சுஜாதா என்கிற ஆளுமை

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

பொ கருணாகர மூர்த்தி


முன்பெல்லாம் சுஜாதாவை நினைத்தால் உடம்பெல்லாம் ஒருவகைப் பரவசமும் உற்சாகமும் தொற்றிக்கொள்ளும். 27.02.2008 க்குப் பிறகு ஒரு அத்யந்த நண்பனை, உறவை இழந்ததுபோல துக்கமே நெஞ்சை வந்து அடைக்கிறது. ஒரு இலக்கியர் ‘மறைந்தது எஸ்.ரங்கராஜன்தான் சுஜாதா அல்ல’ என்று எழுதியதை திரும்ப திரும்ப வாசிக்கையிலும் மனசு கொஞ்சம்போல சமாதானமாகிறது.
‘ உங்களுக்கு யாரைப்பார்த்தால் பொறாமை வரும்? ‘ என்றொரு கேள்விக்கு ‘ உலகவிளையாட்டு அரங்குகளில் குதிரைகள்போல வாயால் நுரைகக்க மூசிக்கொண்டு வெற்றிக்கோட்டை நோக்கிப்பாய்கிற வீரர்களைப்பார்த்தால் இப்போது வருகிறது’ சொல்லியிருக்கிறார். ஆரோக்கியம் முற்றாகவே குலைந்து அவர் ஸ்தூலதேகம் ஓய்வெடுக்க முனைகையில் அதுதரவல்ல உபத்திரவங்களையெல்லாம் தாங்கிக்கொண்டும் அவர் பிழைத்திருக்கவேண்டும் என ஆசைப்படுவது எவ்வளவு விபரீதமானது. மஹராஜபுரம் சந்தானம், சுந்தரராமசாமி என்று நான் நேரில் சந்திக்க ஆசைமிகப்பட்டு அவை நிராசையான சந்தர்ப்பங்கள் பலவுண்டெயெனினும் சுஜாதாவும் ஏமாற்றினாரென்பதை என்னை எண்ணமனம் ஏற்குதில்லை.

சுஜாதா என்கிற பல்துறை ஆர்வலனை ஆளுமையை எப்போது தெரிந்துகொண்டேன் என்பதை உறுதியாகச் சொல்வது கஷ்டம். ஆனாலும் அது அநேகமாக ஆனந்தவிகடன் அல்லது குமுதம் மூலமாகத்தான் நேர்ந்திருக்கும். சமகாலத்தில் தமிழில் மாத்திரமல்ல உலக அரங்கில் நடைபெறும் அனைத்து இலக்கிய – விஞ்ஞான மாற்றங்களையும் அவர் அறிந்திருந்தார். சமகாலத்தில் அவரளவுக்கு பெரும்வாசகர்களைக்கொண்டிருந்த தமிழ் எழுத்தாளர்கள் எவருமில்லை என்பதுவும் நிதர்சனம். சுஜாதாவின் படைப்புக்களின் தனித்துவம் அழகு என்பதெல்லாம் அவரது மொழி நடைதான். சிறிய சிறிய வசனங்களில் மிகச் சிக்கனமான வார்த்தைகள்தான் அவர் பலம். மற்றது கதையின் நிகழ்வுகளை காட்சிரூபத்தில் உருவமைத்து விரைந்து நகர்த்திச் செல்லுதல். ‘ ரங்கு கடையா அது ஆறுக்கு ஒன்பதில் ஒரு சதுரம். ஐந்தாறு போத்தல்களில் ஒன்றுக்குள் கொஞ்சம் ஸ்லேட் பென்சில்களும், மற்றையவற்றுக்குள் மிட்டாய், கமெர்கெட் வித்தியாசமான நிறங்களில் இருக்கும். பின் பக்கமாக தொங்கும் சாக்குத்திரையின் பின்னால் நாங்கள் சிகரெட் பிடிக்க அங்கு அடிக்கடி கூடுவோம்’ என்று எளிமைப்பட எழுதியிருப்பார், ஆனால் அதற்குள் சகல விபரிப்புகளும் அடங்கியேயிருக்கும்.

எழுத்தில் கிளாமர் இருக்கும், விரசமோ வக்கிரமோ இருக்காது. சுஜாதா நான்பிறக்க முன்பே 1953ல் தனது முதற்கதையை அப்போது வெளிவந்துகொண்டிருந்த சிவாஜி என்கிற இதழில் எழுதிவிட்டிருந்தார். அதன்பிறகு ‘இடது கண் ஓரத்தில்’ என்கிற அவரது இரண்டாவது கதை குமுதத்தில் வெளியாவதற்கு ஒன்பது வருடங்கள் பிடிக்கின்றன. இந்த இடைக்காலத்திலான அவரது இலக்கிய முயற்சிகளை அவர் எவ்விடத்திலும் பதிவு செய்யவில்லை. ‘முதற்கதையை அச்சில் பார்த்த அன்று தான் அடைந்த பரவசத்தை வாழ்வில் பின்னொரு நாளும் அடைந்ததில்லை’ என்கிறார் ஓரிடத்தில். கவனயீனத்தால் அப்பிரதியை எங்கோ தொலைத்துவிட்டதாகவும் வாசக அன்பர்கள் எவராவது அதனைத் தனக்கு அனுப்பிவைக்க முடிந்தால் தன் ராஜ்ஜியத்தில் பாதியைத்தருவதாகவும் பின்னர் எழுதினார்.

நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில்தான் குமுதத்தில் அவரது நைலோன் கயிறு அனிதா, இளம் மனைவி போன்ற நாவல்கள் வெளிவந்தன. பொதுவாகவே எவர்தான் எழுதியிருந்தாலும் கிறைம் வகையிலான, துப்பறியும் மற்றும் மர்மமுடிச்சுக்கள்கொண்ட எழுத்துக்களில் எனக்கு ஈடுபாடு கிடையாதாகையால் நான் அவற்றை வாசிப்பதில் அக்கறைகொள்ளவில்லை.

நாவல்களுள் தினமணிக்கதிரில் 1972 ம் ஆண்டு அவர் தொடராக எழுதிய காயத்திரி என்கிற நாவல்தான் முதலில் படமாக்கப்பட்டது. இதில் கதாநயகன் ரஜனிகாந்த். இதில் உலகமறியாத ஒரு பேதைப்பெண்ணாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். படம் தயாரானபின் அதை வெளியிடுவதில் தணிக்கைக்குழுவின் ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கு ஆளாகியதில் பல இடங்களில் கத்தரிவைக்க நேர்ந்ததாக அறியமுடிகிறது. பின்னாளில் கனவுத்தொழிற்சாலை நாவலில் தணிக்கைக்குழுவினர் செய்யும் கெடுபிகள் பலவற்றை அங்கதம் சேர எழுதியிருப்பார்.

” நிறுத்து………….நிறுத்து. அங்ஙின கொஞ்சம் றீவைண்ட் பண்ணுப்பா. தாவணி பறக்க ஓடியாறாளே……..கொஞ்சம் மாரு தெரியறாப்பல, சரியா பாருங்கப்பா. ”
“இல்லைங்க மெடம் அப்படி ஒண்ணுந்தெரியல எல்லாம் சரியாத்தான் இருக்கு?”
” இருந்தாலும் அவ மாரு கொஞ்சம் அதிகமாத்தான் குலுங்குது……….பார்க்கிறவாளை எக்ஸைட் பண்ணும்?”
” சரி அதைத்தூக்கிடவா?”
தூக்கினாத்தான் அந்த மாமிக்கு திருப்தி, இரவு தூக்கம் வரும்.
இப்படியாகப்போகும்.

பின்னாளில் விகடனில் ப்ரியாவை (குறுநாவல்) நான் வாசித்தேன். இதுவும் படமாக்கப்பட்டது. இதிலும் ரஜனிதான் கதநாயகன். சுஜாதா இலண்டனில் நடப்பதுபோன்று அதன் கதையை அமைத்திருந்தார். ஆனால் அதைப் படமாகச்செய்தபோதோ தயாரிப்பின் வசதிகருதி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கதையின் பகைப்புலத்தை மலேஷியாவாக மாற்றியிருந்தார். நிகழ்வுகள் எதனுடனும் ஒட்டமுடியாமலும் பிரதி செயற்கைத்தனங்கள் நிறைந்ததாகவும் மாறிவிட்டிருந்தது. பொதுவாக எந்த நாவலாசிரியரின் நாவல்தான் படமாக்கப்பட்டாலும் அந்நாவலாசிரியர் அப்படமானது சரியாக என் பிரதியைப்போன்றே எடுக்கப்பட்டிருந்தது என்று திருப்தி அடைவதில்லை. அடையவும் முடியாதுதான். ” ஏய்…… பாடலொன்று” என்கிற காபி ராகத்திலமைந்த புகழடைந்த பாடல் அப்படத்தில் வருவதுதான்.
ப்ரியா படத்துக்கான கதையை தந்ததுடன் சுஜாதாவின் பங்கு முடிவடைகிறது. அப்படத்தின் திரைக்கதை அமைத்தல், வசனம் எழுதுதல் போன்ற கிரியைகள் எதிலும் அவர் பங்கேற்கவில்லை. அப்படம் வெளிவந்தபின் அப்படம் பற்றிய தன் கருத்தையும் அவர் எங்கும் பதிவு செய்ததாகவும் தெரியவில்லை. அதன் பின்னான ‘ரோஜா’ தொடங்கி அவரது திரைப்பட ஈடுபாடுகளையும் பங்களிப்புகளையும் வாசகர்கள் அறிவார்கள்.
இன்னும் உங்களுக்கு ஆச்சர்யம் தரக்கூடிய ஒரு தகவல்: சுஜாதா 70களின் நடுவில் வெளிவந்த ‘மயங்குகிறாள் ஒரு மாது’ என்கிற படத்தில் ஹொட்டல் ஒன்றில் வைத்து பொருட்பெண் ஒருவரைப் பேட்டிகாணச்செல்லும் பத்திரிகையாளராக ஒரு சிறிய பாகமேற்று நடித்துமிருக்கிறார் என்பது.

‘ஏறக்குறைய சொர்க்கம்’ என்பது ஒரு விடலைப்பையனுக்கு ஒரு மணமான பெண்ணின்மேல் பிறக்கும் அதீதமான ஆகர்ஷிப்பும் அதுதரும் அவஸ்தைகளைப் பற்றியும் விபரிக்கும் ஒரு குறுநாவல். அதன் முன்னுரையில் அவரே சொல்கிறார்: ‘எந்தக்கதையும் முடிவதில்லை. ஏதோ ஒரு காலகட்டத்தில் தொடங்கி ஏதோ ஒரு காலகட்டத்தில் நிறுத்துகிறோம், அவ்வளவே. அறுதியிட்டு இதுதான் கதை இனிமேல் கிடையாது என்று சொல்லிவிட்டால் புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனம்’ போன்ற கதைகள் எமக்குக் கிடைத்திருக்குமா?’
உலகத்தின் எல்லாப்படைப்புகளினுள்ளும் ஏதோ ஒன்றின் தொடர்ச்சி இருப்பதை உணர்ந்து உணர்த்தியவர்.

அவரது புனைகதை உலகத்தில் ஏறத்தாழ 250 சிறுகதைகள் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அவற்றுள் சிறந்தவற்றை இச்சிறு கட்டுரையில் பட்டியலிடுவதென்பது கடினம். யாழ்நூலகம் எரியூட்டப்பட்டபின்னால் அவர் மனம் நொந்து எழுதிய ‘ஒரு லட்சம் புத்தகங்கள்’ என்கிறகதை நிஜத்திலும் லட்ஷம் பெறும்.
சிறுகதையைவிட கட்டுரை எழுதுவதுதான் அவருக்கு பிடித்தமானதாக இருந்திருக்கிறது. ஏனெனில் “அதில்தான் உண்மையை விபரிப்புகள், சோடனைகள், கற்பனைகள், தாளிதங்கள் இல்லாது நேரடியாகச் சொல்லிவிடலாம். ஆனால் மக்கள் கட்டுரைகளைவிட கதைகளை மோகிப்பது துர்லபமே” என அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார். கட்டுரைகள் வரிசையில் அப்பா அன்புள்ள அப்பா, ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம், ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம், கடவுள் இருக்கிறாரா? என்பன சிறந்தவை. அவரது நாவல்கள் எவையுமே 150 பக்கங்களுக்கு மேற்பட்டனவாக அமைவதில்லை. அவைகளுள் எப்போதும் பெண், கரையெல்லாம் செண்பகப்பூ, பெண் இயந்திரம், ப்ரியா, கனவுத்தொழிற்சாலை என்பன மறக்கமுடியாதவை. ஆதலினால் காதல் செய்வீர், ஏறக்குறைய சொர்க்கம், மூன்று நிமிஷா கணேஷ் என்பனவற்றை அவற்றின் நீளத்தை காலத்தைவைத்துக் கணித்தால் Novelette அல்லது குறுநாவல் வகைக்குள்தான் அடங்கும்.
கணையாழி 1965 டில்லியிலிருந்து வெளிவந்த காலத்திருந்தே அதன் பின்புற உள் அட்டையில் அவர் உலகின் பல்வேறு விஷயங்கள் பற்றி தொடர்ந்து எழுதிவந்த ‘சுஜாதாவின் கடைசிப்பக்கம்’ கட்டுரைகளும், ஆனந்தவிகடனில் அண்மைக்காலம்வரை எழுதிவந்த ‘கற்றதும் பெற்றதும்’ கட்டுரைத்தொடரும் பிரசித்தமானவை.

இன்னும் சுஜாதாவுடைய நவீன விஞ்ஞான அறிவும், அறிவியல் சார்ந்த புனைவுகளும் பிரசித்தமானவை. மீண்டும் ஜினோ என்கிற சிந்திக்கத்தெரிந்த கற்பனை ரொபோட் நாயை உருவாக்கி அது பல அற்புதங்களைப் புரிவதாகப் பண்ணியுள்ளார். ஆரம்பத்தில் கணனி பரவலாக அறிமுகமாகாத காலத்தில் அதுபற்றிய பாலபாடங்களைக் கட்டுரைகளாக வடித்து நமக்கெல்லாம் தந்தவர். இன்று இந்தியாவில் பெருந்தொகையாகப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் வாக்குப்பதியும் இயந்திரத்தை வடிவமைத்த பொறியிலாளர் குழுவின் தலைமை விஞ்ஞானி.

தமிழில் எழுதியவர்களுள் சுந்தர ராமசாமியையும், தி.ஜானகிராமனையும், நீலபத்மனாபனையும், கி.ராஜநாராயணனையும், கவிஞர் கலாப்ரியவையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். நிஜத்தில் சுந்தரராமசாமி யாரென்று தெரியாமலே அவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த தகழி சிவசங்கரப்பிள்ளையின் செம்மீனை த்தான் நான் முதலில் வாசித்திருந்தேன். சுஜாதா அறிமுகம் செய்தபின்னாலேயே எனக்கு அவரது காலச்சுவடும், கஸ்தூரிரங்கனின் கணையாழியும் தெரிய வந்தன. (இதுபற்றி பிறிதொரு வேளை தனியாக எழுதுவதாக உள்ளேன்.)

ஒரு எழுத்தாளனின் அக்கறைகள் எந்த அளவுக்கு பரந்த தளத்தில் இருக்கவேண்டுமென்பதற்கு சுஜாதா ஒரு இனிய உதாரணம். அவரது கவிதை சம்பந்தமான ஈடுபாடு சங்க இலக்கியங்களில் தொடங்கி மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், நாட்டார்பாடல்கள், ஹைக்கூ என விரிந்து சென்றன. ஹைக்கூ கவிதைகள் பற்றி விஸ்தாரமாகக்கூறும் ‘ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்’ எனும் நூலைத் தமிழ் இலக்கியத்துக்குத் தந்திருக்கிறார். வைணவ இலக்கியங்களின் மீது குறிப்பாக பத்து ஆழ்வார்களும் கூடிச்செய்த நாலாயிரத்திவ்யபிரபந்தத்தின்மேல் பெரும் மோகமும் ஆழ்ந்த அறிவும் கொண்டிருந்த சுஜாதா ‘அறிவியலும் ஆன்மீகமும் ஒரு புள்ளியில் பொருந்துவன’ என்கிற நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது ‘கடவுள் இருக்கிறாரா?’ என்கிற நூலில் பிரபஞ்ச இரகசியங்கள் சிலவற்றை விரித்துரைக்கவும் முற்படுகிறார். இன்னும் தானே வைஷ்ணவத்தலங்கள் பலவற்றையும் அவ்வப்போது விரும்பிப்போய் சேவித்தும் இருக்கிறார். அப்படியே அவர் நம்பிய வைகுந்தமும், சனகரும், சரகாதியரும், சற்குமாரரும், தேவரும், தேவதைகளும் வாஸ்த்தவமேயானால் சுஜாதாவை அவர்களால் பூப்போல வைத்து சிஷ்ருஷ்ஷை செய்யட்டும்.

சுஜாதா என்றும் கவிதைகளில் கரைபவர். மு.மேத்தா அவ்வளவு அறியப்படாதவராக இருந்தகாலத்தில் தனது படைப்புக்களிடையே அவரது கவிதைகளைச் சேர்த்தும் மேற்கோள் காட்டியும் எழுதி மேத்தாவின் கவிதைகளை வாசகர்களால் கவனிக்கப்பட வைத்தார். மனுஷ்யபுத்திரன், நா. முத்துக்குமார்கூட அவரால் கண்டுபிடிக்கப்பட்டவர்களே.

ஈழத்துக்கவிஞர்களுள் மஹாகவியையும், சேரனையும், வ.ஐ.ச.ஜெயபாலனையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக ஜெயபாலனது ‘சூரியனோடுபேசுதல்’ கவிதைத்தொகுதியை விதந்து குங்குமத்தில் எழுதியுள்ளார். ‘கொஞ்சம் விஸ்க்கி வைத்துக்கொண்டு ஜன்னலண்டை உட்கார்ந்து இயற்கை வெளிச்சத்தில் கவிதை படிப்பது இன்பம்’ என்று ஒருமுறை சொன்னார். மகாகவி பாரதியாரை அவர் வியந்தது ஆச்சர்யமில்லைத்தான். ஆனால் பாரதி படத்தின் கூட்டுத்தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர் என்பதுவும் பின்னாளில்தான் இணையத்தளம் ஒன்றிலிருந்துதான் அறியநேர்ந்தது.

என்னதான் நாலாயிரதிவ்யபிரபந்தத்திலும் சங்க இலக்கியத்திலும் குறளிலும் பரிபாடலிலும் ஆழனுபவமும், காதலும் மோகமும் இருந்தாலும் தன் படைப்புக்களில் இடத்துக்குத் தகுந்தமாதிரி ஆங்கில வசனங்களை அள்ளிவிடவும் அவர் தயங்கியதில்லை. ஆனால் அவற்றைத் தமிழில்தான் எழுதுவார், அதாவது ஆங்கில வரிவடிவத்தைப் பாவிப்பதில்லை. சுஜாதாவின் எழுத்தைப்பற்றி இரண்டு முக்கியமான விமரிசனங்கள் இருக்கின்றன. ஒன்று அவருக்கு இரண்டு முகங்கள் இருந்தன என்பது. அதாவது சிற்றிலக்கியப் பத்திரிகைகளில் ஒருவிதமாகவும், ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வேறொரு விதமாகவும் எழுதுவது. மற்றது அவரது எழுத்துக்கள் சமூகப்பிரக்ஞையும் ஆழமும் குறைந்தன என்பது. அவரது பரந்த எழுத்துப்பரப்பு முழுவதையும் நுணுகிப்பார்த்தால் எப்போதும் அவர் எழுத்தின் அடிநாதமாக ஊடுபாவாக அன்பும், மானுஷநேயமும்தான் இருந்தன என்பது தெரியவரும். சங்கஇலக்கியங்களோ, எம்காவியங்களோ அல்லது உலகத்தின் ஏனைய பரப்புக்களில் விளைந்த ஏனைய பெரிய இலக்கியங்கள் எதைச்செய்ய விழைந்தனவோ எதன் திசையில் இருந்தனவோ அதே திசையில்தான் சுஜாதாவும் பயணித்தார். அவர் தந்த அனைத்துக்குமே தமிழுலகம் என்றைக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டது.

தமிழ் இலக்கிய உலகம் சுத்தமானது அல்ல, அது ஊழல்களும் காழ்ப்புகளும் நிறைந்த சாக்கடை. சாகித்திய அகெடமியோ, ஞானபீட கொமிட்டியோ , அல்லது இதர இலக்கிய அமைப்புக்களோ தன் பரிசுகளுக்கு தகுதிவாய்ந்தவராக இதுவரையில் சுஜாதாவைச் சிந்தித்ததே கிடையாது. ஆனால் அவரோ பரிசுகளையும் பகட்டுக்களையும் ஏறெடுத்தும் பாராத ஓயாத படைப்பாளியாகவே இறுதிவரை வாழ்ந்தார். அவருடைய வெளியீட்டாளரும் நண்பருமான கவிஞர் மனுஷ்யபுத்திரன் சொல்லுகிறார்:
“அவருடைய புத்தகங்களின் வெளியீட்டுவிழாக்களுக்குகூட அவரை மிக வற்புறுத்தியே அழைத்து வருவேன். அந்த அளவுக்கு அவர் புகழுரைகளையும், வெளிச்சங்களையும் கண்டு கூச்சப்பட்டார். எவ்வளவுக்கு பிரபலமாக இருந்தாரோ அந்த அளவுக்கு தனிமையுணர்ச்சிகொண்டவராகவும் விலகியிருப்பவராகவுமே வாழ்ந்தார். படைப்பு சார்ந்த தனிமையை ஆரவாரங்கள் தீண்டலாகாது என்பதில் கவனமாக இருந்தார்.”

குமுதத்தின் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை வைத்தியம் செய்துகொள்வதற்காக அமெரிக்காவுக்கு செல்லும்போது சுஜாதவை அழைத்து அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டிருந்தார். பிறகு என்ன தோன்றியதோ அமெரிக்காவிலிருந்து தொலைபேசியில் அவரை மீண்டும் அழைத்து ‘நீயே தொடர்ந்து பத்திரிகையை நடத்துப்பா’ என்றும் கூறியிருக்கிறார். அண்ணாமலை காலமானபின்னால் சிறிதுகாலம் அப்பொறுப்பை ஏற்றும் சுஜாதா இயங்கினார். கவிதைமீது இருந்த தீவிர அக்கறையால் குமுதத்தில் நல்ல கதைகளோடு, காத்திரமான கவிதைகளும் இடம்பெறத்தொடங்கின. குமுதத்தின் வழமையான நிறமே படிப்படியாக மாற ஆரம்பித்தது. ஆனால் குமுதத்தில் இவரைவிடவும் நெடுங்காலமாக பணிபுரிந்த ரா.கி.ரங்கராஜன், புனிதன், ரா.சுந்தரேசன் போன்ற பெரிசுகளால் அதைப் பொறுக்கமுடியவில்லை. பத்திரிகையின் விற்பனை சரிவதாக குமுதம் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு புகார்கள் செய்யத்தொடங்கினர். பணத்துக்காக எந்தப்பதவியையும் தக்க வைத்துக்கொள்ளவேண்டிய நிலையில் சுஜாதா இல்லை. பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்துவிட்டார். இழந்தது பத்திரிகையும் அதன் வாசகர்களுமேயன்றி அவருக்கொன்றுமே இழப்பதற்கு இருக்கவில்லை. ‘மறைவில் நடந்தகதை’ என்று இந்நிகழ்வுகளை அவர் பதிவு செய்துமிருக்கிறார். சுஜாதாவே மொழிபெயர்த்துச் சொன்ன ஜப்பானிய ஹைக்கூ கவிதை ஒன்று பொருத்தம் கருதி இவ்விடத்தில்:-

அழகிய நெல்வயலின் பெண்ணே
இன்னும் சேறுபடியாமல் இருப்பவை
உன் கானங்கள் மட்டுந்தான்.

மின் அம்பலம் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று அவர் நடத்தி வந்தபோது வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.
ஒரு முறை நான் கேட்டேன் ” இந்தியாவுக்கு விகிதாசாரத்தேர்தல் இன்னும் பொருத்தமாக இருக்குமல்லவா? ” என் கேள்வியை என்ன விதமாகப்புரிந்தாரோ ‘என்ன முறையில்தான் தேர்தல்கள் அமைத்தாலும் இங்கிருக்கும் இன ஜாதிய மொழி விகிதங்களையும் ஊழலையும் ஒன்றுமே பண்ணிவிடாது’ என்று பதில் எழுதினார். இன்னொரு வாசகர் ‘ ஏன் சார் நீங்கள் ஆங்கிலத்தில் எழுத முயற்சிக்கவில்லை?’ என்று கேட்டார். அவர் வேணுமானால் ஏதாவது சவடால் பதிலளித்திருக்கலாம். அப்போதும் உண்மையையே பேசிய சுஜாதா: ” அந்த மொழியில் இலக்கியம் படைக்கும் அளவுக்கு எனக்கு ஆளுமை இல்லையே.’ என்றார்.
அதே பத்திரிகை சுஜாதாவுடன் அரட்டை என்றொரு நிகழ்ச்சி அரங்கை பிரதி சனிக்கிழமைகளும் நடத்தியது. அதில் அவருடன் ஒருநாள் அரட்டை அடிக்கையில் இருபது வருஷங்களுக்கு முன்னர் சுஜாதாவின் மாமனார் ஒரு பேட்டியில் ” அவர் எழுதியது எதையுமே இதுவரை நான் படித்தது இல்லை” என்று கூறிய விஷயம் பட்டென்று என்நினைவுக்கு வரவும் “உங்கள் மாமனார் அப்படிக்கூறியது உங்களுக்கு உண்மையில் வருத்தம் ஏற்படுத்தவில்லையா?” என்றுகேட்டேன். சுஜாதாவோ ” நண்பரே மனுஷன் உண்மையைத்தான் கூறியிருக்கிறார். அவர் பிறந்ததும் வளர்ந்ததும் பெங்களூர்……. ஒரு அக்ஷரம் தமிழ் தெரியாது” என்றார் நகைச்சுவையாக.
சுஜாதா எழுதிய அரிசி என்றொருகதை. வெகுநேரம் ரேஷன் கடையில் காத்துநின்று வீட்டுக்கு அரிசி வாங்கி வரும் ஒரு பையன் வழியில் பாரவுந்து ஒன்றில் அடிபட்டுவிடுவான். அரிசிமுழுவதும் தெருவில் சிந்திவிடும். ஜனங்கள்கூடித் தெருவே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும். இன்னொரு ஏழைச்சிறுவன் அதையொன்றையிட்டும் அலட்டிகொள்ளாமல் நிதானமாக குருதியுடன் கலந்த அவ்வளவு அரிசியையும் தன்பாட்டுக்குகூட்டி அள்ளிக்கொண்டிருப்பான்.
பெர்லினில் ஒருநாள் அந்தியின் கருக்கல் நேரம் ஜன்னலைத் திறந்துவைத்து பிரதான தெருவைவேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன். ஒரு மனிதன் கொஞ்சம் குடித்திருப்பானோ என்னவோ ஒரு அட்டைப்பெட்டியில் கொஞ்சப்பொருட்களுடன் வீதியைக்குறுக்காக கடந்துகொண்டிருந்தான். வேகமாக வந்த Golf காரொன்று அவனை நெட்டித்தள்ளிவீசியது. “படாங்” என்கிற சப்தத்துடன் அவனது வைன்போத்தல்களும் இதர பொருட்களும் உடைந்து தெருவில் சிதறின. . நொடிக்குள் அம்புலன்ஸ், காவல்துறை எல்லாம்வந்து தெருவே அவதிப்பட்டுக்கொண்டிருக்க, துருக்கி அல்லது லம்பாடியாக இருக்கலாம் முக்காடு அணிந்திருந்த ஒரு முதியமாது சிதறியிருந்த அவனது Pink Shrimp எனப்படும் பெரிய இன இறால்களை ஓடியோடிப்பொறுக்கிக் கொண்டிருந்தாள். இந்நிகழ்வை சுஜாதாவிடம் சொன்னேன். கேட்டு மிகவும் நெகிழ்ந்தார்.

அவரது பிறந்த நாளன்று (03rd May) அவருக்கு ‘Wishing you a Glorious day’ என்று ஒரு மின் அஞ்சலில் வாழ்த்து ஒன்றை அனுப்பினேன். Hey……. Are you the Writer, How do you do? என்று பதில் எழுதினார். அவர் படிப்பதில் எவரையுந்தான் விட்டுவைப்பதில்லை என்பது எனக்குள் மீண்டும் பிரத்யட்ஷம்.

ராஜீவ் காந்தியின் கொலைக்குப்பிறகு தமிழகத்தில் வாழ்ந்த ஈழத்தமிழர்கட்கு சில நெருக்கடிகளும், அசௌகரியங்களும் ஏற்பட்டன. அவ்வேளையிலும் ‘ராஜீவ் காந்தி செய்ததும் தவறுதான் ஆனால் அதற்கான தண்டனைதான் கொஞ்சம் அதிகம் என்றும், உண்மையான புறநானூற்றுத்தமிழர்கள் ஈழத்தில்தான் இருக்கிறார்கள் அவர்கள் போராட்டத்தில் நியாயம் உண்டு என்றும்’ இந்தியா ருடேயில் எழுதினார். ஈழத்தமிழர்களின் போராட்டம் தேவையில்லாததென்றோ, அர்த்தமில்லாததென்றோ எவ்விடத்திலும் பதிவு செய்யவில்லை.

ஆனால் தேசியவாதிகளையும் தேசியவாதத்தையும் நேரிடையாக ஆதரிப்பதில் இதர அறிவுஜீவிகளுக்கு இருப்பதைப்போலவே சுஜாதா அவர்களுக்கும் சில மனத்தடைகள் இருந்திருக்கலாம். எமது தேசியவாதந்தான் 75,000 முஸ்லீம் மக்கள் அவர்தம் வேர்நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டிருப்பதை இரண்டு தசாப்தங்களாக எந்தவித விமர்சனமோ, முணுமுணுப்போ, குற்றவுணர்வுமின்றிப் பார்த்துக்கொண்டிருக்க எமக்கு கற்றுத்தந்திருக்கிறது. எம்மைச்சூழவுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மீர், இந்தோனேஷியா, மலேஷியா நாடுகளில் இவர்கள்
முஸ்லீம் விரோதிகள் என்கிற கருத்தைச்சம்பாதித்தாகிவிட்டது. ஒரு நேரம் எங்களை அவர்கள் அங்கீகரிப்பார்களோ என்பதுகூடத்தெரியாது.
ஜோர்ஜ் புஷ்ஷையும், அவரது அரசின் வெளியுறவுக்கொள்கைகளையும் நெற்றியடியாக விமர்சித்தும், எதிர்ப்பிரச்சாரம்செய்தும், சினிமாப்படங்கள் (Fahrenheit 11.September, Bowling for Columbine) எடுத்தும் வருகிற Michael Moore க்கு இன்னும் அமெரிக்காவில் உயிருடன் இருக்கவும், தொடர்ந்து அமெரிக்க அரசுக்கு எதிரான பிரசாரப்படங்களை எடுக்கவும் வெளியிடவும் முடிகிறது. என்னதான் ஜனநாயக விரோதியாக இருந்தாலும் அவ் ஜனாதிபதியானாலுங்கூட மக்களின் கருத்துச் சுதந்திரவிஷயத்தில் சட்டத்தை தன் கைகளில் எடுக்கமுடியாத நிலையே அங்கு இன்னும் உண்டு. எதிர் விமர்சனமாக இருந்தாலும் ஒருவன் விமர்சனம் என்றுவருவதை சகிக்க்க வேண்டும் என்பது கருத்துலக நாகரீகம். எதிர்கருத்து உள்ளவர்கள் உயிருடன் இருக்கவே தகுதி இல்லாதவர்கள் என்பது எமது தமிழீழத்தேசியத்தின் ஆபத்தான கற்பிதம். அதன் வரலாறு முழுக்க இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு. தமிழ்த்தேசியவாதத்தின் எதிர்விளைவுகளை மனம்விட்டு விமர்சிக்கும் மாற்றுசிந்தனையுள்ள ஒருவர் ஈழத்தில் இயல்பாக மூச்சுவிட்டுக்கொண்டிருக்க இருக்கமுடியாது.


karunaharamoorthy@yahoo.ie

Series Navigation

பொ கருணாகர மூர்த்தி

பொ கருணாகர மூர்த்தி