நீர் வளையங்கள்

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


முன்னுரை எழுத கவிஞர்களே தகுதியானவர்கள். முன்னுரை என்பது பூவாய் உள்கிளரும் வாசனையை வாசகனுடன் பகிரும் சமாச்சாரம். படைப்புக்கு அப்பாற்பட்ட உறவு அது. அலுவலக நண்பர்களிடம் மதிய இடைவேளையில் குடும்ப சாராம்சம் பேசக்கூடாதா என்ன?

அழகில் பல தினுசு உண்டு. மயக்கத்தக்க அழகு என்பது ஒரு வகை, திகைக்க வைக்கிற அழகு, பேச்சை நிறுத்தி பிரமிக்க வைக்கிற அழகு, யோசிக்க வைக்கிற அல்ல, யோசிக்க விடாமல் தனக்குள் கிறுகிறுக்க வைக்கிற அழகு ஹைக்கூ. யோசிக்க அங்கே வேலை இல்லை என்பதல்ல. யோசிக்க அதில் இருக்கிறது என நினைத்த கணம் ஊடாடும் தக்கணத்துப் பிரமிப்பு. சில பெண்களை ஊரில் எல்லாருக்குமே பிடிக்கும். இதை விளக்க முடியாது. விளக்க விளக்க அபத்தங்கள் அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் பதில் அமையாது.

எல்லாவற்றையும் ஏன் விளக்கிக் கொண்டிருக்க வேண்டும். ஒருகட்டத்தில், அனுபவப்பட, மனம் பக்குவப்பட புரிந்துவிட்டுப் போகிறது.

அன்பே பேசாதே
நான் விரும்புவது
உன் புன்னகையைத்தான்
– என்பார் உதயகண்ணன்.

காட்சிகளின் அழகு வார்த்தைகளில் இல்லை. காரணம் வார்த்தைகள் நகல், காட்சி நிஜம்.

எளிமை அழகு. காட்டு ஒடையின் துல்லியம், அது காட்டும் கூழாங்கல் அழகு. அதன் உள்ளங்கையேறும் குளிர்ச்சி…. ஒரு பக்குவப்பட்ட மனதில் வீட்டிலும் சுற்றுச் சூழலிலும் இந்த அழகுமையங்களைத் தேறி நுகரப் பழக வேண்டும். இருத்தலின் சுவாரஸ்யத்தை மேலும் அர்த்தபுஷ்டி யாக்கிக்கொள்ள வேண்டும்.

ஹைக்கூ வாழ்க்கைக்கு பீம புஷ்டி அல்வா.

என்னவோ ஜப்பான்காரன் சொல்கிறான், நம்மகிட்ட இதெல்லாம் கிடையாதா, என்றால் நிலத்தை ஐவகைப்படுத்தி திணையொழுங்கு செய்து வாழ்க்கையை சந்தனமாய் அதில் இழைத்த தமிழ் இலக்கணம் உலகில் எங்குமே கிடையாது. கீழை உலகம் என்ற அளவில்தான் இந்த இயற்கையைப் பாடுதல், கொண்டாடுதல் எல்லாம் ஜப்பானில் சாத்தியப்பட்டிருக்கிறது என்றேகூடத் தோன்றுகிறது. என்ன ஜென் தத்துவங்கள் வசீகரம் பெற்று பிற்காலத்தில் பாஷோ என்கிற அவரது சீடரால் வழிநடத்தப்பட்டு வந்த ஹைக்கூவில் தியான அமைதி அதிகம். துட்டு விஷயம் அறியாப் பெரியார். திருடன் வந்தான், அட ஜன்னல் வழியே நிலா, இதை விட்டுட்டுப் போயிட்டானே, என்று ஹைக்கூ.

நம்மாள்ட்டச் சொன்னால், திருடன் பைத்தியமில்லை, இதுதான் பைத்தியம் என்பான்.

தமிழில் காதல் வீரம் என்று நிலத்தோடு உணர்ச்சித் தீவிரத்துடன் வாழ்வைப் பிணைத்து விட்டோம். தத்துவார்த்தத் தேடல் இல்லை. எருது பொருதுகையில் யோசிச்சா குடல் வெளிய வந்துறாதா?

நம்மூர்ச் சாமியார்கள் இயற்கையைப் பாடுவார்களா? உலகே மாயம், என ஆரம்பிப்பர்.

உவமைத் துல்லியம் சங்ககாலச் சொத்து. பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் நாராய், என்பார்கள். மயிலடி அனைய மாக்குரல் நொச்சி (இலை) எனக் குறுந்தொகை. கருப்பொருள் உரிப்பொருள் என்று அதன் வகைமைகள் அழகு. சூழலோடு உணர்ச்சிகள் கலக்கச் சொல்லுதல்…

உருவக பாவனையில் இயங்குகிறது ஹைக்கூ. வாழ்க்கை நியதியையும் இயற்கை நியதியையும் ஒத்திசைவுடன் அமைத்துக் கொள்ள ஹைக்கூ விண்ணப்பிக்கிறது. ரகசியம்போல கண்டதில் காணாப் பொருள் காட்டி அமைதிகொள்கிறது. நினைவுக்குளத்தில் சிறு தவளையின் ப்ளக்.

தவளையைச் சொல்லி தியானம் அமைதி என்று அவர்கள் சொல்லிப் பார்த்தபோது, நாம் மனிதரைச் சொல்லியே ஆனால் உணர்ச்சியாட்டங்களை வடித்திருக்கிறோம்.

எளிய உயிர்கள், பட்டாம்பூச்சிகள், தவளைகள், பறவைகள் என ஹைக்கூ ராஜ்ஜியம்.

தேடிச் சென்ற
கள்ளிச் செடிப் புதரில்
குட்டிகளுக்குப் பாலூட்டும் நாய்

– என்கிறார் மின்னொளி சீனிவாசன். மனிதனுக்குக் கறாரற்ற சிநேகத்வனியுடன் ஹைக்கூ விஷயங்களைச் சுட்டிக்காட்ட வல்லதாய் இருக்கிறது.

பிற அனுபவங்களைத் தன்னனுபவம் போல உணர வைக்கிற சக்தி அதற்கு உண்டு. வாழப் பயிற்சி அளிக்கிறது ஹைக்கூ.

ஹைக்கூவும் பருவங்களை, நிலத்தின் காட்சிகளை, மலர்களை யெல்லாம் வாழ்க்கையோடு இசைத்து இணைத்துப் பேசுகிறதை தமிழ்ப் பாரம்பரியத்துடன் ரசிக்க நமக்கு வாய்க்கிறது.

மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார் – என்று சிறுகதை எழுதியவனின் கவிதைத் தொகுதிக்கு இத்தலைப்பு ஆச்சர்யம்தான். ஆனால் முரணானது அல்ல. மனிதன் உணர்ந்த கடவுளின் காட்சி வடிவங்களை இங்கே அடையாளப்படுத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. நான் வணங்கும் ஸ்ரீ அரவிந்த அன்னையின் பூ சார்ந்த வழிபாட்டு அலங்காரங்களும், பிரார்த்தனைக்கான குறியீடுகளாக பூக்களை குணவீர்யத்துடன் ஸ்ரீ அன்னை வடிவமைத்ததும் ரசனையின்பாற்பட்டதாய் உவப்பானதாய் இருந்தது. ஹைக்கூவில் நான் ஈடுபடாமல் எப்படி என்றுதான் இப்போது நினைக்க முடிகிறது.

சிலது ஹைக்கூ என்கிறார்கள். சென்ரியு, ஹைபுன் என்கிறார்கள். தெரியாது. நான் எழுதுகிறேன். வகைப்பாடு பிற்பாடு.

இது என் ஐந்தாவது கவிதைத் தொகுதி. ‘ஊர்வலத்தில் கடைசி மனிதன்’ தொகுப்பில் தலைப்பை வெவ்வேறு வகையில் திரும்பத் திரும்ப அலைமோத வைத்திருப்பேன். இந்நூலிலும் அதே உத்தியைக் கைக்கொண்டிருக்கிறேன்.

குறிஞ்சி –
மலை உச்சி
அடைய
தேடுகிறான் பாதை

முல்லை –
காட்டில் கோடாரிச் சத்தம்
காதில் விழவில்லை
மரங்களின் அழுகை

மருதம் –
அறுவடைக்கு உதவிய
மாட்டுக்கு வைக்கோல்
மனுசனுக்கு நெல்

நெய்தல் –
மெரினா கடற்கரை
முறுக்கு வியாபாரம்
கண்ணகி சிலையடியில்

பாலை –
சுட்டெரிக்கும் மணல்வெளி
யாருடையதோ
பிய்ந்த செருப்புகள்

ஐவகை நிலங்களையும் பாடுபொருளாக்கி வடிவம் பொலியும் ஹைக்கூக்கள் தமிழுக்குப் போலவே பொருந்த வல்லவை.

நிலமோ பருவமோ தாண்டி பொதுப் பண்புகளிலும் அவை அமைகின்றன. ஹைக்கூ வடிவத்தில் அரசியல், சமூகம், ஆன்மிகம், தத்துவம், தியானம் உட்பட எதுவும் சாத்தியம்.

ஹைக்கூ என்பது சுண்டக் காய்ச்சிய மொழி, என்பார் அப்துல் ரகுமான். அப்படியெல்லாம் இல்லை. திருக்குறளிலேயே ரெண்டாவது வரி தேவையில்லாமல் நிறையக் குறள் இருக்கிறது. இதில் பாஷோவை நான் ஒத்துப் போகிறேன். ஹைக்கூ கவிதைகளை உரக்கப் படியுங்கள். அதன் ஒலிநயம் தெரிய வாசித்துப் பாருங்கள், என்கிறார் பாஷோ. சில வரிகள் கொஞ்சம் தளர்வாய்க் கட்டியிருந்தாலும் அதுவும் அழகுதான் சமயங்களில், அதற்கான தேவையைப் பாடுபொருள் அனுமதிக்கிறது. சில பெண்கள் புடவையை நெகிழக் கட்டியே ஆளைத் தள்ளாட்டிரும்.

ஹைக்கூ வாசிக்க மனநிலைப் பக்குவம் வேண்டும். எழுதுவதற்கோ தனியே சொல்ல வேண்டியதில்லை.

பிட்சுகள் அமைதியும் தியானமும் தனிமையும் காலார்ந்த நடைப் பயணமுமாய் – நம்மாள் மூக்கு நோண்டிக்கொண்டே போய் அல்வாக் கடை வாசலில் நிற்பான் – பிட்சுகள் வாழ்ந்து அனுபவித்து செழிப்பாக்கிய ஹைக்கூ. அதற்கான மனநிலைக்கு கவிஞனாக இங்கே இற்றை நாளில் இயங்கத் தனித் தயாரிப்பு வேண்டும். தண்ணிக்குள் தம் பிடிக்கிறாப் போல. அபூர்வமான பல நல்ல ஹைக்கூக்கள் ஜப்பானிலிருந்து தமிழுக்கு வந்துள்ளன. சப்பு சவரு நீக்கிய சுத்தமான ஹைக்கூக்கள் அவை. எவ்வளவு மென்மையாகச் சொல்கிறார்கள்…

சிட்டுக்குருவி
சற்றே கால்தூக்க
சேறுதுடைக்கும் மாம்பூ

பளீரென்ற பௌர்ணமி
எங்கே கொட்டுவேன்
சிகெரெட் சாம்பல்

கோவில் மணியில்
உறங்குகிறது
பட்டாம்பூச்சி

– இவற்றோடு நமது கவிதைகளையும் வைப்பது திண்ணக்கம்தான். சவால்தான். சவாலே வாழ்க்கைக்கு சுவாரஸ்யம். உயர்ந்த விஷயங்களோடு போட்டி போடுவதுதான் நியாயமுங் கூட.


storysankar@rediffmail.com
91 99405 96966
கடவுளின் காலடிச் சத்தம் – கவிதை சந்நிதி – நூலுக்கு முன்னுரை

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்