தமிழ் விடு தூது – 1

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

எஸ். ஜெயலட்சுமி


உலகப் பொதுமறையாம் திருக்குறளை நமக்களித்த வள்ளுவர் தூது என்பதைப் பற்றி ஒரு அதிகாரமே பாடியுள்ளார்.தூது செல்பவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்,அவனுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்றெல்லாம் வரையறை செய்துள்ளார்.
”அன்பு அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று
தன் தலைவனிடம் அன்புடைமை,அவனுக்கு ஆவன செய்யும் அறிவுடைமை,அப்படி அறிந்ததை மற்றவர்களிடம் சொல்லும் சொல்வன்மை, இம்மூன்றும் தூது செல்பவர்க்கு இன்றியமையாத குணங்களாகும்.
”அறிவு, உரு, ஆராய்ந்த கல்வி இம்மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு
அறிவோடு பார்த்த உடனே மதிப்பும்,மரியாதையும் கொடுக்கத் தோன்றும் தோற்றம்,சிறந்த கல்வி இவையும் வேண்டும் என்கிறார்.இதோடு கூட தன் கடமையையும்,காலத்தையும், இடத்தையும் அறிந்து தூது செல்பவன் செயல்பட வேண்டும்.தன்னுடைய கடமையைச் செய்ய தக்க காலத்தையும்,தக்க இடத்தையும் அறிந்து செயல்பட வேண்டும்.
கடன் அறிந்து காலம்கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பார் தலை
என்று தூது செல்பவனுக்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்.

அனுமன் தூது,கண்ணன் தூது
வள்ளுவர் சொல்லும் அத்தனை தகுதிகளும் அமையப் பெற்றவனாக அனுமன் விளங்குவதைப் பார்க்கிறோம்.தூது என்று சொன்னதுமே நமது நினைவுக்கு வருவது அனுமன்
தான்.இராம தூதனாகச் சென்ற அனுமனிடத்திலே ஆண்மை, வீரம்,பண்பு, நிதானம், பிறன்மனை நோக்காத பேராண்மை,சொல்வன்மை அனைத்தையும் சுந்தர காண்டம் வாயிலாகஅறிகிறோம்.
மாதவிக் கொடியைத் தன் கழுத்திலே சுற்றிக் கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ள
விருந்த சீதாபிராட்டியைத் தக்க சமயத்திலே சென்று காப்பாற்றுகிறான் அனுமன்.
”அண்டர் நாயகன் அருட் தூதன் யான்”
என்று பிராட்டியைத் தொழுது நிற்கிறான்.இராமபிரானுக்கும் சீதாப்பிராட்டிக்கும் இடையே சூளாமணியையும், கணையாழியும் கொடுத்துத் தூது சொல்லி அழியாப்புகழ் பெறுகிறான்.அனுமன் தூது சென்று பேரும் புகழும் பெற்றதைக் கண்டு பெருமான் தானும் தூது செல்ல ஆசைப்படுகிறான்.அதனால் அடுத்த அவதாரத்திலேயே தனது தூதுசெல்லும் எண்ணத்தை நிறை வேற்றிக் கொள்கிறான்.
”நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்ற
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே
நாராயணாவென்னா நாவென்ன நாவே
கண்ணன், பாண்டவர்களுக்காகக், கௌரவர்கள் பால் தூதுசென்ற எளிமையைப் போற்றுகிறார் இளங்கோவடிகள்.
வீரபாகு தூது, ஆண்டவன் தூது
முருகப் பெருமான் தூதுவனாக வீரபாகுத்தேவர் செல்கிறார் சூரபத்மனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் சொல்கிறார்.ஆனால் ஆணவமே உருவான சூரனின் ஆணவம் அடிபணிய மறுக்கவே தேவாசுர யுத்தம் மூளுகிறது.சூரனின் ஆணவம் அழிந்து சேவலும் மயிலுமாகிறான்.ஆண்டவர்களுக்காக அடியார்கள் தூது போனதைப் போல ஆண்டவன் தூது
போனதைப் பெரிய புராணம் பேசுகிறது.சுந்தரருக்காக பரவை நாச்சியாரிடம் தூது செல்கிறான் ஈசன்.
அண்டர் வாழக் கருணையினால் ஆலகாலம் அமுதாக
உண்ட நீலக்கோல மிடற்றொருவர் இருவர்க்கு அறிவறியார்
வண்டு வாழும் மலர்க்கூந்தல் பரவையார் மாளிகை நோக்கித்
தொண்டனார் தம் துயர் நீக்கத் தூதனாய் எழுந்தருளினார்.
திருமாலும், நான்முகனும் அடிமுடி காணமுடியாத ஈசன் அடியவருக்காக அடிவருந்தத் தூது போகிறான்!

ஔவையின் தூது

ஆண்களோடு பெண்களும் பல துறைகளிலும் சரிசமமாப் போட்டி
போட்டுப் பெண்கள் பிரகாசிப்பதைப் பார்க்கிறோம்.பிரதமர்களாகவோ,கவர்னர்களாகவோ ஏன் குடியரசுத் தலைவராகவோ,தூதுவர்களாகவோ இன்று செயல் படுவது அதிசயமில்லை.ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலத்தில் பெண்பால் புலவராகிய ஔவையார் துது சென்று வெற்றியும் பெறுகிறார் என்பதையும் பார்க்கிறோம்.அதியமான் நெடுமான் அஞ்சியின் தூதராகத் தொண்¨மானிடம் செல்கிறார்.தனது படைக்கலங்களின் பெருமையையும் மிகுதியையும் காட்ட வேண்டும் என்ற கர்வத்தோடு ஔவையைத் தனது படைக் கலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்று அங்கு அவை அழகாக வரிசையாக அடுக்கி வைக்கப்படிருப்பதைப் பெருமையோடு காட்டுகிறான்.தொண்டைமானின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட ஔவை உடனே ஒரு பாட்டைப் பாடுகிறாள்.”மன்னா, உனது படைக் கருவிகள் தான் எவ்வளவு அழகாக, நேர்த்தியாக நெய் பூசப்பட்டு,மாலைகள் அணியப் பெற்று வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டி ருக்கின்றன! ஆனால் எம் மன்னன் அதியமானுடைய படைக்கலங்களோ நுனி முறிந்தும், சிதைந்தும் கொல்லனுடைய உலைக்களத்திலேயே எப்பொழுதும் கிடக்கின்றன”என்று சொல்கி றாள்.என்ன பொருள்?”தொண்டைமானே, நீ போரிலே ஈடுபடுவதேயில்லை.அதனால் உன்னுடைய படைக்கலங்கள் புதுக்கருக்கழியாமல் நெய் பூசப்பட்டு மாலை அணிவித்து வரிசையாக அடுக்கப் பட்டிருக்கின்றன.ஆனால் பெருவீரனான அதியமானோ எப்பொழுதும் போர் செய்து கொண்டேயிருப்பதால் அவனுடைய படைக்கலங்கள் சிதைந்தும் உடைந்தும் பொலிவிழந்தும் இருப்பதால் அவற்றை சரி செய்வதற்காக எப்பொழுதும் கொல்லன் உலைக்களத்திலேயே இருக்கின்றன.” என்று தொண்டைமானைப் புகழ்வது போல இகழ்ந்தும் அதியமானை இகழ்வதுபோலப் புகழ்ந்தும் வஞ்சப் புகழ்ச்சியாக
இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்டிரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து
கடியுடை வியன் நகர், அவ்வே [அங்கே]
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ
என்று பாடுகிறார்.தூது வெற்றி பெறுகிறது

மேக தூது
இப்படி ஆண்டவனும் அடியார்களும் தூது சென்றதைத் தவிர அ·றிணைப்
பொருள்களும் கூட பழங் காலத்தில் தூது செல்லப் பயன்படுத்தப் பட்டு வந்தன என்பதை நமது இலக்கியங்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
இயம்புகின்ற காலத்து எகினம், மயில், கிள்ளை
பயன் பெறு மேகம், பூவை, பாங்கி
நயந்த குயில், பேதை நெஞ்சம்,தென்றல்
பிரமம் ஈரைந்துமே தூதுரைத்து வாங்கும் தொடை
என்ற பாடல் அன்னம், மயில்,கிளி,மேகம்,நாகணவாய்ப் பறவை,தோழி,குயில், நெஞ்சம், தென்றல்,வண்டு என்ற பத்தும் தூது செல்லத்தகுந்தவை என்று அறிவிக்கின்றது.நளன் தமயந்தி இருவருக்கும் இடையே அன்னம் தூது சென்றதை நளவெண்பாவில் பார்க்கிறோம்.கண்ணனிடம் காதல்கொண்ட ஆண்டாள் மேகங்களைப் பார்க்கிறாள்.இதையே தூதாக விடுத்தால் என்ன என்று நினைக்கிறாள்.
சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண் முகில்காள்!மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்கள்
உலங்குண்ட விளங்கனி போல் உள்மெலியப் புகுந்தென்னை
நலங்கொண்ட நாரணர்கென் நடலை நோய் செப்புமினே.
என்று நாரணனிடம் தூது சென்று தனது காதலைச் சொல்லும்படி மேகங்களை வேண்டிக்
கொள்கிறாள்.நம்மாழ்வாரும் பராங்குசநாயகியாகி, பறவைகளையெல்லாம் எம்பெருமானிடம் தூது விடுகிறாள்.
வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய்கொள் சென்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும்
கைகொள் சக்கரத்தென் கனிவாய் பெருமாளைக்
கைகள் கூப்பிச்சொல்வீர் என் காதன்மையே
என்று பறவைகளையெல்லாம் ஒவ்வொன்றாய் அழைத்து தூதுவிடுகிறாள்
நாரை விடு தூது
காதலனும் காதலியும் தான் தூது விடலாமா?சம்சாரிகளும் கூட தூது
விடலாம் என்பதை சக்திமுற்றத்துப் புலவர் வாயிலாக அறிகிறோம்.இந்தப் புலவர், மன்னர் களைக் கண்டு பொருள் பெறும் பொருட்டு வீட்டை விட்டு வந்து வெகு நாட்களாகிவிட்டன.
தனது வருகையை ஆவலோடு எதிர் பார்த்து மனைவி காத்திருப்பாளே என்ற எண்னம் தோன்று
கிறது. இப்பொழுது இருப்பது போல் தொலை பேசி அலைபேசி, இமெயில் வசதிகள் எல்லாம் அந்நாளில் கிடையாதே என்ன செய்யலாம் என்று புலவர் யோசிக்கிறார்.அப்பொழுது வானத்தில் இரண்டு நாரைகள் பறந்து செல்வதைப் பார்க்கிறார்.இந்த நாரைகளையே தூதாக அனுப்பினால் என்ன என்று தோன்றவே
நாராய்!நாராய்! செங்கால் நாராய்!
நீயும் நின் மனைவியும் தென்திசைக்குமரியாடி
வடதிசைக் கேகுவீராயின் எம்மூர் சக்திமுற்றது வாவியுள் தங்கி
நனை சுவர்க் கூரைக்கனை குரல் பல்லி பாடு பார்த்திருக்கும்
என் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில் ஆடையின்றி
வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே!

நாரைகளே,என்னை இங்கே பார்த்ததைப் பற்றியும் என் நிலைமையைப் பற்றியும் சொல்லுங்கள் என்று நாரையைத் தூதாக விடுக்கிறார்.இது தவிர தோழி, தென்றல்,
தாமரை, நெல், அன்றில், குவளை, பாரிஜாதம், புறா,கழுதை காக்கை,தமிழ் இவற்றையும்
தூதாக பிற்காலத்தில் அனுப்பினார்கள். [தொடரும்]

தலைவியின் காதல்தவிப்பு
ஒரு தலைவி மதுரைச் சொக்கநாதர் மேல் காதல் கொண்டு விடுகிறாள் தனது காதலைச் சொக்கநாதரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.யாரிடம் சொல்லி அனுப்பலாம் என்று யோசிக்கிறாள்.தனது காதலை எடுத்துச் சொல்பவர் நல்ல சொல்வன்மை உள்ளவராகவும், நல்ல தோற்றப் பொலிவு உள்ளவராகவும் இருக்க வேண்டுமே என்று யோசிக்கிறாள்.நள தமயந்திஇருவருக்குமிடையே அன்னம் தூது போனதே அதை அனுப்புவோமா என்று யோசிக்கிகிறாள்.அவளுக்குச் சட்டென்று ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.நாம் சிவபெருமானிடம் அன்னத்தை அனுப்புகிறோமே அந்த அன்னம் சொக்கநாதரைக் கண்டு சேதி சொல்லுமா?அன்றொரு நாள் ஈசனின் திருமுடியைக் கண்டுவருவேன் என்று பிரும்மா அன்னம் உருக்
கொண்டுதானே சென்றார்.அவரால் ஈசனின் திருமுடியைக் காணமுடிந்ததா?முடியவில்லையே!.
”மாலறியா நான்முகனும் காணா மலையல்லவா அவன்?அன்று பிரும்மா திரும்பி
வந்ததுபோல் இந்த அன்னமும் வந்துவிட்டால் என்ன செய்வது? என்று அந்த எண்ணத்தை
விட்டு விடுகிறாள்.சரி வண்டை அனுப்புவோமா என்று நினைக்கிறாள் இந்த வண்டு போய்
சொக்கநாதரிடம் நம் காதலைப் பற்றிப் பேச ஆரம்பிக்கும் போதே”காமம் செப்பாதே”என்று அவர்
சொல்லி விட்டால் வண்டு திகைத்துப் போய்விடுமே! சரி மானை அனுப்பிவைப்போம்.அது விரைவாக ஓடிச்
சென்று நம் நிலைமையையும் தவிப்பையும் சொல்லும் என்று எண்ணுகிறாள்.அப்புறம் நினைவு வருகிறது.
இந்த மான் போய் ஈசனிடம் என் காதலைச் சொல்லும்போது ஈசன் மேலிருக்கும் புலித்தோலாடையை கண்டு பயந்து ஓடிவந்து விட்டால்?சரி குயிலை அனுப்பி வைப்போம் அதுவும் வேகமாகப் பறந்துபோய்
இனிய குரலில் நமது காதலைச் சொல்லும்பொழுது சொக்கநாதர் நிச்சயம் செவிமடுத்துக் கேட்பார், என்று எண்ணிய தலைவி குயிலை அழைக்கச் செல்கிறாள்.செல்லும் போதே ஒரு எண்னம் பளிச்சிடு
கிறது.இந்தக் குயில் தன் இனிய குரலில் பேசினால் தானே ஈசன் கேட்க முடியும்?ஈசனிடம் இருக்கும்
கரிக்குருவியைக் கண்டதுமே குயில் வாயடைத்துப் போய்விடுமே!சரி இவையெதுவுமே வேண்டாம்.என்
நெஞ்சத்தையே அனுப்புவோம் என்றால் அதுவும் முடியாதே! அவர்தான் மனம் கடந்தவராயிற்றே! என் மனமும் அவரை நெருங்க முடியாதே!
”அன்னம் தனை விடுப்பேன் அன்னம் தான் அங்கவரை
இன்னம்தான் கண்டறியா தென்பரே
மன்னெந்தாய் அப்பாலோர் வண்டையனுப்பின்
அவர் காமம் செப்பாதே என்றால் திகைக்குமே!-தப்பாது
மானைப்போய் தூது சொல்லி வா என்பேன் எல்லியப்
பூந்தானைப் பரமர் பால் சாராதே! ஏனைப்
பூங்கோகிலத்தை விடுப்பேன் கோகிலமும்
காக்கையினம் ஆகி வலியனுக்க்கஞ்சுமே
ஆகையினால் இந்த மனத்தை தூதாக ஏகாய் என்பேன்
இம்மனமும் அந்த மனோதீதர் பால் அண்டாதே!
என்ன செய்வேன் என்று திகைக்கிறாள்.பல விதமாக யோசனை செய்தபின் இனிய தமிழையே தூதாக
விடலாம் என்று தீர்மானம் செய்கிறாள்.
தமிழ்விடு தூது
தமிழ்விடு தூது என்ற நூலில்தான் இப்படி ஒரு காட்சியைப் பார்க்கிறோம்.தமிழ்விடு தூது என்ற பிரபந்தத்தை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.தமிழ்த் தாத்தா என்று எல்லோராலும்
புகழப்படும் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் தேடிக் கண்டுபிடித்த நூல் இது.நூலாசிரியர் தமிழ்மொழியின்
பால் மிகுந்த ஈடுபாடுடையவராக இருக்க வேண்டும்.தமிழின் பெருமையைப் பாடுவதோடு சொக்கநாதப்
பெருமானையும் பாடிப் பரவுவதும் அவர் நோக்கமாக இருக்கலாம்.
தலைவி சொல்கிறாள்”என் இனிய தமிழே எனக்காக நீ மதுரை சென்று சொக்கநாதப் பெருமனிடம் தூது செல்ல வேண்டும்.நீ இனிய தமிழாக மட்டுமல்லாமல் தெய்வத்தமிழாகவும் விளங்குகிறாய்.நீ தூது
செல்லப்போகும் சொக்கநாதப் பெருமானின் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருமே உன்னிடம் மிக்க
அன்புடையவர்கள்.சொக்கநாதப் பெருமானே தமிழ்ச் சங்கத்தில் தலைமையேற்றுப் புலவராக விளங்கி
யிருக்கிறார்.தமிழுக்காக முதல் இடை ,கடைச் சங்கம் என்ற மூன்று சங்கங்களையும் வளர்த்த மதுரையிலே
தமிழரசியாக விளங்கியவள் தடாதகைப் பிராட்டி.அவர்களுடைய குமாரர்களைப்பற்றி உனக்குத் தெரியாதா?
மூத்த குமாரரான விநாயகரின் கையிலே சிவஞான ஏடுகள் இருக்கும்.இளைய மகன் முருகனோஉருத்திர
சன்மன் என்ற புலவராக வந்து மதுரைச் சங்கப் புலவர்களுக்கே பாடல்கள் எல்லாம் கொடுத்தவர்.இப்படித்
தமிழின் மீது ஆர்வமும் பற்றும் கொண்ட பெருமானிடம் நீ தூது செல்வது மிகவும் பொருத்தமானதே
என்கிறாள்.


vannaijaya@hotmail.com

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி