களில் கவிதை> சிறுகதை> நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையும் ஆகும். இவை தவிர ஏனைய கலை இலக்கிய முயற்சிகளாக பின்வருவனவும் நடந்தேறி வருகின்றன. அவற்றுள் நாடகம்> சஞ்சிகை – பத்திரிகை வெளியீடுகள்> நூல் வெளியீடுகள்> ஒலி ஒளி செயற்பாடுகள்> மற்றும் தமிழர் தம் அடையாளத்தைத் தக்க வைக்கும் கலாசார செயற்பாடுகள் என்பன முக்கியமானவை.

கவிதை
புலம்பெயர் படைப்புக்களில் கவிதைகள் பற்றி நோக்கும்போது இதுவரை வெளிவந்துள்ள புலம்பெயர் படைப்புக்களுள் கவிதைத் தொகுப்புக்களே அதிகமானவையாகும். கவிதைகள் அவை பாடுகின்ற பொருட்பரப்பிலும் அவற்றின் புனைதிறன் உத்தியிலும் திருப்திப்படக்கூடிய அளவுக்கு புதிய வெளிச்சங்களைக் காட்டி நிற்கின்றன.

புலம்பெயர்ந்த காலத்தில் 80 களின் இறுதிவரை தாயக நினைவினையும் அவலத்தையும் பாடிக்கொண்டிருந்த அதிகமான கவிஞர்கள் தற்போது தாம் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டின் சூழலைப் புரிந்து கொண்டு அந்நாட்டின் வாழ்வனுபவங்களையும் பாடத்தொடங்கியுள்ளனர்.

இந்த வகையில் சேரன்> வ.ஐ. ச ஜெயபாலன்> செழியன்> கி. பி அரவிந்தன>; இளவாலை விஜயேந்திரன்> திருமாவளவன்> சக்கரவர்த்தி> நட்சத்திரன் செவ்விந்தியன்> தா. பாலகணேசன்> இளைய அப்துல்லா> முல்லை அமுதன்> முல்லையூரான்(மறைவு) > மைத்திரேயி> பிரதீபா> றஞ்சினி> ஆழியாள் என்றதொரு நீண்ட பட்டியலே கவிதையில் உண்டு.

நோர்வேயில் இருந்து சுவடுகள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘துருவச் சுவடுகள்’ என்ற கவிதைத் தொகுப்பே புலம்பெயர்ந்தோர் மத்தியிலிருந்து வெளிவந்த முதலாவது கவிதைத் தொகுப்பாகக் கணிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த பெண்கள் மத்தியிலிருந்து வெளிவந்த ‘மறையாத மறுபாதி’ என்ற கவிதைத் தொகுப்பும் மிகுந்த கவனத்திற்குரிய பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கி வந்த தொகுப்பாகும்.

சிறுகதை

கவிதைகளுக்கு அடுத்தபடியாக சிறுகதைகள் முக்கியமானவை. புகலிடத்திலிருந்து வெளியான சஞ்சிகைகளில் வெளிவந்த கதைகளைத் தொகுத்து ‘மண்ணைத் தேடும் மனங்கள்’ என்ற பெயரிலான தொகுப்பு ஒன்று 1986 இல் வெளியாகியது. இதன் பின்னர் ‘புலம்பெயர்ந்தோர் கதைகள்’ ‘பனியும் பனையும்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. பெண் படைப்பாளிகளின் கதைகளைத் தொகுத்து ‘புது உலகம் எமை நோக்கி’ என்று வெளியிட்டனர். இவையெல்லாம் புலம்பெயர் சிறுகதைகளில் தவிர்க்கமுடியாத முக்கியமான ஆரம்பகாலத் தொகுப்புகளாகும். இதன் பின்னர் பல முயற்சிகள் நடந்தேறியுள்ளன.

சிறுகதைகளைப் படைத்துவரும் புலம்பெயர் படைப்பாளிகளில் அ. முத்துலிங்கம்> பொ. கருணாகரமூர்த்தி> குமார்மூர்த்தி(மறைவு) > க. கலாமோகன்> பார்த்திபன்> ஷோபா சக்தி> சக்கரவர்த்தி> விமல் குழந்தைவேல்> ஆசி. கந்தராஜா> முருகபூபதி> ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்> அருண் விஜயராணி> நிருபா> சுமதிரூபன் எனப்பலர் எழுதி வருகின்றனர். புதியவர்களின் வரவும் முக்கியமானது.

நாவல்
80 களின் இறுதிப்பகுதியில் இருந்தே புலம்பெயர் படைப்பாளிகளிடம் இருந்து நாவல்கள் வெளிவரத் தொடங்கின. பார்த்திபனின் பல குறுநாவல்கள் ஆரம்பத்தில் வெளிவந்தன. ஆரம்பத்தில் வெளிவந்த நாவல்கள் தாயக நினைவுடன் தொடர்புபட்டவையாகவும் சீதனப்பிரச்சனை> சாதிப்பிரச்சனை> காதல் மற்றும் திருமண உறவுகள்> இனப்போராட்டத்தின் அவலம் என்பவற்றையே மையமாகவும் கொண்டிருந்தன.

சிறிது காலத்தின் பின்னரே தாம் வாழ்கின்ற சூழலைச் சுட்டும் படைப்புக்களை வரையத் தொடங்கினர். இவ்வகையில் இன்று புலம்பெயர் நாவல்களைப் படைத்த படைப்பாளிகளில் ஷோபா சக்தி> ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்> விமல் குழந்தைவேல்> முல்லை அமுதன்> மா. கி. கிறிஸ்ரியன்> கி. செ. துரை> பார்த்திபன்;> இ. தியாகலிங்கம்> ஆகியோரைக் குறிப்பிடலாம். இற்றைவரை சுமார் 75 ற்கும் மேற்பட்ட நாவல்கள் வெளிவந்துள்ளன.

புலம் பெயர் படைப்புகளில் கவிதை சிறுகதை நாவல் என்பனவற்றின் உள்ளடக்கத்தினை பின்வருமாறு வகைப்படுத்தலாம். இது இப்படைப்புக்களின் பொதுவான பார்வையில் வரும்போது தாயகம் சார்ந்த படைப்புக்கள்> புலம்பெயர் சூழல் சார்ந்த படைப்புக்கள் என இரண்டாகவும் வகுக்கலாம். எனினும் அவைசுட்டும் பொருட்பரப்பினை நுணுகி நோக்கும்போது அவற்றை பின்வரும் ஆறு பெரும் பிரிவுக்குள் வகைப்படுத்தி நோக்கலாம்.

புலம்பெயர் படைப்புக்களின் உள்ளடக்கம்

1. தாயக நினைவும் போர்ச்சூழலும்

குடும்பம்> உறவு> பிரிவு> ஏக்கம்> கிராமத்து வாழ்வு> சாதி> சீதனம்> மரபுகள்> நம்பிக்கைகள்> ஆகியவற்றை இந்த வரையறைக்குள் அடக்கலாம்.

தாயக நினைவை ஈழத்தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த காலத்திலிருந்து இன்றுவரையும் வெளிப்படுத்தியபடி இருக்கிறார்கள். கவிஞர் செல்வத்தின் கவிதை வரிகள் தாயக நினைவை வெளிப்படுத்தும் கவிதைகளுக்கு சிறந்த உதாரணமாகும்.

“சிறுகுருவி வீடு கட்டும்
தென்னோலை பாட்டிசைக்கும்
சூரியப் பொடியன் செவ்வரத்தம் பூவை
புணரும் என் ஊரில் இருப்பிழந்தேன்.
அலை எழுப்பும் கடலோரம் ஒரு வீடும்
செம்மண் பாதையோரம்
ஓர் தோட்டமும்
கனவுப் பணம் தேட
கடல் கடந்தோம்
நானும் நாங்களும்
அகதித் தரையில்
முகமிழந்தோம்.”

சிறுகதைகளில் 1985 இல் வெளிவந்த ‘மண்ணைத் தேடும் மனங்கள்’ பிற்காலத்தில் வெளிவந்த அ. இரவியின் ‘காலம் ஆகி வந்த கதை’ விமல் குழந்தைவேலின் ‘அசதி’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் ஆகியன தாயக நினைவினைக் கொண்ட கதைகளையே முன்வைக்கின்றன. விமல் குழந்தைவேல் அதிகமும் தாயக வாழ்வு சார்ந்த நினைவுகளையே மிக வலிமையாக எடுத்துக் காட்டுகிறார். அவரின் ‘அசதி’ என்ற சிறுகதை முக்கியமான கதையாகும்.

சாதியம்> சீதனப் பிரச்சினை> இராணுவ ஒடுக்குமுறை> தேசிய விடுதலைப் போராட்டம்> மண்ணின் நினைவு என்பவற்றை வெளிப்படுத்தும் நிலை நாவல்களில் உள்ளது. பார்த்திபனின் ‘ஆண்கள் விற்பனைக்கு’> என்ற நாவல் சீதனப் பிரச்சினையை வெளிப்படுத்துகின்றது. வ.ஐ.ச வின் ‘செக்குமாடு’> பார்த்திபனின் ‘வித்தியாசப்படும் வித்தியாசங்கள்’ ஆகியன சாதியப் பிரச்சினையை வெளிப்படுத்துகின்றன. மண்ணின் நினைவினை வெளிப்படுத்தும் நாவல்களில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய ‘தில்லையாற்றங்கரை’ விமல் குழந்தைவேல் எழுதிய ‘வெள்ளாவி’ ஆகிய நாவல்கள் முக்கியமானவை. கிராமத்து வாழ்வும் அந்த மண்ணின் உயிர்த்துடிப்பான வாழ்வும் இந்நாவல்களில் பதிவாகியுள்ளன.

2. புலம்பெயர் வாழ்வின் அவலமும் முரண்பாடும்
அகதிநிலை> இனவாதம்> நிறவாதம்> மொழி புரியாமை> முரண்பட்ட வாழ்வு> பண்பாட்டு வேறுபாடு> பாலியல் அதிர்ச்சி என்பனவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புக்களை இவ்வரையறைக்குள் அடக்கிக் கொள்ளலாம்.

வ. ஐ. ச. ஜெயபாலனின் கவிதையிலிருந்து ஒரு பகுதி அகதிநிலையை பின்வருமாறு வெளிப்படுத்துகின்றது.

“உலகெங்கும்
வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற
மனிதச் சருகுகளாய் புரள்கின்றோம்.
……………………………………..
யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்பேட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்
ஒஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில்
விதிக்குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?”

சிறுகதைகளில் கார்த்தி நல்லையா எழுதிய ‘அலையும் தொலைவு’ கதை அகதியாகி முகாமில் இருக்கும்போது விளம்பரப் பத்திரிகை வீடு வீடாக விநியோகிக்கும் தொழில் புரியும் இளைஞன் ஒருவனின் கதையைக் கூறுகிறது.

“நான்காம் மாடியாக இருக்கலாம். பூட்டிய அறையில் இருந்து நாயொன்று குரைத்தது….” என்று தொடரும் கதையில் இறுதியில் அவன் அவமானப்படும்போது மனது குறுகி வாழ்வின் துயரங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விடுவதனை உணரக்கூடியதாக உள்ளது.

கி.பி அரவிந்தனின் ‘நாடோடிகள்’ என்ற கதை அகதி நிலைக்கும்> ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘எய்தவர் யார்’ என்ற கதை நிறவாதம் சார்ந்த பிரச்சினைக்கும் நல்ல உதாரணங்களாகும். இதேபோல் கருணாகரமூர்த்தியின் ‘சுண்டெலி> கலைஞன்’ என்பனவற்றையும் குறிப்பிடலாம். கலாமோகனின் ‘உருக்கம்’> என்ற கதையில் வேற்று இனத்தவருடன் வேலை செய்யும் போது அவர்கள் பாகுபாடு காட்டும் செயற்பாடுகள் எடுத்துக்காட்டப்படுகிறது.

நாவல்களில் கருணாகரமூத்தியின் ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ ‘வாழ்வு வசப்படும்’ ஆகிய இரண்டு குறுநாவல்களும்> ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ என்ற நாவலின் தொடக்கமும் அகதிநிலையை எடுத்துக் காட்டும் படைப்புக்களுக்கு உதாரணங்களாகும்.

இனவாதம் நிறவாதம் சார்ந்த படைப்புக்கள் புலம்பெயர் படைப்பாளிகளிடம் குறைவாகவே உள்ளன. இதுசார்ந்த பிரச்சனையை மையமாகக் கொண்டு தியாகலிங்கத்தின் ‘நாளை’ என்ற ஒரு நாவல் மட்டும் வெளிவந்துள்ளது. இவரின் ‘அழிவின் அழைப்பிதழ்’ என்ற நாவல் இளைஞர்கள் தவறான வழியில் சென்று தம் வாழ்வை அழித்துக் கொள்ளும் நிலையினை படம்பிடித்துக் காட்டுகின்றது. இந்நிலைக்குத் தாயகத்தில் இருக்கும் பெற்றோர்களே காரணமாக இருப்பதையும் ஆசிரியர் முன்வைக்கின்றார். இது பாலியல் அதிர்ச்சியை வெளிப்படுத்தும் நாவலாகவும் அமைந்துள்ளது.

3. புதிய சூழலில் புதிய அனுபவங்கள்
புவியியல்> தொழிற்தள அனுபவம்>.அந்நியம்> மொழிக்கையாளுகை> மாற்றத்தை ஏற்றல்> பழமையில் இருந்து விடுபடல் ஆகியவற்றை இந்த வரையறைக்குள் அடக்கலாம்.

வ.ஐ.ச வின் ‘இலையுதிர் கால நினைவுகள்’ கவிதையில் ‘இன்பக் கனவுபோல் தோற்றி மறைந்தது கோடை’ என்று வரும் வரிகளில் புவியியல் வேறுபாடும் அதற்கு ஏற்ப அர்த்தத்; தளத்தில் ஏற்படும் மாறுபாடும் எடுத்துக் காட்டப்படுகிறது. சூரியனைப் பரதேசியாகப் பார்ப்பதும் இவ்வாறான மாற்றங்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.

புலம்பெயர் கவிதைகள் உள்வாங்கியிருக்கும் புதிய உணர்வு நெறிக்கு ‘அந்நியமயப்பாடு’ என்னும் உணர்வினை வெளிப்படுத்தும் கவிதைகளைக் குறித்துக் காட்டலாம். இதற்கு மிகப் பொருத்தமான ‘திசோ’ வின் கவிதையொன்றை எடுத்துக்காட்டலாம். இக்கவிதையில் வரும் மொழிக்கையாட்சி அதில் இடம்பெறும் சொற்பிரயோகங்கள் கவனத்திற்குரியன.

“ பகலில் வேலை
தேடிய கால்கள்
‘பழிக்குப்பழி’ என
வலித்தன ……….
வெறித்த சுவர்கள்
அதே முகமென
அலுப்புடன்
முறைத்தன………..
எனது நம்பிக்கை
நப்பாசையில்
‘முயற்சி’ என
முனகியது…….
கடிதங்கள் ‘எனை பிரி’
என ஒதுங்கிக் கிடந்தன.
அதே கட்டில் “வந்து விட்டாயா?”
என ஏளனம் செய்தது….
மேலும் இல்லாத கண்ணீர்த் துளி
‘ ஆழ்ந்த அநுதாபம்’ என
கீழ் விழுந்தது
ஆம்……..
மீண்டும் நான் உறங்கப் பார்க்கிறேன்.”

அந்நியப்பட்ட உணர்வு என்பது புலம்பெயர்ந்த ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரியது. அதிகம் தனிமையில் வாடும் நிலையில் இந்த அந்நிய உணர்வு மேலோங்குகின்றது. கவிஞரால் செயற்படவோ பேசவோ முடியாத நிலையில் சடப்பொருட்கள் பேசுவதனை இக்கவிதையில் கண்டுகொள்ளலாம்.

ஆழியாளின் கவிதைகளில் அந்நியமும் தனிமையும் வெளிப்படுவதையும் அவதானிக்கலாம். ‘மரணம்’ என்ற கவிதையில் அவர் தனது தனிமையை வெளிப்படுத்த எடுத்துக்கொள்ளும் உவமை அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.

“கலங்கரை விளக்கத்து
இரவுக் காவலாளியாகவும்
ஆறடிக் குழியுள்
மெளனம் புடைசூழ இறக்கப்பட்ட
பிணமொன்றைப் போலவும்
தனித்தே
மிகத் தனித்தே இருக்கின்றேன்.”

சிறுகதைகளில் கலாமோகனின் ‘உருக்கம்’ தொழிற்தள அநுபவத்திற்கு நல்ல உதாரணம். இக்கதை அப்பாவித்தனமான சித்திரிப்பாக அமைந்துள்ளது. கார்த்தி நல்லையாவின் ‘அலையும் தொலைவு’ சக்கரவர்த்தியின் ‘நானும் ஒகஸ்டினாவும் ஒரு பந்தயக் குதிரையும்’ குமார்மூர்த்தியின் ‘கோப்பை’ ஆகியனவும் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.

4. பெண்களின் விழிப்புணர்வு
பெண்களின் சிந்தனை விரிவடைதல்> வேலை செய்தல்> தனித்து வாழ்தல்> புதிய சூழலுக்குத் தம்மைத் தயார்ப்படுத்துதல்> அடக்குமுறையை எதிர்த்தல்> அனைத்துலக நோக்கு ஆகியவற்றை இந்த வரையறைக்குள் அடக்கலாம்.

ஒடுக்கு முறைகளுக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் நிலையும> பெண்கள் மத்தியிலும் சமூகத்தின் மத்தியிலும் இருக்கும் கோட்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் சந்தர்ப்பங்களும் பெண்களின் படைப்புக்களிலே அவதானிக்க முடிகின்றது.

றஞ்சனி> மல்லிகா> நிருபா> மைத்திரேயி> பிரதீபா> ஆழியாள் ஆகியோரின் கவிதைகளிலே இதனைக் கண்டுகொள்ளலாம். பெண் கவிஞர்களின் ‘மறையாத மறுபாதி’ என்ற கவிதைத் தொகுதி இவ்வகையில் முக்கியமானது. இவை தவிர ‘ஊடறு’> ‘பெண்கள் சந்திப்பு மலர்கள்’ ஆகியவையும் கவனத்திற்குரியன.

‘சமையல் தொடங்கி படுக்கை வரை
இலவச சேவை வழங்கியது போதும்
சுமைகளும் துளித்துளியான துன்பத்தின்
வெளிப்பாடுகளும் மட்டும் உனதல்ல.
சூழவுள்ள சகலவற்றிலும்
உனக்கும் சம பங்குண்டு
வெளியே வா.’

என்ற பாமினியின் கவிதையும் இவ்வகையில் முக்கியமானது.

கதைகளில் சுமதி ருபனின் ‘யாதுமாகி நின்றாள்’ புலம்பெயர் சிறுகதைகளில் வித்தியாசமான கதைகளைக் கொண்ட தொகுப்பு. தற்கால இலக்கிய உலகிற் பேசப்படும் பெண்ணியச் சிந்தனைகளுடனான பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளடங்கியுள்ளன. பெண், குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறி தனித்து வாழ முடியும் என்பதை சில கதைகள் உணர்த்துகின்றன. இவை தமிழ்ச்சூழலில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது கேள்விக்குரியது.

சிறுகதைகளில் ‘புது உலகம் எமை நோக்கி’ என்ற தொகுப்பும்> ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் பல படைப்புக்களும்> நிருபாவின் ‘சுணைக்கிது’ தொகுப்பும்> பெண்களின் விழிப்புணர்வைப் பேசும் தொகுப்புக்களில் முக்கியமானவை. லதா உதயணனின் ‘இடம்மாறிப்போன’ சந்திரா ரவீந்திரனின் ‘பால்யம்’ ஆகிய கதைகளையும் இவற்றோடு மேலும் எடுத்துக் காட்டலாம்.

நாவல்களில் பொ. கருணாகரமூத்தியின் மாற்றம்> முருகபூபதியின் பறவைகள்> ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் லண்டனைக் களமாகக் கொண்ட நாவல்கள் கவனத்திற்குரியன. இவற்றில் பெண்கள் பற்றிய சிந்தனைகளும் அவர்களின் உலகமும் முன்வைக்கப்படுகிறது. கருணாகரமூர்த்தி> முருகபூபதி ஆகியோரின் கதைகளில் வரும் பெண்பாத்திரங்கள் எவ்வளவுதான் பெண் சார்ந்த முற்போக்கு சிந்தனை உள்ளவர்களாக இருந்தாலும் இறுதியில் தம்மையும் தம் வாழ்வையும் இந்த சமூகத்திற்குள் குறுக்கிக் கொள்பவர்களாவே உள்ளனர். ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’ என்ற ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல் பெண்ணிலை வாதச் சிந்தனை கொண்டதாக அமைந்துள்ளது.

5.அரசியல் விமர்சனம்
விடுதலை அமைப்புக்களின் முரண்பாட்டைப் பேசுதல் – எதிர்த்தல்> வன்முறைகளைப் பேசுதல் – எதிர்த்தல்> தலித்தியம்> என்பன இந்த வரையறைக்குள் உள்ளடங்குகின்றன.

புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய வெளிப்பாடாக ஈழ விடுதலைப் போராட்டம்> தமிழ் விடுதலை அமைப்புக்களின் செயற்பாடுகள்> அவற்றுக்கு இடையேயான அகமுரண்பாடுகள்> என்பவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தும் படைப்புகளும்> சாதியம்> தலித்தியம்> மேட்டுக்குடி மனப்பான்மை என்பவற்றைக் கேள்விக்கு உட்படுத்தும் படைப்புகளும் இங்கு முக்கியமானவை.

ஈழத்தில் பேசமுடியாத எழுதமுடியாத விடயங்கள் எனக் கருதுபவற்றைப் புலம்பெயர் தேசத்தில் இருந்து சுயமாக எழுதுவதற்கு இவை வாய்ப்பளித்துள்ளன. இளைய அப்துல்லாவின் கவிதையொன்று பின்வருமாறு அமைவதனை நோக்கலாம்.

“சாப்பிடுதல் குடித்தல்
புகைத்தல் இன்னும் புணர்தல் போல
மிகச் சாதாரணமாய்
பிணமும்……….
சந்திகளில் இருந்துகொண்டு
பிணம் பற்றிய பேச்சில்
காலம் வெகு
இலகுவாகக் கழிகிறது.’’

சிறுகதைகளில் சக்கரவர்த்தியின் ‘யுத்தத்தின் இரண்டாம் பாகம்;’ குமார்மூத்தியின் கதைகளும்> நாவல்களில் தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’> செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’> சோபாசக்தியின் ‘கொரில்லா’> ‘ம்’> ஆகியனவும் விமல் குழந்தைவேலின் ‘மண்ணும் மல்லிகையும்’ நாவலிலுள்ள சில பகுதிகளும் குறிப்பிடத்தக்கன.

6. அனைத்துலக நோக்கு
மூன்றாம் உலக நாடுகளின் பொதுவான பிரச்சனைகளைப் பேசுதல்> உலகநோக்கு என்பன இந்த வரையறைக்குள் உள்ளடங்குகின்றன.

கவிதைகளிள் பாடுபொருளில் அனைத்துலக நோக்கினை வெளிப்படுத்தும் நிருபாவின் கவிதை வரிகள் பின்வருமாறு அமைவதனை நோக்கலாம்.

“ என் மகள்
வளர்ந்தவளானாள்
வினாக்களை வரிசையாக
அடுக்கினாள்
அம்மா
நாங்கள் ஏன்
அகதிகளானோம்
என் தாய் நாடு எங்கே ?
என் தாய் மொழி எது ?
நாங்கள் ஏன் கறுப்பர்களானோம் ?
அவர்களால் ஏன்
ஒதுக்கப்படுகிறோம்?
துருக்கித் தோழி
ஏன் எரிக்கப்பட்டாள் ?”

தமிழ்ப் படைப்புலகத்திற்கு ஒரு விரிந்த களத்தைக் கொடுத்தவர்களில் அ. முத்துலிங்கம் மிக முக்கியமானவர். இவரின் படைப்புக்களினூடாக புறவுலக வாழ்வுச் சித்திரிப்பு குறிப்பாக உலகின் பல பாகங்களிலும் தொழிலின் நிமிர்த்தம் செல்லும் இடங்களில் தான் எதிர்கொள்ளும் புதிய சூழல்களையும்> புதிய அனுபவங்களையும் தமிழுக்குக் கொண்டு வருகின்றார். இவரின் படைப்புக்களின் களம் மிக விரிந்தது. உதாரணம் ‘நாளை’ என்ற கதை உலகில் போராலும் புலப்பெயர்வாலும் சிதைவடைந்து போன சிறுவர்களின் நிலையை வெளிப்படுத்துகின்றது. மிக விரிந்த தளத்தில் தனது கதைகள் சிலவற்றைத் தந்த ஆசி கந்தராஜாவும் இங்கு இணைந்து வரக்கூடியவர்.

முடிவுரை

1980 களின் பின்னர் தோற்றம் பெற்ற ‘புலம்பெயர் இலக்கியம்’ கவிதை சிறுகதை நாவல் ஆகிய வடிவங்களில் ஈழத்திலக்கியத்தின் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகின்றது. புதிய வாழ்வனுபவங்கள் புதிய களங்கள் புதிய வடிவம் என்பன புலம்பெயர் இலக்கியத்தின் வித்தியாசமாக நோக்கப்படுகின்றது.

அனைத்துலகப் பரப்பில் நின்று கொண்டு புலம்பெயர்ந்த படைப்பாளிகள் இலக்கியம் படைப்பதனால் தமிழ் வாழ்வு ஏனைய இலக்கியங்களுடன் உறவாடும் நிலையை தற்காலத்தில் ஏற்படுத்தி வருகின்றது. இதற்குரிய தொடக்கப் புள்ளிகளாக புலம் பெயர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்பு முயற்சிகளைக் கூறிக்கொள்ளலாம். இது எமது தமிழ் வாழ்வனுபவம் அனைத்துலகுக்குக் கொண்டு செல்வதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தும் என எண்ணலாம். எனினும் தமிழ்மொழி> தமிழ் அடையாளம்> தமிழ்ப் பண்பாடு ஆகிய விடயங்களை புலம்பெயர் வாழ்வுலகு கேள்விக்குரிய களங்களாக மாற்றியுள்ளமை அறிஞர்கள் மட்டத்தில் பெருத்த விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றது.

நன்றி :- உதயன் – யாழ்ப்பாணம் 25 ஜூலை – 07 ஆகஸ்ட்
mskwaran@yahoo.com

Series Navigation

சு. குணேஸ்வரன்

சு. குணேஸ்வரன்