சை.பீர்முகம்மது அவர்களின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை நூல் வெளியீடு

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

பாண்டித்துரை


“பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்”

தங்கமீன் பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் மலேசிய எழுத்தார் சை.பீர்முகம்மது அவர்களின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை நூல் வெளியீடு சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய ஆதரவுடன் 22.02.09 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

பாலுமணிமாறன் எழுதிய கவிதையை தேசிய அளவிலனா நான்குமொழி பாடலில் தமிழ் பாடலுக்கு இசையமைத்த குணசேகரன் குரலில் இசையுடனான தமிழ்தாய் வாழ்த்தாக பாடியதுடன் நிகழ்வு தொடங்கியது.

நிகழ்வினை முன்னின்று நடத்திய தங்கமீன் பதிப்பகத்தின் உரிமையாளர் பாலுமணிமாறனின் வரவேற்புரையையும் நன்றியுரையையும் தொடர்ந்து ஜோதி.மாணிக்கவாசகம் அவர்கள் நூலினை அறிமுகப்படுத்தினார். எல்லாக்கதைகளிலும் ஏதோ ஒரு ரூபத்தில் உள் நுழையும் கள்ளுக்கடையில் தொடங்கி சிகப்பு விளக்கு மயான கண்டம் அசுணப் பறவை உக்கிரப் பாம்பு என்று இருபது சிறுகதைக்குள் பொதிந்திருக்கும் நட்பு பெண்ணுரிமை என்ற பலவித கருத்துகளின் மையஓட்டத்தை தொடுவதாக அமைந்திருப்பதாக நான் சொல்வது எல்லாம் இருபது கதைகளின் வாசகனாக என்ற நூலாய்வு வாசக பகிர்தலாக அமைந்தது.

நிகழ்வில் சென்னையில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவில் அயலக தமிழர்களில் தமிழ் பணி செய்தமைக்காக திமுக இலக்கிய அமைப்பு வழங்கிய முதல் அயலக தமிழருக்கான அண்ணா விருதை பெற்ற தொழிலதிபர் போப்ராஜ் அவர்களுக்கு மலேசிய எழுத்தாளர்கள் கையெழுத்திட்ட நினைவுப்பரிசினை வழங்கி கௌரவித்தனர். பின்னர் பேசிய கவிஞர் அமலதாசனின் தலைமையுரை பள்ளிமாணவர்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனையாக அமைந்தது.

முனைவர் ரெத்தினவேங்கடேசன் வழிநடத்த கவிஞர் அமலதாசன் அவர்கள் நூலினை வெளியிட முதல் பிரதியை முறையே முஸ்தபா அறக்கட்டளையின் தலைவர் முஸ்தபா அவர்களும் செல்லாஸ் உணவக உரிமையாளர் மா.அன்பழகனும் பெற்றுக்கொண்டனர்.

“இவன் நட்ட மரங்கள்

இவன் நட்ட ரப்பர் மரங்கள்

நிமிர்ந்து விட்டன

இவன் நடும்போது குனிந்தவன்தான்

இன்னும் நிமிரவில்லை”

என்ற வரிகளை எழுதிய மலேசிய எழுத்தாளர் கோ.புண்ணிவான் அவர்கள் நூலாசிரியர் சை.பீர்முகம்மது பற்றிய அறிமுகத்தை இங்கு வந்திருப்பவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு தேடலோடுதான் வந்திருக்கிறோம் என ஆரம்பித்து “மேலே ஒரு பெயர்” என்ற அப்துல் ரகுமானின் கவிதையில் நெகிழ்ந்து சை.பீர்முகம்மது எழுதிய “மண்ணும் மனிதர்களும்” மிகவும் பிடித்ததாக இருந்தது என்று சொல்லி மூன்று தொகுதிகளாக வெளிவந்த “வேரும் வாழ்வும்” என்ற மலேசிய சிறுகதை தொகுப்பிற்கு எடுத்துகொண்ட முயற்சிகள் அதற்கு மேற்கொண்ட பயணங்கள் இருபத்தைந்து ஆண்டுகள் பெரிதாக ஏதுவும் எழுதாமல் ஒதுங்கியிருந்து மீண்டுவந்தபோது மாறிவிட்ட நவீன இலக்கிபோக்கிற்கு ஏற்றவாறு தன்னையும் மாற்றிக்கொண்டவர் சை.பீர் என்பதாக அமைந்தது.

நூலாசிரியரின் உரையுடன் தொடங்கிய கலந்துரையாடலில் “வெடித்த துப்பாகிகள்” எனும் சிறுகதையை பாடமாக கொண்ட சிங்கப்பூர் மெக்பர்சன் உயர்நிலைபள்ளி மாணவர்கள் பலர் ஆர்வமாக கலந்துகொண்டதுடன் கலந்துரையாடலில் கேட்ட எப்படி ஒரு சுவரஸ்யமான சிறுகதையை எழுதுவது இந்த சிறுகதைக்கு எழுத எடுத்து கொண்ட கால அளவு கதை கரு எங்கிருந்து கிடைத்தது என்பது உட்பட பார்வையாளராக வந்திருந்தவர்களும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இங்கு வந்திருக்கும் நீங்கள் எல்லாரும் எழுத்தாளராக முடியும் உங்கள் மனதோடு நீங்கள் பேசத்தொடங்கும் போது என்பதை மையப்படுத்தி எல்லோரும் விரும்பக்கூடிய பேச்சாக மலேசியாவின் தென்றல் வாரஇதழ் ஆசிரியர் வித்யாசாகரின் சிறப்புரை அமைந்தது.

நிகழ்வில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் கவிஞர்கள் புரவலர்கள் பள்ளி மாணவர்கள் இலக்கிய ஆர்வளர்கள் பத்திரிக்கை நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பாண்டித்துரை

சிங்கப்பூர்

www.pandiidurai.wordpress.com

Series Navigation

பாண்டித்துரை

பாண்டித்துரை