மீறும் பெண்மையின் சித்திரம் -(சல்மா கவிதைகளை முன்வைத்து)

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

சரவணன்



சல்மா தனது கவிதைகளின் வழியே வெளிப்படுத்தியுள்ள பெண்ணியக் கருத்துக்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தும்போது, சல்மா சமகாலப் பெண்களுக்குத் தவறான வழிகாட்டலைத் தந்துள்ளதாகவே கருத முடிகிறது.
சல்மாவின் முதல் கவிதைத் தொகுப்பாகிய ‘ஒருமாலையும் இன்னொரு மாலையும்’ மற்றும் இரண்டாவது கவிதைத் தொகுப்பாகிய ‘பச்சை தேவதை’ ஆகியவற்றில் உள்ள 141 கவிதைகளின் வழியாக வெளிப்படும் பெண்ணியக் கருத்துக்களை மறுவாசிப்புச் செய்யும்போது அவற்றிலிருந்து எதிர்ப்பெண்ணியச்சிந்தனை சார்ந்த கருத்துக்களே கிடைக்கின்றன.
கைகூடாத காதல், நிறைவுராத இல்லறம், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களிடம் கழிவிரக்கம், தனிமை, இரவு, நிலா, மழை இவைகளின் கூட்டுணர்ச்சிக் கோவைதான் சல்மாவின் கவிதைத்தளம் என்றாலும் கூட அவைகளுக்கு உள்ளீடாகப் பொங்;கியெழும் பெண்-பெண்மை-சிந்தனை சார்ந்த கருத்துக்கள் பூமிக்குள் ஓடும் நதியாகப் பாய்கின்றன.
மனித இனத்தைப் பால்வேறுபாடு அடிப்படையில் மனிதன, மனுசி அல்லது ஆண், பெண் எனப் பிரித்துள்ளனர். எல்லா விதத்திலும் இவ்விரு பிரிவுகள் துல்லியமாகச் சமமானவையே. இச்சமநிலையை அறியாத ஆண்கள், பெண்களைக் கீழ்நிலையில் வைத்தே சிந்திக்கின்றனர். அச்சிந்தனைச் மாற்றப் போராடும் எதிர்ச் சிந்தனைக் கருத்துக்கள் அனைத்தும் பெண்ணியக் கருத்துக்கள்தான். தமிழ்ச் சமூகத்தில் பெண், பெண்களுக்கான இடப்பகிர்வு போன்ற விரிந்த கருத்தாக்கங்;களைச் சல்மா இருவேறுபட்ட நிலைப்பாடுகளில் அணுகியிருக்கிறார். ஒன்று, தானும் ஒரு பெண் என்ற நிலையில். இரண்டு, தான் ஓர் இஸ்;லாமிய மார்க்கத்தைச் சார்ந்த பெண் என்ற நிலையில. இந்த இரண்டாவது நிலைப்பாடு குறித்துச் சல்மா,
“என்னுடைய கலாச்சார வாழ்விற்குப் பொருந்தாத இலக்கிய ஈடுபாட்டை என்னுள் ஏற்படுத்தி எனது இந்த வாழ்வோடு பொருத்த முடியாமல் போனதற்குக் காரணமான ஹமீதையே (மனு~;ய புத்திரன்) சொல்ல வேண்டும்” (சல்மா, ‘முன்னுரை’, ஒருமாலையும் இன்னொரு மாலையும், ப.6) என்று கூறுவதன் மூலமாக இஸ்;லாம் மார்க்கத்திலுள்ள இலக்கிய ஈடுபாடு கொண்ட ஒரு பெண்ணின் பார்வையில் தமிழ்ச் சங்கத்தில் பெண், பெண்களுக்கான இடப்பகிர்வு என்பதனை வலியுறுத்திப் புரிந்துகொள்ள வேண்டும்.
விரும்பிய காதலன் தனக்கு வாழ்க்கைத் துணையாகக் கிடைக்கப் பெறாத காரணத்தினாலும், மனப்பொருத்தமில்லாத கணவனுடன் வாழ நிர்பந்திக்கப்பட்டதினாலும் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவினால், தனது உள்மனத்தினுள் பிற ஆடவர் பற்றிய சித்திரங்கள் நிறைகின்றன என்றும் அச்சித்திரங்;களைச் சமகால வாழ்வியல் அரித்து விடுகின்றது என்றும் சல்மா கூறுகிறார். இது,
“கறுப்பு அங்;கிக்குள்
பெருகிச் சிதறும்
யாருமில்லாத
யாரோ ஒரு அன்னியனின் முகம்”
என்ற கவிதை புலப்படுகிறது.
ஓர் ஆண், பெண்ணின் நடத்தையின் மீது கொண்ட தீர்க்க முடியாத சந்தேகத்தின் பின்னணியில்தான் ஒரு பெண்ணிற்கு ஓர் ஆணின் மீதான காழ்ப்புணர்வு ஏற்படுகின்றது என்பதனைச் சல்மாவின் பல்வேறு கவிதை வரிகளின் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
சந்தேக எண்ணம் வலுப்பெற்ற ஆண்-பெண் உறவில் விரிசல் ஏற்படுத்தும் தருணத்தில் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவருக்கு வன்மம் ஏற்படுகிறது. இதன் விளைவாக ஒருவரையொருவர் அழித்துவிடும் அளவிற்கு அவர்களது மனநிலை முனைப்புடன் செயல்படுகின்றது. சான்றாக,
“யாரெனும் ஒருவர்
கொலையாளியாகும்
சாத்தியங்களுடன்
ஒன்றாக உறங்;குகிறோம்”
என்ற கவிதை அடிகளைக் குறிப்பிடலாம்.
தன் கணவரின் மீது ஒரு பெண் கொண்ட வன்மம், ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தின் மீதான காழ்ப்புணர்வாக விரிவடைகிறது. இதைச் சல்மாவின் கவிதை வரிகள்,
“உன்னைப் பற்றிய என் அபிப்பிராயங்;கள்
என்னுள்ளே வளர்த்தெடுக்கும்
உலகில் மிச்சமிருக்கும்
ஏனைய ஆண்களின்
மோசமான பிம்பங்;கள்”
என்று தெளிவுபடுத்துகின்றன.
சல்மாவின் சில கவிதைகளில், பெண்ணியக் கோட்பாடுகளுக்குப் புறம்பான சில கருத்துக்கள் வெளிப்படுத்தப் பெற்றுள்ளன. சல்மா தன்னை ஒரு ‘பெண்ணியக் கவிஞர்’ என்ற தொனியில் தமிழ்க் கவிதைச் சந்தையில்; அறிமுகப்படுத்திக் கொண்டபோதிலும், பெண்ணியக் கருத்துக்களை அவர் முழுவதும் பின்பற்றுவதாகக் கருதமுடியவில்லை. பெண்ணியச் சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டாத அல்லது அவர்கள் வரையறுக்காத சில கருத்துக்களையும் சல்மா தனது கவிதைகளின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். இக் கருத்துக்கள் சில பெண்ணியக் கருத்தாக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளன.
ஆண்களின் மீதான காழ்ப்புணர்வால் தனக்குரிய பாதுகாப்பின்மைகளை ஒரு பெண் உணரத் தொடங்;குகிறாள். தன்னைச் சுற்றிச் சிறை போன்ற ஒரு பாதுகாப்பு வளையத்தைத் தானே ஏற்படுத்திக் கொள்கிறாள். இதன் மூலம் சமூகத்தை விட்டு விலகும் சூழல் அவளையே அறியாமல் நிகழ்ந்து விடுகிறது எனலாம்.
“வஞ்சமுள்ள அமைப்புகளின்
பயங்களால்
எனது அரண்களை இன்னும்
வலுப்படுத்துகின்றேன்”
“யாரையும் அனுமதிக்க மாட்டேன்
என்னிடமிருந்து
எதையுமே பெற முடியாது”

எனும் கவிதை வரிகளில் சமூகத்தைவிட்டுத் தன்னை விலக்கிக் கொண்டு தனிமைப்பட்டுப் போகும் செயல் தற்காலிமானதல்ல என்பதையும் கவிஞர் சொல்லிச் செல்கிறார்.
“என்னிடமிருந்ததையெல்லாம்
ஒவ்வொரு முறையும்
பலவந்தமாகப்
பறித்துச் சென்றீர்கள்”

“பார் வெளியில்
ஓர் அரண் அமைத்து
இன்றெனைக் காக்கிறேன்
அழைப்பின்
எந்தக் குரலுக்கும்
நான் விலக்கப் போவதில்லை
எனது அரணை”

என்ற கவிதை வரிகளில்; தனக்கெதிரான சூழல் நிலவும்போது அதனை எதிர்த்துப்போராடும் திறன் அற்ற, ஓடி ஒளியும் பெண்ணியத்திற்குப் புறம்பான எதிர்ப்பெண்ணியக் குரல்தான் சல்மா கவிதைகளின் அடிநாதமாக உள்ளது.
நடப்பு வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ள எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல், அப்பிரச்சினைகளுக்காக மனம்வெம்பி விலகி ஓடும் போக்குச் சல்மாவின் கவிதைகளில் உள்ளது.
பெண்ணைப் பட்டாம்பூச்சியாக உருவகித்து, அப்பட்டாம்பூச்சி தன் வழி தவறி ஒரு வீட்டிற்குள் அடைபடுவதாகவும், பிறகு அது தப்பிக்க வழி தேடி காத்திருப்பதாகவும், என்றாவது அது வெறியேறியே தீரும் என்றும், அதுவரை அது இழந்தவற்றைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ‘விட்டுவிடுதலை’ யாவதையே விரும்புவதாகவும் சல்மா வெளிப்படுத்தியுள்ளார்.
“தன் வழி தவறி
அறைக்குள் சிக்கிய
பட்டாம் பூச்சி துவக்கிற்று
தன் தேடலை
மோதி அதிரும் சுவர்களில்
பரவும் அதன் வர்ணங்;கள்
திறக்காத கதவுகளில் வழியேதுமிருப்பதில்லை
……………..
என்றேனும்
பறந்து கதவு திறந்து வழி கிடைக்குமெனில்
அது பறந்து தான் போகும்
வர்ணங்கள் இல்லையென்றாலும் கூட”
இக்கவிதை அடிகளில் குடும்ப வாழ்வில் உள்ள ஒரு பெண், அக்குடும்பச் சூழலில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல், அக்குடும்பத்தைப் புறக்கணித்துவிட்டு வெளியேவருவதற்குத் தருணம்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ‘பட்டாம் பூச்சி’ என்பது ‘திருமணமான இளம்பெண்ணை’க் குறிப்பதாக நாம் கருதலாம். ‘அது பறந்து தான் போகும்’ என்ற அடியில், பெண்கள் தன் குடும்பப் பிரச்சினைகளிலிருந்து விடுபட அக்குடும்பத்திலிருந்து வெளியேறலாம் என்ற கருத்தினைச் சல்மா வெளிப்படுத்தியுள்ளார்.
இக்கருத்தினை மற்றுமொரு கவிதையிலும் சல்மா உணர்த்தியுள்ளார். ‘நீக்குதல்’ என்ற தலைப்பில் அமைந்துள்ள கவிதையில் ‘மரம்’ இடம்பெயர்வதாகச் சொல்லியுள்ளார். ‘மரம்’, வளரும் இடத்திலேயே வேர் ஊன்றி தனது மரணம் வரை அங்கேயே இருக்கும் தன்மை கொண்டது. பெண் என்பவளும் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்ற பிறகு, அங்கேயே வாழ்ந்து குழந்தைகள்பெற்று அவ்வீட்டின் சந்ததிகளை வளர்த்து ஆளாக்குபவளாகவே நமது சமூகத்தில் உள்ளாள். அவ்விதமே அவளுக்குரிய கடமை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதனையே இச்சமூகம் விரும்புகிறது. சல்மா, குடும்ப வாழ்வின் மீது காழ்ப்புணர்வு கொண்ட பெண்கள் அக்குடும்பத்தைவிட்டுத் தனது வேர்களை அறுத்துக் கொண்டு மீண்டும் அக்குடும்பத்திற்குள் நுழையாதவாறு நிரந்தரமாக நீங்;குவர் என்பதனை இக்கவிதை மூலம் குறிப்பால் உணர்த்தியுள்ளார்.
“இந்த மரங்;கள்
என்றைக்கேனும்
இங்;கிருந்து செல்லக் கூடும்
இனித்
திரும்புவதில்லையெனும்
வைராக்கியத்தோடு”

இங்;கு, ‘மரம்’ என்பது, குடும்ப வாழ்;க்கையில் ஈடுபட்டு பிள்ளைகளைப் பெற்ற ‘ஒரு தாய்’ க்குக் குறியீடாகக் காட்டப்பெற்றுள்ளது. மற்றொரு கவிதையில, தன் வீட்டை விட்டு வெளியேறத் துடிக்கும் பெண்மனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“கண்காணாத தூரத்திற்கு ஓடிவிட
எத்தனிக்கு நினைவுகள்
காலத்தின் வெற்றிடங்;களைத்
துழவி உள்ளுறையும்
விட்டில்பூச்சியாய் என்னைச் சுற்றி என்னுள் விழும்”
வீட்டை விட்டு வெளியேற எண்ணி அதற்கான வழி கிடைக்காமல் செயல் இழப்பதனை இக்கவிதை விவரித்துள்ளது.
‘இருளொடிப்பதென்பது’ என்ற தலைப்பினைக் கொண்ட சல்மாவின் கவிதை முழுக்கவே ஆண்களுக்கு எதிராக அறைகூவல் விடுப்பதாக உள்ளது. அக்கவிதையில், தற்காலப் பெண்கள் மிக அமைதியாகவும், வெளியில் தெரியாமலும் இருப்பது என்பது அவர்கள் இல்லாமல் போவதற்கான அறிகுறிகள் அல்ல அவர்கள் ஆண்களுக்கு நிகராக பதவி, அதிகாரம, பணி போன்றவற்றில் உயர்ந்து உருமாறுவதற்கான அறிகுறிகளே என்பதனைச் சல்மா தெளிவுபடுத்தியுள்ளார். இதனை,
“பிரவேசிக்க முடியாத
காலத்தின் ரகசிய வெளியூடே வருங்காலம்
நொக்கி
நகர்ந்து கொண்டிருக்கிறேன்”
என்றும், தான் எதையெல்லாம் பெறுவேன் என்பதை,
“பழகிய மௌத்திலிருந்து
துருவேறிய கெட்கச் சகிக்காத மொழியை
இன்னும்
இடம் மறைவிடத்திலிருந்தே
மேடையை
சுவீகரிப்பவளாய் இருக்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார். இக்கருத்துக்கள் அனைத்தும் சல்மாவின் தனிப்பட்ட கருத்தாக இருந்துவிடாமல, சமகாலப் பெண்களின் கருத்தாகவே வெளிப்பட்டுள்ளன. இதனை இக்கவிதையின் இறுதி அடிகள்,
“இருளில்
இருப்பதென்பது
வெறுமனே
இருளோடிருப்பது; மட்டுமில்லை”
என்று உணர்த்துகின்றன. இவ்வடிகள், ‘பெண் விடுதலை’ பற்றிய முயற்சிகள் மிகத் தீவிரமாய் மிக மறைவாய் நடைபெற்றுக் கொண்டுள்ளன என்பதைத் தெரிவிக்கின்றன. ஆண் வர்க்கத்திற்கு அறைகூவல் விடுக்கும் விதமாக அமைந்துள்ளன.
பரவலாகச் சல்மாவின் கவிதைகள், பெண்களைக் குடும்பம் என்ற மரபார்ந்த வட்டத்திலிருந்து வெளியேறச் செய்ய முனைப்புடன் செயல்படுவதாகத் தெரியவருகிறது. இந்நிலையில் ஏன் குடும்பத்தைத் துறக்க வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்து, அதற்கானப் பதிலினைச் சல்மா கவிதைகளில் தேடிப்பார்ப்பது வாசகரின் கடமையாகிறது. ஆண்-பெண் உறவுகளில் உள்ள இடைவெளிகளே குடும்பத்தைப் பெண்கள் துறப்பதற்கான காரணங்;களாகின்றன என்ற பதிலைச் சல்மாவின் கவிதைகளிலிருந்து பெறமுடிகின்றது. அந்த இடைவெளிகளைச் சல்மாவின் கவிதை வழியாகவே பட்டியலிடலாம்.
“இன்றைய உணவுக்கு
தெருநாய் கொண்டிருக்கும்
உத்திரவாதம் கூட இல்லை
நம் உறவில்”


“சம்பிரதாயமான உரையாடலுக்குப்
பொறுக்கும் வார்த்தைகள்
எல்லா நேரத்திலும் பொருந்திப் போவதில்லை
பொருந்தாத
சமயங்;களில் தவறிச் சிதறும்
கண்ணாடிப் பாத்திரம் போல”
‘ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமை, தான் குடும்பத்தில் பிளவு ஏற்படக் காரணமாக அமைகின்றன. அப் பிளவினைச் சரிசெய்ய வழி தெரியாத-வழி தெரிந்தும் அதனைச் செயல்படுத்த இயலாததன் பின்விளைவாகக் ‘குடும்பத்தைப் புறக்கணித்தில்’ என்பதே, சல்மா கவிதைகளில்; முதன்மையானதாக உள்ளது.
குடும்பத்தைப் புறக்கணித்தல் என்பது, ‘பெண்களுக்கும் ஆண்களுக்கும் மற்றும் சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘குடும்பம்’ என்ற கருத்தாக்கத்திற்கும் அல்லது ‘குடும்பம்’ என்ற நிறுவனத்திற்கும் எதிரானதுதான்’. சமகாலப் பெண்களைக் குடும்பத்தை விட்டு வெளியேற ஒரு மறைமுகமான கட்டளையாகவே சல்மாவின் கவிதைகள் அமைந்துள்ளன. சல்மா தனது கவிதைகளின் வழியே வெளிப்படுத்தியுள்ள பெண்ணியக் கருத்துக்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தும்போது, சல்மா சமகாலப் பெண்களுக்குத் தவறான வழிகாட்டலைத் தந்துள்ளதாகவே கருத முடிகிறது.


Series Navigation

சரவணன்

சரவணன்