நகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

முனைவர் மு. பழனியப்பன்


பேருரையாளர்
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லு}ரி
புதுக்கோட்டை

நகரத்தார் மரபில் வந்த புலவர்களுள் குறிக்கத் தக்க இடம் பாடுவார் முத்தப்பச் செட்டியாருக்கு உண்டு. தமிழில் இசை பாடுதல், வசை பாடுதல் என்று இரு மரபுகள் உண்டு. அதாவது வாழ்த்திப் பாடுதல், வீழப் பாடுதல் என்ற இரு நிலைகள் உண்டு. வாழப் பாடுவது இசை பாடுதல் ஆகும். வீழப் பாடுதல் வசை பாடுதல் ஆகும். வாழவும், வீழவும் பாடியவர் பாடுவார் முத்தப்பச் செட்டியார். சில நேரங்களில் வீழப் பாட அவர் முயன்றபோது வீழ்ச்சியைத் தாங்க இயலாது என்பது கருதி அவரிடம் விண்ணபித்தபோது வாழவும் பாடிய சொல் வன்மை மிக்க கவிஞர் அவர். அவரின் மொழிகள் ஒவ்வொன்றும் நிறைமொழி மாந்தர் தம் நிலைமொழிகள் போன்றதாகும். நீங்காது இரு என்று திருவை இருக்கச் சொன்ன அவரின் மொழியால் இன்றைக்கும் நகரத்தார் வீடுகளில் செல்வம் நிறைந்திருக்கிறது. என்றும் நிறைந்திருக்கும்.

அவரின் ஐந்துப் பாடல்கள் பஞ்சாட்சர வர்க்க பூசணம் என்ற பெயரில் புதுவயல் ரா. ம. சு. ராமசாமி செட்டியார் அவர்களின் உதவியில் 1925 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. இப்பாடல்கள் நகரத்தார் வீடுகளில் செல்வம் நிறைந்திருக்க எண்ணிப் பாடப்பெற்றதாகும். சிவ மந்திரமாகிய நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பாடல் என்ற நிலையில் பாடப்பெற்ற சிறப்பினை உடையது இவ்வர்க்க பூசணம். இதனை வறியவர்கள் பாடினால் செல்வம் பெறுவர். செல்வர்கள் பாடினால் மேலும் செல்வம் பெறுவர். இத்தகைய சிறப்புடைய இப்பாடல்கள் அனைத்துச் சாதியினருக்கும் உரியது என்ற போதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒவ்வொரு பாடலிலும் நகரத்தார் பற்றிய குறிப்பு இடம் பெற்றிருப்பது எண்ணத் தக்கது. எனவே குறிப்பாக நகரத்தார் இன மக்கள் தங்களுக்கான செல்வ மந்திரமாக இதனைக் கொள்ளலாம்.

முதல் பாடல் ந- என்ற எழுத்தில் தொடங்குகின்றது. நன்றே பெருக என அது தொடங்குகின்றது. எனவே இதைப் படிப்பவருக்கு நலமே நிறையும். குபேரர் நகர் வணிகர் என்று நகரத்தார் இப்பாடலில் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களுக்கு இரு நிதியம் அதாவது நிலத்தில் இருந்து கிடைக்கும் பொருள்கள், கடலில் இருந்து கிடைக்கும் செல்வங்கள் இரண்டும் எக்காலத்தும் நின்றே நிலவ வேண்டும் என்று இப்பாடல் வாழ்த்துகிறது. செல்வத்துடன் அறம் வளரவும் இப்பாடல் வழிசெய்து நேமம் ஜெயங்கொண்ட சோழீசரை வேண்டுகிறது. எனவே முதல் பாடலில் கடல்வணிகமும், நிலத்தில் செய்யப்படும் வணிகமும் மேம்பட வாழ்த்துத் தெரிவிக்கப் பெற்றுள்ளது என்பது தெளிவு.

இரண்டாம் பாடல் ம- என்றும் எழுத்தில் தொடங்கிட வேண்டி மன்னும் பெருமை பெருகி என்ற வாழ்த்தோடு தொடங்குகிறது. முதல் பாடல் நன்று பெருகிட வாழ்த்துச் சொல்ல இரண்டாம் பாடல் பெருமை பெருகிட வாழ்த்து தெரிவிக்கின்றது. இதிலும் குபேரர் நகர் வணிகர் என்ற தொடர் நகரத்தாரைக் குறிக்கும் வண்ணம் வந்துள்ளது. வறியவர்க்கு ஈந்திடும் அறம் பெருக வேண்டும் என்று இப்பாடல் நகரத்தார்க்கு வேண்டுகோளை வைக்கின்றது. பொன், பொருள், போகம், புவி (நிலம் வாங்குதற்குரிய பாடல்) பொருந்திட நேமம் ஆண்டவனை வேண்டுகின்றது. எனவே மேற்படி வசதிகளைப் பெற உகந்த பாடல் இதுவேயாகும்.

மு்ன்றாம் பாடல் சிவன் ஆலயமும் திருமால் பணியும் – என்று சி- என்ற எழுத்தில் தொடங்குகின்றது. சிவன் ஆயலத்தையும், திருமால் பணியையும் சிறப்புறச் செய்திடவும் அவ்விறைவர் உறையும் கோயில்களை புதுக்கிடவும், கட்டிடவும் இப்பாடல் நகரத்தாருக்கு ஆசி வழங்குகின்றது. நல்ல தவம் இதுவெனவே அது மொழிகின்றது. சிவபெருமானிடம் வேண்டுகோள் வைக்கும் இப்பாடல்களில் அவன் ஆலயம் அமைக்கவும், திருமால் ஆலயம் நிர்மானிக்கவும் அவனருளை வேண்டியிருப்பது குறிக்கத்தக்கது.

நான்காம் பாடல் வ -என்னும் எழுத்தில் தொடங்க வேண்டி வந்தார்க்கு உதவும் வணிகர் என்று நகரத்தார் இயல்பு எடுத்துரைக்கப் பெறுகிறது. குபேர வள்ளலுக்கும், மன்னர் போன்றோருக்கும், பிறருக்கும் நகரத்தார் குலத்தவரே செல்வச் செழிப்பில் பெரியவராய் என்றைக்கும் இருக்க வேண்டும் என்ற கட்டளையை இப்பாடல் ஜெயங் கொண்ட சோழீசரிடம் வைக்கின்றது. மேலும் இளையாத்தங்குடியார் சிறப்புறவும் வேண்டப்படுகிறது. இளையாத்தங்குடியே நகரத்தார்க்கு ஆதி கோயில் என்பது அனைவராலும் ஏற்கத்தக்கது. அக்கோயில் சார்புடைத்தாய் நகரத்தார் அனைவரையும் பாடுவர் முத்தப்பர் வாழ்த்தியிருப்பது அனைத்துப் பிரிவு நகரத்தாருக்கும் பொதுவான ஒன்றேயாகும்.

ஐந்தாம் பாடல் யவனம் கலிங்கம் என்று நாடுகளின் பெயர்களைப் பட்டியல் இடுகிறது. இதன் வழி ய- என்ற எழுத்தும் இப்பாடலின் முதல் நிலையில் அமைந்துவிடுகிறது. இவ்வாறு நமசிவாய என்ற மந்திரம் நிறைவு பெறுகிறது. யவனம், கலிங்கம், சிங்களம் போன்ற பல நாடுகளிலும் உலகு தழுவியும் வாழும் நகரத்தார் பெருமக்கள் நலத்தோடும், வளத்தோடும் வணிகம் புரியவேண்டும் என்று இப்பாடல் வாழ்த்தினைத் தருகின்றது. எனவே இப்பாடல் அயல் நாடுகளில் பிள்ளைகளை வாழ அனுப்பியிருக்கும் நகரத்தார் அன்பர்கள் படிக்க வேண்டிய பாடலாகும். தவமும் தருமமும் நகரத்தார் மனைகளில் தங்கிடவும் ஆன வரத்தை நல்கவும் இப்பாடல் நேமம் ஈசனிடம் வேண்டுகோள் வைக்கின்றது.

இவ்வாறு ஐந்து பாடல்களும் நகரத்தார் இனம் செழிப்படைய -செல்வச் செழிப்பை, வளத்தை மையமாக வைத்துச் சக்தி மிக்க எழுத்துக்களால் மந்திரம் போலவே பாடப்பெற்றுள்ளன. தீராத நம்பிக்கையோடு இதை நாளும் பாடும் நகரத்தார்க்கு வீடு வளம் பெறும். குடும்பம் செல்வம் பெறும். அறம் விளங்கும் என்பதில் ஐயமில்லை.

இவ்வைந்து பாடல்களும் மனப்பாடம் செய்வதற்கு ஏற்றவகையில் பின்வருமாறு தரப்பெறுகிறது.

கடாட்சகவி முத்தப்ப செட்டியார் அவர்கள்
தம்மரபினர் முன்னேறும் பொருட்டுப் பாடியருளிய
பஞ்சாட்சர வர்க்க பூசணம்

1. நன்றே பெருக நவிலும் குபேரர் நகர் வணிகர்
என்றே உலகம் புகழ அவர்க்கு ஈண்டு இருநிதியம்
நின்றே நிலவ அறமும் கனமும் நெடிது பெறத்
தொன்றேசோழீசர் செயங்கொண்டார் பாதம்துதிக்குதுமே.

2மன்னும் பெருமை பெருகிக் குபேரர் நகர் வணிகர்
என்னும் மகிமை உறவும், வறியவர்க்கு ஈந்திடவும்
பொன்னும் பொருளும் புவியும் போகம் பொருந்திடவும்
துன்னும் சோழீசர் செயங்கொண்டார் பாதம் துதிக்குதுமே

3. சிவன் ஆலயமும் திருமால் பணியும் சிறப்புறத்தான்
நவமாப் புதிக்கியும் ஆக்கியும் மேலோர் நவிலும்நல்ல
தவமாம் இதெனத் தரணியில் ஓங்கவும் தாங்கும் அகத்து
உவமா சோழீசர் செயங்கொண்டார் பாதம் துதிக்குதுமே

4.வந்தோர்க்குஉதவும் வணிகர் குபேரனாம் வள்ளலுக்கும்
பிந்தார் தனத்தில்; இவரே உலகில் பெரியர்எனச்
சிந்தார் புரம் இளையாத்தங்குடியார் சிறப்புறவும்
சொந்தார் சோழீசர் செயங்கொண்டார் பாதம்துதிக்குதுமே

5. யவனம் கலிங்கம் தமிழ்சிங்களம் பல ஆண்டும்உள்ள
புவனம்எலாம் இவர் வர்த்தகம் ஓங்கவும் புண்ணியஞ்சேர்
தவமும் தருமமும் தங்க வணிகர் தாம் பெறவும்
துவச சோழீசர் செயங் கொண்டார் பாதம் துதிக்குதுமே

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்