புதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள்

This entry is part of 26 in the series 20080703_Issue

டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன்


தேடல் களம்
அறிவுலகத்தால் போற்றப்படும் ஒருசில செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது பெருமிதத்துக்கு உரிய ஒன்று. தமிழ்மொழிக்கு இதையும் மீறிய ஒரு தனி சிறப்பு உண்டு. பிற செம்மொழிகள் பெரும்பாலும் வழக்கொழிந்துள்ள நிலையில் தமிழ் இன்றும் வாழும் மொழியாக விளங்குகிறது. உயிர்ப்புள்ள இலக்கியப் படைப்புகளின் களனாக இலங்குகிறது. இரண்டாயிரம் ண்டுகளுக்கும் முந்தைய பண்டைய இலக்கிய மரபின் தொடர்ச்சியாக, பல மாற்றங்களை காலந்தோறும் உள்வாங்கி, தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, இன்னும் புதிய வளர்ச்சிகளுக்கு வழி வகுத்துக்கொள்ளும் பாங்கில் தமிழ்மொழி இயங்கிவருகிறது. இந்தப் பின்புலத்தில், இன்றைய தமிழ் இலக்கியக் களனில், ‘புதுக்கவிதை’என்று அறியப்படும் ஒரு பகுதியில் பண்டைய கவிதை இயலின் ஒரு சில கூறுகளை மேலெழுந்தவாரியாக இனம் காணும் ஒர் எளிய ழுயற்சிதான் இக்கட்டுரை.

தமிழ் மொழியின் இந்த நிலைத்த தன்மைக்கும், இடையறாத தொடச்சிக்கும் அடிப்படைக் காரணியை அடையாளங் காணுதல் சுவையான ஒரு தேடல். ‘விருந்தேதானும் புதுவது கிளர்ந்த யாப்பின் மேற்றே’ என்ற தொல்காப்பிய நெறியை இந்தத் தேடலுக்கு விடையாக வரித்துக் கொள்ளலாம். யாப்பு காலந்தோறும் தன்னைப் புதுபித்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளதாய் இருத்தல் வேண்டும் என்பதை மட்டும் இதனைக் கொள்ளக்கூடாது என்பது என் கருத்து. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’என்ற பரிணாமக் கட்டாயத்தை உணரும் விவேகமே இதன் சாரம். இந்த அடிப்படையில்தான் தமிழ் இலக்கிய மரபு பல நூற்றாண்டுகளாகத் தன்னைப் புதுபித்துக் கொண்டுப் பரிணாம வளர்ச்சிக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டுள்ளது. ‘மரபு’ என்ற சொல்லின் வேர்ச் சொல் ‘மருவு’. ‘மருவு’ என்றால் மாறுதல் என்ற பொருளும் உண்டு. மாறுதல் என்ற இயங்குவிதியை சூல்கொண்ட கருதுகோள்தான் ‘மரபு’ என்பது மரபு பற்றிய ரோக்கியமான புரிதலுக்கு வழிவகுக்கும்.

பண்டைய இலக்கண/இலக்கிய மரபுக்கும் இன்றைய படைப்பிலக்கியக் களனுக்கும் உள்ளே நிலவும் தொடச்சியையும், புதுப்பித்தலையும் அடிகோடிட்டுக் காண்பிக்கும் முயற்சி இது. இதற்கு உதவும் பாங்கில் சில முக்கிய இலக்கிய மரபுக் கூறுகளைத் தொட்டுச் செல்ல விரும்புகிறேன். அகம்/புறம் பிரிவு; திணைக்கோட்பாடு; நோக்கு; உள்ளுறை உவமம்; இறைச்சி; தலைவன்/தலைவி பண்புக் கூறுகள்; புதுப்புலன்கள் – இவற்றைத் தழுவிய கூறுகளை இந்தத் தேடலின் அங்கங்களாகத் தேர்வு செய்துள்ளேன்.

இன்றைய தமிழ் இலக்கியக் களனில் உரைநடை இலக்கியம் முன்னுரிமை பெற்று விளங்குவதை நாம் காணமுடிகிறது. அதே நேரத்தில் ‘புதுக்கவிதை’ என்ற இலக்கிய வடிவம் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டு வருகிறது. பண்டைய தமிழ் இலக்கிய/இலக்கண மரபு அடிப்படையில் கவிதை சார்ந்தது; செய்யுள் சார்ந்தது. எனவே இந்த மரபு நீட்சியை இனம் காணும் முயற்சியில் இன்றைய கவிதைக் களம் எவ்வாறு செயல்படுகிறது? எவ்வாறு பண்டைய மரபுக் கூறுகளை உள்வாங்கிக் கொண்டுள்ளது அல்லது மாற்றியுள்ளது என்பதைக் காண்பது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
அகம்,புறம்
முதலில் அகத்திணை, புறத்திணைக் கூறுகளைக் காணலாம். ‘அகம்’,’புறம்’ என்ற வேறுபாடு ஒரு வகைப்பாட்டியல் ரீதியான செளகரியம் Taxonomic convenience என்று ப்ரம்மராஐன் குறிப்பிட்டு இருப்பது கவனத்திற்குரிய ஒன்றாகும். பொதுவாக அகத்திணை என்பது காதலையும், பிரிதலையும் பின்பு புணர்தலையும் சுட்டுவதாகவும். புறத்திணை என்பது போரையும் போர் சார்ந்த நிகழ்வுகளையும் வெளிபாடுகளையும் குறிப்பதாகவும் இம்மரபு சார்ந்த ஒரு புரிதல் உண்டு. இப்படிப்பட்ட ஒரு வரையறையை அகத்திணையையும், புறத்திணையையும் கட்டிறுக்கமான சிமிழ்களுக்குள் குறுக்கும் அணுகுமுறையாகக் கொள்ளலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பரந்த கண்ணோட்டத்துடன் பார்த்தல். இன்றைய இலக்கிய வெளிப்பாட்டிலும் கூட அகமும் புறமும் அடிப்படைக் கூறுகளாக விளங்குவதை நாம் காணலாம். ஆனால் இது ஒரு புதிய ‘அகம்’, புதிய ‘புறம்’. இந்த அகத்துக்கும் புறத்துக்கும் உள்ள வரையறை பரந்துபட்டது. நெகிழ்வுத்தன்மை உடையது. இந்த அகம் ஒரு தனி மனிதனின் தன்நிலைப்பட்ட பிரச்சினைகளையும், உள்மன அழுத்தங்களையும், ழ்மனதில் நிழலாடும் அதிர்வுகளையும் குறிப்பதாகக் கொள்ளலாம். எனினும் ஒரு வரையறை என்ற முறையில் இந்த அகத்தின் எல்லையைத் தனிமனிதப் புள்ளியிலிருந்து மீறி அந்த தனிமனிதனைச் சார்ந்த ஒரு வட்டத்தையும் உள்ளடக்கியதாகக் கொள்ளலாம். உதாரணமாக அவன் சார்ந்த கருக் குடும்பத்தை. புறம் என்பது அவன் வாழும் வாழ்வுச் சூழல், சமூகச்சூழல், சமூகக் கட்டமைப்பு, பொருளாதார உறவுகள், உற்பத்தி உறவுகள்/கட்டமைப்புகள், அவற்றின் தாக்கங்கள், சுற்றுச்சூழல் காரணிகள், சமுகத்தில் நிகழும் உரசல்கள், போராட்டங்கள் இவை அனைத்தையும் தழுவிய ஒன்றாக புறத்தைக் காணலாம். னால் இந்த அகமும் புறமும் ஏதோ தனித்து இயங்கும் ஒன்றுடன் ஒன்று உறவு இல்லாத அகம் இல்லை. இந்தப் புரிதலுடன் அணுகினால், புதுக்கவிதை என்று கூறப்படும் கவிதைக்களனில் இந்த அகமும் புறமும் ஆட்சி செலுத்துவதை நம்மால் காண முடிகிறது.

முதலில் அகம் சார்ந்த ஓரிரு பதிவுகள். வண்ணநிலவனின் ‘திமூலம்’ என்ற பெயர் கொண்ட கவிதை. இதன் ஊடாக ஒர் ன்மீகச் சரடை நம்மால் தரிசிக்க முடிகிறது.
இதோ கவிதை:
‘என்னைப் பிட்டேன்
உலகமாயிற்று
உலகத்தைப் பிட்டேன்
நானானேன். . . . . . . . . . . . . . . . . ‘

அடுத்தது, சுப்பிரமணிய ராஜூவின் ‘கிழம்’ என்ற ஒரு கவிதை.
‘நேற்றையக் கவலையில்
இன்றைய காலையும்
இன்றைய மாலைக்கு
பிற்பகல் நினைவும்
நாளையப் பயத்தில்
இன்னொரு இரவையும்
கழித்தே நாட்களைக்
கடத்திய பின்
எண்ணிப் பார்த்தால்
‘எழுவத்தி நாலு’

எளிமையான பதங்களைக் கொண்ட இந்தக் கவிதையில் தொனிக்கும் தங்கம் நம் பலரில் உள் அதிர்வுகளை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

புற உலகு பற்றிய புதுக்கவிதைப் படைப்புகளில் சில உரத்த குரலில் பதிவாகி உள்ளனதான். அவற்றை விடுத்து எளிய பொருளில், எளிய சொற்களில் உள் உணர்வுகளைத் தொடும் பாங்கில் படைக்கப்பட்டுள்ள இரு கவிதைகள்.

சுற்றுச்சூழல் இன்று பெரிதாகப் பேசப்படும் பிரச்சினைகளில் ஒன்று. இந்தப் பிரச்சினை குறித்து சிலர் கோஷங்களையும், பிரகடனங்களையும் பதிவு செய்துள்ளனர். னால் ஒரு எளிய நிகழ்வுப் புள்ளியைச் சுற்றி வரையப்பட்ட நுண்ணுணர்வுகளின் ஒலியாக உள்ள மு. சத்தியாவின் ‘வார்த்தைகளோடு வாரப்பட்டுவிட்ட மணல்’ என்ற கவிதை இதோ:
‘இம்முறையும் பாலத்தைக் கடக்கையில்
கண்ணில் நீர் திரையிட்டது.
வறண்டுவிட்ட நதியின்
எஞ்சியிருந்த மணலும் வாரப்பட்டு விட்டது,
அம்மணற்கரையில்தான் நாம்
நம் வார்த்தைகளையிட்டு
மணலுக்குள் மூடிவைத்திருந்தோம்.
இந்நேரம் அவ்வார்த்தைகள்
ஏதோ ஒர் வீட்டின் சுவர்களுக்கிடையே
சிமெண்ட் கலவையால் அறையப்பட்டு
இறுகிப் போய் கிடக்கும்
அழகான மேல் பூச்சுடன்.
தாகத்தைத் தணிக்க
ஒரு குடம்
நீரூற்ற எவருமின்றி
அருகிப்போன ஊற்றுகள் இவற்றோடு
அகண்டும் ஆழ்ந்தும் நெளிந்தும். . . .
முடிவின்றி போய்க்கொண்டிருக்கிறது ஆறு
இழப்பின் வலிமையைச் சுமந்து கொண்டு
தன் சுவட்டைத்தானே அழிக்கத் தெரியாமல்’.

தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதுதான். ஆனால் பலவழிகளில் பல செயற்பாடுகள் மூலமாக இந்த அவலம் இன்றும் நிலவி வருகிறது. இது குறித்து காரமான வார்த்தைகளால் உள் உணர்வுகளைச் சினப்படுத்தும் வகையில் பல பதிவுகள் உள்ளன.
மு. முருகேஷ் எழுதியுள்ள ஒரு கவிதையில் ஒரு சிறிய எள்ளலுடன் இந்தப் பிரச்சினை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது:
‘ஒன்றே குலம்’ என்ற முருகேஷ் கவிதை இதோ.
‘எங்களூரில்
கீழத்தெரு, மேலத்தெரு கிடையாது.
டீக்கடைகளில்
இரட்டை கிளாஸ் இல்லை.
தேரோடும் வீதியில்
செருப்பணிந்து செல்லலாம்.
பொதுக் கிணற்றில்
நீரெடுக்கலாம்.
எங்களூரில்
வேறு யாருமேயில்லை. . . . . .
எங்க சாதி சனத்தைத் தவிர’

கவிதைப் படைப்புத் தத்துவம்
புதுக்கவிதையில் ஆழ்ந்துள்ள கவிதைத் தத்துவம்; எழுத்துக்கும், சொற்களுக்கும், கவிதைக்கும் உள்ள உறவு; கவித்துவத்தில் சொற்களின் சாத்தியக் கூறுகளைப் பற்றிய கூரிய பிரக்ஞை. பொருளார்ந்த கரிசனை- இந்தக் கூறுகள் இத்தறையில் தீவிரமான ஈடுபாடுடைய பலரின் பொறுப்புள்ள கவனத்தை ஈர்த்துள்ளன. கவிதை படைப்பது ஓர் அர்ப்பணம் சார்ந்த ஈடுபாடு என்பதைச் சுந்தர ராமசாமியின் கவிதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. ‘எழுத்தின் ரகசியம்’ என்ற தலைப்புள்ள கவிதை இதோ:
‘பெண்ணே,
உன் கடிதம்.
எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்காதே.
எழுது,
அதுவே அதன் ரகசியம்.

எழுது,
எவர் முகமும் பாராமல்
உன் மனம் பார்த்து.
உன் தாகம் தீர்க்க
நதியிலிருந்து நீரைக்
கைகளால் அள்ளுவது போல்
கண்டுபிடி உன் மன மொழியை.

மார்புக் கச்சையை முற்றாகக் விலக்கி
காலக் குழந்தைகளுக்குப் பாலுட்டு

உனக்கும் உன் அனுபவங்களுக்குமிடையே
ஆடைகளை முற்றாகக் களைந்து
அம்மணம் கொள்.

புகை மூட்டத்தைப் புணர்ந்து
மெய்மையைப் பேரானந்தத்துடன் கருத்தரி.

எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்காதே
எழுது
அதுவே அதன் ரகசியம்’

(அடுத்த இதழில் முடியும் )


Series Navigation