” புறநானூற்றில் கைக்கிளை “

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை,


கைக்கிளை என்பது அகத்திணையின் உட்பிரிவாகும். இ·து அன்பின் ஐந்திணையுடன் வைத்து எண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் கைக்கிளைக்கு உ¡¢ய காதற் செய்கைகளையே கூறியுள்ளார். ‘ கைக்கிளை, பெருந்திணைகட்கு தொல்காப்பியர் இரு நூற்பாக்களில் (995,996) கூறிற்றிலர். கைக்கிளை பெருந்திணைகட்கு இலக்கணம் கூறினாற்போலத் தோன்றும். ஆண்டுக் கூறியிருப்பவை இலக்கணம் அல்ல, அவ்விரு திணை பற்றிய காதற் செய்கைகள்’ என்று அறிஞர் வா.சு.ப.மாணிக்கனார் குறிப்பிடுவர். தொல்காப்பியத்திற்குப் பின்னெழுந்த இலக்கண நூல்கள் அகத்திணைகட்கு இலக்கண வரையறவு தருகின்றன. அகப்பொருள் விளக்க ஆசி¡¢யர் நாற்கவிராசநம்பி,
“¨க்கிளை யுடையது ஒருதலைக் காமம்”
என்று கூறுவர். ஒருதலை என்று அடைகொடுத்து கைக்கிளையின் காமத்தன்மையை மொழிகின்றார். இதனை உணர்ந்தவர்கள் இக்கைக்கிளை அன்பற்றது என்று கொள்வர்.
தொல்காப்பியர்,
“காமஞ்சாலா இளமை யோள்வயின்
ஏமஞ்சாலா இடும்பை யெய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல்
புல்லித் தோன்றும் ¨க்கிளைக் குறிப்பே” (தொல்.995)
என்று கைக்கிளை பற்றி குறிப்பிடுகிறார்.
¨க்கிளை என்பதறக்கு சிறிய உறவு என்பது பொருள். சிறிய என்பது சிறுமை, இழிந்த என்றபொருளில் குறிப்பிடப்படுவது இல்லை. அவ்வுறவு நிற்கும் காலம் சிறியது என்பது கருத்தில் கொள்ளலாம். கிளை என்பது ஓர் உருவகச் சொல். கை என்பதற்குத் தனிமை என்ற பொருளும் உண்டு. கைம்பெண் என்ற தொடர் இதுபோன்று அமைந்துள்ளது நோக்கத்தக்கதாகும். ஆதலால் கைக்கிளை சிறிய தனித்த உறவு என்று பொருள் கொள்ளலாம். “கைக்கிளை என்னும் குறியீடு இருபாலார்க்கும் சொல்லத்தக்க பொதுநிலையிற்றான் அமைந்துள்ளது எனினும், ஆண்பாற் படுத்துவதே, இளையவன் காதலைக் கூறுவதே இலக்கணமரபாகும்” என்று பாரதியார் தமது உரையில் குறிப்பிடுகின்றார். ஆதலால் அகத்திணைக் கைக்கிளைக் கண் ஆண்பால் ஒன்றே இடம்பெறுதல் இயல்பாகும். அதுவே தமிழ்ச் சமுதாய முறையுமாகும்.
குமா¢ப் பெண்ணொருத்தி காமஞ்சாலா இளையவனைக் குமரனாகக் கருதித் தன் காதலைக் கூறலாமே! சொல்லெதிர் பெறாளாகிச் சொல்லியின்புறலாமே! இதுவும் கைக்கிளையின்பாற்படும் என்றும் சிலர் கூறுவர். நம் தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு பெண் தன் காமவுணர்வைத் தானே ஓர் ஆணிடத்தில் முதலில் வெளிப்படுத்திக் கூற முற்படமாட்டாள். ஆதலால் அகத்திணைக் கைக்கிளையில் பெண்களுக்கு இடமில்லை. அவ்வாறு பெண்கள் காம உணர்வை முந்துற்றுக் கூறினால் அ·து புறத்திணையின்பாற்படும். இவ்வகைக் கைக்கிளைப் பாடல்களாக மூன்று பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன.
சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியின் இயல்புகளை எடுத்துக்காட்டுவனவாக இம்மூன்று பாடல்களும் அமைந்துள்ளன. இச்சோழ மன்னனை பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியுள்ளார். குறுநில மன்னன் பெருநற்கிள்ளியைத் தானான விரும்பி அவன் வெற்றியினைப் பாராட்டிப் புகழ்ந்து கூறியுள்ள பாடல்களாக அமைந்ததால் இப்பாடல்களைக் கைக்கிளையில் கொண்டு சேர்த்தனர்.
கெடாத அன்பினையும் நுடங்கும் இய்பினையும் உடைய ஒருத்தி ஒரு தலைவனது மாலையை விரும்பியது ¨க்கிளை என்னும் துறையாகும். இதனை,
“தண்டாக் காதற் றளா¢ய தலைவன்
வண்டார் விரும்பிய வகையுரைத்தன்று”
எனப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகின்றது.
காலில் வீரக் கழலினையும் மை போன்ற கா¢ய தாடியினையுமுடைய இளையோன் பொருட்டு என் வளையல்கள் கழல்கின்றன. இதையெண்ணி என் தாய்க்காகவும் அஞ்சுகின்றேன். பகைவரை மாய்க்கும் அவன் தோளைத் தழுவுவதற்கு எண்ணமிருப்பினும் அவையின் கண் உள்ளாரைக் கண்டு நாணுகின்றேன். இந்த ஊர் அச்சமும் நாணமும் உண்டாகி வருந்தும் என்பக்கமும் நில்லாது, என் தாய்ப்பக்கமும் நில்லாது, இருவர் பக்கமும் மாறிமாறி நின்று மயக்குகின்றதே. என்போல் இந்த ஊரும் மிக்க நடுக்கமுறுவதாக!
“அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென்
தொடியகழித் திடுதல் யான் யாயஞ்சுவலே
அடுதோண் முயங்க லவை நாணுவலே
என்போற் பெருவிதுப்புறுக வென்றும்
ஒருபாற் படாஅ தாகி
இருபாற் பட்டவிம் மையலூரே” (புறம். 83)
இப்பாடலில் தலைவி தன்னுடைய வேட்கையை வெளிப்படையாகப் பிறர்க்குப் புலப்படுத்துகின்றாள். தலைவியொருத்தி தனது வேட்கையைத் தலைவன் அறியும் வண்ணம் அவன் முன்னர் கூறமாட்டாள். இதனை,
“தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணுங்காலை கிழத்திக்கு இல்லை” (தொல். 1064 )
என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம். மேலும் அவர்,
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல்
நிச்சமும் பெண் பாற்கு உ¡¢ய என்ப” (தொல்.1045 )
எனக் களவியலில் பெண்களுக்கு¡¢ய இலக்கணத்தையும் தெளிவுறுத்தியுள்ளார்.
பெண்களுக்கு¡¢ய சிறப்பியல்புகளாகிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்குணங்களும் பொருந்தியுள்ள காரணத்தால் தான் என் தாய்க்காகவும் , அவையோருக்காகவும், ஊருக்காகவும் அஞ்சி நாணி வாழ்கின்றேன்.இல்லையேல் அந்தக் குறுந்தாடி இளையோனைத் தழுவுவதற்குத் தயக்கமின்றிச் செல்வேன் என்னும் கருத்திலே இப்பாடல் அமைந்துள்ளதைக் காணலாம்.
நக்கண்ணையார் என்ற இப்பெண்பாற் புலவர்,
“என்னை புற்கையுண்டும் பெருந்தோ ளன்னே
யாமே புறஞ்சிறை யிருந்தும் பொன்னன் னம்மே
போரெதிர்ந் தென்னை போர்க்களம் புகினே
கல்லென் பேரூர் விழவுடை யாங்கண்
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்
குமணர் வெரூஉந் துறையன் னன்னே” (புறம், 84)
என்றும் பாடுகின்றார்.
என்னுடைய தலைவன் கூழ் உண்டாலும் மாற்றலர் அஞ்சத் தக்க தோள் வலிமை உடையவன். நான் அவனுடைய சிறைப் புறத்திருந்தும் பன்முறை கண்டும் ஒன்றிட இயலாமையால் வருந்தி பொன்போலும் பசலை நிறத்தைக் கொண்டவளானேன். பகையை யேற்று என் தலைவன் போர்க்களத்தின்கண் புகுந்தால் கல் என்னும் ஒலியையுடைய பேரூ¡¢ன் நல்விழாவிலே இடிபட்டு வருந்திய உமணர் உப்பைச் சுமந்து செல்லவும் தம் களைப்பால் அஞ்சுவது போன்று பகைவரை அச்சமுறச் செய்யும் ஆற்றல் உடையவன் அவன் என்று இப்பாடலில் எடுத்துரைக்கின்றார். சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி தன்னுடய தந்தை தித்தனுடள் பகைத்து நாடிழந்து வறுமையுற்றுப் புல்லா¢சிக் கூழை உண்டு வாழ்ந்திருந்தான். அப்போது நக்கண்ணையார் பாடிய பாடலே இதுவாகும்.
தலைவன் தழுவலில் இருந்து சற்றுப் பி¡¢ந்தாலும் பசலை நோய் தலைவிக்கு வந்துவிடுவதனை,
“புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக் கொண்டற்றே பசப்பு” (குறள்.1187 )
என்ற திருக்குறள் எடுத்துரைக்கின்றது. புறநானூற்றுத் தலைவியோ தலைவனைத் தழுவாமல் தூரத்தில் இருந்தே அவனைப் பார்த்து அனுபவிக்கின்றாள். அவன் நினைவினாலேயே அவளுடலைப் பசலை அள்ளிக் கொண்டுவிட்டதாகக் கூறுகின்றாள். இந்தப் பாடலில் தலைவி தலைவனின் தோளழகையும் தோள் வலிமையையும் வியந்து காதலிக்கின்றாள் என்பது புலனாகிறது.
மற்றொரு பாடலில், என்னுடைய தலைவனுக்கு ஊரும் நாடும் இ·து அல்லாமையானும் அவனுக்கே உ¡¢ய இயல்பான வெற்றியினை, அவனது வெற்றியே என்று சிறப்பாக ஒரு சாராரும் அவன் வெற்றியன்று பிறிதொரு சாராரும் சொல்லுகின்றனரே. பொருந்தாமல் கூறும்இவ்விரு திறத்து நல்ல வார்த்தைகளும் என் செவிக்கு இனிமையாகவே இருக்கின்றன. அவ்வாறு கூறுவாராயினும் அழகிய சிலம்பொலிப்ப ஓடி எம்முடைய இல்லத்தின் கண் முழாப்போலும் பக்கத்தை உடைய பனை மரத்தைப் பொருந்தி நின்று இறுதியில் அவன் வெற்றி பெறுதலையே யான் கண்டேன் என்கின்றாள்.
“என்னைக்கு ஊ¡¢·தன்மையானும்
……………………………………..
முழாவரைப் போந்தை பொருந்தி நின்று
யான் கண்டனன் அவன் ஆடாகுதலே” (புறம்.85)
இப்பாடலில் தலைவி பனை மரத்தைப் பொருந்தி நின்று தலைவனின் வெற்றியை உறுதி செய்கின்றாள். நற்குணம் வாய்ந்த குலமகளிர் இவ்வாறு ஏதாவதொன்றினைப் பற்றி நின்று ஒருவரைப் பார்த்தலும், ஒன்றைக் கேட்டலும், நினத்தலும் இயல்பாகும்.
இம்மூன்று பாடல்களையும் ஒத்த அன்பினின்றும் முற்றும் மாறுபட்டிருத்தலினால் அகத்துறைக்குப் பொருந்தாதென்றும் அறத்தொடு படாமையின் புறத்துறையுமாகாது என்றும் முடிவாகக் கொண்டு இவற்றைக் கைக்கிளையின் பாற்படுத்தினர், கைக்கிளைத் திணை ஆடவர்க்கு மட்டுமே உ¡¢த்தாகும் எனத் தொல்காப்பியர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அகத்துறைக்குப் புறம்பாக இதில் தலைவி தனது வேட்கையை வெளிப்படையாகக் கூறியதனால் இப்பாடல்களை கைக்கிளை என்று குறித்தனர் எனலாம். மேலும் இப்பாடல்களை நோக்குங்கால் மகளிர்க்கும் கைக்கிளைத் திணை உ¡¢த்து என்பது புலனாகும். புறப்பொருள் வெண்பாமாலை ஆசி¡¢யர் ஐயனா¡¢தனார் இதனாலேயே ஆண்பாற் கைக்கிளை, பெண்பாற் கைக்கிளை என கைக்கிளை இருபாற்கும் உ¡¢த்தாகும் என்று எண்ணித் துறைகள் அமைத்தார் என்பது நோக்கத்தக்கதாகும் மேலும் இப்பாடல்களில் எவருடைய பெயரையும் சுட்டிக் கூறாது பொதுப்படையாகத் தலைவன் என்று கூறப் பெற்றிருப்பது நினைந்து இன்புறத்தக்கதாகும்.

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.