சங்கச் சுரங்கம் — 7 : மையணல் காளை

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

சு. பசுபதி, கனடா



” அடுத்த மாதம், என் உலகமே அழியப் போகிறது ! ” என்று கவலையுடன் சொன்னான் வீட்டுக்கு வந்த நண்பன் கோண்டு. உட்காரச் சொல்லி விவரம் கேட்டேன்.

“அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேக்கறே? என் பெண் சுலோவுக்கு மல்யுத்தம் மேலே ஒரு மோகம். அதுவும், ‘மல்லாதி மல்லன்’ , தமிழ்நாட்டுத் தீரன், ‘குரங்குப் பிடி’ கோவாலு மேலே ஓர் அசாத்யக் காதல். அடுத்த மாதம், டொராண்டோவில் ‘மற்பித்து’ ( Wrestlemania ) நிகழ்ச்சி நடக்கப் போகிறது, இல்லையா? அந்தச் சண்டையில் பங்குபெறப் போகும் ‘குரங்குப் பிடியை’ச் சந்தித்து, தன் காதலை வெளிப்படுத்தி, அவனைக் ‘காதற்பிடி’யில் மாட்டுவதற்கு இப்போது முதலே திட்டம் போடத் தொடங்கி விட்டாள் சுலோ. ஏண்டா, இவளும் எல்லாரையும் போல் ஒரு மின்கணினி மேதாவியையோ, வணிகத்துறை வஸ்தாதையோ காதலிக்கக் கூடாதா ? இவளோ நல்ல படிச்ச பெண். அவனோ — பார்த்தா ஒரு கைநாட்டுக் கேஸ் போலிருக்கிறான். சங்க நூலெல்லாம் படிச்சிருக்கீங்களே, இப்படிப்பட்ட பித்துப் பிடித்த என் பெண்ணைபோல் ஒருத்தியைப் பார்த்திருக்கிறீர்களா ?” என்று அங்கலாய்த்தான் கோண்டு.

” ஒருத்தி இருந்தாள். தற்செயலாய், அவளுக்கும் உங்கள் பெண் பேர்தான் ! ”

“அப்படியா ?” கோண்டுவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“ஆம், நக்கண்ணையார் என்ற ஒரு பெண்புலவர்; ஆறு சங்கப் பாடல்கள் பாடியவர்.
சுலோசனா என்றாலும், ‘நக்கண்ணை’ என்றாலும் ஒரே பொருள் தான்!
நக்கண்ணை பெருங்கோழி நாய்கனின் மகள். அரசர்களுக்குப் பெண்களை மணம் செய்து கொடுக்கும் வணிக மரபினரைச் சேர்ந்தவர்கள் அவர்கள். நக்கண்ணையின் மனங் கவர்ந்த மல்லனும் சாதாரண மல்லனல்லன். உறையூர் வெண்மான் வெளியன் தித்தனுடைய மகன்; போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி என்னும் சோழ இளவரசன்.”

” ஆ! புத்திசாலிப் பெண்! பிடிச்சாலும் பிடிச்சாள் அந்த நக்கண்ணை. ஒரு புளியங் கொம்பைன்னாப் பிடிச்சிருக்காள் ! நம்ம பெண் மாதிரியா ? ”

“அவசரப் படாதே! தன் தந்தையோடு சண்டை போட்டு, நாடிழந்து, புல்லரிசிக் கஞ்சி உண்டு வருந்தியவன் தான் கிள்ளி என்பர். எளிமையான கூழ் குடித்தாலும், தோள் வலிமையுள்ளவன் தான் என்று வியக்கிறாள் நக்கண்ணை. ”

என் ஐ, புற்கை உண்டும் பெருந்தோள் அன்னே! (புறநானூறு, 84) ”
[ஐ — தலைவன்; சோழன் , புற்கை — கூழ் ]

“ஐயோ! சுலோவின் ‘கேஸ்’ மாதிரி கிள்ளியும் அன்றாடங் காய்ச்சியோ? அட, கண்றாவியே? ” என்று சோர்ந்தான் கோண்டு.

” கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் மற்போரில் வென்றான். இதைப்பற்றிச் சாத்தந்தையார் என்ற பெரும் புலவரும் புறநானூற்றில் பாடி உள்ளார்.

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடைய மல்லன் மதவலி முருக்கி,
ஒருகால் மார்பு ஒதுங்கின்றே! ஒருகால்
வருதார் தாங்கிப் பின் ஒதுங் கின்றே ! (புறநானூறு 80)

[ இன் கடுங்கள் — புளித்த கள், மைந்து — வலிமை, மதவலி — ஆற்றல், முருக்கி — அழித்து, தார் — உபாயம் ]

புளித்த கள் பெருகி ஓடும் ஆமூரின் சிறந்த மல்லன் ஒருவனின் சக்தியை அழித்து, ஒருகாலை அவன் மார்பிலும் , மற்றொரு காலை முதுகிலும் அழுத்தி ‘அழ’ச் செய்தான் கிள்ளி என்கிறார் சாத்தந்தையார். கிடுக்கிப் பிடி போல் இருக்கிறதில்லையா? ”

“ சிறுவயதில், தாராசிங் – கிங்காங் சண்டையைப் பார்த்த நினைவுதான் வருகிறது!” என்றான் கோண்டு.

“ நக்கண்ணையும் கிள்ளியின் மற்போரைப் பற்றிப் பாடுகிறாள். கிள்ளி போரிடுவது ஆமூரில்; அதுவோ அவன் ஊரில்லை. ஆட்ட நாகரிகம் அறிந்த ஆமூர் மக்களில் ஒரு சிலர், அவன் அந்த ஊர்க்காரனாக இல்லாவிடினும், அவனுடைய வெற்றியைப் போற்றுகின்றனர். இன்னும் சிலர் அது வெற்றியன்று என்கின்றனர். ‘இப்படி இரண்டு குழுக்கள் இரண்டு வகையாய்ப் பேசுதல் நல்ல வேடிக்கைதான் ! ‘, என்கிறாள் நக்கண்ணை !

என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும் ,
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும்,
‘ஆடு ஆடு’ என்ப, ஒரு சாரோரே!
‘ஆடு அன்று’ என்ப, ஒரு சாரோரே!
நல்ல, பல்லோர் இரு நன் மொழியே! (புறநானூறு, 85)

[ ஐ — தலைவன்; ஆடு — வெற்றி ; நல்ல — அசை நிலை ]

மற்போரை, சிறிது தூரத்தில் தன் வீட்டின் பக்கத்தில் இருந்த பனைமரத்தில் சாய்ந்து நின்று பார்க்கிறாள் நக்கண்ணை. ‘ யார் என்ன சொன்னால் என்ன? என் கண்ணிற்குக் கிள்ளிதான் வெற்றி பெற்றான்’ என்கிறாள்.

முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே! ( புறநானூறு , 85 )

[ முழா அரைப் போந்தை — மத்தளம் போல் அடியுடைய பனைமரம், ஆடு ஆகுதல் —- வெற்றி அடைதல் ]

எவ்வளவு அழகான சித்திரம், பார்த்தாயா, கோண்டு ?”

“அது சரி, காதல் விவகாரத்திற்கு வா சீக்கிரம்” என்று அவசரப் படுத்தினான் நண்பன்.

“பாட்டியற்றுவதோடு நிற்காமல் நக்கண்ணை காதலும் கொண்டாள் கிள்ளிமேல்!

‘ போர்வைக்கோப் பெருநற்கிள்ளி வீரக்கழலும் கருந்தாடியும் உடையவன்; அவனைப் பார்த்ததும் காதற் பெருக்கு மேலிட்டு, என் கைவளைகள் கழல்கின்றன. என் தாய் என் நிலையை அறிந்திடுவாளோ என்று அஞ்சுகிறேன். கிள்ளியின் தோளைத் தழுவ விரும்பினாலும் அவையில் இருப்பவர்கள் காண்பார்களே என்று நாணம் எழுகின்றது’ என்று பாடுகிற நக்கண்ணையாருக்கு ஆற்றாமையாலும், படும் அவஸ்தையாலும் கோபம் எழுகிறது. “இரண்டில் எதைச் செய்வது என்று தெரியாமல் கஷ்டப் படுகின்ற என்னைப் போல், என் காதல் தெரிந்து பழிதூற்றும் இந்த ஊரும் கஷ்டப் படட்டும்!” என்று ஊரைச் சபித்துப் பாட்டை முடிக்கிறார்.

அடிபுனை தொடு கழல், மை அணல் காளைக்கு, என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே!
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே!
என்போல் பெரு விதிப்புறுக! என்றும்
ஒரு பாற் படாஅது – ஆகி
இரு பாற் பட்ட இம் மையல் ஊரே! ” (புறநானூறு, 83)

[ அடி – பாதம், தொடுகழல் — வீரக் கழல், மை அணல் — கருமையான தாடி, காளை — சோழ மன்னன், தொடி – வளையல், கழித்திடுதல் – கழலுதல், யாய் — தாய், முயங்கல் – தழுவுதல், விதுப்புறுதல் — நடுங்குதல். ]

“சரி, அவள் காதல் நிறைவேறியதா? ”

“அதுதான் இல்லை. துரதிர்ஷ்டவசமாக இவருடைய காதல் ‘ஒரு தலைக்’காதலாக முடிந்தது என்று உரையாசிரியர்கள் எழுதியுள்ளனர். ( இதைக் ‘கைக்கிளை’த் திணை என்பர்.) அதனால் தானே, இந்தக் கதையை உன்னிடம் சொன்னேன்! உன் பெண்ணிடம் நக்கண்ணையின் இந்த நிறைவேறாத காதல் பற்றிச் சொல்லு ! ஒரு வேளை, அவளும் ‘கோவாலு’ மேல் உள்ள தன் காதலை மறக்கலாம்” என்று சொல்லிக் கோண்டுவை வீட்டிற்கு அனுப்பினேன்.

பின் குறிப்பு:

இந்தப் பாட்டைக் கேட்டு உற்சாகத்துடன் வீடு திரும்பினான் கோண்டு. மல்லனைக் காதலித்த ஒரு சங்க காலச் ‘சுலோசனா’வின் காதல் கடைசியில் நிறைவேறாதது பற்றித் தன் மகளிடம் சொன்னான் . சமாதானம் அடைவதற்குப் பதிலாக, பாடல்களைக் கேட்ட சுலோசனாவிற்கு ஒரு புதிய வெறியே பிறந்துவிட்டதாம். ஒரு பாட்டில் வந்த ‘மையணல்’ ( கருமையான தாடி) என்ற வார்த்தைமேல் வேறு ஒரு மோகம் வந்துவிட்டதாம். (கோவாலுவிற்கு ஒரு குறுந்தாடி உண்டாம்; அந்த விஷயம் எனக்கு எப்படித் தெரியும்?) ‘மையணல் மல்லன்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுப்பதற்கும், அந்தப் படத்தில் ‘குரங்குப் பிடி’ கோவாலுவும், தானும் நடிக்க மும்முரமான ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்து விட்டாளாம். திரைப் படத்திற்கென்று “மையணல் மச்சானே! மையல் பொறி வச்சானே!” என்ற பாடலையும் ” குஸ்தியிலே நம்மாளு! குரங்குப்பிடி கோவாலு !” என்ற பாடலையும் கவியரசு சங்கதாசனிடமிருந்து பல டாலர்கள் கொடுத்து எழுதி வாங்கி விட்டாளாம். “இனிமேல் என்ன செய்வது” என்று கேட்ட நண்பருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்!

~*~o0O0o~*~

pas_jaya at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா