ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம் – இலக்கிய வடிவங்கள்

This entry is part of 26 in the series 20080626_Issue

சுகந்தி பன்னீர் செல்வம்


சுகந்தி பன்னீர் செல்வம்

ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் 24ஆவது கூட்டம் ஏப்ரல் 20, 2008 ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்றது. “இலக்கிய வடிவங்கள்” என்ற தலைப்பின் கீழ் கவிதை, உரைநடை, திரைப்பாடல்கள் மற்றும் இணையதளம் ஆகிய வடிவங்களைப் பற்றி நான்கு பேச்சாளர்கள் உரை நிகழ்த்தினர்.
டிசம்பர் 2001-இல் இலக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஹாங்காங்கில் துவங்கப்பட்டது “இலக்கிய வட்டம்”. கூட்டங்கள் நடத்துவதோடு, வட்டம் சுமார் 80 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மடலாடற் குழுவையும் இயக்கி வருகிறது. வட்டத்தின் கூட்டங்களுக்கு இலக்கிய ஆர்வலர்கள் தொடர்ந்து வருகின்றனர்.  
திரு.எஸ். பிரசாத் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அவர் தனது முகவுரையில் கதைப் பாடல்களில் ஆரம்பித்த தமிழ் இலக்கியம், பின் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பதினாறு சொற்களைக் கொண்ட பாடல்களாக, அதற்குப்பின் நான்கு வரித்துண்டங்களாக, பிற்பாடு அச்சு- தாள் என்று வந்த பிறகு உரைநடையாக, கட்டுரைகளாக, சிறுகதைகளாக, புதினங்களாக, விமரிசனங்களாக, இசைப் பாடல்களாக, புதுக்கவிதையாக, மின்னணு உலகில் இணையதளத்தில் உலவி வரும் வரையறுக்கவல்லாத பல வடிவங்களாக உருவெடுத்து வருவதை எடுத்துரைத்தார் 
“கவிதையின் தடங்கள்” என்ற தலைப்பில் திரு.அ. செந்தில் குமார் முதலில் உரையாற்றினார். அவர் கூறியதில் சில இங்கே:
கவிதை என்பது செய்யுளாக ஆரம்பித்து, காலவடிவில் பா என்றும், கவிதை என்றும்  பெயர் பெற்று இன்று புதுக்கவிதை என்றும் உருப்பெற்றிருக்கிறது. முதற் சங்க, இடைச் சங்க இலக்கியப் படைப்புகளைக் கடல்கோள் கொண்டு விட்டதாகவும், இன்று நிலைத்து நிற்பது கடைச் சங்க நூல்கள் மட்டுமே என்று சொல்லப்படுகிறது. அகத்தியம் தொல்காப்பியத்திற்கு முந்தைய நூல் என்று  பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அந்நூல் கிடைக்காத காரணத்தால், தமிழ் மொழியின் முதல் இலக்கணமாககத் தொல்காப்பியம் கருதப்படுகிறது. தொல்காப்பியம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. செய்யுள் வடிவாக இருந்த தமிழ் மொழிக்கு, வரையறுக்க அமைக்கப்பட்ட கரைதான் தொல்காப்பியம்.
பின்னால் வந்த அனைத்து செய்யுட் பாக்களும், காப்பியங்களும் தொல்காப்பியரின் இலக்கண முறையையே பின்பற்றி  வந்ததை மேற்கோள்களுடன் எடுத்துக் கூறினார். பதினென்மேற்கணக்கு என்று தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை, பத்து பாட்டு் ஆகட்டும்; பதினென்கீழ் கணக்கு என்று அழைக்கப்படும் திருக்குறள், நாலடியார், திருகடுகம் என்பவை ஆகட்டும், அனைத்துமே ஓசை பொருந்திய, இலக்கணத்தை தழுவிய படைப்புகள். எட்டுத் தொகையில் அகநானூறும், புறநானூறும் அடங்கும். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை  போன்ற இறைவழிப்பாடல்களும், சிறுபாணாற்றுப்படை போன்ற தளவழிப்பாடல்களும் அடங்கும். 
பின்வந்த காப்பியங்களான சிலப்பதிகாரம் இல்லறம் மற்றும் ஊழ்வினை பற்றியது ; மணிமேகலை கொடையின் சிறப்பையும் துறவறத்தின் பெருமையையும் பற்றியது ; சீவகசிந்தாமணி போர்முறைகளைப் பற்றியது. வளையாபதி மற்றும் குண்டலகேசி பொருளறம் மற்றும் இல்லறம் பற்றியது.ஆக இவையனைத்தும் அகம்-புறம் ஆகிய இரண்டு கருத்துக்களையும் கொண்ட படைப்புகளாகும். 
20 ஆம் நூற்றாண்டில், மரபின் தோள்மீது ஏறி, புதுமை என்ற பூக்களைப் பறித்தவர் பாரதியார். விடுதலை, சுதந்திரம், மொழிவேட்கை என்ற புது வசந்தத்தினை கருப்பொருளாக கவிதையினுள் நுழைத்தவர். பாரதிதாசன் மதமறுப்பு, கடவுள் மறுப்பு, ஜாதிமறுப்பு என்று மேலும் பல புதுமைக் கருத்துக்களை  மக்களிடம் எடுத்துச் செல்லும் கருவியாக தமது கவிதைகளை ஆக்கியவர். சில புதுக்கவிதை உதாரணங்களைச் சொல்லித் தன் உரையை முடித்தார் செந்தில்குமார்.  
அடுத்துப் பேசிய ராஜேஷ் ஜெயராமன்  “திரைப்பாடல்களில் இலக்கியம்” என்ற தலைப்பில் சாதாரண மனிதனை விரைவாகச் சென்றடையும் வாகனம் திரைப்பாடல்கள் என்றார். இங்கு சில மேற்கோள்கள் அவரது பேச்சிலிருந்து:
‘திருவாசகத்திற்கு உருகாதோர் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பதைக் கண்ணதாசன் ஒரு பாடலில் “கன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம்’ என்று பாமரனும் திருவாசகக் கருத்தை உணர்ந்து கொள்ளும் விதமாகச் சொல்கிறார். ஓசை நயத்திற்கு எடுத்துக்காட்டாக அந்தாதி வரிசையில் அமைந்த “வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்” பாடல். கம்பராமாயணத்தின் ‘பிரிந்தவர் கூடினால்’ என்பதின் எதிரொலியே “பிரிந்தவர் மீண்டும் … பேச மறந்து சிலையாய் நின்றால்” என்றும்; ‘யாயும் யாயும் யாராயினரோ’ என்ற காதல் மொழியே “நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ ” என்றும்; “நதியின் பிழையன்று” என்ற கம்பராமாயணக் கருத்தே ‘தியாகம்’ படப்பாடலான “நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை , விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா” என்றும்; கீதையின் தத்துவமே “ஆட்டுவித்தார் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா…உள்ளத்தில் உள்ளது தான் உலகம் கண்ணா …இதை உணர்ந்து கொண்டால் துயரமெல்லாம் தீரும் கண்ணா” என்றும்; பட்டினத்தாரின் தத்துவப் பாடலின் பிரதிபலிப்பே “வீடு வரை உறவு ,வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ” என்றும், மனதில் நீங்காமல் நின்ற சுவையான பல பாடல்களை மேற்கோளாகக் கையாண்டார்.
அடுத்ததாக “வையக வலையில் வீடியோ ; இணையத்தில் ஜனநாயகம்” என்ற தலைப்பில் பேசினார் திரு. அ. சுவாமிநாதன். தொலைத்தொடர்பு சுலபமாகி விட்ட காலத்தில், இணையதளம் அனைவராலும் கையாளப்படும நேரத்தில் கருத்துப் பரிமாற்றம் உலகின் எந்தக் கோடியாக  இருந்தாலும் ஒரு கண நேரமே! இது மனித உறவுகளை விரிவுபடுத்தும்; உரிமைகளை எடுத்துரைக்கும்; முழு கருத்துச் சுதந்திரம் பெற்றிருப்பது இங்கு தான். 45 சதவிகித மக்கள் கண்டுகளித்திடும் “யூ டியூப்” என்பது தற்சமயம் 78 மில்லியன் விடியோ படங்களை தன்னகத்தில் கொண்டுள்ளது.
இந்த “யூ டியூப்” இல் சர்ச்சைக்குரிய எந்த ஒரு காட்சியையும் முழு சுதந்திரத்துடன் தணிக்கை அச்சமின்றி ஒருவரால் பதிவு செய்ய முடியும். அடக்குமுறை அரசாட்சியையும் மீறுகிற சுதந்திரம். பரிபூரண ஜனநாயகம் கிடைப்பது வையகவலையில் மட்டும் தான் என்றார் சுவாமிநாதன். ஜனநாயகம் என்பது ஒரு உணர்வு . அது தீமைகளை , அடக்குமுறையை எதிர்த்துக் குரலெழுப்பும் என்றார். 
பிறிதொன்றையும் விட்டு விடவில்லை அவர். இதன் மறுபக்கமாகிய ஆபாசப் படங்களும், தேவையில்லாத குப்பைகளும் இதே தளங்களில் குவிந்து கிடப்பதை ; நல்முத்துக்களான வீடியோக்களைத் தேர்ந்தெடுக்க பல்வேறு குப்பைகளைத் தாண்டி ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், அதைப் பார்ப்பவர் தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு வகையான ஜனநாயகமே !
இறுதியாக உரைநடை வடிவத்தைக் குறித்து திரு. மு.இராமனாதன் “உண்மையும் புனைவும்-முத்துலிங்கத்தின் வெளி” என்ற தலைப்பில் பேசினார். நவீன உரைநடையை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம்- புனைவு (fiction) மற்றும் அபுனைவு (nonfiction). இந்தக் கூட்டத்தில் அ.முத்துலிங்கத்தின் “பூமியின் பாதி வயது” என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து அபுனைவின் மீது மேவியிருக்கும் புனைவைச் சுட்டும் விதமாக இரண்டு கட்டுரைகளின் சில பகுதிகளை சுவாரசியமாக வாசித்துக் காண்பித்தார்.
முதலில் “திசைப்பெண்” என்ற கட்டுரை. முத்துலிங்கம் திசை தெரியாமல் தடுமாறுபவர். அதனால் அவருடைய மகள் காரிலே பூட்டக்கூடிய ஒரு திசைக்கருவியைப் பரிசாக அளிக்கிறார். அந்தக் கருவி சாட்டிலைட்டுகளின் உதவியோடு ஒரு இனிமையான பெண் குரலில் வழி சொல்லக்கூடியது. எங்ஙனம் ஆசிரியரின் புனைவு மொழியில், உண்மைக் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் இணைந்து ஒரு படைப்பு உருவாகியுள்ளது என்று சொல்ல வந்த இராமனாதன், தனக்கும் திசைக் குழப்பம் உண்டு என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், தனது  துணைவியாரையும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்தவர் என்று கூறி , அதற்குத் தன் சொந்த வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை புனைவும், அபுனைவும் கலந்து சுவாரசியமாக்கினார். மேடையில் இரண்டு படைப்பாளிகளை ஒரே நேரத்தில் ரசிக்க முடிந்தது. எவ்வளவு தான் மனித வாழ்வை சுலபமாக்க கருவிகள் இருந்தாலும், மனிதநேயத்தை அவைகளால் கொடுக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்திய கட்டுரை அது. 
அடுத்ததாக “மொரமொரவென புளித்த மோர்” என்ற சமையல் குறிப்புக் கட்டுரை, பாத்திரங்களாலும் சொல்முறையாலும், ஒரு சுவாரசியமான  கதையான விதத்தை படித்துக் காட்டி ரசிக்க வைத்தார். ‘பாணிப் பினாட்டு’ எனும் யாழ்ப்பாணத்து உணவுவகை நாவில் எச்சில் ஊற வைத்தது. யாழ்ப்பாண சினேகிதம் தேட வைக்கிறது.  
முத்துலிங்கத்தின் படைப்புகள் தமிழில் என்பதால், ‘பியூலிட்சர்’ பரிசு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இராமனாதனுடன்  சேர்ந்து இலக்கிய வட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏற்பட்டாலும்,பரிசைவிட  பார்வையாளர்களின் பாராட்டை மனமாற பெற்றது பெரியது எனத் தோன்றியது. முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் அந்தப் பாராட்டைப் பெற முயற்சி எடுத்துக் கொண்ட இராமனாதனுக்குப் பாராட்டுக்கள். 
கூட்டத்தின் நிறைவாகப் பேசியவர் ஹாங்காங் தமிழ்ச் சமூகத்தின் மூதத பிரமுகர் திரு. செ. முஹம்மது யூனுஸ். இலக்கிய வட்டக் கூட்டத்திற்குப் பார்வையாளர்கள் குறைவாக வருவதைக் கருத்தில் கொண்டு குறள் ஒன்றை மேற்கோள் காட்டினார்.  வீரம் என்பது வேலைக் கொண்டு ஓடும் முயலை அடிப்பது அல்ல; பெரிய யானையை அடிக்க முயன்று வேல் முறிந்து தோற்றாலும் அதுவே வீரம் என்றார். இலக்கியக் கூட்டத்திற்கு வருவோர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நல்ல கருத்துகளைத் தரமான முறையில் பகிர்ந்து கொள்ளும் முயற்சியினை பாராட்டும் விதமாக அவரது மேற்கோள் அமைந்தது. தொடர்ந்து இலக்கிய வடடத்தை முன்னெடுத்துச் செல்லும் அன்பர்களின்  முயற்சியை அவர் பாராட்டிப் பேசினார். 
கூட்டம் முடிந்த பின்னரும் அனைவரது மனதிலும் தமிழும், இலக்கிய வடிவங்களும் தொடர்ந்து கோலோச்சியது.


suganthi61@yahoo.co.uk

Series Navigation