உண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

பாவண்ணன்


கேரள மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் நாராயணகுரு. அவருடைய சீடர்களில் முக்கியமானவர் நடராஜ குரு. அவருடைய சீடர்களில் முக்கியமானவர் நித்ய சைதன்ய யதி. குரு சீடர் உரையாடல் வழியாக ஒருபோதும் வற்றாத காட்டாறாக சிந்தனை தன் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைகிறது. அடிப்படையில் நாராயண குரு வேதாந்தி. சங்கரரின் அத்வைத நோக்கை விரிவாக்கியவர். அனைத்து தரிசனங்களையும் தன் தனித்துவம் கொண்ட நோக்கின் அடிப்படையில் ஒன்றிணைத்து ஓர் இணைவைக் கொண்டுவந்தது அவருடைய பெரும்சாதனை. நாராயாண குருவின் அத்வைத சமன்வய நோக்கை மேலைத் தத்துவங்களுடன் இணைத்து வளர்த்தெடுத்தவர் அவருடைய மாணவர் நடராஜ குரு. அவருடைய மாணவர்களில் ஒருவரான நித்ய சைதன்ய யதி உயர்பௌதிகம், உளவியல் பின்னணியில் அப்பார்வையை இன்னும் விரிவாக்கிவைத்தார்.

“குருவும் சீடனும்” நூலில் நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் முக்கியமாக இடம்பெறுகிறார்கள். இருவரும் சேர்ந்து பயணம் செய்கிறார்கள். மாநாடுகளில் கலந்துகொள்கிறார்கள். கங்கைக் கரையோரம் உலவுகிறார்கள். இமயமலையைத் தரிசிக்கிறார்கள். பனிசூழ்ந்த மலைச்சரிவுகளில் காலைநடை செல்கிறார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது ஒன்றைப்பற்றி குரு உரையாடியபடி இருக்கிறார். அந்த அனுபவங்களை நித்ய சைதன்ய யதி உரையாடல் குறிப்புகளாக இந்த நூலில் தருகிறார். அன்பு ததும்பும் சொற்களும் ஐயங்களைப் போக்கும் நுட்பமான விளக்கச் சொற்களும் உயிரோட்டம் மிகுந்த மொழியில் நூல்முழுக்க முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் படிக்கும்போது நாமே அக்குருவின் அருகில் இருப்பதைப்போல உணர்கிறோம். குருவின் குரலையும் நம்மால் காதுகொடுத்துக் கேட்க முடிகிறது. சில பக்கங்கள் தாண்டியதுமே குரு, சீடர் இருவரோடு நம் மனமும் ஒரு மௌனச் சீடனாக பின்தொடர்ந்து செல்லத் தொடங்குகிறது. முளைக்குச்சியிலிருந்து கயிற்றை அறுத்துக்fகொண்டு தாய்ப்பசுவைத் தேடியோடும் கன்றுபோல.

நூலில் இடம்பெறும் முக்கியமான உரையாடல்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். ஏதோ ஒன்றைப்பற்றி விளையாட்டாக விவரித்துச் சொல்லிக்கொண்டே சென்று, அதன் முடிவில் எளிய விளக்கமொன்று இடம்பெறும் உரையாடல். ஒரு சம்பவம் அல்லது ஒரு கருத்தை முன்வைத்து கேள்வியும் பதிலுமாக மாறிமாறி இடம்பெறும் உரையாடல். விவாதங்களும் விளக்கங்களும் மறுவிளக்கங்களுமாக நீளும் உரையாடல். சிக்கலான தத்துவப் பிரச்சனையை மிக எளிதாக விளக்கும் முயற்சியாக தன்னெழுச்சியோடு குரு பேசும் உரையாடல். தத்துவ ஆய்வுகளாக நீளும் இந்த உரையாடல்கள் எளிய மனிதர்களையும் தத்துவத்தின்பால் ஈர்க்கவல்லவையாக உள்ளன. மேலான விழுமியங்கள்சார்ந்து சிந்திக்க் இத்தகு உரையாடல்கள் தூண்டுகோல்களாக உள்ளன.

குடும்பக்கட்டுப்பாடுபற்றியும் மக்கள்தொகையைப்பற்றியும் குரு கொண்டுள்ள பார்வை அவருடைய உரையாடலில் மிக உறுதியாக வெளிப்படுகிறது. இந்தியத் தலைவர்களின் பார்வைக்கோளாறும் அந்நிய நாடுகள் வழங்கும் கடன்கள் என்னும் வலையில் சென்றுவிழும் அவர்களுடைய ஆவேசமும் இணைந்து மக்கள் தொகையை ஒரு கடுமையான பிரச்சனையாக உருமாற்றி முன்வைத்துவிட்டது என்று உறுதியாகச் சொல்கிறார் குரு. பிச்சைக்காரர்கள் உணவுக்காக கையேந்தி நிற்கும் காட்சியைக் கண்டு முகம் சுளிப்பவர்களைப் பார்த்து தீவிரமான குரலில் குரு முன்வைக்கும் பதிலில் சமூகத்தின்பால் அவருக்குள்ள ஆழ்ந்த அக்கறையையும் நம்பிக்கையையும் உணரமுடிகிறது. பிச்சைக்காரர்களை கிண்டல் செய்கிற உரிமை யாருக்கும் இல்லை என்கிறார் குரு. ஐரோப்பாவில் ஒரு மனிதனுக்கு வேறு ஒரு மனிதனிடம் சென்று உணவுக்காக இரங்க தைரியமில்லை. இங்கே ஒருவர் ரயிலில் உணவு உண்பதைப் பார்த்தால் ஒரு குழந்தை போய் ஒரு கூச்சமுமில்லாமல் பசிக்கிறது என்று கேட்கும். இதை இந்தியாவில் மட்டுமே பார்க்கமுடியும். ஒரு குழந்தை உணவுக்காக வேறு ஒருவரிடம் இரப்பதற்கான அடிப்படை என்ன? மனித அன்பின் மீதான நம்பிக்கை அல்லவா? அந்த நம்பிக்கையின் வீழ்ச்சியைத்தான் நாம் மேற்கத்திய நாகரிகத்தில் பார்க்கிறோம். பட்டினி என்பது லண்டனிலும் நியுயார்க்கிலும் பாரிசிலும் இருக்கவே செய்கிறது. ஆனால் அங்கே இரத்தல் இயலாது. அதற்குக் காரணம் மனிதர்களுக்கு சகமனிதர்கள்மீது உள்ள நம்பிக்கைக்குறைவுதான். ஆவேசத்துடன் வெளிப்படும் குருவின் சொற்களில் இந்த மண்ணையும் மனிதர்களையும் மற்ற எவரையும்விட கூர்மையாகப் புரிந்துவைத்திருக்கும் தன்மையைப் பார்க்கிறோம்.

குரு-சீடர் உரையாடல்களில் பாவத்தைப்பற்றிய பேச்சு இடம்பெறும் தருணம் முக்கியமானது. அப்போது இமயமலையில் அருகில் நிற்கிறார்கள் அவர்கள். எதிரே, வெள்ளியால் செய்து மேகங்களுக்கிடையே ஒளித்துவைத்தது போலக் காணப்படும் ஐந்து சிகரங்கள் உயர்ந்து நிற்கின்றன. நம் இதயத்தைக் கவரக்கூடிய அந்த அதிசயம்தான் இறைவன் என்கிறார் குரு. இமயமலையைத் தரிசிப்பதாலும் கங்கை நீராடலாலும் பாவங்கள் தீர்வது உண்மை என்று குரு சொல்கிறார். பாவம் என்பது சார்புநிலைப் பார்வை என்றும் சுயமையப்போக்கு என்றும் பொருளை வரையறுத்துக்காட்டுகிறார் குரு. இமயமலையைப் பார்க்கும்போது ஒருவனுடைய மனம் அதனுடன் இணைந்து விரிவானதாகிறது. அதுபோல ஒரு நாட்டின் ஒரு நுனியிலிருந்து இன்னொரு நுனிவரைக்கும் பாய்ந்து பரவுகிற கங்கை நதியின் தரிசனமும் ஒரு மனிதனின் இடுங்கிய மனநிலையை மாற்றக்கூடியதாகும். மனநிலையில் மாற்றம் நிகழாமல் வெறும் குளியலால் பாவத்தின் கறையைப் போக்கிக்கொள்ளமுடியாது. குருவின் விளக்கம் எல்லா ஐயங்களையும் ஓர் ஆற்றைப்போல தூய்மைப்படுத்துகிறது.

உரையாடலில் இடம்பெறக்கூடிய பல வரிகள் கவித்துவ அனுபவத்தை வழங்கக்கூடியவை. உண்மையும் ஆனந்தமும் இணைந்து ஒன்றிணைய வேண்டும், அதுவே அறிவின் இலக்கு என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் குரு. கிட்டத்தட்ட திருக்குறள் வரிகளைப் போல நீளும் இவ்வரிகள் ஏராளமான எண்ண அலைகளை எழுப்பியபடி உள்ளன. பிற உயிர்களின் நோய்களை தன் நோயாகப் பார்ப்பதை அறிவின் விளைவாக முன்வைக்கிறது குறள். அருள் இல்லாத அறிவை வள்ளுவர் ஏற்கவில்லை. குருவின் பார்வையும் அதுவாகவே இருக்கிறது. உண்மையையும் கருணையையும் மாறிமாறித் தொட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கடிகாரத்தின் பெண்டுலம்போல அறிவு இயங்குகிறது என்பவை குருவின் சொற்கள்.

அறிவுதொடர்பான மற்றொரு உரையாடலில் அறிவு வெறும் வெளிச்சமல்ல, அது அசைந்துகொண்டேயிருக்கும் ஒரு தீ என்கிறார் குரு. தீயின் உருவத்தில் பல மாற்றங்கள் வரலாம். ஆனால் அந்த மாற்றத்தைப் பார்க்கவேண்டியது தீயிலிட்ட விறகின் உருவத்தைவைத்தல்ல. விறகு வளைந்திருந்தாலும் நேராக இருந்தாலும் தீயில் வேறுபாடு இருப்பதில்லை. ஆனால் தீயின் அசைவுகளில் காணப்படும் மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை. அவை தீத்தன்மையின் இயல்புகள்.

ஒரு குரு சொல்வதெல்லாமே கடைப்பிடித்தாகவேண்டிய விஷயங்கள் அல்ல. புரிந்துகொள்வதற்குரியவைமட்டுமே. புரிந்துகொண்டால் போதும். கடைப்பிடிக்கவும் புறக்கணிக்கவும் தேவையான சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இதுவும் குருவின் உரையாடலின் ஒரு பகுதி. இந்த நூலின் சாரமாகவும் இருக்கின்றன இந்தச் சொற்கள். சீடர்களுக்கு எழக்கூடிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை உள்ளன்போடு சொல்லித் தருகிறார் குரு. விளக்கம், மறுவிளக்கம் என ஏராளமான எடுத்துக்காட்டுகளை முன்வைத்து விளக்குகிறார். விளக்கிச் சொல்ல தயங்காத தாய்மனம் அவருக்குள்ளது. ஒரு தீக்குச்சியை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுதும் சமைக்கமுடியும் என்று நினைத்துவிடக்கூடாது, விதி அளிக்கக்கூடிய தீக்குச்சிகளையெல்லாம் சேர்த்துவைத்துக்கொள்ள வேண்டும் என்று புன்னகையுடன் குரு சொல்லித்தரும் இடம் மிகவும் முக்கியமானது. சீடர்களின் தேடல் உணர்வை இதைவிட வேறு எப்படி விரிவாக்கமுடியும்? சீடர்களுக்கு எவ்விதமான சந்தேகமும் எழாத தருணங்களில்கூட, குருவே ஒரு கேள்வியை முன்வைத்து சீடர்களுடன் உரையாடல்களைத் தொடங்குகிறார். கீதையின் பல தருணங்களை தன்னிச்சையாக குரு சீடர்களுக்கு விவரித்துக் காட்டுகிறார். ஆனால், எந்த இடத்திலும் குரு தன் சொற்களை ஏற்றுக்கொள்ளும்படி சீடர்களையோ மற்றவர்களையோ வற்புறுத்தவில்லை.

ஒரு முறை லக்னோவில் குருவும் சீடர்களும் தங்கியிருக்கிறார்கள். லக்னோவில் வசிக்கும் கவர்னருடன் தனக்கு நல்ல பழக்கமிருக்கிறது என்றும் ராஜ்பவனில் ஒரு கீதை வகுப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் சொல்கிறார் ஒரு சீடர். உடனே குரு கடும்கோபம் கொள்கிறார். சீற்றத்தில் அவர் உதிர்த்த வார்த்தைகள் அவருடைய அகத்தை அறிந்துகொள்ள உதவியாக உள்ளன. எனக்கு இனிமேல் யாரும் பரிசு தரவேண்டாம், என் பரிசு மரணம்தான் என்று சொன்ன லான்ஸ்லாட் பிரபுவையும் யாரும் எனக்கு மாமாவாக வேண்டாம், அதற்காக எனக்கு இறைவன் இருக்கிறான் என்று வேகமாகச் சொல்கிறார். ஐவான் வில் சொல்லப்பட்ட சொற்களையும் பிரான்சு அரசர் பார்க்க விரும்பிய தருணத்தில் பின்பக்கமாகத் தப்பிச் சென்ற நாடக ஆசிரியர் ரூஸோவைப்பற்றியும் சொல்லிவிட்டு தானும் அப்படிப்பட்ட ஒரு மனிதன்தான் என்றும் சொல்கிறார். மேலும் தனக்கு யாராவது பட்டம் தருவதாகச் சொன்னால் இந்த நாட்டைவிட்டுக்கூட போய்விடுவதாகவும் சொல்கிறார். ஆடம்பரங்களையும் அதிகாரங்களின் நெருக்கங்களையும் அறவே ஒதுக்கும் குருவின் மனவலிமை மிகமுக்கியமான ஒன்று. செய்தும் செய்யாமல் இருப்பது துறவு என்று துறவுக்கான விளக்கத்தை குருவே இன்னொரு இடத்தில் சொல்கிறார்.

குரு நித்ய சைதன்ய யதியின் இக்குறிப்புகள் தமிழில் வெளிவந்திருப்பதை மிகமுக்கியமான தருணமென்றே சொல்லவேண்டும். முதல் முயற்சி என்றாலும் எவ்விதமான தடுமாற்றமும் இல்லாத மொழிவளத்தோடு சாந்தி இதை மொழிபெயர்த்திருக்கிறார். நாராயண குரு, நடராஜ குரு, குரு நித்ய சைதன்ய யதி, முனி நாராயண பிரசாத் என நீளும் ஆளுமைகளைப்பற்றிய ஜெயமோகனுடைய விரிவான அறிமுகக் குறிப்புகள் மிகவும் பயனுள்ளவை. குருகுலம் பற்றிய நம் பார்வையை மாற்றியமைப்பதில் இந்த நூல் பெரும்பங்காற்றுகிறது.

கீதா ஜயந்தியின் நிகழ்ச்சிகளை விவரிக்கும் இடம் இந்த நூலின் முக்கியமான பகுதியாகும். அர்ஜூனனை மனநடுக்கம் கொண்ட கோழையென்றும் வேதாந்தம் அறியாத அறிவிலி என்றும் மற்ற பேச்சாளர்கள் முன்வைத்த பழியுரைகளையெல்லாம் மறுத்து, குரு தன் அழகான விளக்கத்தால் பார்வையாளர்களைத் தௌiயவைக்கிறார். உங்கள் மகன் அவனுடைய குருவையோ அல்லது அப்பாவையோ கொல்லத் தயங்கினால் அதை நீங்கள் கோழைத்தனம் என்று சொல்லமுடியுமா என்று கேட்கிறார் குரு. மிகச்சிறந்த அறிவாளியாகவும் வீரனாகவும் இருந்ததால்தான் வில்லைத் தூக்கி வீசிவிட்டு அர்ஜூனன் அமர்ந்தான் என்கிறார் குரு. அவன் செய்தது சரியான செயல் என்றும் சொல்கிறார். அவனுக்கு இன்னும் பெரிய சரியான செயலைச் சொல்லித் தந்தவர் கிருஷ்ணன் என்றும் விளங்கவைக்கிறார். சரியான கோணத்தில் கீதையைப் புரிந்துகொள்ள இச்சொற்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

ஒரே சமயத்தில் மகானுபாவர்கள் என்றும் பொருளாசை கொண்டவர்கள் தம் குருக்களைப் பற்றி அர்ஜூனன் சொல்வதற்கான காரணத்தை ஒருவர் புரிந்துகொள்வது கீதையைப் புரிந்துகொள்வதற்கு இணையானதெனச் சொல்கிறார் குரு. காரணத்தை அசைபோடுவதற்கு முன்னால் எவ்விதத் தயக்கமுமில்லாமல் அர்ஜூனன் முன்வைக்கிற கணிப்புகள் அவன் உண்மைக்குத் தரும் அழுத்தத்தை அறிந்துகொள்ள துணையாக உள்ளன. பாரபட்சமில்லாத மதிப்பீடுகளால் அவன் குருவை எடையிடுவது முக்கியமான ஒன்று. திறமையில் அவர்கள் மகான்கள். மாணவர்கள் அல்லது சீடர்களின் ஐயங்களை விலக்கி உண்மையை நோக்கிச் செலுத்துபவர்கள் மகான்கள். ஆனால் அரசையும் அதிகாரத்தையும் சார்ந்தவர்களாக அவர்கள் மாறும்போது ஆசைவசப்பட்டவர்களாக மாறிவிடுகிறார்கள். இந்த ஆசையே ஒரு மாற்றுக் குறைந்தவர்களாக அம்மகான்களை ஆக்கிவிடுகிறது. ஒரு சின்ன ஆசை அல்லது சார்புநிலை எப்படிப்பட்ட மகான்களையும் திசைதிருப்பிவிடும். அர்ஜூனனுக்கு உள்ள மனஉறுதிதான் தன் குருவை மதிப்பிடும் ஆற்றலை அவனுக்கு வழங்குகிறது. இப்படி தொடர்ச்சியாக யோசிக்கத் தொடங்கினால் குருவின் மனம் நினைத்ததை ஏதாவது ஒரு கணத்தில் நம் மனமும் தீண்டிப்பார்க்கக்கூடும் என்று தோன்றுகிறது.

மாதா பிதா குரு தெய்வம் என்பது சொல்வழக்கு. நம் தோற்றத்துக்குக் காரணமாகி, இந்த உலகத்தில் வாழ நம்மை ஆளாக்கியவர்களையும் வாழ்க்கையின் பொருளை நாம் உணரத் துணையிருக்கிற குருவையும் தெய்வத்துக்கு நிகரானவர்களாக நினைத்து வணங்கும் நன்றியுணர்வின் வெளிப்பாடாகவே இவ்வழக்கு அமைந்திருக்கிறது. இந்த நூலைப் படித்துமுடித்த தருணத்தில் இவ்வழக்குக்கு வேறொரு விளக்கம் மனத்தில் எழுந்தது. தெய்வம் என்பது உண்மை. அப்பழுக்கில்லாத தூய உண்மை. தாய், தந்தை, குரு என மூவருமே இவ்வாழ்வில் நம்மை உண்மையைநோக்கிச் செலுத்துகிறவர்கள். மனிதவாழ்வில் ஒரு குழந்தையாகவும் இளம்பிள்ளையாகவும் தாயின் அருகில் கிட்டத்தட்ட பத்துப்பதினைந்து ஆண்டுகள் நாம் கழிக்கிறோம். வாய்திறந்து பேசவும் உரையாடவும் கற்றுத்தருகிற தாய்தான் இந்த உலகத்தை அறிவுக்கண்வழியாக பார்க்கக் கற்றுத் தருகிறாள். இந்த உலகத்தின் உண்மைகளை அவளே நமக்குக் காட்டித் தருகிறாள். உண்மையின் தரிசனம் அவள் வழியாகவே நமக்குக் கிடைக்கிறது. அடுத்த கட்டத்தில் உலக அனுபவம் மிகுந்த தந்தை இன்னும் விரிவான உண்மையை நமக்குக் காட்டித் தருகிறார். பதின்பருவத்துக்குப் பிறகு நாம் பெற்றோர்களுடன் இருக்கிறோமென்றாலும் எதார்த்தத்தில் வேறொரு உலகத்திலேயே இருக்கிறோம். அப்போது உண்மையின் அடுத்தடுத்த கட்டங்களைநோக்கி நம்மை அழைத்துச் செல்கிறவர் குரு.

( குருவும் சீடனும்- நித்ய சைதன்ய யதி. தமிழாக்கம் சாந்தி. எனி இந்தியன் பதிப்பகம், 102, எண் 57, பி.எம்.ஜி.காம்ப்ளெக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. விலை. ரூ. 100 )

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்