கிழக்கிலங்கையின் கவிகள்

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்


தமிழில் கவி என்றசொல் பாடலையும் புலவரையும் குறிக்கப் பயன்படுவது. கிழக் கிலங்கையில் கவி என்பது ஒருவகையான நாட்டார்பாடல் வடிவத்தைக் குறிப்பது. இது வயது வந்தோருக்கான ஒருபாடல்வகை எனலாம். .கூடுதலாக கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களிடையே காணப்படுகிறது என்றாலும் தமிழ் மக்களிடையேயும் இப்பாடல்கள் வழக்கில் உள்ளதைக் கள ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. (சி சந்திர சேகரம் 1996) அக்கவிகளைப் பெரும் பாலும் காதல் பொருள் சார்ந்தவையாக நோக்குவதுண்டு. ஆனால் அவை பல்வேறு பொருள் பற்றியும் பாடப்பட்டுள்ளதை எம்.ஏ நுஃமான் எடுத்துக்காட்டியுள்ளார். (பதி: கா சிவத்தம்பி 1980:131)
ஆனாலும் கவிகளில் அதிகமானவை ஆண்பெண் உறவு சார்ந்தே பாடப்பட்டுள்ளன. இந்தப்பாடல்கள் காதலன் காதலியால் பாடப்படுவனவல்ல. மாறாக ஆணாகவும் பெண்ணாகவும் தம்மைப் பாவித்து பெரும்பாலும் ஆண்கள் இருவர் பாடுவதாக இது காணப்படுகிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடுவதாகக் கற்பனை பண்ணுவதென்பது மிகவும் தவறானது என்று எம் ஏ நுஃமான் எடுத்துக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்களின் சமூக அமைப்பிலே சுயேச்சையான காதல் வெளிப்பாட்டுக்குரிய வாய்ப்புகள் சமீப காலம்வரை இருக்கவில்லை. ஒருபெண் பருவ வயதையடைந்த உடனேயே இற்செறிக்கப்பட்டாள். மிக இளம் வயதிலேயே பெண்கள் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டனர். ஆணும் பெண்ணும் சுயாதீனமாகச் சந்தித்து உறவாடிக் காதல் கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இவ்வாய்ப்புக் குறைவு பற்றியே அனேகமான கவிகள் உள்ளன. இத்தகைய சமூகச் சூழலிலே காதலர்கள் ஒருவரையொருவர் விளித்துக்கவி பாடுவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. மேலும் இக்கவிகள் உயர் தொனியில் பாடப்படுபவை.(மேலது) என்று கூறியுள்ளார்.அத்துடன் விவசாயத்தொழில் சார்ந்த சந்தர்ப்பங்களிலே இக்கவிகள் பொதுவாகப் பாடப்பட்டு வந்துள்ளன. வயலில் இராக் காவல் இருக்கும் போதும் விதைநெல்லை வயலுக்கு வண்டியில் ஏற்றிச்செல்லும் போதும் அறுவடை செய்த நெல்லை வீட்டுக்கு வண்டியில் ஏற்றிவரும் போதும் இக்கவிகள் பொழுது போக்குச் சாதனமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. (மேற்படி நூல் பக் 135)

இக்கவி படித்தல் மாறிமாறிப்படிக்கப்படுவதாலும் தூக்கம் வராமல் இருக்கப் படிக்கப்படுவதாலும் நீண்டு செல்லும் தன்மையையுடையனவாகக் காணப்படுகின்றன.
ஆண்பெண் உறவுசார்ந்த கவிகள் பின்வரும் பண்புகளைக் கொண்டமைகின்றன.
1. தாய் மகள் உரையாடலாக அமையும் பாடல்கள்.
2. ஒருவரையொருவர் விரும்புகின்ற இளம் பெண்ணும் ஆணும் பாடுகின்ற பாடல்கள்.
3. முறையற்ற பாலுறவை வேண்டும் ஆணும் பெண்ணும் பாடுகின்ற பாடல்கள்

தாய் மகள் உரையாடலாக அமையும் பாடல்கள்
தன் காதலனைச் சந்திக்கச் செல்ல விரும்பும் தலைவி தாயிடம தண்ணீரள்ளப்போவதற்கு அனுமதி கேட்பதாக அமைகின்ற பாடல் வருமாறு. குpழழ்கிலங்கையின் அழகு படுவான்கரையையம எழுவான்கரையையும் ஊடறுத்துச் செல்லும் ஆறு. இது இம்மக்களின் வாழ்க்கையிலும் முக்கிய இடம் பெறுவது. அதுவும் பாடல்pல் வருகிறது.
ஆற்றுக்கு அக்கரையால்
ஆசைகுழல் ஊதுதம்மா
தங்குதில்லை தரிக்குதில்லை
நான் தண்ணிக்குப் போய் வரட்டோ

இப்பாடல் தாயிடம் மகள் தான் காதலனை சந்திக்கப்போவதை மறைமுகமாகக் கூறுகிறது.அதற்குத்தாய் பின்வருமாறு கூறுகிறாள்.
தண்ணிக்குப்போ மகளே
தரியாமல் வா மகளே
கண்ணுக்கு உசந்தவரை
கடைக்கண்ணாலும் பாராதேகா.

இப்பாடல் தாய் தன் மகளின் காதலை அறிந்திருப்பதைக் காட்டுகிறது.மகளிடம் அவளது காதலனைக் கடைக்கண்ணாலும் பார்க்காமல் வருமாறு கூறுகிறாள். ஏலவே குறிபப்pட்டது போல இரண்டு ஆண்கள் பாடும் பாடல்களாக இருப்பதனால் தான் தாய் மகளை அனுமதிக்கின்ற நிலை காட்டப்படுகிறது.

ஒருவரையொருவர் விரும்புகின்ற இளம் பெண்ணும் ஆணும் பாடுகின்றதான பாடல்கள்.
தலைவியைச் சந்திக்க முடியாத தலைவன் அவளை எவ்வாறு சந்திப்பது என்று கேட்க தலைவி வருவதற்கு வழி சொல்வதாக இப்பாடல்கள் அமையும்.

ஆண் :சுற்றி வர வேலி
சுழல வர முள்வேலி
எங்கும் ஒரு வேலி
எதால புள்ள நான் வரட்டும்
பெண் :வெத்திலையைக் கைப்பிடித்து
வெறும் புளகை வாயிலிட்டு
சுண்ணாம்பு வேணுமென்று
சுற்றி வரலாகாதோ

வீட்டுக்கு வர விரும்புகின்ற தலைவனுக்குத் தலைவி சொல்லுகின்ற உபாயமாக இது அமைகிறது. வெற்றிலைக்குச் சுண்ணாம்பு கேட்டு வரும் சாக்க்pல் வரச் சொல்வதாக இது அமைகிறது. இன்னுமொரு கவி இவ்வாறு அமைகிறது.

ஆண்: தெருவால போகவொண்ணா
தேன்போல மணக்கிறது.
உறவாட நான்வருவேன்
உங்க அண்ணமார் காவலாமே.

பெண்: காவலரணோ மச்சான்
கள்ளனுக்கு முள்ளரணோ
வேலியரணோ
வேணுமென்ற கள்ளனுக்கு

தலைவனைப் புகழ்ந்து அவனை வீட்டுக்கு எவ்வாறாவது வருமாறு குறிப்பால் உணர்த்துவதாக இது உள்ளது.அத்துடன் அவளைச் சந்திக்கவரும் நேரம் இடமும் பாடலினுர்டாக வெளிப்படுத்தப்படும்.
ஆண் : தங்கக் குடமே நடை
தத்தி வரும் நங்கணமே
செக்கலுக்கு நான் வருவேன்
திண்ணையிலே காத்திருப்பாய்

இன்னொரு கவி
பெண்: ஊருமடங்கின பின்
ஒருசாமமாகின பின்
வாப்பா உறங்கின பின்
வந்தழைத்தால் நான் வருவேன்.

செக்கலில் யாரும் இல்லாத பொழுதுகளில் வருதல் , எல்லோரும் உறங்கின பின் சந்தித்தல் இங்கு காட்டப்படுகிறது.
இப்பாடல்களில் பெண்ணை ஆண் வருணிக்கும் கவிகள் பல உள்ளன.
முல்லைச் சிரிப்பழகும்
முத்தழகும் கண்ணழகும்
வல்லியிடையழகும்
என் மனதை விட்டுச் செல்வதெங்கே

கொண்டையழகும்
கூர் உழுந்த மூக்கழகும்…

பாலைப்பழமே என்ர
பகலெறிக்கும் செண்பகமே…

வாழைப்பழமே என்தன்
வலது கையிற் சர்க்கரையே…
ஏலங்கிராம்பே உன்னை
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்.

என்றெல்லாம் இனிமையான பொருள்களை உவமையாக்க்pப்; பாடியிருப்பதைக் காணலாம். அத்துடன் ஆணினது இணைவிழைச்சு விருப்பத்தையும் இப்பாடல் காட்டுகிறது.
இஞ்சி மணங்கா புள்ள
இலாமிச்சை வேர்மணங்கா
மஞ்சள் மணங்கா புள்ள
பால்மணங்கா உன் சோடிமுல

அது மட்டுமல்லாது பெண்களின் கற்புப் பற்றியும் இக்கவிகளில் பேசப்படுகிறது.
கன்னி விராலே
கற்பழியா நங்கணமே
எனவரும் அது.
காதல்பாடல்களில் தூதுப்பாடல்கள் முக்கியமானவை.
சேவலைத் தூது விடும்பாடல் இது.
கூரையிலே கூவிநின்று
கூவுகின்ற சேவலாரே
தனியே இருக்கனென்று
நாவெடுத்துச் சொல்லிடுங்கோ

முறையற்ற பாலுறவை வேண்டும் ஆணும் பெண்ணும் பாடுகின்ற பாடல்கள்
இப்பாடல்கள் பணங் கொடுத்துப் பெறும் உறவைப்பற்றிப் பேசுகின்றன.அவ்வாறு செல்லம் உறவிலும் இளம் பெண்களை விரும்பும் ஆணின் மனநிலையும் பெண் அதனை வீசி எறிவதையும் இக்கவிகளில் காணலாம்.

ஆண்: குத்துமுலைக்காறியெண்டு கொடுத்து வச்சேன் நாலுபணம்
சாஞ்ச முலைக்காறியெண்டா தந்திடுகா என் பணத்தை
பெண் நீயொரு வல்லவக்காரனெண்டு வாங்கி வச்சேன் உன்பணத்தை
கோளித் தத்துவக்காரா கொண்டு போடா உன்பணத்தை
ஆண் ஓப்பாரக்கள்ளி உனக்களித்த காசுபணம்
தோப்பாரு வெட்டையில ஒரு தோப்பு வேண்டிப்போட்டுடுவன்
பெண் சுட்ட கட்டை போல சுடுகாட்டுப் பேய் போல
மாட்டட்டை போல நீ மாப்பிள்ளைக்கும் ஆகாது. (மண்டூர்)

திருமணம் செய்யாமல் பாலுறவை விரும்பும் ஓரு ஆணுக்கும் திருமணமாகாத பெண்ணுக்கும் இடையிலான உரையாடலாக வரும் பாடல் இது.

ஆண் :ஆரும் அறியாத
ஆண்குழந்தை தாரயெண்டா
ஊரும் அறியாம ரோராட்டி
வளர்ப்பியால
பெண் : ஊரும் அறியாம ரோராட்டி
வளக்கிறண்டா
உன்ன உறவாக்க இங்க
உறவுச்சனம் கொண்டுவாநீ
ஆண்: உன்ன உறவாக்க இங்க
உறவுச்சனம் கொண்டுவந்தா
ஊரிலுள்ள பொஞ்சாதி
தூறெழும்பச் செய்திடுவாள்.

பெண் : பொஞ்சாதி புள்ள
மலைப்போல இருக்கையில
புழுக்கையன் இப்ப
வைப்பாட்டி கேக்குதாடா (ஏறாவூர்)

பெண் அவனை விரட்டியடிப்பதை இதில் காணலாம். இன்னுமொருகவி பின்வருமாறுஅமைகிறது.
ஆண் பெண்ணைநோக்கி
மார்பளவு தண்ணியிலே
மன்னி மன்னிப் போற பெண்ணே
மாரிலே இருக்கும்
மாதாளங்காய் என்ன விலை

என விரசமாகக் கேட்க பெண் பின்வருமாறு பதிலளிப்பதாக அமைக்pறது.
மாதாளங் காயுமல்ல
மலுக்காரம் பிஞ்சுமல்ல
பாலன் குடிக்கும்
பால் முலைடா சண்டாளா

திருமணமான பெண்ணைப்பார்த்து அவளை அடைய விரும்பிய ஆணுக்குச் சொன்ன பதிலாக இது அமைந்தது.அது மட்டுமல்ல பெண்ணை பாலியற்பண்டமாக இளக்காரமாகப் பார்க்கும் ஆணைப்பார்த்து பாடுவதாக அமையும் கவிகளும் உள்ளன.

போட்டா வரம்பாலே
புறா நடந்து போறது போல்
நாட்டாருக்கெல்லாம்
நடைவரம்போ என்சடலம்

கேலிப்பாடல்கள் திருமணம் செய்ய மணம் பேசி வரும் ஆணைக் கேலி செய்யும் பாடல்கள் வருமாறு.
கச்சான் அடித்தபின்பு
காட்டில் மரம் நின்றதுபோல்
உச்சியிலே நாலுமயிர்
ஓரமெல்லாம் தான் வழுக்கை

கண்ணுமொரு பொட்டை
காதுமொரு செவிடாம்
குருத்தெடுத்த வாழை போல
அவர் கூனி வளைந்திருப்பார்.

முப்பத்திரண்டிலே
மூணுபல்லுத்தான் மீதி
காகக் கறுப்பு நிறம்
ஒரு காலுமல்லோ முடமவர்க்கு

இவ்வாறாக ஆண்பெண் உறவின் பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கி இக்கவிகள் அமைந்துள்ளதுடன் சாதாரணமான வசைக்கவிகளும் பயிலப்படுகின்றன. ஊர்த் தலைவரைத் திட்டுவதான பாடல் இது.

தலைமை தெறிச்சிருவாய்
தலைமகனைத் தின்றிடுவாய்
மூலம் பொறுத்திருவாய்
என்ர முதுகெலும்பு நோகுதடா

வெள்ளி எறிஞ்சி
விளக்கடியில் விழுவது போல்
தலைமை தெறிச்சி
தலை வாசலில் விழுமடா

இவ்வாறாக கிழக்கிலங்கையில் வழங்கும் கவிகள் ஆண் பெண் உறவு சார்ந்தன வாகவும சாராதனவாகவும் மிகுந்த கவித்துவ அழகுடன் காணப்படுவதுடன் பல்வேறு விடயங்களையும் விளக்குவதாக அமைகின்றன.

உசாத்துணை நூல்கள்
ஈழத்து நாடோடிப்பாடல்கள் 1986 பதி.லேனா தமிழ்வாணன் மணிமேகலைப்பிரசுரம்
சென்னை.
மொழித்துறைச் சேகரிப்ப்pலிருந்த பாடல்கள் சி. சந்திர சேகரம் 1996 மண்டூர்ப்பிரதேசம்
அப்துல் மஜீது முபாஸ்தீன் 2002 ஏறாவூர்ப்பரிதேசம்


murugathas1953@yahoo.com

Series Navigation

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்