“உண்மை இல்லாத புனைவு எது?”

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

ரெ.கார்த்திகேசு


–—
“உலகத் தரம்” என நாம் அடிக்கடி சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனால் உலகத் தரம் என்பது என்ன என்பதை யாரும் வரையறுத்துச் சொல்ல முடிவதில்லை. உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் ரசிக்கத்தக்க படைப்புக்களை யாரும் எழுத முடியுமா எனத் தெரியவில்லை. படைப்பு என்பது அந்தந்த மொழிக்குள்ளும் அதன் கலாசாரச் சூழ்நிலையிலும்தான் கட்டுண்டு கிடக்கிறது. ஆங்கிலம் இந்தக் கட்டுக்களைத் தாண்டிப் போகும் காரணம் அதன் வாசகர்கள் உலகின் பல பகுதிகளில் இருந்தாலும் ஆங்கிலம் நன்கறிந்திருக்கிறார்கள். அதன் கலாசாரத்தையும் அறிந்திருக்கிறார்கள். ஆகவே ஆங்கில இலக்கியம் உலகெங்கும் செல்லுபடியாகிறது.
இப்போது உலகின் பலபகுதிகளில் உள்ள வாசகர்கள் தமிழர்களாகவும் தமிழறிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே தமிழ் இலக்கியமும் உலகெங்கும் புழங்குகிறது. ஆகவே உலகின் பல பகுதிகளில் உள்ள தமிழ் வாசகர்கள் வாசிக்கக் கூடியதாக அமைந்துள்ள சிறந்த பன்னாட்டு முகம் கொண்ட படைப்புக்கள் உலகத் தரம் வாய்ந்தவை என நாம் கூறிக்கொள்வதில் தவறில்லை. நாகரத்தினம் கிருஷ்ணாவின் முதல் நாவலான “நீலக் கடல்” அதற்கப்புறம் “மாத்தா ஹரி” என்ற இவ்விரு நாவல்களும் அவற்றுள் நிச்சயம் சேரும்.
மாத்தா ஹரி பற்றி ஏற்கனவே விமர்சகர்கள் எழுதியுள்ளார்கள்.
( Ve.Sabanayam :http://www.thinnai.com/?module=displaystory&story_id=60812254&format=html
மற்றும் “வர்த்தை” இதழில் சச்சிதானந்தம்).

ஆகவேதான் நான் எழுதுபவற்றை மேற்குறிப்பு என்றே குறிப்பிட விரும்புகிறேன்.
நாகி தமிழ் நாவல்களில் புத்தம் புதிய பரிமாணங்களைக் கொண்டு வருகிறார் என்பதில் ஐயமில்லை. கதை இரண்டு காலகட்டங்களில் நடைபெறுவதாகக் கூறும் உத்தியை இதற்கு முன்னும் நாவலாசிரியர்கள் பயன் படுத்தியுள்ளார்கள் என்றாலும் (கல்கியின் “சோலைமலை இளவரசி”ஐ சபாநாயகம் நினைவு படுத்துகிறார்) நாகியின் கதைப் பின்னல் முற்றிலும் வேறானது; நவீனமானது. கல்கியின் நடை மிகச் சிருங்காரமாக வாசகனை ஈர்க்கிறது என்றால் நாகியின் நடை ஒரு அதிர்ச்சியும் கிளர்ச்சியும் தரும் நடையாக, நவீனத் தமிழ் வாசகனுக்கு ஏற்ற நடையாக இருக்கிறது.
நாகியின் நடை பற்றி வேறொன்றும் சொல்ல வேண்டும். தனது அத்தியாயங்களின் சூழலுக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப அவர் நடை மாறி மாறியும் வருகிறது. சில அத்தியாயங்களில் அவர் தன்னை முற்றாக மறைத்துக் கொண்டு தன் பாதீரங்களையே உரையாட விட்டுவிடுகிறார் (அத்தியாயம் 15). அடுத்த அத்தியாயத்தில் ஆற்றோட்டமான நடை. இதே அத்தியாயத்தில் அவர் எடுத்தாளும் ராஜம் கிருஷ்ணனின் நடை போலும் இதை வருணிக்கலாம். அத்தியாயம் 19இல் அவர் வாசகனை நேரடியாகப் பார்த்துப் பேசுவது அசல் கல்கியின் பாணி. அத்தியாயம் 37 எனக்கு பாலகுமாரனை நினைவுபடுத்தியது. அத்தியாயம் 40 துல்லியமாக ஒரு துப்பறியும் கதை நடை.
நாகிக்கென்று நிலைப்பாடுடைய நடை ஒன்று உள்ளது. ஆனால் தன் அத்தியாயத்தின் உணர்வுக்கேற்ப அவர் வேண்டுமென்றே இந்த பல்வகை நடைகளைப் பயன் படுத்துகிறார் என்பதே சிறப்பு. இந்த நோக்கம் முடிந்ததும் தன்நடைக்கு அவர் மீண்டு விடுகிறார். ஒரு நாவல் உத்தியாகவே இது பயன் படுகிறது.
இறுதி அத்தியாயத்தில் கிருஷ்ணா-பவானி உரையாடல்கள் ஒரு மாய வெளியில் நடைபெறுகின்றன. கதையின் சிக்கல்கள் சிலவற்றைத் தீர்ப்பது போல் இது மேலும் சில முடிச்சுக்களையும் போடுகிறது. உண்மையா, புனைவா என்று வாசகனைத் திகைக்க வைக்கிற இந்த அத்தியாயத்தில் உள்ள ஒரு வரி இந்த நாவலை முற்றிலும் வருணைப்பதாக உள்ளது:
“உண்மை இல்லாத புனைவு எது?”
மாத்தா ஹரியை அதன் கதைச்சுவை கருதிப் படிப்பது அதன் பயனைக் குறைவாக அனுபவிப்பதே ஆகும். அதன் உண்மை வாசிப்புப் பயன் நாவலின் பல்வேறு உத்திகளை அறிந்து கொள்வதும், மனத்தின் இருளையும் வெளிச்சத்தையும் வார்த்தைகளில் வெளிப்படுத்தும் வினைத் திறனை அனுபவிப்பதுமே ஆகும்.
நாகியைத் தமிழில் ஒரு முக்கிய நாவலாசிரியராக “மாத்தா ஹரி” நிலைப்படுத்தியிருக்கிறது.


karthi@streamyx.com

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு