எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 31 பேராசிரியர் கல்கி

This entry is part of 31 in the series 20080807_Issue

வே.சபாநாயகம்1. சிறுகதை என்ற உடனேயே அதில் ஒரு கதை இருக்க வேண்டும், அது சின்னதாகவுமிருக்க வேண்டும் என்று ஏற்படுகிறது.

கதை என்றால் என்ன? ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தனாம் என்று பாட்டி சொன்ன உடனேயே ‘உம், அப்புறம்’ என்று குழந்தைக்குக் கேட்கத் தோன்றுகிற தல்லவா? இம்மாதிரி ‘அப்புறம் என்ன?’ என்று தெரிந்து கொள்வதில் நமக்கு ஆவலைக் கிளப்பக்கூடிய முறையில், ஏதாவது நடந்த சம்பவத்தையோ அல்லது நடக்காத சம்பவத்தையோ சொன்னால், அதுதான் கதை. சரி, சிறுகதை என்றால் எவ்வளவு சின்னதாக இருக்க வேண்டும்? அது அந்தக் கதையின் போக்கையே பொறுத்தது.
சிறுகதையின் முக்கியமான அம்சம் அதில் ஒரு பிரதான சம்பவம்தான் இருக்க வேண்டும். அந்த சம்பவத்தை வெறும் வளத்தல் இல்லாமல் வேறு சம்பந்தமற்ற விஷயங்களுக்குப் போகாமல் நேரே நெடுகச் சொல்லிக்கொண்டு போனால், அது நாலு வரியிலிருந்தாலும் சிறுகதைதான். நாற்பது பக்கங்கள் வந்தாலும் சிறுகதைதான்.

2. பொழுதுபோக்கிற்காகப் படிப்பதுடன் பயனுக்காகவும் படிக்க வேண்டும். படித்த
பயன் எழுத்தில் தெரியவேண்டும். எதையும் எதிர் பார்த்தால்தான் துல்லியமாக இருக்கும். எழுத எழுதத்தான் சிந்தனை தெளிவடையும்.

3. பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும், சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனுடைய கஷ்டத்தைப் பற்றியும் என்னதான் கண்ணீரில் பேனாவைத் துவைத்துக் கொண்டு எழுதினாலும் அந்தக் கதைகளில் மற்ற எல்லாச் சிறுகதை இலக்கணங்களும் இருக்கலாம்; உள்ளத்தை ஊடுருவித் தைக்கும்படியாக இதயம் ஒன்றிய ஈடுபாடு இருப்பதில்லை.

4. எதை எழுதினாலும் அதை நாலு பேர் போற்றவாவது வேண்டும் அல்லது தூற்றவாவது வேண்டும். இரண்டுமில்லை என்றால் எழுதுவதைவிட எழுதாமல் இருந்து விடலாம்.

(இன்னும் வரும்)

Series Navigation