பூமணியின் “பிறகு” : மாற்றமும் மாற்றமின்மையும்

This entry is part [part not set] of 24 in the series 20081113_Issue

பாவண்ணன்


நாவலின் தொடக்கத்தில் நாடு சுதந்திரமடைந்த தகவலும் அதற்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலின் தகவலும் பாத்திரங்களின் உரையாடல்களின் வழியாக முன்வைக்கப்படுகின்றன. அழகிரிப்பகடை தன் இரண்டுவயது மகளோடும் முதல் மனைவியோடும் துரைச்சாமிபுரத்திலிருந்து மணலு¡த்துக்குக் குடியேறிய காலகட்டம் அது. ஏறத்தாழ கால்நூற்றாண்டுக் காலம் நகர்ந்து செல்வதை வெவ்வேறு மாற்றங்களின் ஊடாக உணர்த்தி, இறுதியில் தாயைப் பறிகொடுத்துவிட்டு தனிமையில் வந்து நிற்கிற பேரப்பிள்ளை சுடலையை எடுத்து வளர்த்து பள்ளிக்குப் படிக்க அனுப்புகிற காலகட்டத்தோடு படைப்பு நிறைவெய்துகிறது. ஒவ்வொரு ஆண்டுக்குப் பிறகும் இன்னொரு ஆண்டு என்கிற கணக்கில் காலம் உருமாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அழகிரிப்பகடை உட்பட அக்குடியிலிருப்பில் வாழ்கிறவர்கள் எவருடைய வாழ்விலும் எவ்வகையான குறிப்பிடத்தக்க மாற்றமும் உயர்வும் உருவாகவில்லை. அதே வேம்படி. அதே செருப்புத்தைக்கும் தொழில். அதே மாடுமேய்ப்பு, அதே ஊருணிக்குளியல். எல்லாரும் சமமென்றும் எல்லாருக்கும் வாழ்வென்றும் உன்னதமான ஒரு நிலை உருவாகி வந்துவிடும் எனப் பல்வேறு மட்டங்களில் படரத் தொடங்கிய நல்வாழ்க்கைக்கனவு சுதந்திரத்துக்குப் பிறகு பொசுங்கிப் போனது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அக்கனவு முளைத்துத் தழைக்கவில்லை. இந்தக் குறைபாடு நீக்கப்பட்டு, உயர்வு தாழ்வுகள் அகற்றப்பட்டு, அன்பும் நட்பும் பரிவும் உள்ள மனிதர்களாக அனைவரும் இணைந்து காலம்காலமாக உறக்கம் கொண்டிருக்கும் கனவின் விதை, முளைவிட்டு தளிர்விடுவது எதன் பிறகு என்று ஏக்கமும் எதிர்பார்ப்புமாக ஒரு கேள்வி திரண்டெழுந்து நிற்கிறது. இக்கேள்வியின் தோற்றத்தை இந்தப் படைப்பின் வழியாக பூமணி சாத்தியப்படுத்தியிருக்கிறார். இதுவே இப்படைப்பின் வெற்றி. இன்று, மேலுமொரு கால்நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையிலும் இந்தக் கனவு முளைவிடாத விதையாகவே நிலவும் இன்றைய வரலாற்றுச் சூழல் இந்தப் படைப்புக்கான அவசியத்தை இன்னும் அதிகரிக்கச் செய்கிறது.

தலித்துகளை நம் சமூகம் எப்படி நடத்தியது அல்லது எப்படி நடத்துகிறது என்பதற்கு இப்படைப்பு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. குடிப்பதற்கான தண்ணீருக்காக பொதுமக்கள் புழங்கும் கிணற்றருகே அவர்கள் செல்லமுடியாது. எங்கோ தள்ளியிருக்கும் பாழுங்கிணற்றை நாடி ஓடவேண்டியிருக்கிறது. குளிப்பதற்குக்கூட பொதுமக்கள் பயன்படுத்தும் ஊருணியில் இறங்கமுடியாது. அதற்கென்று இருக்கும் துறைவேறு. அல்லது எங்கேயாவது தண்ணீர் தேங்கியிருக்கும் குளத்தையோ அல்லது குட்டையையோதான் நாடவேண்டியிருக்கிறது. தன் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட மின்விளக்குகள்கூட வேறு குடியிருப்புகளுக்கு போய்விடுவதை எந்தப் பஞ்சாயத்தின் முன்னும் முறையிடமுடியாது. சம்பளத்துக்கான தானியப்பங்கை வாங்க நூறுதரம் நடந்தாலும் கிடைத்துவிடுவதில்லை. மேல்சாதிக்காரர் ஏறிவருகிற ஒரு வெற்று வண்டிக்காக பானைகளின் சுமையோடு தடுமாறித்தடுமாறி வருகிற வண்டிதான் பாதையிலிருந்து ஒதுங்கி வழிவிட வேண்டியிருக்கிறது. நிலைகுலைந்து உடைந்துபோகும் சரக்குகளைப்பற்றி யாருக்கும் கவலையில்லை. இவையனைத்தும் படைப்பில் அங்கங்கே சித்தரிக்கப்பட்டிருக்கும் சிற்சில காட்சிகள். சுதந்திரத்துக்குப் பிறகு ஏறத்தாழ அறுபதாண்டுகளை நெருங்கும் நேரத்தில்கூட இச்சமூகத்தில் பெரும்மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. மேற்சொன்ன சம்பவங்களுக்கு இணையானதும் அல்லது இவற்றைவிட மோசமானதுமான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றபடி இருக்கும் செய்திகளை நாம் தினந்தோறும் படிக்கவும் பார்க்கவும் செய்கிறோம். பள்ளிக்குச் செல்லும் ஒரு தலித் சிறுமி சைக்கிளில், ஊரைக் கடந்து செல்லமுடியாத நிலையில், மேல்சாதிக்காரர்களின் வசிப்பிடத்தின் வழியாக நீளும் ஒரே பாதை தடுக்கப்படுகிறது. இறந்த உடல்களை சுடுகாட்டுக்குச் சுமந்துசெல்லும் இறுதி ஊர்வலங்கள் மேல்சாதிக் காரர்கள் வயலையொட்டி நீளும் பாதையில் இறங்கி அடிவைப்பது தடுக்கப்படுகிறது. யாராவது நிரப்பித் தரமாட்டார்களா என்று வெற்றுத் தண்ணீர்க் குடங்களோடு பொதுக்குளக்கரைகளில் இன்னும் தலித் பெண்கள் தவிப்போடு காத்துக்கிடக்கிறார்கள். ஒரு தலித் அதிகாரி பொத்தானின் விசையை அழுத்தி ஒரு தலைவரின் சிலையைத் திறந்தார் என்பதற்காகவே அந்தச் சிலை குளிப்பாட்டப்பட்டு தீட்டு கழிக்கப்படுகிறது. எதார்த்தத்தில் இன்னும் இப்படித் தொடர்கிற ஏராளமான கொடுமைகள் இப்படைப்பு முன்வைத்த பார்வையை இன்னும் உயிருள்ளதாக்குகின்றன.

எதன்பிறகும் நேர்ப்படுத்த முடியாத இந்தக் கோணல்கள் மானுடகுலத்தைத் தலைகுனியவைப்பவை. தொடக்கக்கால சரித்திரக் கட்டத்திலும் வருணாசிரமத் தத்துவத்தில் புதையுண்டுகிடந்த ஆட்சியாளர்களின் காலகட்டத்திலும் இக்கோணல்களின் வெவ்வேறு வடிவங்கள் கோலோச்சிக்கொண்டிருந்தன. ஜனநாயக அமைப்பில் இந்த வடிவங்களில்மட்டுமே சற்றே மாற்றம் உண்டாகியிருக்கிறதே தவிர, அடிப்படையான கோணல்களில் எந்த மாற்றமும் நேரவில்லை. ஒரு தலித் மருத்துவரின் கையால் ஊசிபோட்டுக் கொள்ளவும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் முடியாது என மறுத்து அடம்பிடிக்கிற நோயாளியின் மனநிலையும் தலித் பதவிகளுக்குரிய தேர்தல்களை நடத்தவிடாமல் தடுக்கிற சாதிச்சார்பாளர்களின் மனநிலையும் பயங்கரமான நோய்க்கூறுகளைக் கொண்டவை. எதன்பிறகுதான் இந்த நோய் குணமாகும்? பூமணியின் படைப்பின் வழியாகத் திரண்டெழும் கேள்வியை முன்வைத்து மனம் வெகுதொலைவுவரை தாவி நகர்கிறது.

பிரச்சார நடைக்கு இழுத்துச் செல்லக்கூடிய பல சம்பவங்களை தீவிரமான கட்டுப்பாட்டோடு எளிய ஒரு தகவலாக மாற்றி ஆழமான அதிர்வுகளை எழுப்பும்வண்ணம் உரையாடல்களாக முன்வைத்துவிட்டு நகர்ந்துவிடும் பூமணியின் கலையாற்றல் பாராட்டுக்குரியது. மனிதர்களை அசலான நிறங்களோடு பதிவு செய்திருப்பதும் முக்கியமான அம்சம். இருவேறு சாதிக்காரர்கள் இருப்பினும் ஒருவருக்கொருவர் வேறுபடும் வகையில் பல நுட்பமான மனவார்ப்புகளும் பார்வைகளும் கொண்டவர்களாக அவர்களைப் படைத்திருப்பதுவும் முக்கியமான அம்சம். எட்டுக் குறுக்கத்துக்குச் சொந்தமான ஒருவர் வட்டிக்கும் கடனுக்கும் எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்துவிட்டு ஊர்க்காவல்காரராகக் கம்பெடுத்துப் பிழைக்கப் போகிறார். அவர்மீது இருக்கிற கசப்பை தீர்த்துக்கொள்ள அவரே களவில் ஈடபட்டதாக குற்றம் சுமத்துகிறார் இன்னொருவர். பகடைக்கு ஆதரவாக இருப்பவர் ஒருவர். எவரோடும் பற்றுதலும் இல்லாமல் பணத்துடன்மட்டுமே ஒட்டி உறவாட நினைப்பவர் இன்னொருவர். நாவலின் நம்பகத்தன்மைக்கு இக்கலவை மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

ஆழமாக மனத்தில் பதியும்படி தீட்டிக்காட்டப்பட்ட ஏராளமான சித்திரங்கள் இப்படைப்பில் உள்ளன. தாயார் இல்லாத குறை தெரியாமலேயே வளர்த்து ஆளாக்கிய பெண்ணை புகுந்தவீட்டுக்கு அனுப்பிவைக்கிற சம்பவம் ஒரு காட்சியில் இடம்பெறுகிறது. வீட்டிலிருந்து ஓடைக்கரைவரைக்கும் எல்லாரும் நடந்து செல்கிறார்கள். விடைபெற்றுக்கொள்ளவேண்டிய கட்டம் வருகிறது. அப்போது தாய்க்காரி மகளைப் பார்த்து அன்பொழுக “பருசப்பொட்டிக்குள்ள கெடக்கிற செருப்பெடுத்துப் போட்டுக்குங்க” என்று சொல்கிறாள். பெண்ணும் மருமகனும் செருப்போடு நடந்துசெல்லும் காட்சியை ஆனந்தத்துடன் பார்க்கிறாள். ஊருக்கெல்லாம் செருப்புத் தைத்துக்கொடுக்கிற ஒரு குடும்பம் தன் பிள்ளைக்கு ஒரு செருப்பைத் தைத்து அணிவித்து அழகு பார்ப்பது ஊரைக் கடந்த பிறகுதான் சாத்தியமாகி இருக்கிறது என்கிற சூழல் அனைவரும் நாணப்படவேண்டிய ஒன்று. விழிப்புணர்ச்சியும் பாசமும் இணைந்து வெளிப்படும் இத்தருணம் எப்போதும் நெஞ்சில் நிழலாடக்கூடிய ஒன்றாகும்.

தற்கொலை செய்துகொண்ட மகளின் உடலை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தகப்பன் தவிக்கும்போது மற்றவர்கள் ஒத்தாசையாக இருந்து எரியூட்டி முடிக்கும் காட்சியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. தண்ணீருக்குள் வெகுநேரம் மூழ்கியிருந்த பிணம் என்பதாலேயே விரைவில் எரிவதற்காக பல பக்குவங்கள் செய்யவேண்டியிருக்கின்றன. அப்போது தாமாகவே முன்வந்து கடையில் கிடந்த தேங்காய் ஓடுகளையெல்லாம் பொறுக்கியெடுத்துக் கொடுக்கிறார் ஒருவர். மொடாவிலிருந்த ஆமணக்கு முத்தை அள்ளிக் கொடுக்கிறார் இன்னொருவர். யாருக்கோ வண்டிப்பாட்டை போட வைத்திருந்த எருமூடைகளை எடுத்துக்கொண்டு போகச்சொல்கிறார் மற்றொருவர். இப்படி ஆளாளுக்கு உதவிகளைக் கேட்காமலேயே செய்கிற நிகழ்ச்சியில் வெளிப்படும் மானுடநெருக்கம் மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. நெருக்கடியான ஒரு தருணத்தில் தானாகவே வெளிப்படுகிறது இந்த நெருக்கம். இவர்களில் ஒருவர்கூட தற்கொலைச் சம்பவத்துக்கு முன்னர் அழகிரிப்பகடை களவாடியதாக பஞ்சாயத்தில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டபோது அதை எதிர்த்து ஒரு முனகலாகக்கூட தனது எதிர்ப்பைக் காட்டாதவர்கள் என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயம். வாழ்வில் அதுவும் ஒரு நெருக்கடியான தருணம்தான். ஆனால் அது வேறுவகையான நெருக்கடி. அப்போது கரையாத அவர்கள் மனம் மரணத்தால் உருவான நெருக்கடியில் கரைந்துவிடுகிறது. மரணம் என்பது மனிதர்கள் முன் வைக்கப்படும் இறுதி வாய்ப்பு. தன் மனத்திலும் ஈரம் இருக்கிறது என்பதையும் அல்லது இரக்கம் சுரக்கிறது என்பதையும் அல்லது அடுத்தவனுக்கு நேர்ந்த நிலை தனக்கும் ஒருநாள் நேரக்கூடிய ஒன்றுதான் என்பதையும் உணரவைக்கும் இறுதி வாய்ப்பு. எந்தக் கல்லும் கரையவேண்டிய கடைசிக் கணம். அப்படித்தான் அழகிரியைச் சுற்றியிருக்கிறவர்கள் கரைந்துபோகிறார்கள். அதன் பிறகும் கரையாதவர்கள் சிலர் உண்டு. அவர்கள் கற்கள்.

தலித்துகள் சமூகத்தின் ஆதிக்குடிகள் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக நாட்டுப்புறக்கதையொன்று இப்படைப்பில் முன்வைக்கப்படுகிறது. விவசாயத்துக்காக தண்ணீர் இருக்கும் இடங்களைத் தேடித்தேடி அலைந்த குடிகள் காட்டை அழித்து, நிலம் திருத்தி, வளம்பெருக்கி, விதைகளைத் து¡வி விளைச்சலைப் பெருக்கி ஆக்கிரமித்துக் கொண்டபோது செல்வமும் செல்வாக்கும் மிகுந்த அக்குடிகளுக்கு அடிமைக்குடியாக மாறிப்போனது ஆதிக்குடி. அதன் பிறகு? கொழிக்கும் விவசாயக் கூட்டத்தினருக்காக ஆளுக்கொரு சார்புத்தொழிலைச் செய்து பிழைப்பவர்களாக மாறிப் போனார்கள். நாட்டுப்புறக்கதையில் குறிப்பிடப்படுவது ஏதோ ஒரு பழைய இறந்தகாலம் என்று வைத்துக்கொள்வோம். நிகழ்காலத்திலும் இக்குடிகளுக்கு விதிக்கப்பட்டிருப்பவை சார்புத்தொழில்களே. இரு வெவ்வேறு காலங்களிலும் சார்புத்தொழில் வாழ்வில் மாற்றம் நேராதது ஏன்? தலைமுறை தலைமுறையாக எப்படி அது தொடர்ந்து வருகிறது? காலம்காலமாக இக்குடிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும் அவமானங்களும் இக்கேள்விக்கான பதிலைக் கண்டடையத் து¡ண்டுகின்றன.

தேர்ச்சி மிகுந்த தொழிலாளியான அழகிரியின் மேன்மை இரு இடங்களில் வெளிப்படுகிறது. ஊர் பேர் தெரியாமல், படுத்த படுக்கையாக முடங்கிக் கிடந்த ஆதரவில்லாத சிறுவனைக் காப்பாற்றி கஞ்சியூற்றி பிழைக்கவைத்து ஒரு தொழிலையும் தேடிக்கொடுத்து நிலைநிறுத்துவது அப்படிப்பட்ட ஒரு தருணம். தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் செத்த மாட்டை ஊருக்கு வெளியே எடுத்துச் சென்று குடியிருப்பின் ஆட்கள் அனைவரும் திரண்டிருந்தபோது, குடியிருப்புக்குள் புகுந்து தொழிலாளியின் மனைவியோடு கள்ளத்தனமாக உறவாட நினைத்த பண்ணையாரை, தற்செயலாக பார்க்க நேர்ந்த அழகிரி அடித்து விரட்டுகிறான். அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்வையும் நிலைமையையும் நினைத்து கண்ணால் பார்த்த உண்மையை அப்படியே மனத்துக்குள்ளேயே விழுங்கிக்கொள்கிறான் அழகிரி. திருட்டு இன்பத்தில் திளைக்கவியலாத கோபத்தில் அழகிரிமீது வேண்டுமென்றே திருட்டுப்பட்டம் சுமத்தி பஞ்சாயத்தில் தலைகுனிந்து நிற்கவைக்கிறார் பண்ணையார். அப்போதும் அவன் உண்மையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. வாழ்வின் இறுதிவரை அழகிரியால் அந்த உண்மை அப்படியே கட்டிக் காக்கப்படுகிறது. மேன்மையான அந்த மனம் தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடி ஊரூராக அலையும்போது ஒரேஒரு கணம் கூட கருப்பனை தன் மாப்பிள்ளையாக நினைத்துப் பார்க்காமலிருந்தது விசித்திரமாக உள்ளது. வாய்நிறைய ‘மாப்பிள்ளை மாப்பிள்ளை’ என்று கூப்பிட்ட அழைப்புகள் உதடுகளைத் தாண்டி உள்ளே செல்லவில்லை என்பது நம்பமுடியாத ஒன்றாகவே இருக்கிறது. முறைமான் ஸ்தானத்தில் இருந்து வயசுக்கு வந்த பெண்ணுக்கு குடிசை கட்டுவதிலிருந்து, மாப்பிள்ளைக்கு முறைசீர்தட்டு வழங்குவதுவரை அவன் வழியாகவே செய்விக்கிற அழகிரியின் மனம் ஏன் உண்மையான மாப்பிள்ளையாக அவனை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஊர்க்காரர்கள் மாடுகளை மேய்த்து சட்டிச்சோறு வாங்கித் தின்றுவிட்டு எங்காவது உறங்கி எழுகிற அனாதை அவன் என்பதைத் தவிர வேறென்ன காரணமாக இருக்கமுடியும்? நம்பகமானவன், நாணயமானவன், உழைப்பாளி என்பதெல்லாம் அப்போது ஏன் மறந்துபோனது? ஏதோ ஒரு நுட்பமான வேறுபாடுதான் அந்த எண்ணங்களை அழகிரியின் மனத்தில் உதிக்கவிடாமல் செய்துவிடுகிறது. இதேபோன்ற சின்னச்சின்ன வேறுபாடுகளின் குவியல்கள் சமூகத்தில் எல்லாத் தட்டு மனிதர்களின் மனங்களிலும் அடைந்து கிடக்கின்றன. ஒருவரைப்பற்றி ஆதரவாக இன்னொருவரைக் கருதக்கூட இடம்தராத அளவுக்கு இக்குவியல்கள் அடைந்துகிடக்கின்றன. இக்குவியல்கள் எரிந்து சாம்பலாகிய பிறகு மானுடமனம் ஒருக்கால் அனைவரையும் சமமாகப் பார்க்கும் பார்வையை அடையக்கூடும்.

இந்தப் படைப்பில் சிறப்பான பெண்பாத்திரம் ஆவுடை. சந்தையில் முக்கால்ரூபாய் சம்பளத்துக்கு பெருக்கிக்கொண்டிருந்தவள் தன் சொந்த முடிவின் அடிப்படையிலேயே அழகிரிக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு மணலு¡த்துக்கு வருகிறாள். தனக்கென ஒரு குழந்தையை நாடாமல், தாயற்றுத் தத்தளிக்கும் முதல் தாரத்துக் குழந்தையைத் தன் குழந்தையாக நேசித்து வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து அனுப்பிவைக்கிறாள். அழகிரிக்கு இணையாக காடு கழனிகளில் உழைத்து அக்குடும்பத்துக்கு இன்னொரு து¡ணாக நிற்கிறாள். தன்னலமற்ற அவளுடைய அன்பும் உழைப்பும் இந்தியத் தாய்மையின் படிமமாக உயர்ந்து நிற்கிறது.

எதன்பிறகும் தலித்துகளின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை என்பதை ஆதங்கத்துடன் உணர்த்தும் பூமணி படைப்பின் முடிவில் பள்ளிக்கூடம் செல்லும் சுடலையின் சித்திரத்தை முன்வைக்கிறார். கல்வியின் பிறகாவது அடித்தள உழைப்பாளி மக்களின் வாழ்க்கையின் வெளிச்சம் படரக்கூடும் என்பது அவர் நெஞ்சில் சின்ன நம்பிக்கைக் கீற்றாக உதித்திருப்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. கடந்த சில ஆண்டுகளில் இக்கல்வி பூமணியின் நம்பிக்கைக்கு இணங்க ஒருவித விழிப்புணர்வை எதார்த்தத்தில் உருவாக்கியிருக்கிறது என்பது உண்மை. ஒருசிலருடைய வாழ்வின் தகுதியிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால் விகிதாச்சார அளவில் இந்த மாற்றம் மிகக்குறைவானது. அனைவரும் கற்றவர்களாக மாறிய பிறகு இச்சூழல் ஒருவேளை மாறக்கூடும். பூமணியின் நாவலைப் படித்துமுடிக்கும்போது இந்த எண்ணமே மனத்தில் மிதந்துசெல்கிறது.


paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்