கடித விமர்சனம் – 5 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

வே.சபாநாயகம்.


‘தில்லியின் நிகம்போத் காட் (சுடுகாடு)’ இங்குள்ள தமிழர்களுக்கு புதிய செய்திகளைச் சொல்லும் ரசமான கட்டுரை. தில்லியில் நீங்கள் இருந்த காலத்தில் எங்கே தமிழர்கன் வீட்டில் மரணம் நிகழ்ந்தாலும் ‘கூப்பிடு மணியை’ என்று உரிமையோடு உங்களை அணுகி உதவி கேட்டதும், உடனே பையில் 500 ரூபாயைப் போட்டுக் கொண்டு ஸ்கூட்டரில் புறப்பட்டுப் போய் நீங்கள் பலனை எதிர் பாராது மயானத்தில் இடம் பிடித்து இறுதிச் சடங்குகள் முறைப்படி நடக்க உதவியதுமாய் சுமார் 200 தடவைக்கு மேலாக தில்லி சுடுகாட்டுக்கு (நிகம்போத்)அலைந்ததும் அறிய சிலிர்ப்பாய் இருக்கிறது. இப்படியும் ஒரு மனிதநேயமா என்று வியக்க வைக்கிறது. அது தொடர்பான உங்களது அனுபவங்களும் – நெகிழ்ச்சியும் உருக்கமும் மிக்கவை. மாதத்துக்கு இரண்டு முறையாவது தவறாது இந்த சுடுகாட்டுக்குப் போயிருந்தாலும் உங்களுக்காகப் போனது இரண்டு தடவைதான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் ஒன்று உங்கள் மாமனார் க.நா.சுவுக்காகப் போனது. இதையொட்டி க.நா.சு பற்றி கூறியுள்ள பல ரசமான தகவல்கள் இலக்கிய ரசிகர்களுக்கு புதியதும் இனியவையுமாகும்.

அடுத்து தில்லி திரைப்பட விழாக்கள் பற்றிய உங்களது அனுபவங்களையும் தகழியின் ‘செம்மீன்’ ‘தங்கத் தாமரை’ விருது பெற்றதில் உங்களது பங்கு பற்றியும் ‘செம்மீனும் தேசீயவிருதுகளும்’ என்ற கட்டுரை சொல்கிறது. திரைப்பட விருது தேர்வுக் கமிட்டியின் ஜூரிகள் நியமனத்தில் நடக்கும் அபத்தங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளவை சுவாரஸ்யமானவை. ஒரு சிலர் சினிமாவையே சுவாசிப்பவர்கள். ஹாலிவுட் படங்களை frame by frame ஆக அலசுபவர்கள். எந்த இந்திய சினிமாவைப் பார்த்தாலும், அதற்கு நதிமூலம் ரிஷிமூலமாய், எந்த ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பதற்கு லிஸ்டே வைத்திருப்பவர்கள். மாறாக சினிமா மொழியின் ‘ஆனா ஆவன்னா’ கூடத் தெரியாத பலர் மத்திய அரசின் ஏதாவது ஒரு அமைப்பில் தலைவர்களாக இருக்கும் ஒரே தகுதியில் ஜூரிகளாகத் தேர்வு செய்யப்படும் பலருக்கு எல்லாப் படங்களும் ஒன்றுதான், மற்ற ஜூரி நண்பர்களின் கருத்தை ஒட்டியே இவர்களது தேர்வு இருக்கும் என்பதெல்லாம் உங்களைப் போன்று அருகிருந்த பார்த்தவர்கள் சொன்னால்தான் தெரிகிறது. இத்தகைய அபத்தத்தால், நல்ல தென்னிந்தியப் படங்கள் – குறிப்பாகத் தமிழ்ப் படங்கள் அடிபட்டுப்போகும் அநீதியைப் பல சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளீர்கள்.

ஒரு தடவை மட்டும் க.நா.சு நடுவராக இருந்தபோது வெ.சாமிநாதன் எழுதி ஜான் ஆபிரகாம் இயக்கிய ‘அக்கிரகாரத்தில் கழுதை’ படம் தேர்வானது ஆறுதலான செய்தி. 1965ல் ‘செம்மீன்’ படத் தேர்வில் ஐந்து ஜூரிகள் தேர்வு செய்த பட்டியலில் ஹாலிவுட் படத்துக்கு இணையான ‘செம்மீன்’ இல்லாதது கண்டு அதிர்ச்சியுற்ற நீங்கள், நடுவரில் ஒருவரும் உங்களின் நெருங்கிய நண்பருமான புல்லா ரெட்டியிடம் முறையிட்டும் பயனில்லாது போய், மறுநாள் அதுவரை ‘செம்மீன்’ படத்தைப் பார்க்காத பிரபல சினிமா விமர்சகரும், உங்களுடன் தில்லி பிலிம் சொசைட்டியின் நிர்வாகக்குழு உறுப்பினரில் ஒருவருமான திருமதி.அமீதாமாலிக் அவர்களை வற்புறுத்தி அவருக்கென ஸ்பெஷல் ஸுகிரீனிங் போடச் செய்து பார்க்க வைத்து அவரை உங்கள் கடசிக்கு மாற வைத்து, பட்டியலில் ‘செம்மீனை’ச் சேர்க்க வைத்ததும் பிறகு அப்படம் தேசீய விருது பெறுவது சுலபமாயிற்று என்பதும் உங்களது அரிய சாதனைகளில் ஒன்று என்பது மட்டுமல்ல – முதல் தடவையாக ‘தங்கத்தாமரை’ விருது விந்திய மலைக்குத் தெற்கே பயணித்ததும் அற்புதமானது ஆகும்.

– தொடர்ச்சி அடுத்த கடிதத்தில்.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்