கருணையும் கவிதையும்

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

பாவண்ணன்


கருணையும் கவிதையும்

பாவண்ணன்

தத்துவத்துறையில் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்வாச்சாரியரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இவர் முன்வைத்த துவைதப் பார்வைக்கு மக்களிடையே பெருத்த வரவேற்பு உருவானது. சைவக் கோட்டையாக உருவெடுத்துவந்த உடுப்பி நகரம் இவரது துவைதத் தத்தவத்தின் மையமாக வெகுவிரைவில் மாறியது. அந்த நகரில் இவர் ஒரு கண்ணன் கோயிலை நிறுவினார். துவாரகையிலிருந்து வந்துகொண்டிருந்த கப்பலொன்றிலிருந்து மால்பே அருகில் அவருக்கு ஒரு கண்ணன் உருவச்சிலை கிடைத்ததாகவும், அதையே உடுப்பிக்குக் கொண்டுவந்து நிறுவி ஆலயமொன்றை எழுப்பினார் என்றும் சொல்வதுண்டு. மத்வ இயக்கத்தை அவரையடுத்துத் தோன்றிய சீடர்கள் கர்நாடகம் முழுதும் பரப்பினார்கள். கர்நாடகத்துக்கும் மகாராஷ்டிரத்துக்கும் இடையிலுள்ள பண்டரிப்பூர் வரைக்கும் இந்த இயக்கம் விரிவடைந்து வளர்ச்சியுற்றது. அங்கு வாழ்ந்த ஜடதீர்த்தர் என்பவர் அந்த வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார்.

பண்டரிபுரத்தில் உள்ள கடவுளை விட்டலர் என்று அழைக்கிறார்கள். விஜயநகரப் பேரரசில் மன்னர்களாக ஆட்சி புரிந்த பிரபு தேவராயர், கிருஷ்ண தேவராயர் ஆகியோரின் காலத்தில் விட்டலருடைய சிறப்பு மென்மேலும் ஓங்கியது. விஜயநகர மன்னர்கள் ஹம்பியிலேயே விட்டலருக்காக ஒரு கோயிலை நிறுவும் அளவுக்கு அந்தப் பேரும் புகழும் நீடித்தது. எங்கெங்கும் விட்டலரைத் தொழுதேத்திப் பாடும் இசைவாணர்கள் தோன்றினார்கள். அவர்கள் ஹரிதாசர்கள் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள். விட்டலராகிய விஷ்ணுவின் அடியார்கள் தாசர்கள். பல இசைவாணர்கள் தம் பெயரின் இறுதியில் பின்னொட்டாக விட்டலன் என்னும் பெயரையும் சேர்த்துக்கொண்டார்கள். பண்டரிபுரம் மிகப்பெரிய புண்ணியத்தலமாக வளர்ச்சியுற்றது. வடக்கில் உள்ள காசி நகருக்கு இணையாக மக்கள் நடுவே பண்டரிபுரத்தின் பேரும் புகழும் வளர்ச்சியுற்றது. ஹரிதாச இசைவாணர்களில் மிக முக்கியமான இடத்தை வகிப்பவர் புரந்தரதாசர்.
புரந்தரதாசர் வாழ்ந்த காலம் 1500- 1550 க்கு இடைப்பட்டதாகும். அவருடைய இளமை வாழ்வில் பக்திக்கே இடமில்லாமல் இருந்தது. அவர் மிகப்பெரிய செல்வச்செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தந்தையின் தொழிலாகிய ஆபரண விற்பனைத் தொழிலிலேயே அவரும் ஈடுபட்டு, பொருள் சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அவசர காலத்தில் அரசர்களுக்கும் பிரபுக்களுக்கும் பெருந்தொகைகளை கடனாக வழங்கும் வழக்கமும் உண்டு. அவர் பிறந்த ஊர் பற்றிய தகவல்களில் நிறைய முரண்கள் உண்டு. அவர் தம் பாடல்களில் பயன்படுத்தும் பேச்சுமொழிச் சொற்களை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு நிகழ்த்திய ஆய்வாளர்கள் தீர்த்தஹள்ளிக்கு அருகே உள்ள புரந்தர என்னும் இடமே புரந்தரதாசரின் பிறந்த ஊர் என்று குறிப்பிடுகிறார்கள். மேற்கில் உடுப்பிக்கும் வடகிழக்கில் பண்டரிபுரத்துக்கும் இடைப்பட்ட இந்த இடத்தில் பாண்டுரங்க பக்தி பரவியிருந்தது. நகைத் தொழிலிலும் வட்டித் தொழிலிலும் அவருக்கிருந்த அளவுகடந்த ஈடுபாடு அவரை பணத்தில் நாட்டமுடையவராகவும் பேராசைக்காரராகவும் மாற்றிவிட்டது. சமயப்பற்றும் இசைஞானமும் இருந்தபோதிலும் அதற்கு இணையான பணநாட்டமும் அவரிடம் இருந்தது. தந்தையின் மறைவுக்குப் பிறகு அவரே தொழிலை முன்னெடுத்து நடத்தத் தொடங்கினார். அவர் பலமுறை விஜயநகரத்தின் தலைநகராகிய ஹம்பிக்கு வைரங்களையும் நவரத்தினங்களையும் கொண்டுவந்து விற்று வந்தார். அங்கு வாழ்ந்து வந்தவர்கள் அவரை நவகோடி நாராயணன் என்று பெயரிட்டு அழைத்தார்கள். சீனிவாச நாயக் என்னும் சொந்தப் பெயர் மறைந்துபோகும் அளவுக்கு இந்தப் பட்டப்பெயர் நிலைபெற்றுவிட்டது. அவருடைய மனைவியின் பெயர் ராதாபாய். தன் கணவன் கஞ்சத்தனத்துக்கு ஒரு வடிவமாக விளங்குவதையும் நாளுக்கு நாள் மனிதத்தன்மையே அற்றுப்போகும் விதத்தில் நடந்துகொள்வதையும் கண்டு அவர் நித்தமும் மனம் கலங்கியபடி வாழ்ந்தார். கல்நெஞ்சக்காரன் என்று மக்கள் அவரைப்பற்றிப் பேசுவதைக் கேட்டு ஆழ்ந்த துயரத்தில் மூழ்கினார்.

பணமே முக்கியம் என்று ஒவ்வொரு நொடியையும் கழித்து வந்தவரின் வாழ்க்கையை பக்திமார்க்கத்தை நோக்கித் திருப்பும் வகையில் ஒரு சம்பவம் நடந்ததாகச் சொல்வதுண்டு. ஒருமுறை ஒரு முதிய அந்தணர் தன் மகனுக்கு பூணூல் அணிவிக்கும் சடங்கை நடத்தத் தேவையான பண உதவியைக் கேட்டு வந்தார். வியாபாரிக்கு பணஉதவி செய்யும் எண்ணம் சிறிதும் இல்லை. எதையும் கொடுப்பதற்கில்லை என்று மறுத்துவிட்டார். ஆனாலும் அவருடைய கருத்தைப் புரிந்துகொள்ளாத முதியவர் தினமும் வந்து கேட்கத் தொடங்கினார். ஏறத்தாழ ஆறு மாத அலைச்சலுக்குப் பிறகு, ஒரு நாள் சலித்துப் போய் ஏதாவது கொடுப்பீர்களா, மாட்டீர்களா என்று கேட்டார். கடையின் சுவரோரமாக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு சாக்குப்பையைச் சுட்டிக் காட்டி அதிலிருந்து ஒன்றிரண்டு நாணயங்களை எடுத்துச் செல்லுமாறு சொன்னார் வியாபாரி. செல்லாத நாணயங்களும் தேய்ந்துபோன நாணயங்களும் நிரப்பிவைக்கபபட்ட பை அது. அதிலிருந்து ஒரே ஒரு நாணயத்தைமட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார் முதியவர். நேராக வியாபாரியின் வீட்டுக்குச் சென்று அவருடைய மனைவியைச் சந்தித்து தன் கதையையெல்லாம் சொல்லி தன்னுடைய தேவையையும் சொன்னார். அவர் விவரித்ததையெல்லாம் கேட்டு ராதாபாயின் மனம் இரங்கியது. அவர் அணிந்திருந்த மூக்குத்தியை தானமாகத் தந்தால் தம் தேவைக்குப் போதுமானதாக இருக்கும் என்று சொன்னார் பெரியவர். கொஞ்சம்கூட யோசிக்காமல் ராதாபாய் உடனே அதைக் கழற்றி பெரியவரிடம் கொடுத்தனுப்பினார். அந்த மூக்குத்தியை வியாபாரியின் கடைக்கே எடுத்துச் சென்ற முதியவர் நகையை வைத்துக்கொண்டு பணம் தரும்படி கேட்டார். அந்த மூக்குத்தியைப் பார்த்ததுமே அது தன் மனைவியின் நகையாக இருக்கக்கூடுமோ என்று சந்தேகப்பட்டார் வியாபாரி. முதியவரை சிறிதுநேரம் கழித்து வரும்படி சொல்லிவிட்டு கடையைப் பூட்டிக்கொண்டு அவசரமாக வீட்டுக்குச் சென்றார். எதுவுமே நடவாததுபோல மனைவியைப் பார்த்து மூக்குத்தியைக் கொண்டுவரும்படி சொன்னார். கணவனிடம் உண்மையைச் சொல்ல அஞ்சிய அவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ள நஞ்சுவிதைகளைப் பறித்து அரைக்கத் தொடங்கினார். அரைப்பதற்கு பாத்திரத்திலிருந்து தண்ணீர் எடுத்தபோது, அதற்குள் மூக்குத்தி சுடர்விட்டு பிரகாசிப்பதைக் கண்டார். உடனே கடவுளுக்கு நன்றியையும் வணக்கத்தையும் செலுத்திவிட்டு வெளியே ஓடோடி வந்து அந்த மூக்குத்தியைக் கணவனிடம் கொடுத்தார். அதைக் கண்ட பிறகு மனம் குழம்பிய வியாபாரி மீண்டும் கடைக்குச் சென்றார். பூட்டிவைத்த இரும்புப்பெட்டியைத் திறந்தார். உள்ளே வைத்திருந்த நகை காணவில்லை. வியாபாரியின் மனநிலையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. வீட்டுக்குத் திரும்பி நடந்ததையெல்லாம் மனைவியடம் சொல்லிப் பகிர்ந்துகொண்டார். அவர் தன் வாழ்வில் இழந்ததையும் இனி செய்யவேண்டிய காரியங்களையும் சுட்டிக் காட்டும் விதமாக கடவுள் நிகழ்த்திய செயலே இது என்று ஆழமாக நம்பத் தொடங்கினார். அந்த முதியவரைத் தேடி ஓடினார். விட்டலரின் கோயில் பக்கமாகச் சென்றதாக யாரோ பார்த்தவர்கள் சொன்னார்கள். மறுகணமே தன் வீடு, சொத்து எல்லாவற்றையும் விட்டலரின் பெயரால் அறச் செயல்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் வாரி வழங்கிவிட்டு தானும் இனிமேல் வறியவனாக வாழ்வது என்ற உறுதியை மேற்கொண்டு வீட்டைத் துறந்து வெளியேறினார். அன்று முதல் அன்றாடப் பொழுதைக் கழிப்பதற்காக பிறரிடம் கையேந்தி கிடைத்ததை உண்டுவிட்டு இறைவனின் புகழைப் பாடித் திரிய ஆரம்பித்தார். சீனிவாச நாயக் என்ற வியாபாரி அன்று முதல் புரந்தரதாசராக மாறினார். நடந்தவையெல்லாம் நல்லதாகவே நடந்தது, நம் ஸ்ரீரிதரனுக்குச் சேவை செய்யும் நல்வழி அமைந்தது என்பது அவருடைய பிரபலமான வரி.

புரந்தரதாசரின் பாடல்கள் நேரிடைத்தன்மை வாய்ந்தவை. எளிமையான காட்சிகளைக் காட்டுபவை. பேச்சுமொழியில் இடம்பெறும் சொற்களையே பயன்படுத்திக் கொள்பவை. தௌiவாக புரியக்கூடியவை. பக்தியை ஆழ்ந்த நட்புக்கு இணையாக சுட்டிக்காட்டுபவை. ஆழ்ந்த நட்பில்லாமல் ஆண்டவனுடைய பெயரைத் திரும்பத்திரும்ப சொல்வதில் ஒரு துளியும் பயனில்லை என்பது அவருடைய திடமான நம்பிக்கை. அதை வலியுறுத்தி அவர் முன்வைக்கும் பாடல்கள் சுவாரஸ்யமானவை. சட்டையும் அணிலகன்களும் அணிவதால்மட்டுமே ஒரு குரங்கு குழந்தையாகிவிடுவதில்லை. நெய்யும் சர்க்கரையும் தின்பதாலேயே பன்றி யானையாகிவிடமுடியாது. விலையுயர்ந்த அணிகலன்களை அணிவதால்மட்டுமே சேடி அரசியாவதில்லை. நாய் வாலை எவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்தாலும் நிமிர்த்த முடியாது என ஏராளமான உவமைகளை அடுக்கிக்கொண்டே போகிறார் அவர். பழம் விற்பனை செய்பவர்களின் பாடல், கற்கண்டு விற்பனை செய்பவர்களின் பாடல் என அவர் எழுதிய வணிகர்களின் பாடல்கள் ஏராளம். அவற்றில் பழம், கற்கண்டு என இடம்பெறுபவையெல்லாம் கண்ணனின் பெயரே. மனிதகுலம் உண்ணத்தக்க அருமையான பழமாக கண்ணனின் பெயரை உருவகப்படுத்துகிறார். சுங்கவரி செலுத்தாமலேயே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டுசெல்லக்கூடிய கற்கண்டு மூட்டையாக கண்ணனின் உருவகம் இடம்பெறுகிறது.

ஒரே நாளில் தன் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்ட புரந்தரதாசர் இருவிதங்களில் நெருக்கடிகளுக்கு ஆளாக நேர்ந்தது. ஒருபுறம் அவரைச் சுற்றியிருந்த உலகம் தந்த நெருக்கடிகள். இன்னொரு புறம் அவர் மனம் வழங்கிய நெருக்கடிகள். ஒரு மாபெரும் செல்வந்தராக, ஆணவமும் அறிவும் கூர்மையும் மிகுந்தவராக பெரும்பாலும் பிறரை மதிக்காதவராக நடந்துகொண்டதை அவர் வாழ்ந்த நகரமே ஒரு காலத்தில் கண்டிருக்கிறது. எளிய வாழ்க்கைக்கேற்ப அவர் தன் கால்களில் சலங்கையும் ஒரே கையில் தாளமும் மற்றொரு கையில் தம்புராவும் தாசர்களுக்குரிய தலைப்பாகை பின்புறம் அசைய வெற்றுடம்போடு உடல்நிறைய நாமம் பூசி, மனைவியும் மக்களும் பின்தொடர, வீதியில் அவர் பாடிக்கொண்டு சென்ற கோலம் அந்த நகர மக்களுக்கு பெரிய வேடிக்கையாக அமைந்துவிட்டது. அவர்களுடைய கோயில் பேர்களையும் கிண்டல்களையும் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பழைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் சிறுகச்சிறுக கட்டுப்படுத்தி மாற்றி, முழு அளவில் மன அமைப்பை மாற்ற அல்லும்பகலும் அவர் பெரும்பாடு படவேண்டியிருந்தது. அவர் நெஞ்சில் நிரம்பத் தொடங்கிய கருணையும் நம்பிக்கையும் ஒளிவிளக்குகளாக நின்று அவருக்கு வழிகாட்டின. தம் அனுபவங்களையே அவர் பாடல்களாக உருமாற்றகிறார். பாடல்களையே ஒரு விதத்தில் அவர் தம் சங்கடங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் வடிகாலாக அமைத்துக்கொண்டார். சில வேளைகளில் தம்மைப் பார்த்து அவர் சிரிக்கிறார். சில நேரங்களில் தம்முடைய நெஞ்சைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறார். சில சமயங்களில் தம் கௌரவத்தை விட்டுவிட்டு முன்பின் முகம் தெரியாதவர்களிடம் பிச்சை கேட்டு அலைய நேர்கிறதே என வருந்துகிறார். “போய் வா ஐயா” என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்கும்போது ஒரு கசப்பான சிரிப்போடு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுகிறார் அவர். தமக்கு உதவி செய்யக்கூடும் என்ற நிலையில் உள்ளவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நன்றாக இனிமையாகப் பேசவேண்டி இருக்கிறது. உதவியே கிடைக்காத மோசமான நாளாக இருந்தால், அவர் மனம் சங்கடத்தில் துவண்டுபோகிறது. பல்லியைத் தின்ற எலியைப்போல.
எதனாலும் தளர்ந்துவிடாத மனத்திடத்துடன் தொடர்ந்து சென்றார் புரந்தரதாசர். தம்மை பொருத்தமான ஓர் அடியவனாக ஆக்கிக்கொள்ள எல்லாவித முயற்சிகளையும் ஆழ்ந்த ஈடுபாட்டோடு மேற்கொண்டார். மனத்தை செம்மைப்படுத்தி கடவுள் பக்தியில் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவதில் முனைப்போடு செயல்பட்டார். படிப்படியாக பனிப்படலம் கரைந்தது. ஐயங்கள் குறையத் தொடங்கின. நல்லவர்களுடைய தொண்டர்களுடனான சேர்க்கை அவருடைய பாதையை எளிதாக்கியது. பழியும் கேலியும் பிறருடைய அவமதிப்பும் புறக்கணிப்பும் அவரைப் பொறுத்த வரையில் தம்முடைய முக்கியத்துவத்தை இழந்தன. அவர் தம்மிடமிருந்த மாசுகளை எல்லாம் அப்புறப்படுத்தி ஒழித்துவிட்டார். கடவுளைப்பற்றிய நினைவுகளின் வழியாக மனத்தில் குவிந்திருந்த பிற சிந்தனைகளை அழித்தார். அவரை சோதித்து அவமதித்து அலைக்கழித்த மக்களே, இன்னொரு கோணத்தில் ஆசையையும் கோபத்தையும் துறக்கத் துணையாக இருந்தார்கள். அவரைப் பெரிதும் துன்புறுத்தியதன் மூலம் உண்மையை உணர்ந்துகொள்வதன் வழியை அவர்களே காட்டிவிட்டார்கள்.

தன்னைப்பற்றியோ, மனைவிமக்களைப்பற்றியோ, வாழ்வில் வெற்றி தோல்விகளைப்பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் ஆண்டவனின் கருணையை வேண்டி அலைந்தவர் புரந்தரதாசர். இந்தப் பற்றற்ற நிலையும் உலகப்பொருட்களில் ஆர்வமின்மையும் சேர்ந்து இந்த உலகையும் உலகப்பொருள்களையும் மிகவிரிந்த அளவில் காண்பதற்குத் துணை புரிந்தன. மனத்தில் மகிழ்ச்சியோடும், முகத்தில் புன்சிரிப்போடும் அனைவருக்கும் நம்பிக்கை வழங்குகிற எண்ணத்தோடும் அவர் பல இடங்களுக்கும் சென்றார். எல்லா இடங்களிலும் மக்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தார். அறிவுரைகளை வழங்கினார். ஆறுதல் அளித்தார். அவருடைய பாடல்கள் அந்தந்த நிலைகளுக்குத் தகுந்தபடி தாமாகவே வெளிப்பட்டன. ஒரு மனிதனைநோக்கியோ அல்லது வாழ்வின் அமைப்பைப்பற்றியோ கூட அவை பாடப்பட்டன. பல நாட்டுப்புறக்கதைக் கூறுகளையும் புராண நிகழ்ச்சிகளையும் தம் கருத்தை விளக்கவும் அழகுபடுத்தவும் பயன்படுத்திக்கொண்டார் புரந்தரதாசர். இதனால் நல்ல பயன் விளைந்தது. அவர் அடிப்படையில் ஒரு கவிஞராக இருந்ததால், உவமைகளும் உருவகங்களும் ஏராளமாக இடம்பெற்றன. மக்களிடையே பேச்சுவழக்கில் இருந்த பழமொழிகளையும் வசனங்களையும் பாடல்களின் இடையிடையே பயன்படுத்திக்கொண்டார். பாட்டின் கருத்துக்கு அவை போதிய அழுத்தத்தைத் தந்தன. ஒவ்வொரு படலின் எடுப்பு வரியும் அந்தப் பாடலின் மையக்கருத்தை வலியுறுத்தும்படி அமையும். தொகுப்பு வரிகள் அக்கருத்தை விரிவாக்கி விளக்கும். கோபியர்களின் பாடல்கள், யசோதையின் பாடல்கள், குழந்தைக்கண்ணனை நினைத்தால் தாசரின் மனத்திலெழும் அன்பு, ஆசை, ஏக்கம் , கவலை அமைதியின்மை ஆகியவற்றைக் கூறும் பாடல்கள், வறியவர்களையும் கவலை மிகுந்தவர்களையும் கண்டு பரிவுடன் அறிவுரைகூறும் பாடல்கள், வாழ்க்கை நீதிகளை உண்மையோடும் நம்பிக்கையோடும் எடுத்துக்கூறும் பாடல்கள் என பல வகைகளில் புரந்தரதாசரின் பாடல்கள் அமைந்தன. தேவை ஏற்படும்போது தம் நெஞ்சிலிருந்து பொங்கியெழும் வரிகளையே பாடல்களாகப் புனைந்திருக்கிறார் புரந்தரதாசர். இலக்கியக்கொள்கைக்கோ. செம்மைக்கோ, சிறப்புக்கோ உத்திக்கோ பயிற்சிக்கோ அங்கே இடமில்லை. அது ஒரு தனிப்பட்ட வாய்மொழி. எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெளிப்பட்ட ஒன்று. இசையும் அவ்வாறே. சாகித்யமும் பக்தியும் இசையைவிட முக்கியமானவை என்பது அவர் கருத்து. புரந்தரதாசர் கவிஞராகவும் இசைக்கலைஞராகவும் இருந்ததால் அவையிரண்டும் மிக நன்றாக இணைந்துகொண்டன. சொல்லும் பொருளும் முதலிடம் பெறுவன. தியாகராஜருடைய போக்குக்கு இது மாறுபட்டதாகும். ராமபக்தியும் ஆன்மாவின் முக்தியும் அவருடைய பாடல்களில் இடம்பெற்றன.

தனிப்பட்ட வருத்தத்தைக்கூட ஒரு பொதுவருத்தமாக மாற்றுவதில் புரந்தரதாசரின் பாடல்கள் முன்னணியில் இருக்கின்றன. கிளி கூட்டில் இல்லை என்று தொடங்கும் பாடலை இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். தாசர் இளமகன் ஒருவனை இழந்தார். அந்த வருத்தம் அவர் நெஞ்சில் தேங்கியிருந்தது அதை வெளிப்படுத்த பாடல் சிறந்த ஊடகமாக விளங்கியது. கூடு வெறுமையாக இருக்கிறது. பெண்ணே, நீ சொல்வதைக் கேட்டு ஒரு சிறிய கிளிக்குஞ்சை வளர்க்கத் தொடங்கினேன். இப்போதுதான் அதற்குச் சிறகுகள் முளைத்தன. நான் இல்லாதபோது ஒரு பூனை வந்து அதைக் கவ்விக்கொண்டு போய்விட்டது. நான் அந்தக் கிளியின் கழுத்திலே ஒரு முத்துமாலையைப் போட்டிருந்தேன். அந்தக் கிளி பச்சையாக எவ்வளவு அழகாக அறிவுடையதாக இருந்தது தெரியுமா? அது இப்போது மடிந்து மறைந்துவிட்டது. எவ்வளவு அருமையான கிளி அது. என் உள்ளங்கையிலும் மணிக்கட்டிலும் உட்காரும். பேசும். அது இப்போது இல்லை. அதை இனிமேல் இந்தக் கண்களால் பார்க்கமுடியாது. ஹரியே, கிளிக்கூண்டு இப்போது வெறுமையாக இருக்கிறது என்று நீள்கிறது இந்தப் பாடல். கிளி என்னும் படிமம் ஒரே சமயத்தில் இறந்துபோன சிறுவனாகவும் இழந்துபோன பக்தியாகவும் துலங்குவதை உணரலாம்.
எளிய, தூய நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்தவர் புரந்தரதாசர். தான் நிறைவெய்தியும் பிறருக்கு ஒளிகாட்டியும் வழிகாட்டித்துணையாகவும் அமைந்த ஒரு வாழ்க்கை. மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று அத்தகையவர்கள் அஞ்சுவதில்லை. பிறருடைய உதவிக்காகவும் காத்திருப்பதில்லை. ஒரே குறிக்கோள் அவரைச் செலுத்துகிறது. எது நேர்ந்தாலும் அடைய வேண்டிய குறிக்கோளிலேயே அவர் கண்ணும் மனமும் குவிந்திருக்கின்றன. அதை அடையும் நெறிகளையே பாடல்களாகப் புனைந்தார் அவர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் புனைந்தார் என்று கூறப்பட்டாலும் தற்சமயம் ஆயிரத்துக்கும் குறைவான பாடல்களே இப்போது காணக்கிடைக்கின்றன. ஹரிதாச இலக்கியப் பிரிவுக்கு தந்தையாக அமைந்த புரந்தரதாசரின் பாடல்கள் அளவிலும் தன்மையிலும் சிறந்து, உயர்விலும் வளத்திலும் மிகுந்து அவருடைய தனித்தன்மையையும் பெருமையையும் எடுத்தியம்பும்வண்ணம் விளங்குகின்றன.

**

அவருடைய சில பாடல்கள்.

நீ எதற்கோ உன் தயவெதற்கோ

நீ எதற்கோ உன் தயவெதற்கோ- உன்
பெயரின் வலிமை ஒன்றிருந்தால் போதுமோ

யானை முதலையிடம் அகப்பட்டு வேண்டும்போது
ஆதிமூலமென்னும் பெயரன்றோ காத்தது

பிரகலாதனை அவன் தந்தை துன்பப்படுத்தியபோது
நர?¤ரியென்னும் பெயரன்றோ காத்தது

அவையில் பெண்ணொருத்தியின் புடவையை இழுத்தபோது
கிருஷ்ணாகிருஷ்ணா என்னும் பெயரன்றோ காத்தது

எமனின் தூதர்கள் அஜமிளனை இழுத்தபோது
நாராயணனென்னும் பெயரன்றோ காத்தது

அந்த மரம் இந்த மரம் என்று தியானித்தபோது
ராமராம என்னும் பெயரன்றோ காத்தது

சின்னஞ்சிறுவன் துருவன் காட்டுக்குப் போனபோது
வாசுதேவனென்னும் பெயரன்றோ காத்தது

உன் பெயருக்கு இணையான ஒன்றை உலகத்தில் பார்த்ததில்லை
உன் பெருமையே பெருமை லட்சுமி புரந்தர விட்டல

*

கூடும் அகப்படவில்லை,
கூடிருந்த இடமும் தெரியவில்லை

ஜோடிப் பெண்கள் ஓடிப் போனார்கள்
சுவர் சரிந்து வெட்டவெளியானதய்யா

அகம்பாவத்தில் கவனிக்கவில்லை ஐயா
பித்தனானேனய்யா
நெருப்பில் வெல்லஅச்சு விழுந்து கருக
பித்தம் பிடித்ததுபோல ஆகிவிட்டதய்யா

முதுமை வந்ததய்யா,
பாயசம் நெய்யை உண்ணவில்லையய்யா
நெய் நிரம்பிய சட்டி குப்பைமேட்டில்
தொப்பென விழுந்ததைப்போல ஆகிவிட்டதய்யா

இப்போதைய வாய்ப்பும் பறினோதய்யா
எதிர்காலத்தில் அனுபவிப்பது எதையோ தெரியவில்லை
பாம்பின்மீது படுத்திருக்கும் புரந்தரவிட்டலனின்
நினைவை மறந்து மனமே வறண்டுபோனதய்யா

*

யாருக்கு யாருண்டு இரவல் வாழ்க்கையிலே
நீர்க்குமிழி என்றென்றும் நிலையல்ல ஹரியே

வாயுலர்ந்து போனதென்று கிணற்றடிக்குச் சென்றேன்
கிணற்றின் நீரெல்லாம் வற்றி வறண்டுபோனது ஹரியே

வெயில், அனல்காற்றில் மரத்தடிக்குச் சென்றேன்
மரமே முரிந்து தலைமீது விழுந்தது ஹரியே

காட்டுக்குள் வீடுகட்டி மரக்கிளையில் தொட்டில் கட்டினேன்
தொட்டிலில் இருந்த குழந்தை மாயமாய் மறைந்தது ஹரியே

தந்தையே ஸ்ரீ புரந்தர விட்டல நாராயண
நான் சாகும் வேளையில் நீ காப்பாற்று ஹரியே

*

நடந்தவையெல்லாம் நல்லதாகவே நடந்தன- நம்
ஸ்ரீதரனின் சேவை செய்ய
நல்வழி அமைந்து செல்வம் கொழித்தது

கையிலே தண்டம் ஏந்துவதற்கு
தலை குனிந்து வெட்கப்பட்டேன்
மனைவியரின் சந்ததி ஆயிரமாயிரமாய் பெருகட்டும்
கையிலே தண்டம் ஏந்தவைத்தாளய்யா

கோபாலக் கூடையை சுமப்பதற்கு
மன்னனைப்போல செருக்கடைந்திருந்தேன்
பத்தினியரின் சந்ததி ஆயிரமாயிரமாய் பெருகட்டும்
கோபாலக் கூடையை சுமக்கவைத்தாளய்யா

துளசி மாலையை அணிந்துகொள்ள
அரசனைப்போல கூச்சப்பட்டேன்
தாமரைக்கண்ணன் ஸ்ரீபுரந்தரவிட்டலன்
துளசி மாலையை அணிவித்துவிட்டான்

*

போன பிறவியில் நான் செய்த பாவத்தால்
பூமியில் பிறந்தேனோ கிருஷ்ணா

கருணைச் செல்வத்தைக் காக்கவேண்டுமய்யா-
தாமரையை நாபியில் ஏந்திய கிருஷ்ணா

பிறந்ததிலிருந்தே சுகமென்பதை அறியேன்
கஷ்டப்படுகின்றேன் கிருஷ்ணா
கெட்ட வறுமையிலிருந்து மீட்காவிட்டால்
பழிவந்து சேர்வதெல்லாம் உனக்கே கிருஷ்ணா

பணத்தின்மேல் ஆசைவைத்து வெகுகாலமாக
அலைந்து களைத்துவிட்டேன் கிருஷ்ணா
ஆசையிலிருந்து விடுவித்து
எண்ணற்ற பாவங்களிலிருந்தும் மீட்டெடுப்பாய்
ஆயிரம் பேர்கொண்ட கிருஷ்ணா

தொட்டுப் பார்க்க அஞ்சுகிறார்கள்
என்னைக் கண்டதும் விரட்டிக் கொல்லப் பார்க்கிறார்கள் கிருஷ்ணா
தொட்டில் குழந்தை வாய்விட்டு அழுவதுபோல
நிலைகெட்டு துயரில்மூழ்கி அழுகிறேன் கிருஷ்ணா

அம்மா அப்பா இல்லை, உற்றார் உறவினர் இல்லை
இன்றெனக்கு எந்த நிலையோ கிருஷ்ணா
மந்தரமலைவாசன் ஸ்ரீபுரந்தரவிட்டலனே
நீ வந்து நிலைபெறுவாய் கிருஷ்ணா

*

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்