சங்கச் சுரங்கம் — 9 : சங்கநிலா

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

சு. பசுபதி, கனடா



டொராண்டோ தமிழ்ச்சங்கத் தலைவர் தொலைபேசியில் என்னைக் கூப்பிட்டு, அவர்கள் கொண்டாடப் போகும் சித்திரைத் திருவிழாவிற்கு ஓர் அழைப்பு விடுத்தார். அவர்கள் அரங்கேற்றப் போகும் ‘சங்கநிலா’ என்ற ஒரு புதிய கலை நிகழ்ச்சியைப் பார்த்து என் கருத்துகளைக் கூறுமாறு வேண்டினார். நான் பார்த்த அந்நிகழ்ச்சியின் சில காட்சிகளை விவரிக்கிறேன். பிறகு நீங்களும் அதைப்பற்றி ஒரு முடிவுக்கு வரலாம்.

‘சங்கநிலா’வின் ஒவ்வொரு காட்சியிலும் மேடையின் பின்னிருந்த திரையில் நிலாவின் பதினைந்து வளர்பிறை நிலைகளில் ஒன்று ஒளிர்ந்தது; அதன் ஒளியில் மேடையில் நடந்த கலை நிகழ்ச்சி ஒரு சங்கப் பாடலைச் சித்திரித்தது. சில காட்சிகளில் கவிதைகள் இசைக்கப்பட்டன. சிலவற்றில் அவை படிக்கப் பட்டன; சில நடிக்கப் பட்டன. திரைக்குப் பின்னிருந்து பாடல் விளக்கங்களும் அவ்வப்போது கேட்டன. சில பாடல்களுக்கு நடனம் மூலமாகவும் விளக்கங்கள் கிடைத்தன. இந்த நிகழ்ச்சி ஒரு புதுமையான முயற்சியாய்த் தான் இருந்தது. அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில பாடல்களை மட்டும் இங்கே விவரிக்கிறேன்.

முதல் காட்சி. திரை எழுகிறது.

மூன்றாம் பிறை பளிச்சிடுகிறது மேடையின் வலது மேற்கோடியில்.

கடம்பனூர்ச் சாண்டிலியனின் குறுந்தொகைப் பாடல் மேடையில் இசையுடன் ஒலிக்கிறது.

தலைவி தோழியிடம் சொல்கிறாள். “ கன்னி மகளிர் தொழும்படி செவ்வானத்தில் திடீரென்று தோன்றிய பிறைச் சந்திரன் உடைந்த வளை போல் இருக்கிறது.
பெண்யானையின் துயரை நீக்க இயலும் ஆண்யானையைக் காட்டில் கண்டும் , தலைவன் என் துயரை நீக்க முயலவில்லையே” என்ற கருத்துக் கொண்ட பாடல்.

அப்பாடலின் ஒரு பகுதி:

வளை உடைத்தனையது ஆகி, பலர்தொழ,
செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி,
இன்னம் பிறந்தன்று, பிறையே; அன்னோ,

. . . ( குறுந்தொகை, 307 )
[ வளை – சங்கு வளையல், வாய் – இடம், ஐயென – விரைவாக, பிறந்தன்று – பிறந்தது ]

அதே மூன்றாம் பிறையின் ஒளியில் அடுத்த காட்சி.

நெடும்பல்லியத்தை என்ற பெண்பாற் புலவரின் குறுந்தொகைப் பாடலின் வாசிப்பைத் தொடர்ந்து, ஒரு சங்கச் சித்திரத்தை நடித்துக் காட்டினர் சிலர்.

தலைவனும், தலைவியும் மிக மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துகிறார்கள்; அவர்களுடைய வாழ்வைக் கண்டு களிக்கத் தலைவியின் தோழி அவர்கள் வீட்டுக்கு வருகிறாள். ஒரு நிமிடமும் மனைவியைப் பிரியாமல் கணவன் இருப்பதைப் பார்த்த தோழிக்குப் பழைய நினைவுகள் எழுகின்றன. இப்போது பிரிவைக் கொஞ்சமும் சகிக்காமல் இருக்கும் தலைவன் , மணத்திற்கு முன் ‘வெறும்’ காதலனாக இருந்தபோது, எப்படித் தன் காதலியைப் பிரிந்த துன்பத்தைத் தாங்கினானோ என்று எண்ணி வியக்கிறாள் தோழி. தலைவனிடம் தன் வியப்பைத் தெரிவிப்பதாக அமைந்திருக்கிறது இந்தப் பாடல்.

“ அயிரை மீன் மேய்வதற்கு வசதியாகப் பரந்த, குளிர்ந்த பொய்கையில் துளையுடைய திரண்ட தண்டுகள் கொண்ட அழகிய ஆம்பல் மலர்கள் உண்டு.
அவற்றைப் பறிப்பவர்கள் நீரின் நடுவிலேயே நின்றபடி இருப்பினும், தண்ணீர் குடிக்கும் வேட்கையை அடைவது போல், தலைவியின் மார்பகத்தின் நடுவில் நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தும், காதல் சுரத்தால் நடுங்குகின்றீர்! கன்னி மகளிரும், மற்றவரும் தொழ ஆசைப்படும் பிறைச் சந்திரன் என்றோ ஒருநாள் தான் அரிதாகக் காணப் படுவதுபோல், எங்களைக் காண்பதற்கு அருமையாக இருந்த அந்தக் களவுக் காலத்தில், நீர் மிகவும் பொறுமையுடன் இருந்தீர். அதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்” என்கிறாள் தோழி.

அயிரை பரந்த அம் தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள்
இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர்;
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர்; நோகோ யானே. ( குறுந்தொகை – 178 )

[ பழனம் – பொய்கை, அம் – அழகிய, ஏந்தெழில் – மிகுந்த அழகு, தூம்பு – உள் துளை, குறுநர் – பறிப்போர், வேட்டாங்கு – வேட்கை கொண்டாற்போல், பிறையின் – பிறைபோல், பெரிய – பெரிதும், நோன்றனிர் – பொறுத்தீர், நோகு – வருந்துகிறேன். ]

இன்னொரு காட்சி.

நிலாவின் எட்டாம் பிறை மேடைத் திரையில் ஒளிர்கிறது.

கோபெருஞ் சோழன் பாடிய பாடலைப் படிக்கிறார் ஒருவர். “ துயரம் ஏன்?” என்று வினவிய தோழனுக்குத் தலைவன் கூறும் பாடல். “ கரிய கடலின் நடுவில் அஷ்டமிச் சந்திரன் உதிப்பது போல், கருங்கூந்தலின் நடுவில் விளங்கும் தலைவியின் நெற்றி , புதிதாகப் பிடிக்கப் பட்ட யானையைப் போல என்னைப் பிணித்தது “ என்கிறான்.

. . . .
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப்
பசு வெண் திங்கள் தோன்றியாங்குக்
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்
புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே . ( குறுந்தொகை, 129 )

[ மா – கரிய , நடுவண் – நடுவே, கதுப்பு – கூந்தல் ]
{ தலைவனுக்கு இது ஒரு ‘புதுக் காதல்’ என்பதால் ‘புதுக்கோள்’ ( அல்லது புதிதாகப் பிடிக்கப்பட்ட) யானை உவமை ஆனது என்கிறது மேடையின் பின்னிருந்து ஒரு குரல். }

இன்னொரு காட்சி.
பௌர்ணமி போல் ஒளிர்விடுகிறது நிலா. மேடையில் குறுந்தொகையின் இன்னொரு பாடல் இசைக்கிறது . தோழி முழு நிலாவைச் ‘சபிக்கிறாள்’.
“ நெடுங்காலமாக ஒளிரும் வெண்ணிலாவே! கரிய அடிப்பகுதி கொண்ட வேங்கை மரப் ( பொன்னிறப்) பூக்கள் உதிர்ந்து போர்த்தியிருக்கும் குண்டுக்கல் ஒரு பெரிய புலிக் குட்டியைப் போலத் தோன்றுகிறது. காட்டிடையே வரும் தலைவனுக்கு
அச்சத்தைத் தந்து, அவனுடைய களவொழுக்கத்திற்கு இது நன்மை புரியாது. அதனால், நீ செய்வது நன்றன்று” என்ற கருத்துக் கொண்ட பாடல்.

மேடையின் பின்னிருந்து உ.வே.சாமிநாதய்யர் இந்தப் பாடலுக்குத் தந்த ஒரு விளக்கம் ஒலித்தது : “ காட்டிடை வரும்போது வழியிலுள்ள வேங்கை மலர் உக்க பாறையை வேங்கைக் குருளை என்று அஞ்சச் செய்வதாலும், ஊரின் கண் உள்ளார் கண்டு கொள்வதற்கு ஏதுவாதலாலும் நிலவை, ‘நல்லை அல்லை’ என்றாள். நெடு வெண்ணிலவு – நெடு நேரம் எறிக்கும் வெண்ணிலவு; இயல்பாகத் தனக்கமைந்த பொழுதின் மாத்திரம் எறிக்கும் நிலவாயினும், விரைவில் மறைய வேண்டுமென்னும் விருப்பினளாதலின், அவளுக்கு நெடுமை உடையதாகத் தோன்றியது; தம்மால் விரும்பப் படாத நிலாவை, ‘ நெடு வெண்ணிலவு’ என்று கூறுவதாக அமைத்த சிறப்பால் இச் செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர் ‘நெடுவெண்ணிலவினார்’ என்னும் பெயர் பெற்றார். “

கருங்கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை – நெடு வெண்ணிலவே! ( குறுந்தொகை, 47 )

[ கால் –அடி மரம், வீ –பூ, உகு – உதிரும், துறுகல் – உருண்டைக் கல், குருளை – குட்டி ]

கடைசிக் காட்சி. ஒரு சிறு நாடகம்.

பௌர்ணிமை நாள். வீட்டு மாடியில் நின்றுகொண்டு இரண்டு பெண்கள் வானத்து நிலவைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறார்கள். ‘நிலாக் காய்கிறதே? இந்த அழகான சூழ்நிலை வீணாகிறதே? பக்கத்தில் நம் காதலர்கள் இருந்தால் எப்படி இருக்கும்!” என்றா நினத்தார்கள்? இல்லை, அந்த இரு மகளிர் மறைந்த தம் தந்தையை நினைத்துக் கண்கலங்குகிறார்கள்! இந்த ஒரு சம்பவத்தால் பாடல் உலகில் அழியாப் புகழ் பெற்ற அங்கவை, சங்கவை என்ற இந்த இரு பெண்கள் சங்க இலக்கியத்தில் இரு நிலாக்களாக ஒளிர்கின்றனர் என்றால் மிகையாகாது.

மூவேந்தர்கள் வள்ளல் பாரியை வஞ்சனையால் கொன்றபின்னர், பாரியின் உயிர்த்தோழரான புலவர் கபிலருக்குத் தனித்து உயிர் வாழ்வதில் விருப்பமில்லை. ஆனால், பாரி மகளிரைக் காப்பதற்கு வேறு எவரும் இல்லாததால், கபிலர் அந்த இரு பெண்களை அழைத்துக் கொண்டு விச்சிக்கோ, இருங்கோவேள் ஆகிய சிற்றரசர்களிடம் சென்றார்; பாரி மகளிரின் அழகையும், ஆற்றலையும் எடுத்துரைத்து அவர்களை மணக்கும்படி வேண்டினார். மூவேந்தர்களுக்குப் பயந்த அவ்வரசர்கள் அங்கவையையும், சங்கவையையும் மணக்க மறுத்தனர்.

இப்படி ஒவ்வொரு இடமாய் மகளிரை அழைத்துச் செல்லும் கபிலர் ஒரு சிற்றூரில் ஓர் இரவைக் கழிக்கிறார். அன்று முழு நிலவு நாள். பாரி மகளிரின் மனங்கள் அன்புத் தந்தை பாரியை நினைத்துக் கலங்குகின்றன. ஒரு பாடலை இருவருமாய்ச் சேர்ந்து இயற்றுகின்றனர். கூட இருந்த கபிலரிடம் அதைச் சொல்கின்றனர். கண்ணீர் விட்டுக் கொண்டே அதைக் கேட்கிறார் கபிலர்.

” ஒரு மாதத்திற்கு முன்னர், பரம்பு மலை மீதேறி வெண்ணிலவைப் பார்த்து மகிழ்ந்தபோது, எங்கள் தந்தையும் உடனிருந்தார். அவருடைய பரம்பு மலையையும் பிறர் கவரவில்லை. ஆனால் இன்றோ எங்கள் குன்றும் வெற்றி கொண்டு முழங்கும் முரசுடைய வேறு வேந்தர் கையில் போய்விட்டது; மேலும், எங்கள் தந்தையையும் அல்லவா நாங்கள் இழந்து விட்டோம்?”

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்
வென்று எரிமுரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

எளிமையான சொற்கள் மூலம், நம் ஆழ்ந்த உணர்வுகளைக் கிளரும் இந்தப் பாடல் புறநானூற்றில் உள்ளது. மனத்தை உலுக்கும் ‘கையறு நிலை’க் கவிதை.
( கையறுநிலை – இறந்தோரைக் குறித்து இருப்பவர் இரங்குதல் )

அதுதான் ‘சங்கநிலா’வின் கடைசிக் காட்சி.

நிகழ்ச்சியைப் பற்றி மனத்தில் மெதுவாக அசை போட்டுக் கொண்டே, அரங்கத்தின் வெளியே நிறுத்தி வைத்திருந்த என் காரை நோக்கி மெதுவாக நடந்தேன். வானத்தில், ஒரு மேகத்தின் பின்னிருந்து வெளியே தலையைக் காட்டிச் சிரித்தது பௌர்ணமி நிலா. ஆம், அன்று அங்கவை, சங்கவை பார்த்த அதே நிலா இன்று என்னைப் பார்த்து நகைக்கிறது! இந்தப் பொல்லாத நிலா என்ன நினைக்கிறது ? ‘ முட்டாளே, நான் நகைப்பது இன்று மட்டும் இல்லை, ஒருநாள் நீ இல்லாத இந்த உலகையும் பார்த்துச் சிரித்துக் கொண்டு தான் இருப்பேன்’ என்கிறதோ?

~*~o0O0o~*~
pas_jaya at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா