மலையாளக்கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

ஜெயமோகன்



தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

இதை நான் கேரளத்தில் ஓர் இலக்கியக்கூட்டத்தில் சொன்னேன். கீழே இறங்கியதும் ஒரு வாசகர் அருகே வந்தார். ”நல்ல கவிதை சார் இது. ரொம்ப அருமையான கவிதை. ஆனா நீங்க முழுசா சொல்லியிருக்கலாம்”

”நான் முழுக்கவிதையையும் சொன்னேனே…”

”அப்படியா? நாலுவரிதானே இருந்தது?”

”ஆமாம்.அந்தக் கவிதையே அவ்வளவுதான்”

அவர் நம்பாமல் பார்த்துவிட்டு ”…அப்படியானால் நீங்கள் அதை ஒரு குட்டிக்கவிதை என்றே சொல்லியிருக்கவேண்டும். வாசகர்களுக்கு குழப்பம் வந்திருக்காது.”

”அப்படியா?நான் அப்படி நினைக்கவில்லை”

”ஆனாலும் இந்தக்கவிதைக்கு ஏதோ ஒரு குறை இருப்பதுபோல இருக்கிறது. என்ன என்று தெரியல்லை. கவிதை முடிவடையாதது மாதிரி”

நான் ”வ்யர்த்தமாமொரு ரசனையல்லோ மர்த்ய ஜீவிதம்” [வெறுமொரு எழுத்தல்லவா மானுட வாழ்வு!] என்று ஒரு வரி சேர்த்திருக்கலாமோ”‘ என்றேன்

”ஆமாம் சார். அதைச் சேர்த்திருந்தால் கவிதை அழகாக முடிந்திருக்கும்”

”ஆனால் இந்தக் கவிதையின் பொருள் அது மட்டுமில்லையே”

மலையாளக் கவிதைகளை தமிழாக்கம்செய்யும்போது வரும் சிக்கலே இதுதான். அவை தமிழ் ரசனைக்கு விரித்துச் சொல்பவையாக, பாடிபாடிச்செல்பவையாக, கவிதைக்குள் கவிதையின் பொழிப்புரையையும் சேர்த்து முன்வைப்பவையாகத் தோற்றம் அளிக்கின்றன. தமிழ்க் கவிதைகளை வாசிக்கும் மலையாளப் பொதுவாசகன் அவை கவிதைகள் அல்ல வெறும் தொடக்கங்கள் என்றே பார்க்கிறான்.

நான் மலையாளக் கவிதைகளுடன் இருபதுவருடங்களாக தொடர்புடையவன். வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் முதல் ஆற்றூர் ரவிவர்மா,சச்சிதானந்தன் வழியாக பி.ராமன் வரை மூன்று தலைமுறை மலையாளக் கவிஞர்களுடன் நேரடியான தொடர்பும் உண்டு. மூன்று தொகுப்புகளாக மலையாளக் கவிதைகளை தமிழில் கொண்டு வந்திருக்கிறேன். என் அனுபவத்தில் சில கருத்துக்களைச் சொல்கிறேன்

இரண்டாயிரம் வருடத் தொன்மைகொண்ட தமிழ் கவிதையின் சிறப்பியல்புகளில் முக்கியமானது என்னவென்றால் நாம் கவிதை என்ற வடிவத்தின் பரிணாம வளர்ச்சியை தமிழ்க்கவிதை வழியாகவே காணமுடியும் என்பதே. தமிழில் இன்றும் அழியாது நீடிக்கும் மாபெரும் நாட்டார் மரபு ஒன்று உண்டு. ஆனால் நமக்குக் கிடைக்கும் முதல் எழுதபப்ட்ட கவிதையே செவ்வியல் படைப்பாகத்தான் உள்ளது. சங்கநூல்களில் நற்றிணை, குறுந்தொகை, புறநாநூறு ஆகிய மூன்றும் காலத்தால் பழையவை என்று சொல்லலாம். இவற்றில் உள்ள கவிதைகளை முற்றிலும் செவ்வியல்தன்மை கொண்டவை என்று நான்கு அடிப்படைகளில் வரையறைசெய்யலாம்.

ஒன்று, இவை உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு, குறைபடச் சொல்வதையெ தங்கள் இயல்பாகக் கொண்டுள்ளன. அதன்பொருட்டு கவிஞன் மொழியை தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான்.

இரண்டு, இவை சொல்லபப்ட்டவற்றை நம்பி நிலைகொள்ளவில்லை, சொல்லாமல் விடப்பட்டவற்றை நம்பி நிலை கொள்கின்றன. ஆழ்பிரதி மூலமே இவற்றின் கவித்துவம் நிகழ்கிறது

மூன்று இக்காலகட்டத்தில் கொல்லனும் கணியனும் கவிதைகள் எழுதிய போதிலும்கூட கவிஞன் என்ற ஆளுமை தெளிவாக உருவாகிவிட்டிருந்தது. அவன் கற்றவன், கவிதையை தன் தொழிலாகக் கொண்டவன்.

நான்கு, பெரும்பாலான செவ்வியல்கலைகளைப் போலவே சங்கப்பாடல்களுக்கும் ஒரு நிலைவடிவம் [டெம்ப்ளேட்] உருவாகிவிட்டிருந்தது. கவிதையின் அமைப்பும் கூறுமுறையும் மட்டுமல்ல கூறப்படும் விஷயமும்கூட ஏற்கனவே வரையறை செய்யபப்ட்டவை.அப்படியானால் கலைஞனின் வேலை என்ன? இந்த அமைப்புக்குள் நின்று தன் மனோதர்மத்தின்படி மேலும் மேலும் நுட்பங்களை அடைவதுதான்.

சங்கப்பாடல்களில் பிரிவாற்றாமையால் வளையல் கழல்வதைப்பற்றி மீண்டும் மீண்டும் வருகின்றது. வளையல் அல்லாது இன்னொன்றைப்பற்றி கவிஞன் எழுத முடியாது. வளையல் கழல்வதன் புதிய புதிய சித்திரங்களை உட்பொருட்களை மட்டுமே அவனால் சொல்ல முடியும். ஆம், புறக்கட்டுமானங்களைப் பற்றி கவலைப்படாமல் நுட்பங்களைப் பற்றி மட்டுமே கவனம் கொள்ளுமாறு சங்கக் கவிஞன் கோரப்படுகிறான்.

மலையாளத்துக் கலைவடிவங்களில் கதகளி முழுமையான செவ்வியல் கலை. திருவட்டாறு, திற்பரப்பு, குழித்துறை ஆலயங்களில் வருடத்தில் இருபதுநாள் வீதம் கதகளி உண்டு. என் தந்தை கதகளி ரசிகரானதனால் நான் தொடர்ந்து கதகளிபார்த்திருக்கிறேன். கதகளியில் எப்போதும் கதைச்சந்தர்ப்பங்களும் பாடல் வரிகளும் எல்லாம் ஒன்றுதான். ஆட்டம் ஒவ்வொரு முறையும் கலைஞனால் தன் மனோதர்மத்தின்படி புதிதாக நிகழவேண்டும். நட்டாலம் திரிலோசனன்நாயர் வருடம்தோறும் நளன் அன்னப்பறவையை தமயந்திக்கு தூதனுப்பும் தருணத்தை ஆடுவார். ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு நளன், ஒவ்வொரு அன்னம். அவர் முதன்முதலாக விமானத்தில் சென்று மீண்டபின் ஆட்டம் புத்தம்புதிதாக ஆகியது என்பார்கள்.

இதுவே செவ்வியல்கலையின் இயல்பு. நுட்பத்தை மட்டுமே அடைந்தால்போதும் என்ற நிலை சங்கக் கவிதையை மேலும் மேலும் செறிவானதாக ஆக்கியது. பல சங்கக் கவிதைகள் இருபது வார்த்தைகளுக்குள் நிற்பவை.

காமம் காமம் என்ப
காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்
மூதாதைவந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளாயே

என்ற மிளைப்பெருங்கந்தனின் பாடலின் அடர்த்தியைக் கவனியுங்கள். இதில் உள்ளது ஒரேயொரு படிமம் மட்டுமே. ‘மேட்டுநிலத்து இளம்புல்லை மூத்தபசு சப்பிப்பார்ப்பதைப்போல’ காமம் என்பது ஒரு முடிவிலா விருந்து. இப்படிமத்தை விளக்க, வாழ்க்கைத்தருணத்தில் பொருத்திக்காட்ட கவிஞன் முயலவில்லை. வாசகனின் கற்பனையை நம்பி அப்படியே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறான்.

தமிழ்க் கவிமரபில் நீளமான கவிதை வடிவங்கள் என்றால் வஞ்சிப்பா,கலிப்பா இரண்டையும் சொல்லலாம். ஆசிரியப்பா நீளமாகப் பாடப்படலாம். ஆனால் பின்னர் காப்பிய காலம் உருவாகி நெடுங்கவிதை ஆக்கங்கள் உருவானபோதுகூட தமிழின் செறிகவிதை மரபையே அவையும் தொடர்ந்தன. சிலம்பு ரத்தினச்சுருக்கமான ஒரு காப்பியம். தமிழின் மிகப்பெரிய காவியம் என்றால் அது கம்பராமாயணம். அது செறிவான நாலடிக் கவிதைகளினால் ஆனது. உணர்ச்சிகள் பொங்கிவழியும் தமிழ் பக்திக் கவிதைகள்கூட நாலடிகளுக்குள் செறிந்து நுண்மை கொள்ளும் தன்மை கொள்பவையே.

இந்தமரபில்தான் புதுக்கவிதை வந்து சேர்ந்தது. எஸ்ரா பவுண்ட் நவீன கவிதைக்கு உருவாக்கியளித்த இலக்கண அமைப்பை இங்குள்ள நவீனக்கவிதை முன்னோடிகள் , குறிப்பாக க.நா.சுப்ரமணியம், ஆராய்ந்தபோது அது அவருக்கு மிக உவப்பானதாக இருந்தமைக்குக் காரணம் அந்த இலக்கணங்கள் ஏற்கனவே இங்கே செவ்வியலில் இருந்தவை என்பதே. அலங்காரங்களையும் நேரடிவெளிப்பாடுகளையும் தவிர்க்கும் தன்மை, படிமத்தன்மை, சுருங்கச்சொல்லி மொழியை கட்டுக்குள் நிறுத்தும் தன்மை, ஆழ்பிரதியை நம்பியே இயங்கும் தன்மை முதலியவை.

தமிழ்நவீனக்கவிதை அது உருவான சில வருடங்களிலேயே இந்தியமொழிகளில் உருவான மிகச்சிறந்த நவீனக் கவிதைகளை உருவாக்கிவிட்டது. அதேகாலகட்டத்தில் கன்னடத்தில் சந்திரசேகரக் கம்பார் போன்றவர்களின் நீளமான நாட்டார் கவிதைகள் வந்துகொண்டிருந்தன. வங்க, இந்தி கவிதைகள் உரைநடைபோல தளர்வாக சொற்பொழிவாற்ற முயன்றன.

இங்கே தலைமையுரையில் கவிஞர் தமிழன்பன் மலையாளக் கவிதையின் தமிழக வேர்களைப் பற்றி எடுத்துச் சொன்னார். திணைக்கோட்பாட்டை அய்யப்ப பணிக்கர் உலகமெங்கும் கொண்டுசென்றதை விளக்கினார். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மலையாளப் பண்பாடு தன் தனித்துவத்தைக் கண்டடைய முற்பட்டபோது தமிழ்த்தொன்மையிலேயே தன் வேர்களை அறிந்தது. பேராசிரியர் இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை முதலியோர் அதற்கு அடித்தளமிட்டார்கள்.

ஆனால் அடுத்த கட்டத்தில் மலையாளப் பண்பாடு தன் தனித்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது. அதற்கு முன்னோடியாக அமைந்த சிந்தனையாளர் இ.எம்.எஸ்.நம்பூதிப்பாடுதான். அவரது ‘கேரளம் மலையாளிகளின் மாத்ருபூமி’ என்ற நூல் துஞ்சத்துஎழுத்தச்சனில் இருந்து கேரள இலக்கியத்தையும் பண்பாட்டையும் தொடங்குகிறது. அப்போக்கு வலுப்பெற்று இன்றும் தொடர்கிறது.

ஆனால் கேரளப் பண்பாட்டின் செவ்வியல் வேர்நிலமாக சங்ககாலத் தமிழ்பண்பாட்டையே காணவேண்டும் என்று வலியுறுத்தும் வலிமையான ஒரு சிந்தனைப்பள்ளி கேரளத்தில் உண்டு. எம்.கோவிந்தன் அதன் மூலவர். அய்யப்பப் பணிக்கர் அதன் இன்னொரு மையம். எம்.என்.ராய்யின் மாணவரான கோவிந்தன் ஈ.வே.ரா மற்றும் சி.என்.அண்ணாத்துரை ஆகியோருடன் நெருக்கமான உறவுள்ளவர். கோவிந்தன் நடத்திய சமீக்ஷ¡ என்ற இதழ் தமிழ்ப்பண்பாட்டிற்கும் கேரளத்திற்குமான பாலமாக இருந்தது. அய்யப்ப பணிக்கர் தமிழ் அழகியலுக்காக இறுதிநாள்வரை வாதிட்டவர். மறைந்த பேராசிரியர் ஜேசுதாசனிடம் அவருக்கு நெருக்கமான உறவு இருந்தது.

முக்கியமான சிந்தனை மையமாக விளங்கிய கோவிந்தனால் கண்டெடுக்கப்பட்ட படைப்பாளிகள் பலர். அவர்களில் பி.கெ.பாலகிருஷ்ணன் ஆற்றூர் ரவிவர்மா இருவரையும் அவரது நேரடி மாணவர்கள் எனலாம். நான் தனிப்பட்ட முறையில் இவ்விருவரையும் என் ஆசிரியர்களாகக் கொண்டவன். ஆற்றூர் ரவிவர்மா தமிழின் படைப்புகளை மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்வது, தமிழ் பண்பாட்டுத்தொடர்ச்சியை நிலைநாட்டுவது, மலையாள மொழியில் உள்ள சம்ஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்கொள்வது போன்றவற்றில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரும்பணியாற்றி வருகிறார்.

என் நோக்கில் மலையாளத்தை ஒரு தனிவடிவமான தமிழ் என்றே எண்ணுகிறேன். தன் செவ்வியல்த் தளமாக தமிழைக் கொள்ளும்போதே மலையாள படைப்பிலக்கியம் உண்மையான ஆழத்தை அடைய முடியும். அப்போது அதன் இன்றைய புதுமைமோகம் பலவகையான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். மலையாளம் தன் சொற்கிடங்காகவும் படிமவயலாகவும் தமிழ்ச் செவ்வியல் மரபை கண்டடைய வேண்டும்.

கேரளத்தின் கவிதையை இப்பின்னணியில் வைத்துத்தான் நாம் காண வேண்டும். மலையாளக் கவிதையின் தொடக்கம் என்பது துஞ்சத்து எழுத்தச்சனின் ராமாயணம், மகாபாரதம் கிளிப்பாட்டு நூல்களில் இருந்து. அவற்றை நாட்டார் கவிதைகள் என்றே சொல்லிவிடலாம். அவை மக்களிடையே பெரும்புகழ்பெற்றமைக்குக் காரணமும் இதுவே. அவற்றின் அடிப்படை இயல்பு உணர்ச்சிகரமாக பாடிப்பாடிச்செல்லுதல், சீரான ஓட்டம், சொல்பவற்றை மீண்டும் மீண்டும் சொல்லி நிறுவுதல் போன்றவை

மலையாளக் கவிதையின் நவீன யுகம் குமாரன் ஆசானில் தொடங்குகிறது. ஆசான் பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதையின் நேரடியான பாதிப்பு உடையவர். ‘உணர்ச்சிகள் பொங்கிவழியும்’ வடிவத்தை எடுத்துக் கொண்டவர். ஆக, மலையாளக் கவிதையின் இரு முக்கியமான முன்னுதாரணங்களும் . செவ்வியல்தன்மை இல்லாதவை. ஆகவே நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதவை,ஆழ்பிரதிகள் அற்றவை.

மலையாளக் கவிதை ஒரு பெரிய மக்களியக்கமாக ஆக இந்த அம்சம் காரணமா என்று யோசிக்கலாம். பல மலையாளக் கவிஞர்கள் நட்சத்திரங்களாக இருந்தார்கள்– சங்ஙம்புழா கிருஷ்ணபிள்ளை போல. நவீனகவிதை வந்தபோது இந்த மக்களியக்கத்துக்கு எதிராக அது செயல்படவேண்டியிருந்தது.செறிவையும் உணர்ச்சி கலவாத நுட்பத்தையும் முன்வைக்கும் அதன் இலக்கணங்கள் அங்கே ஏற்புடையனவாக இருக்கவில்லை. மலையாளத்தில் இன்றும் மரபுக்கவிதை ஒரு முக்கியமான இயக்கமாகவே தொடர்கிறது என்பதைக் கவனிக்கலாம். நான் அறிந்து உருது தவிர வேறு எங்கும் இந்நிலை இல்லை.

மலையாளத்தில் நவீனக்கவிதையை கொண்டுவந்த முன்னோடி என்று அறியப்படுபவர் அய்யப்ப பணிக்கர். அவரது புகழ்பெற்ற கவிதைகள் எல்லாமே உணர்ச்சிக்குவியல்களான நீண்ட பாடல்கள் என்பதை வைத்தே நாம் நிலைமையை ஊகிக்கலாம். விதிவிலக்காக எழுதியவர் ஆர்றூர் ரவிவர்மா, ஆர்.ராமச்சந்திரன் போல சிலரே.

இந்நிலையில் மலையாளக் கவிதைகளை தமிழுக்கு மொழியாக்கசெய்யும்போது எழும் சிக்கல்கள் பல. மலையாளக் கவிதைகளை தமிழில் அதே மெட்டுடன் மொழிபெயர்ப்பதா என்பது ஒரு முக்கியமான கேள்வி. பல கவிதைகளை அப்படி மொழியாக்கம் செய்தால் மட்டுமே எடுபடும். உதாரணமாக

‘ஈற்றப்புலி நோற்று கிடக்கும் ஈறன் கண்ணு துறந்நும்..’

எனத் தொடங்கும் கடம்மனிட்ட ராமகிருஷ்ணனின் ‘கிராதவிருத்தம்’ கவிதையை அதே மெட்டில்

வேங்கைப்புலி காத்துகிடக்கும் ஈரக்கண்கள் திறந்தும்
கருநாகம் வாலில் நெளியும் புருவம் பாதி வளைத்தும்
நீறான வனத்தின் நடுவே நின்றான் காட்டாளன்!
நெஞ்சில் ஒரு பந்தம் நட்டு நின்றான் காட்டாளன்!

என மொழியாக்கம்செய்தேன். அதே போல ஐயப்பப்பணிக்கரின் ‘சந்த்ய’ கவிதையை அதே மெட்டில் மொழியாக்கம் செய்தேன்.

அதேசமயம் மலையாளத்தில் உணர்ச்சிகரமான மெட்டுடன் பாடப்பட்ட என்.என்.கக்காடு எழுதிய ‘ச·பலமீ யாத்ரா’ கவிதையை ‘நிறைவுற்றது இப்பயணம்’ என்ற தலைப்பில் வசனநடையிலேயே மொழியாக்கம் செய்தேன். வசனநடையிலேயே அக்கவிதையின் உணர்ச்சிகள் வெளிப்பட்டன.

தமிழ் கவிஞர்களையும் மலையாளக் கவிஞர்களையும் சந்திக்கச் செய்து நான் நடத்திய முதல் பட்டறை குற்றாலத்தில் நடந்தபோது முக்கியமான விவாதப்பொருளாக இருந்ததே கவிதைக்கு வெளிப்படையான ஒலி தேவையா என்பதே. ஒலியழகில்லாமல் கவிதை இல்லை என்று மலையாளக் கவிஞர்கள் ஆவேசமாக வாதிட வெளிப்படையான ஒலிநயமும் மெட்டும் கவிதைக்கு ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிதளத்தை மட்டும் அளித்து அதன் பன்முக வாசிப்புத்தன்மையை இல்லாமலாக்கிவிடுகின்றன என்று தமிழ் கவிஞர்கள் வாதிட்டார்கள். கவிதையை மௌனவாசிப்புக்கு ,அந்தரங்க பொருள்கோடலுக்கு உரியது என தமிழ்க்கவிஞர்கள் அணுக கவிதை ஒரு சமூகத்தை நோக்கிய பெரும் அறைகூவல் என்று மலையாளக் கவிஞர்கள் சொன்னார்கள்.

ஆனால் மெல்ல மெல்ல அந்த தரப்பை மலையாளக் கவிதை சமரசம் செய்துகொண்டது. மலையாளக் கவிதையை முன்னிறுத்தி நான் எழுதிய ஒரு கட்டுரை கடும் விமரிசனத்துக்கு உள்ளானாலும் மிக விரிவாக விவாதிக்கப்பட்டது. விமரிசகர்களால் ‘குற்றாலம் இ·பக்ட்’ என்று சொல்லபப்ட்ட இந்த அம்சம் கேரளக் கவிதையில் அழுத்தமான தொடர்பாதிப்பை உருவாக்கியது. நானே குறைந்தது முப்பது கட்டுரைகளை கண்டிருக்கிறேன்– பெரும்பகுதி தமிழ்கவிதைகளின் பாதிப்பைப் பற்றிய கண்டனங்கள்.

ஆற்றூர் ரவிவர்மாவின் புதுநாநூறு என்ற தமிழ் புதுக்கவிதைத்தொகை பரவலான பாதிப்புக்குக் காரணமாகியது . ஆனால் சென்ற தலைமுறைக் கவிஞர்களில் இருந்த வெளிப்படையான அரசியல் சார்பும் கோட்பாட்டு நம்பிக்கையும் புதிய கவிஞர்களுக்கு இல்லாமலாகியதே முக்கியமான காரணம். இன்றைய மலையாளக் கவிஞன் தன் சார்பை மக்கள் திரள் நோக்கி அறைமூவிச்சொல்பவனல்ல. தயக்கமும் ஐயமுமாக தன்னைப்பற்றி பேசுபவன். அவனுக்கு உரிய வடிவம் மௌனமாகப்பேசும் கவிதையே. அவன் ஆழ்பிரதி வழியாகவே தொடர்பு கொள்ள முயல்கிறான்

தமிழ்-மலையாள கவிஞர்களின் உரையாடல் அரங்குகளை நான் தொடர்ந்து நடத்தினேன். மொத்தம் ஒன்பது அரங்குகள். அவற்றின் பொருட்டு நான் இளம் கவிஞர்களின் கவிதைகளை மொழியாக்கம் செய்த போது கவிதையின் வடிவம் சம்பந்தமான மொழியாக்கச் சிக்கல்கள் அனேகமாக இல்லாமலாகிவிட்டிருந்தன. இன்றைய மலையாளக் கவிதை தமிழ்க் கவிதை போலவே அடர்த்தியானது, செறிவானது ,மௌனம் மிக்கது, ஆழ்பிரதியின்வழியாகவே பேசுவது.

இந்த மாற்றம் எனக்குப் பிடித்திருக்கிறது. இதில்தான் நிறைய எதிர்பார்க்கிறேன்.

[20-2-2008 அன்று சென்னை பல்கலை கழகம் மலையாளத்துறை சார்பில் ‘Cross border sensibilities – a perspective’ என்ற தலைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கில் ஆற்றிய மலையாள உரையின் தமிழாக்கம்]


jeyamohan.writer@gmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்