மின்சாரக் கம்பியோடு நம்பிக்கையோடு பேசும் ஒற்றைக் குருவி

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

நாகூர் ரூமி


ஒரு மாலையும் இன்னொரு மாலையும் — கவிதைத் தொகுதி. சல்மா. காலச்சுவடு வெளியீடு, நான்காம் பதிப்பு, நவம்பர் 2007. பக்கங்கள் 87. விலை

ரூபாய் 40/-.

=====================================================================

இயற்பெயர் ராஜாத்தி என்கிற ரொக்கையா. ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கும் இவர் 2001 முதல் 2006வரை பொன்னம்பட்டி சிறப்பு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். தற்போது சமூக நலத்துறை வாரியத்தின் தலைவியாகப் பணியாற்றி வருகிறார். பச்சைத்தேவதை (கவிதை 2003), இரண்டாம் ஜாமங்களின் கதை (நாவல் 2004) வெளிவந்துள்ளன. விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இரண்டாம் ஜாமங்களின் கதை ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

இவருடைய ‘இழப்பு’ சிறுகதை கதா — காலச்சுவடு போட்டியில் பரிசு பெற்றது. 2006ம் ஆண்டு இந்தியாவை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற ·ப்ராங்க்·பர்ட் புத்தக விழாவில் நேஷனல் புக்ட்ரஸ்ட் அனுப்பிய எழுத்தாளர் குழுவில் சல்மா இடம் பெற்றிருந்தார். சல்மாவின் படைப்புகளை முன்வைத்து நார்மன் கட்லர் நினைவுக் கருத்தரங்கு சிகாகோ பல்கலைக்கழகத்தில் 2007 மே மாதம் நடைபெற்றது. பெற்றோர்: சர்புன்னிஷா, சம்சுதீன், கணவர் அப்துல் மாலிக், மகன்கள் சலீம், நதீம்.

மின்னஞ்சல் raasthi@yahoo.com

சல்மாவின் முதல் கவிதைத் தொகுப்பின் நான்காம் பதிப்பில் அவரைப் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு இது. ஒன்பதாவது வரை மட்டுமே படித்த இந்த பெண்ணை கவிதை எழுதத் தூண்டியது எது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இந்தத் தொகுதியைப் படித்துப் பார்க்கலாம். சின்னச் சின்னக் கவிதைகளும் உண்டு. சற்றே நீண்ட கவிதைகளும் உண்டு. ஆனால் எல்லாவற்றிலுமே திரும்பத் திரும்ப சொல்லப்படுவது ஆண்களிலடம் மாட்டிக்கொண்டு மீள முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் வலியும் வேதனையும். ஒருசில வரிகளைப் படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. Our sweetest songs are those that tell us of saddest thought என்று ஷெல்லி எழுதியதுதான் எத்தனை உண்மை!

தனிமைதான் இக்கவிதைகளில் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்படுவதாக சல்மாவே முன்னுரையில் கூறுகிறார். ஆனால் அந்த தனிமைக்கு அவரைத் தள்ளியது எது என்பதை கவிதைகள் அடையாளம் காட்டுகின்றன.

நான் சல்மாவின் நாவலை கடுமையாக விமர்சித்தவன். இப்போதும் அந்த நாவல் மீதான என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சல்மாவின் கவிதைகளை இப்போதுதான் முதல் முறையாகப் படித்தேன். சல்மாவின் நாவல் பற்றிய என் கட்டுரையில் அவரது கவிதையின் ஒரு வரியைக் குறிப்பிட்டு நான் கிண்டல் செய்திருந்தேன். ஆனால் அந்த வரிதான் எவ்வளவு வலிமையானது என்பது கவிதையை முழுமையாகப் படித்தபோதுதான் புரிந்தது. (கவிதைவரி பற்றிய கிண்டலை நீக்கிவிட்டுப் பார்த்தாலும் அவர் நாவல் பற்றிய என் விமர்சனத்தில் எந்த மாற்றமும் வந்துவிடாது என்பதும் உண்மை.)

“ஒப்பந்தம்” என்ற தலைப்பு கொண்ட நீண்ட கவிதை அது. ஒரு கணவனுக்கும் மனைவிக்குமான உறவு பற்றிய கவிதை அது. உறவு என்று சொல்வதுகூடத் தவறு. ஏனெனில் உறவு என்பது பலவிதமான பொருள் நீட்சி கொண்ட ஒரு சொல். இந்த கவிதை பேசும் உறவானது தாம்பத்திய உறவு மட்டுமே. உடல் சார்ந்த உறவு. ஒரு ஆண் ஒரு பெண்ணை எந்த விதமாகப் பாவிக்கிறான் என்பது பற்றி பேசுகிறது இக்கவிதை. அவனைப் பொருத்த அளவில் அவள் பயன்படுத்தவும் இன்பம் அனுபவிக்கவும் உள்ள ஒரு உடல் மட்டுமே. எல்லாத் தவறுகளும் அவளுடையது மட்டும்தான் என்பதாகவே குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களும் எடுத்துரைக்கின்றனர். ஏனென்றால் அந்தப் பெண்களும்கூட சிந்திக்கத் தெரியாமல் உடலால் கணவனுக்கு இன்பம் தருவதே வாழ்க்கை என்று கற்பிக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.

ஆனால் இந்தப் பெண் சிந்திக்கத் தெரிந்தவள். தனக்கென பிரத்தியேகமான உணர்ச்சிகளைக் கொண்டவள். கவிதா மனம் படைத்தவள். “பயணத்தில் விலகிப் போகும் / ஒற்றை மரத்தின் நிழலையும்” தன்னோடு அழைத்துப் போக நினைப்பவள் (பக்கம் 15). அப்படிப்பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை ஒப்பந்தம் என்பது ஆண் விரும்பும்போதெல்லாம் உடலைக் கிடத்த ஆணையிடும் ஒப்பந்தம் என்பதாக அர்த்தப்படும்போது வலிக்கிறது. (திருமணம் என்பது இஸ்லாத்தின் பார்வையில் ஓர் ஒப்பந்தம் மட்டுமே. தேவைப்பட்டால் முறித்துக் கொள்ளலாம் என்பது சட்டம். சல்மா ஒரு முஸ்லிம் பெண்ணாக இருப்பதால், ‘நிகாஹ்’ என்று சொல்லப்படும் திருமணத்தின் மீதான அங்கதச் சாடலாக இந்த ‘ஒப்பந்தம்’ என்ற சொல் பரிணமிப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்)

அவன் அவளை அழைக்கும் தருணங்கள் எப்படிப்பட்டவை?

குட்டிக்கு உணவூட்ட
இயலாப் பூனையின்
தேம்பியழும் குழந்தைக் குரல்
கவ்விப் பிடிக்கிறது ஈரலை

என்ற வரிகளில் இருந்து யூகிக்கலாம். தாய்மை நிறைந்திருக்கும் தருணத்தில் ‘ஆண்மை’ எழுந்து கொண்டு ஆட்டம் போடுவதை இது குறிக்கலாம்.

என்றாலும் இந்தப் பெண் மிகவும் நேர்மையானவள். தான் மட்டுமே சரி என்று வாதிடாதவள்.

உனக்கும்கூட
புகார்கள் இருக்கலாம்

என்பதையும் பெருந்தன்மையோடு ஒத்துக்கொள்கிறாள். ஆனால் அவனிடமிருந்து அவள் பெற்ற “சிறிது” அன்பும் “கலங்கலான”தே என்பதையும் உறுதிப் படுத்துகிறாள். அவள் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதும் அவளுக்குத் தெரிந்துதான் இருக்கிறது:

என் நிலைப்பாடு
காலத்தாலும்
வரலாற்றாலும்
தெளிவாக்கப்பட்டிருக்கிறது..

உனது குழந்தையின்
தாய் எனும் பொறுப்பை
நிறைவேற்ற.

வெளியுலகில் இருந்து
சானிட்டரி நாப்கின்களையும்
கருத்தடை சாதனங்களையும் பெற
இன்னும் சிறு சிறு உதவிகள் வேண்டி

முடியுமானால்
உன்னை சிறிதளவு அதிகாரம் செய்ய

நான் சிறிதளவு அதிகாரத்தை
ஸ்திரப்படுத்திக்கொள்ள

என்றெல்லாம் சொல்லிச் செல்லும் கவிதை இப்படி முடிகிறது:

எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி.

ஆணாதிக்கத்தின் முகத்தில் இதைவிடக் கடுமையாக, கேவலமாக ஒரு பெண்ணால் காரித் துப்ப முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. கடைசி இரண்டு வரிகளையும் கவிதை முழுமையாக நியாயப்படுத்துகிறது. எந்வித விரசமும் அந்த வரிகளில் இல்லை. அசாதாரணமான துணிச்சல் இருந்தால் மட்டுமே இப்படி எழுதுதல் சாத்தியம். அந்த துணிச்சல் சல்மாவுக்கு வாய்த்திருக்கிறது. (ஏற்கனவே இந்த வரிகளின்மீது நான் வைத்த விமர்சனத்திற்காக வருந்துகிறேன்). கணவனை ‘உன்’ என்று ஒரு மனைவி மக்கள் மன்றத்தின் முன் விளிக்கும்போது தெறிக்கும் கோபம் அவள் பட்டவேதனைக்குச் சான்று பகர்கிறது. அவள் உணர்ச்சிகளை யாருமே மதிக்கவில்லை என்பதை பறை சாற்றுகிறது. இந்த அக்கறையின்மை பல கவிதைகளில் வேறு வேறு வடிவங்கள் எடுத்து வருகிறது.

முடிவில்லை
முடிவேயில்லை
என் மீதான அக்கறையின்மைகளுக்கு

என்று இன்னொரு கவிதையில் வெளிப்படையாகவே சொல்கிறார் (காலத்தின் ஒட்டடைகள், பக்கம் 35).

ஒரு பெண்ணின் உணர்ச்சி பற்றிக் கவலைப்படாத புணர்ச்சி — அதை கணவனே செய்தாலும் — வன்புணர்ச்சிதானே? அப்படிப்பட்ட வன்முறை பற்றிப் பல கவிதைகள் பேசுகின்றன. சூசகமாகவும், நேரடியாகவும்.

எப்போதுமே
அறிந்ததில்லை நீ
எனக்கு நேர்ந்த
எதையுமே (தாம்பத்தியம், பக்கம் 17)

இந்த அறையெங்கும்
இந்த படுக்கையெங்கும்
அத்துமீறி நுழைந்த கால்களின்
சுவடுகள் (காலத்தின் ஒட்டடைகள்)

இதே கவிதையின் ஒரு இடத்தில் கோபத்தின், வேதனையின் உச்சகட்ட வெளிப்பாடாக ஒரு விஷயம் சொல்லப்படுகிறது:

யாரேனும் ஒருவர்
கொலையாளியாகும் சாத்தியங்களுடன்
ஒன்றாக உறங்குகிறோம் (பக்கம் 36)

ஒரு பெண்ணின் வேதனையும் கோபமும் கவிதையாகும்போதுதான் எவ்வளவு சக்தி வந்துவிடுகிறது! சல்மாவின் இன்னொரு பாராட்ட வேண்டிய அம்சம் அவருடைய சன்னமான விமர்சனம். ‘ஒப்பந்தம்’ என்ற கவிதையின் தலைப்பு எப்படி திருமணம் என்ற நிறுவன அமைப்பச் சாடியது என்று ஏற்கனவே பார்த்தோம். காலத்தின் ஒட்டடைகள் கவிதையில் இன்னும் ஆழமான ஒரு விமர்சனம் வருகிறது:

அதிசயங்கள் நேரா குகை வாழ்வுக்கு
நமதிந்தப் பயணம் (பக்கம் 36)

இந்த வரிகளின் விமர்சனத்தைப் புரிந்துகொள்ள நாம் இஸ்லாமிய வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். அதிசயம் நேர்ந்த ஒரு குகை வாழ்வு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. ஹீரா என்ற குகையில்தான் முதன் முதலாக இறைவனின் செய்தி கிடைத்தது. ஆனால் இந்தப் பெண்ணைப் பொறுத்தவரை அவளுடைய வாழ்வும் குகையைப் போல இருண்டுதான் கிடக்கிறது. ஆனாலும் அதிசயங்களோ, ஒளியோ கிடைக்கவில்லை. அதிசயம், குகை ஆகிய இரண்டு சொற்களால் மிகவும் நுட்பமாக இஸ்லாமிய வரலாறு குறிப்பிடப்படுகிறது. அதேசமயம், அந்தக் குகைக்கும் இந்தக் குகைக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி நம்மை சிந்திக்க வைக்கிறது.

உன்னைப் பற்றிய என் அபிப்பிராயங்கள்
என்னுள்ளே வளர்த்தெடுக்கும்
உலகில் மிச்சமிருக்கும்
ஏனைய ஆண்களின்
மோசமான பிம்பங்களை.

உன் குறி கீறிப்பிறந்த
நம் குழந்தைகளின் எதிர்க்காலம் பின்னப்பட்டிருப்பது
எனது ஒழுக்கமான நடத்தையாலும்
பணிவாலும் (இந்த உன் வீடு, பக்கம் 60).

உடல்களுக்கிடையேயான மர்மம்
தீர்ந்துவிட்ட பிறகும்
மிச்சமிருக்கும் பாவனைகளுடன்
நீளும் புணர்ச்சி (பக்கம் 56)

என்கிறது இன்னொரு கவிதை.

குழந்தைகள் பெற்று, அதனால் உடல் தளர்ச்சியுற்று, வயிற்றில் பிரசவக் கோடுகளுடன் இருக்கும் மனைவியின்மீது, அவள் உடலின்மீது அதிருப்தியுறும் கணவனைப் பற்றிய கவிதையாக “இரண்டாம் ஜாமத்துக் கதை” இருக்கிறது. தடயங்கள் இல்லாத காரணத்தால் ஆண் தப்பித்துக்கொள்கிறான் என்பதையும் கொஞ்சம் கடுமையாகச் சொல்கிறது இக்கவிதை. (நாவலுக்கான தலைப்பை சல்மா இங்கிருந்து எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் ஆண் வர்க்கத்தின் மேல் உள்ள கோபம்தான் அப்படியொரு போலியான சமுதாயத்தை உருவாக்கவும், “சுதந்திரமான” பெண்களை உருவாக்கவும் வைத்ததோ என்றுகூடத் தோன்றுகிறது).

இந்த கவிதைகள் காட்டும் உலகம் ரொம்பச் சுருங்கியது. ஆனால் சின்ன உலகத்தின் பெரிய வேதனைகள் இவை.

மின்சாரக் கம்பத்துடன்
சம்பாஷிக்கும்
ஒற்றைப் பறவையின்
நம்பிக்கையோடு (உனது புரிதல்களும் போதாமைகளும், பக்கம் 65)

என்று கூறுகிறார். இந்த படிமம் தரும் காட்சி பயங்கரமானது. பறவை மென்மையானது. மின்சாரக் கம்பியோ உயிரையே வாங்கிவிடக் கூடியது. எந்த கணத்தில் ‘ஷாக்’ அடிக்கும் என்று தெரியாது. அந்தக் கம்பியோடு பேசுவதன் மூலம் தன் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறது அந்தப் பறவை. ஆனால் மிகுந்த நம்பிக்கையோடு!

சுமய்யாக்களின் பெண்குறிகளில்
அம்பெய்து கொல்லும்
அபூஜஹில்கள்

என்று ஒரு கவிதையில் எழுதினார் ஹெச்.ஜி.ரசூல். அந்த வரிகளின் நீட்சியைப்போல அமைந்துள்ளது இந்த தொகுதி. தொகுதிக்கு வேறு தலைப்பு கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எளிமையான, அதே சமயம் ஆற்றல் மிகுந்த, அசாதாரண துணிச்சல் கொண்ட ஒரு முஸ்லிம் பெண் கவிஞராக சல்மா இருப்பது பெருமைப்படத்தக்கது. இந்த சல்மாதானா ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்ற நாவலை எழுதியது என்று எனக்கு வியப்பாகவே இருக்கிறது. மின்னஞ்சல் தவறாக இருக்கிறது என்று நினைக்கிறேன். raasathi@yahoo.com என்று இருந்திருக்க வேண்டும்.

அன்புடன்
நாகூர் ரூமி.


Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி