இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

ரஞ்சனி


புத்தக வெளியீட்டு விழாக்களும் பணச்சடங்குகளாக வியாபித்துள்ளன என நான் எழுதிய கட்டுரை சித்திரை 11ம் திகதி வைகறையில் பிரசுரமாகி இருந்தது. அதில் நான் தெரிவித்த சில எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலும் சில விசனங்களை நீக்கும் முறையிலும் கடந்த 19ம் திகதி நடந்த இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா பற்றிய குறிப்பை எழுதுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். அது பற்றி எழுதுவது எனது தார்மீகக் கடமையும் கூட.

கலைஞர்களின் சில நடைமுறைப் பிரச்சனைகளைக் காட்டும் ‘கர்ணமோட்சம்’ எனும் குறும் திரைப்படத்துடன் விழா ஆரம்பமாகி கவிதை நூல் வெளியீடு, மறைந்த கவிஞர் வில்வரட்ணம் கௌரவம் என வளர்ந்து நமது நாட்டில் நிகழும் போரின் கோரத்தை அதன் பாதிப்பை, அவலங்களை உணரும் சிங்கள மக்களின் மனத்தாங்கல்களையும் அனுதாபங்களையும் காட்டும் குறும் திரைப்படத்துடன் மிகவும் வித்தியாசமான கோணத்தில் நிறைவடைந்தது.

மகாஜனா முன்னாள அதிபர் கனகசபாபதி அறிமுகவுரையின் பின் இளங்கோவின் கவிதைகளுக்கு விமர்சனம் செய்த கௌசல்யா பெண்களின் புறத்தைப் பாராது அகத்தைப் பார். அது உன்னால் முடியும் எனும் தொனியில் தன் ஆத்மார்த்த கோபத்தை கவிஞருக்கு தன் விமர்சனமாகக் காட்டினார். அவருடைய ஆரோக்கியமான ஆய்வுடன் பல முற்போக்குச் சிந்தனையுள்ளவர்கள் ஒத்துப்போவார்கள். ஆயினும் அவர் கவிதைகளின் பாராட்ட வேண்டிய பக்கங்களையும் காட்டியிருக்க வேண்டும். நேரக் கட்டுப்பாட்டிற்கேற்ப பேச்சை நகர்த்தியிருந்ததால் அது தவற விடப்பட்டிருக்கலாம். கவிதைகளின் பரிமாணம் பற்றிச் சொன்ன கவிஞர் மெலிஞ்சிமுத்தனின் தமிழ் ஒலிப்பதிவு செய்து மீளமீளக் கேட்டு சுவைக்கக் கூடிய இனிய தமிழ். சிறப்புப் பிரதிகள் வழங்கியதைத் தொடர்ந்து சபையினருக்கு இருந்த இடத்தில் பிரதிகள் வழங்கப்பட்டன.

அதன் பின் ‘காலம்’ செல்வம் மறைந்த கவிஞர் வில்வரட்ணம் அவர்களை நினைவு கூர்ந்து அவர் கவிதைகளை வாசிக்க நாட்டுக்கூத்துக் கலைஞர் மெலிஞ்சிமுத்தன் அவர்கள் அவற்றை இனிமையாகப் பாடினார். தேவகாந்தனின் கவிதைகளின் வளர்ச்சியைப் பற்றிய ஆய்வினைத் தொடர்ந்து கவிஞர் இளங்கோ நன்றியுரையை வழங்கினார்..

எமது மகளின் 18வயதுப் பூர்த்தியின் போது அவள் Toronto Star y; School Magazinesல் எழுதிய கதைகள், கட்டுரைகளை எமது ஆசைக்காக புத்தகமாக்கி, அவளுக்கு ஊக்கம் கொடுத்தோர், ஆக்கங்களுக்கு விமர்சனம் செய்தோர், அவளின் ஆக்கங்களை தமது சஞ்சிகையில் பத்திரிகையில் மறுபிரசுரம் செய்து அவளைக் கௌரவித்தோர் என வாசிப்பு ரசனையுள்ளோரை மட்டுமே அழைத்திருந்தோம். இரவு உணவுடன் புத்தகத்தையும் கொடுத்து வித்தியாசமாகச் செய்திருந்தோம் என மகிழ்ந்தோம். ஆனால் இப்போது காலம் சஞ்சிகை இப்படியும் விழா நடத்தாலாம் என இலக்கியத்துக்க முதன்மைத்துவம் கொடுத்து தெளிவாக, அழகாகச் சொல்லியிருக்கின்றது.

காலம் சஞ்சிகையின் ஆதரவில் நிகழ்ந்த இந்தக் கவிதை விழா மண்டபம் நிறைந்த விழாவாக இல்லாமல் போனாலும் மனதை நிறைக்கும் ஒரு விழாவாக இருந்தது. அதற்காக அந்த விழா சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். கண்டனங்களை விட positive attention ஆக்கபூர்வமான செயலை மேன்மேலும் செய்யத் தூண்டும். அவ்வகையில் பாராட்டுக்களைக் கூறி அவர்களுடைய positive attention ஐ ‘அறியாக்கணங்களின் வனப்பு’ என்ற தலையங்கத்திற்கேற்ற மாதிரி பல அறியாக்கணங்களின் வனப்புக்களை ரசிக்க வைத்த ஆக்கபூர்வமான செயலை மேன்மேலும் செய்யத் தூண்ட வேண்டிய பொறுப்பு சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது. தமிழனின் எதிர்காலம் பற்றி விசனப்படுகின்றோம் எனப் பேசும், எழுதும் ஊடகவியலாளர்களோ, இலக்கியவாதிகளோ சமுதாயத்தின் பெரும் புள்ளிகளோ இந்த இளம் கலைஞனுக்கு பெருமளவு உற்சாகம் கொடுக்க முன் வரவில்லை. இவர்கள் எப்படித்தான் தமிழ் வளர்க்கப் போகிறார்களோ என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. இருந்தாலும் சிறப்புப் பிரதி பெற்ற உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம், வைகறைப் பத்திரிகை ஆசிரியர் ரவி ஆகியோர் பாராட்டப்படவேண்டியவர்கள். ஊடகவியலாளர் என்ற வரிசையில் இளம் கலைஞரை ஊக்குவிக்கும் அவர்கள் பண்பும் என்னை அன்றைய தினம் கவர்ந்து நின்றது. இனிவரும் காலங்களில் இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதில் ஊடகங்களும் இலக்கியவாதிகளும் பெரும் பங்கெடுத்து நிற்க வேண்டும். அப்பொழுதுதான் கலைகளும் வளரும். கலைஞனும் வெளிக்கொணரப்படுவான் என்பது என்கருத்து.


Series Navigation

ரஞ்சனி

ரஞ்சனி