வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் ” ஓடும்நதி ” படைப்புலகம்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

கீரனூர் ஜாகிர்ராஜா



தமிழ்ப் புதினங்கள் இன்றைய நிலை ஆரோக்கியமானதாகவும் நம்பிக்கையளிக்கக் கூடிய விதத்திலும் இருக்கிறது. வெவ்வேறு இலக்குகளில் சுற்றிச்சுழன்று மானுட வாழ்வின் சகல கூறுகளையும் அவதானித்து வாசகனுக்கு ஒரு பரந்த அனுபவப் பரப்பினை அவை தரிசிக்க வைக்கின்றன. சமகாலப் படைப்பாளிகள் பலரும் தொடர்ச்சியாக எழுத தமிழ்ப் புதினப் பாதையை žராக்கித் தந்துள்ளனர்.

சுப்ரபாரதிமணியன் திருப்பூரை வாழ்விடமாகக் கொண்டு தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 1970-களில் சுகாதாரமான பூமியாக இருந்த திருப்பூர் நகரில் பனியன் கம்பெனிகள் துளிக்கத் தொடங்கியபோது அடித்தள மக்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஓரளவு தீர்வு கிடைத்தது. ஒன்றிரண்டாகப் பெருகிய கம்பெனிகள் ஒரு கட்டத்தில் திகைப்புக்குரிய அளவில் வளர்ச்சியுற்று நகரத்தையே வசப்படுத்திவிட்டன. விவசாயம் அழிந்தது. விளைநிலங்கள் வணிக வளாகங்களாயின. நொய்யலாறு கழிவுகளின் பிறப்பிடமாயிற்று. தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திருப்பூருக்கு புலம் பெயர்ந்தனர். இவர்களுடன் வெளிமாநிலத்தவர்களும் இணைந்தனர். இடநெருக்கடி, குடிநீர்ப் பஞ்சம், சுற்றுச்சூழல் மாசுகள் அதிகரித்தன. திருப்பூர் நகரம் திக்கித் திணறிற்று. கம்பெனிகளோ சிப்டுகளை அதிகப்படுத்தின. தாலி கிடைத்துவிடுமெனும் நம்பிக்கையில் பனியன் கம்பெனியின் கொட்டடிகளில் இளம்பெண்கள் சுமங்கலித்திட்டம் என்ற வருடாந்திர ஒப்பந்தங்களின் பெயரில் அடிமைப்பட்டனர். சமூக அக்கறையாளர்கள், தன்னார்வலர்கள், இலக்கியவாதிகள் இதன்மேல் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். சுப்ரபாரதிமணியன் இவர்களுக்கிடையில் தன் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்து கொண்டிருப்பவர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இவரின் ” தேநீர் இடைவேளை ” என்னும் நாவல் திருப்பூர் நகரத்தின் பிரச்சனகளையும், கோவை மாவட்டத்தின் தொழிற்சங்க வரலாறையும் வாசகர்களுக்கு நெருக்கமாக அறிமுகம் செய்த படைப்பு. அந்நாவல் முழுவதும் கடிதங்களே இடம் பெற்றிருந்தன. ” ஓடும்நதி” என்னும் இந்நாவலிலும் கடித உத்தியை பயன்படுத்தி நாவலின் ஒரு பகுதியை நகர்த்துகிறார் சுப்ரபாரதிமணியன்.

செல்வன்- செல்லம்மிணி இருவரின் நட்பு கடிதங்களின் வழியே விரிகிறது. செல்லம்மிணி தன் தந்தையுடன் கொங்குமண்டலத்தின் உள்ளொடுங்கிய கவுண்டர் இனத்தின் ஆதிக்கப் போக்குமிக்கதொரு கிராமத்தில் வசிக்கிறாள். தண்­ர் பிரச்சனை, காமுகர்களின் வெறியாட்டம் இவர்களை கம்பெனிக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. பவர்லூம் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறாள் செல்லம்மிணி. தலைக்கு குளித்த ஜந்தாம் நாள் அயர்ந்துறங்கும் வேளையில் பழைய பாத்திரக்காரனால் பலாத்காரத்துக்குள்ளாகிறாள். மீண்டும் கம்பெனி வேலைக்கு செல்கையில் செல்வனை சந்திக்கிறாள். கம்பெனியில் சொக்கன் என்பவனுடன் நெருங்கிப் பழகி செகந்திராபாதுக்கு அவனுடன் சென்று மூன்று மாதகாலம் சேர்ந்து வாழ்கிறாள். சொக்கன் பிரிகிறான். அப்பாவின் முகத்தில் விழிக்க சங்கடப்பட்டு சித்தப்பாவிடம் அடைக்கலமாகிறாள். சித்தப்பா சிறிது காலம் அவளுக்கு ஆதரவளித்து மீண்டும் அவளை அவளின் தந்தையிடம் ஒப்படைக்கிறார். கால் சூம்பிய ரங்கண்ணனிடம் செல்லம்மிணியை சேர்ப்பித்துவிட்டு அவரும் மரணிக்கிறார். தன்னை சிதைத்த பாத்திரக்காரனை அவள் மீண்டும் சந்திக்க நேர்கிறது. அவன் அவளை மீண்டும் žண்டுகிறான். குழப்பத்தினூடாக உள்ளூர் வக்கீல் ஒருவரிடம் வேலைக்குச் செல்கிறாள். கல்வியறிவில்லாத பலருக்கு கடிதம் எழுதிக்கொடுத்து மனநிறைவடைகிறாள். இதற்கிடையில் நாகாலாந்திலிருந்து திரும்பும் செல்வன் மல்லிகா என்பவளைத் திருமணம் செய்துகொண்டு உள்ளூரில் தமிழ்வழிக்கல்விப் பாடசாலை தொடங்கி நடத்துகிறான்.

இந்த நெடுங்கதையினூடாக மேரி என்னும் பாவப்பட்டவளின் கிளைக்கதையும், செகந்திராபாத் ஜுலியின் கதையும் நாவலில் இடம்பெறுகின்றது. செல்லம்மிணி என்னும் குணசித்திரத்தின் வாயிலாக அல்லலுறும் பெண்ணின் ஆன்மாவை வாசகர்களுக்கு தரிசிக்கத் தருகிறார் சுப்ரபாரதிமணியன். நம் தேசத்து புறக்கணிக்கப்பட்ட பெண்களின் ஒட்டுமொத்தப் பிம்பம்தான் செல்லம்மிணி. வல்லரசு ஆகப்போகும் தருணத்திலும் ஊருக்கு ஊர் கிராமத்துக்கு கிராமம் செல்லம்மிணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதும் வன்முறைக்குள்ளாகின்றனர் என்பதும் கசப்பான நிஜமாகி நம்மை கலவரப்படுத்துகின்றது.

சுப்ரபாரதிமணியனின் முந்தைய படைப்புகளிலிருந்தும் ” ஓடும்நதி “மாறுபட்டு வேறுவேறு திசைகளில் பரவிப் பாய்ந்து செல்கிறது. பல நேரங்களில் ஒரு தேசாந்திரியின் பயணக்குறிப்புகளைப் போலவும் சில நேரங்களில் ஒரு துயர நாடகத்தைப் போன்றும் பிறிதொரு சமயத்தில் ஒரு பேரிலக்கியத்தின் நுண்ணிய கூறுகளுடனும் “ஓடும்நதி”கண்ணாமூச்சி காட்டுகிறது. கதைச் சம்பவங்கள் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர் என ஸ்தலங்கள் மாறி நிகழ்ந்து ஓய்கின்றன. நாகாலாந்த், கவுஹாத்தி, அசாம் மலைப்பகுதி நிலக்காட்சிகள், அம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள் மிகுந்த சிரத்தையுடன் ஆசிரியரால் அவதானிப்புக்குள்ளாகியுள்ளன.

காட்டெருமையை வேட்டையாடி அதன் தலையைக் கொய்து வருபவரை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுதல், புராதன கட்டிடமொன்றில் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கி விரும்புகிறவர்களுடன் தங்கு தடையற்ற பாலுறவு கொள்ளுதல், மரணைத்தவரின் உடலைப் புடைக்காமல் எரியும் அடுப்புக்கு மேலே கட்டித் தொங்கவிட்டு அது வெந்து வடியும் நிணத்தை உடம்பில் பூசிக்கொள்வது என்று மலைவாழ் மக்களின் வினோத சடங்குகள் நம்பிக்கைகள் நாவலாசிரியரால் நுட்பமாக விவரிக்கப்படும் பொழுது அதிர்வும் பீதியுமான வாசக அனுபவத்துக்குள்ளாக முடிகிறது. ” ஓடும்நதி ” சுப்ரபாரதிமணியனின் பெரும் பயணத்துக்கான வெள்ளோட்டம்.

ஒடும் நதி (நாவல்)
சுப்ரபாரதிமணியன்
விலை-150/- வெளியீடு: அம்ருதா
பக்கம் – 336. எண்.5. 5வது தெரு,
எஸ்.எஸ்.அவென்யூ, சக்தி நகர்,போரூர்,
சென்னை-11

======================================================================
அனுப்பியவர்:issunderakannan7@gmail.com
======================================================================
The wrapper is available at viruba.com ( subrabharathimanian )

Series Navigation

கீரனூர் ஜாகிர்ராஜா

கீரனூர் ஜாகிர்ராஜா