ஹாங்காங்கின் இலக்கிய வெள்ளி

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

சுகந்தி பன்னீர் செல்வம்



ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் 25-ஆவது கூட்டம்- இலக்கிய வெள்ளி- ஜூலை 13, 2008 அன்று அன்று ஹாங்காங் காட்சிக்கலை மையத்தில் நடைபெற்றது. டிசம்பர் 2001-இல் இலக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஹாங்காங்கில் துவங்கப்பட்ட இலக்கிய வட்டத்தின் கூட்டங்களில் தமிழ் இலக்கியத்துடன் பிறமொழி இலக்கியம், திரைப்படம், நாடகம், இசை, இணையம், ஓவியம், நாட்டியம், புலம் பெயர் வாழ்க்கை என்று பலவும் பேசப்பட்டு வருகின்றன. கடந்த ஆறரை ஆண்டுகளாக வட்டம் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. கூட்டங்கள் நடத்துவதோடு, வட்டம் சுமார் 80 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மடலாடற் குழுவையும் இயக்கி வருகிறது. வட்டத்தின் கூட்டங்களுக்கு இலக்கிய ஆர்வலர்கள் தொடர்ந்து வருகின்றனர். 25ஆவது கூட்டத்தை அமைப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

வரவேற்புரை நல்கிய திரு. எஸ். பிரசாத், தமிழ் மொழியின் சிறப்பு அதன் தொடர்ச்சியில் உள்ளது போல், ஹாங்காங் தமிழ் இலக்கிய வட்டத்தின் சிறப்பும், இதன் தொடர்ச்சியில்தான் இருக்கிறது என்று கூறி, வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த இலக்கிய அன்பர்களை வரவேற்றார். நிகழ்ச்சியை திருமதி ஆர்.அலமேலு ஒருங்கிணைத்தார்.

வாழ்த்துரைகள்:

இலக்கிய வட்டத்தை நிறுவிய திரு. எஸ். நரசிம்மன் தற்போது சென்னையில் வசிக்கிறார். அவர் ஆற்றிய சீரிய பணிகளுக்குத் தேர்ந்த முகவுரை கொடுத்து பின், அவரின் வாழ்த்து மடலை வாசிக்க திரு. ராஜேஷ் ஜெயராமனை மேடைக்கு அழைத்தார் அலமேலு. இலக்கிய வட்டக் கரு உருவாவதற்குக் காரணமான, தற்போதைய ஒருங்கிணைப்பாளர் திரு மு. இராமனாதனையும், வித்துக்குத் தொடர்ந்து தனது வருகையாலும், சிறந்த பேச்சுக்களாலும் நீரிட்டு, உரமிட்டு செழித்து வளரத் துணைபுரியும் திரு.செ.முஹம்மது யூனூஸ் அவர்களையும் நினைவு கூர்ந்திருந்தார் நரசிம்மன்.

அடுத்ததாக, இலக்கிய வட்டத்தின் சீரிய பேச்சாளர்களில் ஒருவரான திரு. ப. குருநாதன் வேலை நிமித்தம் வர இயலாது போன காரணத்தினால், அவர் அனுப்பிய வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டது. அதில் இடம் பெறும் அவரது வாழ்த்து வெண்பா இங்கே:
“தண்ணார் இலக்கிய வட்டம்மிக வாழியவே
விண்ணார் புகழ்கந்த வேளருளால் -பண்ணாரும்
வெள்ளிவிழா வாழி! உறுப்பினர்(கள்) வாழி! உயர்
தெள்ளுதமிழ் வாழி! செழித்து.”

நூல் வெளியீடு:

“இலக்கிய வெள்ளி”- ஹாங்காங் இலக்கிய வட்டம் இதுவரைநடத்திய 24 கூட்டங்களின் பதிவுகள், மு.இராமனாதனால் தொகுக்கப்பட்ட நூல் வெளியீட்டு விழா. நூலின் முதல் பிரதியை, திரு. செ. முஹம்மது யூனூஸ் வெளியிட, தமிழ் பண்பாட்டுக்கழகத் தலைவர் திரு.செந்தில்குமார் தலை வணங்கி பெற்றுக்கொள்ள, சீரும் சிறப்புடனும் வெளியிடப்பட்டது. யூனுஸ் பாய் தனது உரையில், கல் தோன்றி மண் தோன்றா காலத்தியது தமிழ்மொழி என்று கூறி, வேங்கடம் முதல் குமரி வரை தமிழ் பரப்பிய தமிழ் மன்னர்களை நினைவு கூர்ந்து, மிக்க தன்னடக்கத்துடன் தமிழ் பேசுவதைக் கேட்க, நல்ல பேச்சுகளைக் கேட்கத் தான் இலக்கிய வட்டத்திற்கு வருவதாகக் கூறினார்.

திரு.அ.செந்தில்குமார், நூல் மதிப்புரை ஆற்றினார். நூல் வெளியிட வேண்டிய அவசியம், அதன் உருவாக்கம், உள்ளடக்கம் என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு உரையாற்றினார். தன்னடக்கம் கருதியோ அல்லது ரகசியம் பேண வேண்டும் என்பதாலோ தமிழர்கள் தமது பெருமையைப் பறை சாற்றும் கருத்துக்களப் பிற்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ளவோ, பயன்பெறும் வகையிலோ ஆவணப்படுத்தாமல் விட்டு விட்டனர். அந்தப் போக்கிற்கு மாறானது இந்த நூல்.

‘இலக்கிய வெள்ளி’யின் உருவாக்கம் ஒரு கடுமையான பணி. திரு. இராமனாதனின் அயராத முயற்சியுடன் பல நண்பர்களின் உழைப்பால் உருவானது இது. பலரின் நினைவாற்றல், பழைய மின்னஞ்சல்கள், ஒலி நாடாக்களின் பதிவுகளிலிருந்து எழுத்தாக்கம், கணினியில் ஏற்றல், அச்சு வடிவமைப்பு, அட்டைப்பட அமைப்பு என அனைத்தும் பாராட்டப்பட வேண்டியவை எனக் குறிப்பிட்டார்.

இந்தத் தொகுப்பின் உள்ளமைப்பில் என்ன இல்லை என்று கேட்டால், எல்லாமே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். காப்பியங்கள், நீதிநூல், திருக்குறள், பக்தி இலக்கியம், நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள், புனைவு-அபுனைவு என இரண்டும், தகவல் கட்டுரைகள், புதுக்கவிதை, வாழ்வியல் அனுபவங்கள், உண்மை நிகழ்ச்சிகள், சமையல் கலை, திரைப்படங்கள், வேற்று மொழி இலக்கியங்கள், இணையம் பற்றிய செய்திகள் எனப் பட்டியல் நீண்டுள்ளது.

இந்தத் தொகுப்பு இலக்கிய வட்டத்தின் ஜனநாயக நோக்கை ( யார் வேண்டுமானாலும், எதைப்பற்றியும், அடுத்தவர் மனதைப் புண்படுத்தா வண்ணம் தெரிவிக்க உதவும் ஒரு மேடை ) முழுவதுமாக பிரதிபலிக்கிறது என்றார். பழமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலம் என்றார். வள்ளுவர் கால இறகிலிருந்து, மை எழுத்துக்களாகி இன்று கணிப்பொறி உலகப் படைப்புகள் வரை அனைத்தும் பேசப்பட்டுள்ளன. அட்டைப்படம் இதை பிரதிபலிக்கிறது; பின்னணியில் உள்ள சீன டேங்கிராம், சார்ந்த இடத்தினை சுட்டிக் காட்டுகிறது.

இந்த தொகுப்பு ஹாங்காங்கில் வெளியிடப்பட்ட இரண்டாவது தமிழ் நூலாகும். (முதல் நூல் ‘பயணி’ என்கிற திரு.எம். ஸ்ரீதரன் எழுதிய ‘சீன மொழி- ஓர் அறிமுகம்’ என்கிற நூல், இப்போது காலச்சுவடு பதிப்பகம் இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்கிறது).

கருத்துரைகள்

அடுத்தது உரைகல். “என்ன நினைக்கிறேன் நான் இலக்கிய வட்டம் பற்றி” என உரைத்துப் பார்க்க ஒன்பது பேர் மேடை ஏறினார்கள். பேசிய ஒன்பது பேச்சாளர்களும் இலக்கிய வட்டம், தூய தமிழில் பேசும் ஆர்வத்தினையும், நல்ல தமிழ் இலக்கியங்களை நாடும் உத்வேகத்தையும், பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதிலும் சிறந்த பணியாற்றி வருகிறது என்றனர்.

திருமதி. வித்யா ரமணி, உண்மையான, ஆழ்ந்த மொழிப்பற்றும், இலக்கிய ஆர்வமுமே ஊன்றுகோலாகக் கொண்டு, தமிழின் சிறப்பையும், அதன் வளமிக்க இலக்கியத்தின் மேன்மையையும் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்வதையே இலக்கிய வட்டம் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்றார்.

திரு.கே.ஜி.ஸ்ரீனிவாசன் ஏற்கனவே நடந்த கூட்டங்களில் அவர் மனதை விட்டு நீங்காத பல பேச்சுகளைக் குறிப்பிட்டு அவற்றின் தரத்தைப் பாராட்டினார். யூனுஸ் பாய் பேசுவதற்கு நிறைய நேரம் ஒதுக்கவேண்டும், பழந்தமிழ்க் காப்பியங்கள் பற்றி கூட்டங்களும், மின்னஞ்சல் கருத்துப் பரிமாற்றலும் அதிகரிக்க வேண்டும் என்றார்.

திருமதி சுகந்தி பன்னீர் செல்வம் இலக்கியம் என்பது சிறந்த வரலாறு மற்றும் வாழ்க்கைக் குறிப்பேடு. முன்னோர்களைப் பற்றி, அவர்களது வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ள உதவியுள்ளது. சிறார்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி என நடத்தி அவர்களை கூட்டத்திற்கு வரவழைக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்தார்.

திரு. ப. நடராஜன், ஒவ்வொரு கூட்டத்தின் முகப்பில் பத்து நிமிடங்கள் ஒதுக்கித் தமிழின் ஆற்றலை, தொன்மையை, வலிமையை வெளிக்கொணரல் வேண்டும் என்றார். ஒவ்வொரு பேச்சாளரும் வெவ்வேறுபட்ட தலைப்பில் ஆய்வு செய்வதைத் தவிர்த்து, திட்டமிட்ட ஒரே தலைப்பில் உரையாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திருமதி நளினா ராஜேந்திரன், இலக்கிய அன்பர்கள் ஒவ்வொருவரும் மேலும் ஒருவரை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார். இலக்கிய வட்டம் என்பது அறிவு ஜீவிகளின் பாசறை, அதில் சாதாரண மனிதனைக் கவரும் செய்திகள் கிடையாது என்ற தவறான அனுமானம் நீங்கி, தெளிவு பெறுவார்கள், தேடி வந்து பயன் பெறுவார்கள் என்றார்.

திரு. காழி அலாவுதீன் இணையம் தொடர்பான கருத்துக் குவியல்கள் மேலும் பல இருக்க வேண்டும் என்றார். தமிழ் அறிஞர்கள் பலர் ஹாங்காங் வந்தவண்ணம் இருக்கிறார்கள். செய்தி அறிந்து சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

டாக்டர் கீதா பாரதி தமிழ் மொழியின் தொன்மை பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகளைச் சமர்ப்பித்தார் . வழக்கொழிந்த பல நூறு மொழிகட்கு நடுவில் காலத்தை வென்று ஏறக்குறைய 3500- 5000 ஆண்டுகளைக் கடந்து உலக முழுதும் 800 லட்சம் மக்களால் பேசப்படும் ஒரே மொழி தமிழ் என்பது மறுக்கமுடியாத உண்மை ; இப்படி எத்திசையும் புகழ் பரப்பும் தமிழ் அணங்கின் வளர்ச்சி அதன் தொடர்ச்சிககுச் சான்று- பாரெங்கும் விரவி இருக்கும் தமிழ் சங்கங்களும், நம்மைப் போன்ற அடக்கமான இலக்கிய வட்டங்களும் ஆகும் என்றார்.

திருமதி.கவிதா குமார் இலக்கிய வட்டத்தின் மின்னஞ்சல் குழுவின் தேக்கத்திற்கு என்ன காரணம் என கேள்விக்கணை தொடுத்து, காரணங்களை அலச முற்பட்டு, மின்னஞ்சல் குழு மீண்டும் உத்வேகத்தொடு செயல்பட வேண்டும் என்றார்.

கடைசியாக திரு. கே.வி.ஸ்ரீனிவாசன் இன்றைய தினம் தனக்கு ஒரு விடிவெள்ளி என்றார். மின்னஞ்சலில் முன்பு பகிர்ந்து கொள்ளப்பட்ட சில கருத்துக்களால் வருத்தம் கொண்டு, இலக்கிய வட்டத்திற்கு வராமல் தவிர்த்ததாகவும், அதனால் இழப்பு தனக்குத்தான் என்றும், இழந்ததைத் திரும்பப் பெறப் போகிறேன் என்றும் கூறினார். இது அன்றைய தினத்தில் இலக்கிய வட்டத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டுதலாக எனக்குத் தோன்றியது.

பதிலுரை

திரு மு. இராமனாதன் 25வது முறையாக ஹாங்காங் இலக்கிய வட்ட மேடை ஏறினார்- இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ‘உரைகல்’ கருத்துக்களுக்கு பதில் அளித்து, நன்றியுரை வழங்குவதற்காக. 25 என்கிற இடத்தை அடைய ஆறரை ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும், நிறுத்தாத ஓட்டத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி கூறினார். நிறுவனர் நரசிம்மனை நினைவு கூர்ந்தார். குருநாதனின் வாழ்த்து வெண்பாவை பதம் பிரித்து அதன் சிறப்பைத் தெளியப்படுத்தினார். இலக்கிய வெள்ளி தொகுப்பு வெளிவர உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து நாஞ்சில் நாடனின் ‘நதியின் பிழையென்று நறும்புனல் இன்மை’ தொகுப்பு நூலில் இடம்பெறும் ஒரு கட்டுரையைப் பற்றிப் பேசினார். அதில் எழுத்தாளர் வண்ணதாசன் நாஞ்சில் நாடனுக்கு எழுதிய கடிதத்தில் அலுவலகமானது பச்சை இலைகளைக் கடித்து வைக்கிற நசுக்கூட்டான் மாதிரி, ரசனையின் பசுமையை தின்று விடுகிறது என்று எழுதுகிறார். இராமனாதன், இதை மேற்கோள் காட்டி, அலுவலகங்கள் நம்முடைய ரசனையை அரித்து விடுகிறது, நாம்தான் நமது இலக்கிய ஈடுபாட்டைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். இன்றைய இயந்திர வாழ்வில் முகவரி தொலைத்து நிற்கும் நம் அனைவருக்கும், இலக்கியம் முக்கியம் என்றார். இலக்கிய ஈடுபாடு நாம் நமக்காகவும் சமூகத்திற்காவும் செய்து கொள்ளும் ஒரு மேன்மையான காரியம் எனறார்.

பழந்தமிழ் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும்; ஹாங்காங் இலக்கிய வட்டத்தில் நடைபெற்ற உரைகள் தரத்தில் எந்த வகையிலும் தாய்மண்ணில் நடக்கும் சொற்பொழிவுகளுக்கு குறைவானவை இல்லை; குழந்தைகளுக்கான போட்டிகள் பற்றிய பரிசீலனை; ஏற்கனவே, உரை நிகழ்த்திய பதின்பருவத்தினரின் தரமான உரை; தற்சமயம் கூட்டங்கள் ஒரே தலைப்பைக் கொண்டிருந்தாலும், வெவ்வேறு கோணங்களைப் பிரதி பலிக்கிறது, ஒரே மையம் கொண்டு அலசப்பட்டால் ஆழமான கருத்துக்கள் பேசப்படும் சாதகம் உண்டு என ஆமோதித்து, அதைப்பற்றி பின்வரும் கூட்டங்களில் ஆலாசனை; தமிழ் அறிஞர்களின் வருகை பற்றி விவரம் தெரிந்தால், தெரியப்படுத்த விண்ணப்பம் என ‘உரைகல்’ கருத்துக்கள் பலவற்றுக்கும் பதிலளித்தார்.

இறுதியாக ஏன் இலக்கிய வட்டமும் தமிழ் பண்பாட்டுக் கழகமும் இணைந்து செயல் படக்கூடாது என்ற கேள்விக்கு, இலக்கிய வட்டத்தின் ஆதரவாளர்கள் பலரும் கழகத்தில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள், எனினும் பாலம் அமையவில்லை என்றார். அவர் சொல்லாமல் விட்டது, இரண்டின் இலக்கும் வேறு வேறு. நரசிம்மன் தனது உரையில் கூறி்பது போல், இலக்கிய வட்டம் ஒரு தேடலின் இயக்கம், தீவிரத்தன்மை கொண்டது. பொழுது போக்கு, களிப்பு கொண்டாட்டத்திற்கானது அல்ல. இந்த அகப்பொருளுக்கும் புறப்பொருளுக்கும் சம்பந்தப்பட்ட தனி மனிதனே பாலம் அமைக்க முடியும். இயக்கம் இருக்கிறது, தேடி வருவோரை வழிநடத்த.

வழக்கம் போல், யூனுஸ் பாய் நிகழ்ச்சியை நிறைவு செய்ய விருப்பம் தெரிவித்து, அவரை வாழ்த்தியவர்களுக்கு உளமார நன்றி தெரிவித்து, தான் பெற்ற பயனே பெரிது எனக் கூறி, இலக்கிய வட்டத்தை வாழ்த்தி மகிழ்ந்தார்.

இனிதே நிறைவேறிய வெள்ளி விழா, பொன் விழா நோக்கி புத்துணர்ச்சியுடன் வேக நடை போட வாழ்த்துக்கள்!

இலக்கிய வட்டத்தின் இணைய தளம்: http://www.ilakkyavattam.com

‘இலக்கிய வெள்ளி’ கூட்டத்தின் நிகழ்வுகளையும், இதில் நிகழ்த்தப்பட்ட உரைகளையும் படிக்க: http://www.ilakkyavattam.com/ilakkyavelli

****

suganthi61@yahoo.co.uk

******

Photo Caption 1: “இலக்கிய வெள்ளி” நூலின் முதல் பிரதியை, ஹாங்காங் தமிழ்ச் சமூகத்தின் மூத்த பிரமுகர் செ. முஹம்மது யூனூஸ் வெளியிட, தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் அ. செந்தில்குமார் பெற்றுக் கொண்டார். உடன் நூலின் தொகுப்பாசிரியர் மு இராமனாதன்.

Photo Caption 2: (இலமிருந்து வலம்) எஸ். பிரசாத், ராஜேஷ் ஜெயராமன், ஆர்.அலமேலு, அ.செந்தில்குமார், நூல் வெளியீடு, வித்யா ரமணி, கே.ஜி. ஸ்ரீனிவாசன், சுகந்தி பன்னீர் செல்வம், ப. நடராஜன், நளினா ராஜேந்திரன், காழி அலாவூதீன், கீதா பாரதி, கவிதா குமார், கே.வி.ஸ்ரீனிவாசன், மு. இராமனாதன், செ.முஹம்மது யூனூஸ்

Series Navigation

சுகந்தி பன்னீர் செல்வம்

சுகந்தி பன்னீர் செல்வம்