தீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

ஜெயஸ்ரீ



தவிப்பு என்னும் உணர்வு மிகவும் வினோதமானது. மகிழ்ச்சியோ துக்கமோ இயலாமையோ மேலிடும்போது ஏற்படும் இந்தத் தவிப்புக்கு சில சமயங்களில் வடிகால் கிடைப்பதுண்டு. பல சமயங்களில் கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றை வாய்திறந்து வெளியிடவும் முடிவதில்லை. மனத்துக்குள்ளேயே உருள்கின்ற தவிப்பை வெளியிட சிற்சில சமயங்களில் வார்த்தைகளே கிடைப்பதில்லை. மகிழ்ச்சியில் ஏற்படும் தவிப்பை பிறருடன் பகிர்ந்துகொள்ளும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. துக்கத்திலெழும் தவிப்பை பகிர்fந்துகொள்ளும்போது மனச்சுமையின் பாரம் குறைகிறது. இயலாமையிலிருந்து எழும் தவிப்புகளோ வெளியேறத் துடித்துத்துடித்து உள்வாங்கிச் சுழலும் கடலைகளாக மனத்துக்குள்ளேயே ஒடுங்கிப் போகின்றன. கையறுநிலையிலேயே தங்கிவிடச் செய்கின்ற தீராத அந்தத் தவிப்புகள் ஒரு கோணத்தில் வலிதரும் பெருஞ்சுமை. இன்னொரு கோணத்தில் புன்னகையை வழங்கும் புதையல். பாவண்ணனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பாக வந்திருக்கும் “புன்னகையின் வெளிச்சம்” தீராத தவிப்புகள் வழங்கிய புன்னகையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறது.

“புன்னகையின் வெளிச்சம்” என்னும் கவிதையில் வெளிப்படும் தவிப்புணர்வு மிகவும் முக்கியமானது. இறவாணத்து மூலையில் கிடைக்கிற மரப்பாச்சியைப்பற்றிய தகவலோடு தொடங்குகிறது இக்கவிதை. தொடக்கத்தில் மரப்பாச்சியின் வழியாக கழிந்துபோன தன்னுடைய இளமையையும் பிறகு தன்னைப்பற்றியும் நினைத்துக்கொள்கிறாள் அவள். மெல்லமெல்ல அந்த நினைவுகள் தன்னையொத்த பெண்களைப்பற்றிய நினைவுகளாக உருமாறுகின்றன. குழலாட குழையாட குட்டைப்பாவாடை சரசரக்க ஆடிக்கொண்டிருந்த இளம்பருவத்தில் பெண்கள்f மனத்தில் ஏராளமான கனவுகள் நிறைந்திருக்கின்றன. வளர்பருவத்தில் அக்கனவுகளை இந்தப் பூவுலகம் எப்படியோ பொசுக்கிச் சாம்பலாக்கிவிடுகிறது. மூலையில் ஒதுங்கிய மரப்பாச்சிப் பொம்மைகளைப்போன்ற எதார்த்தவாழ்வில் பெண்களுக்குக் கனவுகள் இல்லை. சக்கையாகக் கசக்கிப் பிழிகிற கடமைகள்மட்டுமே உண்டு. ஊஞ்சலாடிக் களித்ததும் புன்னகைத்துத் திரிந்ததும் இறந்த காலமாகிவிடுகின்றன. இன்று அவளுக்குத் தேவையான ஒரு நட்பான புன்னகையைக்கூட இறந்த காலத்தில் உறையும் சித்திரங்களே வழங்குகின்றன. பழசும் புதுசுமாக ஏராளமான பொருட்கள் அடைந்துகிடக்கும் சமையலறையின் மூலையில் அந்தப் புன்னகையின் வெளிச்சம் படர்ந்து அவளுக்குப் பேராதரவாக இருக்கிறது. ஒரு புறம் வலியும் தவிப்பும். இன்னொரு புறம் அவற்றை எதிர்கொள்ளத் தேவையான வலிமையை வழங்குகிற ஊற்றுக்கண்ணான புன்னகையை தானே தேடியடைகிற பயணம். இரண்டையும் அடுத்தடுத்து அமைத்துக் காட்டும் கவிதை இத்தொகுப்பின் முக்கியமான கவிதை. இதுவே இத்தொகுப்பின் தலைப்புக்கவிதையாக அமைந்திருப்பது சிறப்புக்குரிய செய்தியாகும்.

பற்பல கனவுகளோடும் வளர்ந்து முன்னேறிவரும் துடிப்போடும் இருக்கின்ற பெண்கள்கூட அடுப்படியில் முடங்கிப் போய்விடும் சூழ்நிலையின் கட்டாயத்தினின்று எழும் இயலாமையின் தவிப்பை மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறது “மாய உலகம்” என்னும் கவிதை. இன்று படித்து பொருளியல் தேவைக்காக அலுவலகங்களில் வேலை பார்க்கும் நெருக்கடிகளில் அகப்பட்டுள்ள பெண்கள்கூட, அதைத் தாண்டி பெரியதாக எந்தச் சுதந்திரங்களையும் அடைந்துவிடவில்லை. மீண்டும், வீடு, குடும்பம், சமையலறை என்ற வட்டத்துக்குள்தான் அடைபடவேண்டியுள்ளது என்ற ஆதங்கத்தினால் எழும் தவிப்பின் வலியை இக்கவிதை ஒரு சித்திரமாக வழங்கும் விதம் மனத்தில் பதியும்படி உள்ளது.

தவிப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ள மற்றொரு அருமையான கவிதை “சந்திப்பு”. காற்றும் கவிஞரும் சந்தித்துக்கொள்ளும் சம்பவம் மிகச்சுவையாக இக்கவிதையில் சித்திரக்கிப்படுகிறது. பேசி மகிழ்ந்தபிறகு இருவருமே விடைபெற்றுப் பிரிகிறார்கள். அப்பிரிவை காட்சிப்படுத்தும் கவிஞர் “அது இனிமையின் விளிம்புக்கும்/ நான் வாழ்வின் புழுக்கத்துக்கும்” என்று முடிக்கிறார். காற்று என்கிற நிலையிலேயே கவிதையில் நிலவும் கற்பனைச்சந்திப்பு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. அடுத்த நிலையில் காற்று ஒரு படிமமாக இக்கவிதையில் செயல்படுவதைப் புரிந்துகொண்டதும் கவிதை வேறொரு தளத்தைநோக்கிச் செல்வதை அறிந்துகொள்ள முடிகிறது. உடல்புழுக்கம் தீர்க்கிறது காற்று. மனப்புழுக்கம் தீர்ப்பது அல்லது தீர்ப்பவர்கள் என்று பட்டியலிட முடிகிற அனைத்தும் அல்லது அனைவரும் காற்றின் படிமமாக விரிவடைகிறார்கள். விடைபெறும்போது மனம் அனுபவிக்கும் தவிப்பு என்னும் ஒரு புள்ளியிலிருந்து கவிதை பல சாத்தியப்பாடுகளை வாசகர்களுக்கு வழங்கி முடிவடைகிறது.
மரத்திலிருந்து ஓர் இலை உதிர்ந்து விழுவது இயற்கை. அந்த இலையின் உதிர்தலில், தவிப்பை வெளிப்படுத்தும் பாவண்ணனின் வரிகள், வாசிப்பவரின் மனத்தில் தவிப்பின் கனத்தைப் பெருக்கிவிடுகிறது. பிடித்தது எதுவோ, அது கிடைக்காதபோது ஏற்படும் வலியை அந்த இலையின் வலிமூலம் உணரமுடிகிறது. ஏமாற்றத்தின் துக்கம் நரம்புகளில் வழிய தரையில் விழுந்து துடிக்கிறது மனபாரம் மிகுந்த இலை என்ற கவிதையின் இறுதிவரிகள் மிகுந்த வலியை ஏற்படுத்துகின்றன.

அவர்களும் மனிதர்கள்தாம் என்கிற அடிப்படை மனிதாபிமான உணர்வுகூட இல்லாமல் பிச்சைக்காரர்களும் பைத்தியக்காரர்களும் அலட்சியப்படுத்தப்படுவதும் கேலிப்பொருட்களாக்கப்படுவதும் கவிஞரின் மனத்தில் வலியை உண்டாக்குகிறது. “மாநகர கோவர்த்தனள்”, “வேண்டுதல்” என்ற கவிதைகள் மூலம் இது வெளிப்படுகிறது. மழைக்கு ஒதுங்க இடம்தராத காட்சியை விவரிக்கும் மாநகர கோவர்த்தனள் கவிதை, ஈர முந்தானையை தலைமேல் உயர்த்தி குழந்தைகளை ஒடுங்கவைத்து மழையிலேயே நின்றாள் அவள் என்று முடிவடையும்போது அது அந்தப் பிச்சைக்காரியின் மனத்தில் குமுறக்கூடிய கோபம், வெறுப்பு, இயலாமை ஆகியவற்றின் வலியை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இயற்கையின்மீது பாவண்ணனுக்கு எப்போதுமே தீராத ஈடுபாடும் அதைப்பற்றிய கவலையும் இருந்தபடியே உள்ளது. மழை, காற்று, மரம் ஆகியவை பல கவிதைகளில் நாயக அந்தஸ்தைப் பெறுகின்றன. “சாபத்தின் மொழி” என்ற கவிதை குறிப்பிடத்தக்கது. இக்கவிதையில் மழைபெய்து ஓய்ந்த பிறகான பூமியை, போர்க்களக்காட்சிக்கு இணையானதாக சித்தரிக்கிறார். மண்ணில் விளையாடாத குழந்தைகள் பொம்மைபோல் உட்கார்ந்திருக்கிறார்கள் என்ற வரிகளும் சாபத்தின் மொழியை அதிர்ந்து ஒலிக்கிறது பூமி என்ற வரிகளும் இயற்கையைச் சீரழிக்கும் மனித குலத்துக்கு அது தரும் பரிசில் பற்றிய வலியை, வேதனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

சிறுகதைகளைப்போல விரிவடையும் “பயணம்”, “பின்னிரவு வாகனம்”, “நாடகம்”, “அதிகாலையின் அமைதியில்” போன்ற கவிதைகள் புறஉலகின் சூழ்நிலைகள் தரும் வேதனைகளை முன்வைக்கின்றன. இக்கவிதைகளை வாசித்துமுடித்ததும் எழுகிற பரிதாப உணர்ச்சியையும் ஐயோ என்ற தவிப்பின் வலியையும் தவிர்க்கமுடிவதில்லை.

மனத்தைக் கனக்கச் செய்யும் கவிதைகளோடு புனமுறுவலை வழங்கி மனத்தை மகிழ்ச்சியில் திளைக்கவைக்கும் கவிதைகளும் சமஅளவில் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காத்திருத்தலின் காகம், அழகுச் சித்திரம் கவிதையின் மூலம் நின்று நகரும் நான்கு சக்கர வாகனம், பறித்துவந்த பூக்கள் வீட்டில் வந்து தோட்டமாகச் சிரிப்பது, தாரையாய் இறங்கும் கம்பிமழை போன்றவை என்றென்றும் நெஞ்சில் நீங்காத இடம் பெறுபவை.

கவிஞரின் உவமை அழகுக்கு சான்றாக இருப்பது “உயிர்மை” என்னும் கவிதை. தொகுப்பு வீடுகளை நிறுத்திவைத்த குழலென என்று குறிப்பிடும்போது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. புல்லாங்குழலில் காற்று இசையாகிறது. தொகுப்பு வீடுகளிலிருந்து நம் காதுகளை வந்தடையும் இசையை காற்று புகுந்து அந்த வீடுகளில் இசையாகப் பரவுவதுபோல இருப்பதாக முன்வைக்கிறது பாவண்ணன் கவிதை. அந்தக் கவிதையின் அனுபவம் எண்ணியெண்ணி ரசிக்கத்தக்கது.

சங்கப்பாடல்களில் அகத்திணைபை பாடல்களில் தலைவன் தலைவி தொடர்பான இன்பதுன்பக் காட்சிகள் அனைத்துமே நேரிடையாகச் சுட்டிக்காட்டப்படுவதில்லை. குறிப்புணர்த்தும் விதமாக, உருவகமாக அல்லது படிமமாகவே முன்வைக்கப்படுகின்றன. பாவண்ணனின் பல கவிதைகளிலும் அத்தன்மை பயின்றுவருவதைப் பார்க்கமுடிகிறது. அவர் சித்தரித்துக் காட்டும் தினசரிக் காட்சிக்கவிதைகள் ஒரு கோணத்தில் நிகழ்ச்சிகளாகவும் இன்னொரு கோணத்தில் படிமத்தன்மையெய்தி வேறொன்றாகவும் அனுபவமளிக்கின்றன. இந்த அனுபவங்களால் வாசகமனத்தில் எழும் சிந்தனைகள் பலவிதமானவை. அவை கவிதைக்கு அப்பாலும் நம்மை அழைத்துச் சென்று வாழ்வை மதிப்பிட்டுப் பார்க்கும் பயிற்சியை வழங்குகின்றன என்று சொல்லலாம்.
தோற்றத்தில். பாவண்ணன் கவிதைகள் மிக எளியவை. அசைபோட, அசைபோட அவை நாம் அனைவரும் மூழ்கித் திளைக்கத்தக்க பேராழத்துக்கு அழைத்துச் செல்லும் வலிமை உள்ளவை.

இந்தப் புத்தகத்தின் அட்டையே மிகவும் அழகாக புன்னகையின் வெளிச்சத்தைச் சிந்துவதாக அமைந்துள்ளது. மிகவும் நேர்த்தியாக புத்தகத்தை வடிவமைத்துள்ள சந்தியா பதிப்பகம் பாராட்டுக்குரியது.
( புன்னகையின் வெளிச்சம். கவிதைத்தொகுதி. பாவண்ணன், சந்தியா பதிப்பகம், 57ஏ, 53வது தெரு, அசோக் நகர், சென்னை-83)

jayashriraguram@yahoo.co.in

Series Navigation

ஜெயஸ்ரீ

ஜெயஸ்ரீ