மனம் மொழி மெய்

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

தேவமைந்தன்



எண்ணம் என்றால் என்ன, எண்ணத்தை எவ்வாறு உருவாக்க(!) வேண்டும் முதலான எல்லாக் குறிப்புகளையும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து தொகுத்த புத்தகங்கள் பல வந்து விட்டன. அவற்றுடன் நமது ‘பாரம்பரிய தத்துவங்களை’யும் கலந்து உருவாக்கிய ராபின் சர்மா, தீபக் சோப்ரா புத்தகங்களும் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன. வெற்றிமிக்க ‘ரெடிமேட்’ வாழ்க்கைக்கு வழிகாட்டும் புத்தகங்களுக்கென்று தனிச் சந்தையே உண்டாகி விட்டது.

நாள்தோறும் நாம் எப்படிச் சிந்திக்கவேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் முதலில் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி ஆயின.(ஜேம்ஸ் ஆலன்) அவற்றைச் ‘செக்கிழுத்த செம்ம’லாம் விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி. அவர்களும்கூடப் பாராட்டி, தமது அசலான பல ஆய்வுநூல்களுக்கிடையில் மொழிபெயர்த்து, நூல்களாக்கினார். அவர் காலத்தில் அந்த நூல்களுக்குரிய பின்விளைவுகள் வெளிப்படையாகத் தெரியவில்லை. தெரிந்திருந்தால், தொல்காப்பியத்துக்கும் சிவஞானபோதத்துக்கும் அருமையான விளக்க நூல்களைப் படைத்த வ.உ.சிதம்பரனார், வெள்ளையர் சிந்தனைகளை, மதம் ஒன்றினுக்குரிய அடிப்படைக் கோட்பாடுகளை மறைமுகமாகக் கீழைத் தேயத்தினர் உளத்தேற்றும் கருத்துகளைத் தமிழுக்கும் தமிழினத்துக்கும் கொண்டுவரும் முயற்சியைச் செய்தே இருக்க மாட்டார். அந்த அயலான சிந்தனை நூல்கள் மறுபடியும் நம்மை வெள்ளையருக்கு ‘மானசீகமான’ அடிமைகளாக்கின. ‘மனம் போல வாழ்வு’ ‘வலிமைக்கு மார்க்கம்’ முதலியவை அவை.

பொதுவாகவே, மேலைச் சிந்தனைகளில் விளைந்த ‘சுய முன்னேற்ற நூல்கள்’ எவையும் அவற்றை எழுதியவர்களை மட்டுமே உருப்படியாக முன்னேற்றின. “மனநோய்களுக்கு எண்ணங்களே காரணம்” என்ற, வளர்ச்சியடையாத கருத்துடைய காலகட்டத்தின் வார்ப்புக்கள் அவர்கள். அறிவியல் வளர்ச்சியில், இப்பொழுது, மூளையின் வேதி(ரசாயனம்)கள் தொடர்பாகவே மனப் பாதிப்புகள் உண்டாகின்றன என்று உறுதியாகக் கண்டறிந்திருக்கிறார்கள். அவற்றுக்குத் திட்டவட்டமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. எல்லாவற்றையும் மனநோய்கள் என்று சொல்லக்கூடாது என்றும் மனநல நிபுணர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் அவர்களுக்கிடையிலும், “எண்ணம், நடத்தை மாற்று முறைகளைக் கடைப்பிடிக்கிறோம் பார் பேர்வழி!” என்று பலர் புறப்பட்டுவிட்டார்கள். முன்னேற்றம் என்றாலே பின்னடைவுகளும் சேர்ந்தே வரும் போலுள்ளது!

மனவியல் தெரிந்தவர்களுக்கெல்லாம் ஒன்று நன்றாகத் தெரியும். உடம்பால் அடிமைப் படுதலை விடவும் கொடுமையானது, மனத்தால் அடிமைப்படுதல். ஒருவருக்கு அல்லது ஒன்றினுக்கு மனத்தால் அடிமைப்பட்டு விட்டால் கடைத்தேறுதல், ஆகவும் கடினம். இன்றைக்கு பிரான்சில் நள்ளிரவுகளில் பதின்பருவத்தினர் கூடிக் குடித்துக் கூத்தடிப்பதற்கும் இதுவே காரணம். போக விரும்பாதவர்களையும் அவர்களின் வீட்டுக்கே வந்து இழுத்துக் கொண்டு போய்விடுகிறார்களாம். இந்த ‘பதின்பருவக் குடிபோதை’ குறித்துக் கூறும் டாக்டர் மிஷெல் கிம், “பதின்பருவத்தினரின் இந்தப் புதிய பண்பாட்டுக்கு நோக்கம் ‘குடித்தல்’ மட்டுமே…’பார்’களுக்கோ அமோகமான வியாபாரம்…நல்ல முகங்கள் ‘சாணிமூஞ்சி’கள் ஆகும் வரை குடிப்பதே பதின்பருவத்தினர் நோக்கம்..பெற்றோர்கள் அவர்களிடம் பேசிப் பார்க்க வேண்டும்” என்று சொல்கிறார். தீவிரவாத இயக்கங்களாகட்டும், ‘பண்பாட்டை மாற்றுபவர்களாக’ இருக்கட்டும்.. பதின்பருவத்தினரையே குறிவைக்கிறார்கள் என்பது நிகழ்சமூக வேதனை. ஆனால் ‘பண்பாட்டு மறுபாட்டாளர்’களின் பின்னணியில் இருப்பவர்களோ அதே சமூகங்களின் ‘வணிகப்புள்ளி’கள். எப்பொழுதோ தீபாவளிக்குப் பட்டாசு கொளுத்துவதுபோய், எப்பொழுதும் எதற்கெல்லாமோ பட்டாசு கொளுத்தும் பண்பாட்டைக் கொண்டு வந்து விட்டவர்கள் யார்? ‘வணிகப்புள்ளிகள்’தாமே?

மொழிகள் எண்ணிக்கையில் பல. வகையிலும் பல. மூல திராவிடம், இந்தோ ஆரியன், தொல் பெர்சியன், பால்டோ-ஸ்லாவிக், தொல் ஜெர்மானிக், கெல்டிக், இத்தாலிக், ஹெல்லெனிக் முதலாகப் பிறந்தவை என்று மொழிகளை வகைப்படுத்துகிறார்கள். இந்தோ-ஜெர்மானிக்(Aryan) மூலத்திலிருந்து சமஸ்கிருதம் வந்ததாகவும், அதே மூலத்திலிருந்து மேலை ஜெர்மானியமும் அதிலிருந்து ஆங்கிலோ சாக்ஸன் (பழம்) ஆங்கிலம் வந்ததாகவும் அதிலிருந்து நவீன ஆங்கிலம் பிறந்ததாகவும் ராபர்ட் ஹில் குறிப்பிட்டார். இந்த வம்பே வேண்டாம் என்று, உலக முழுதும் பயன்படுத்தட்டுமென்று ‘எஸ்பெரண்டோ’ என்ற செயற்கை மொழியைக் கண்டு பிடித்தார்கள். அத்தோடு போயிற்று.. மொழி ஆய்வாளர்களுக்கே இவற்றை விட்டு விடலாம். மனிதரின் மனம் என்கிற மூளை, மொழியை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது என்பதுவே இங்கே தேவை.

பொதுவாக மனித மூளைகள் இந்த வகைகளில் தவறாக மொழியைப் பயன்படுத்துகின்றன:

1. அருவருப்பாக(coprolalia)ப் பேசுதல்.
2. சுற்றிவளைத்து(gobbledegook) மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாத சொற்களையும் தொடர்களையும் பயன்படுத்திப் பேசுதல்.
3. தனக்கேயுரிய தவறான உச்சரிப்புகளோடு(idioglossia) பேசுதல்.
4. புரிந்துகொள்ளவே முடியாதவாறு(lingo) பேசுதல்.
5. கொச்சையாக(slanguage/slang)ப் பேசுதல்.
இன்னும் வசைகலந்து பேசுதல், விலங்குகள்-பறவைகள்-பூச்சிகளின் செயல்களை/வினைகளை மனிதர் வினைகளாக்கிப் பேசுதல் போல
மொழி பலவகையாக வளைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

இலண்டன் தொலைக்காட்சித் தொடர்களில் மொழிதொடர்பாகப் புகழ் பெற்றதும் ஆகவும் அதிகம் நட்சத்திரக்குறி பெற்றதுமான தொடர், “Mind Your Language” என்பது. அதன் ‘டிவிடி’கள் இங்கேயே கிடைக்கின்றன. இதுவரை பார்க்காதவர்கள், மொழி கற்பித்தலில் ஈடுபட்டவர்கள், ‘மனித விசித்திர’த்தை மொழிவழிக் கண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க விரும்புகிறவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.

மொழி, மனம் தொடர்பானது மட்டும் இல்லை. உடலை/உடம்பை அது மிகவும் சார்ந்திருக்கிறது. நடனம் போல. ஈரானிய நடனம் ஆடுவதற்கென்றே(குறிப்பாக, ‘சூஃபி தத்துவம்’ என்ற நாட்டியம்) ஈரானியர் உடல்வாகு அமைந்திருக்கிறது. அல்லது, ஈரானிய உடல்வாகு, ஈரானிய நாட்டியத்துக்கு ஏற்றது என்று சொல்லலாம். அதற்காக, அவர்களால் பரத நாட்டியம் ஆடவே முடியாது என்பதல்ல; பரத நாட்டியம் ஆட அவர்கள் கடினமான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அதுபோலவே, அபிநயங்களுடன் வாயை நன்றாகத் திறந்தும் குவித்தும் பேசும் பிரெஞ்சு மொழியை அமெரிக்கர்கள் கற்றுக் கொண்டு பேசுவது ‘மெத்தக் கடினம்’தான்.

உயிர், உடல் தத்துவம் – தமிழ் மொழிக் கட்டுமானத்தில் அமைந்திருக்கிறது என்பதை ஜி.யூ.போப் தன் நாட்டறிஞர்களிடம் வியந்து கூறியிருக்கிறார். தமிழ் இலக்கண நூலொன்றைச் செப்புச் சிமிழ் போல அழகாகவும் செறிவாகவும் படைத்தவரல்லவா அவர்?

உயிர், மெய்(உடம்பு) இரண்டும் ஒன்றையொன்று பொருந்தி வாழும் வரைதான் வாழ்க்கை. ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவார்’ என்ற திருமூலர், அதுவரை தமிழகத்தில் உயிருக்கு மட்டுமே கொடுக்கப்பெற்று வந்த முகாமையை உடைத்தெறிந்தார்; அது மட்டுமல்லாமல், மொழிக்கட்டுமானத்திலும் உடம்புக்குள்ள முதன்மையைச் சுட்டினார். ஆங்கிலத்தைப் பலமொழிகளின் கலப்பூட்டம் பெற்றதாகக் குறிப்பிடுவார்கள். ஆனால் அதிலும் ‘vowels’ எனப்பெறும் உயிர்களும் ‘consonants’ எனப்பெறும் உடம்புகளும்/மெய்களும் இல்லையா? எழுத்துகளின் விகிதாச்சாரப்படி மொழிக்கு மொழி இந்த உயிர்களும் உடம்புகளும்/மெய்களும் எண்ணிக்கையில் வேறுபடுகின்றன.

அரவுகளின் அணைப்பிலிருந்து வந்த சொல்லாகிய அரவணைப்பு இருக்கிறதே, அதைக் ‘குடிலை’ ‘குண்டலி’யின் உருவமாக சித்தர் கூறுவர். தமிழகத்துக் கோயில்களில் நாக வழிபாடு என்று சொல்லப்படும் கல்லின் புடைப்பாகச் செதுக்கிய வடிவம்(இரு அரவங்கள் காலூன்றிப் பின்னிப் பிணைந்து செங்குத்தாக எழுந்து நிற்பது), மெய்யாக குண்டலினி யோகம் முற்றிய நிலையைக் குறிக்கும் என்பார்கள். எகிப்தில் வழிபடப்பெறும் ‘ஈஜோ’ என்ற நாக கன்னிகை வழிபாடு, குடிலை/குண்டலினியின் எழுச்சியையே குறிக்கும் என்றும் சொல்வார்கள். பரோவா(Pharoah) மன்னர் குடும்பத்தவர் தம் பரம்பரையைக் காப்பாற்றிக் கொள்ள நெற்றியில் அணிந்த பொன்னால் ஆன ‘ஈஜோ’வின் உருவம் பொதிந்த அணியும்; கிரேக்கக் கடவுளான ஜீயஸ்(Zeus), உலகுக்கு வந்து தன் அன்பர்களைச் சந்திக்க விரும்பும்பொழுது எடுப்பதாக நம்பப்படும் பாம்பு உருவமும் உலகத்தின் தலைசிறந்த யோகமுறைகளையே குறித்தன என்பர். கிளியோபாத்ரா தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு உதவியதாகச் சொல்லப்படும் ‘ஆஸ்ப்'(ASP) எனும் நஞ்சு மிகுந்த நாகம், அந்த்வாந்த் சேந்த் எக்சுபெரியின் ‘குட்டி இளவரச’னில் அவன் பயணமாகும் ஏழாவது கிரகமான பூமியிலிருந்து முப்பதே நொடிகளில் விடுபட உதவவரும் மஞ்சள் நிற மின்னல் கீற்றுப் போன்ற நாகத்துடன் ஒப்பிடத் தக்கது.

“உயிரும் உடம்புமாம் முப்பது முதலே” என்ற நூற்பா(சூத்திரம்)க்களைக் கூர்மையாக நாம் நோக்கினால், நாம் பிறப்பது போன்றே மொழி எழுத்துகள் பிறப்பதையும் உணர முடியும்.

”பிறப்பு’ என்ற சொல்லின் முதலெழுத்தில் உள்ள உடம்பு எழுத்தாகிய மெய்யெழுத்தை எடுத்து விடுவோம்.. இப்பொழுது என்ன ஆகிறது பாருங்கள்..உடம்பு எழுத்தான ‘ப்’ போனபின் உயிர் எழுத்து மட்டும் என்ன செய்ய முடியும்? ‘இறப்பு’ என்றல்லவா ஆகிறது…” என்று வேடிக்கையாக, எங்கள் கல்லூரிப் புகுமுக வகுப்பில், தமிழாசிரியர் மறைத்திரு ப.சு.மணியம் கூறி எழுதியும் காட்டினார்.(ஆண்டு 1963. காமராசர் கல்வித் திட்டத்தில், கல்விக் கட்டணம் கட்டாத கல்லூரிப் படிப்பு) நாங்களெல்லாம் பிறதுறை மாணவர்கள் என்பதால். அதிலும் என் ‘க்ரூப்’ வித்தியாசமானது… ‘Natural Science, Commerce and Geography.’ மருத்துவக் கல்விக்கும் போக முடியாது; அறிவியலுக்கும் போக முடியாது; வணிகவியலுக்குப் போகலாம். அதற்கும் போகாமல், அப்பொழுது எங்களூருக்கு வந்திருந்த அறிஞர் அண்ணா சொன்னபடி அரசியல்(Political Science) எடுத்துப் படித்தேன். சங்க இலக்கியப் புறநானூற்றில்(பா.192 வரும் கணியன் பூங்குன்றன் பாட்டு இதைத்தான் சொல்லும். “புதிதாகப் பெருமழை பெய்து, அடித்துவரும் காட்டாற்றுப் பெருவெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்ட மிதவை/தெப்பம் போல, அடைதற்கரிய உயிர் ‘முறை’யின் வழியே செல்லும் என்பதை, திறவோர்/ஞானியர் தாம் தம் அகக்காட்சியிலே அறிந்து தெளிவிக்கத் தெளிந்தனம். ஆகவே மாண்பில் பெரியவர்களைக் குறித்து நாங்கள் வியந்து பாராட்டுவதும் இல்லை; சிறியவர்களை இகழ்வது என்பதோ, அதைக்காட்டிலும் இல்லை.” ‘Compact Disk’ போல வாழ்க்கைத் தத்துவத்தை செறிவூட்டிக் கொடுக்கும் இந்தப் பாட்டின் 13 வரிகளில் முதலிரு வரிகள்தாம் – “யாதும் ஊரே யாவருங் கேளிர்/தீது(ம்) நன்றும் பிறர்தர வாரா” என்பவை. இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட ஜேம்ஸ் ஆலன் சொன்னது போல, “நாம் படும் பாடுகளுக்கெல்லாம் மற்றவர்கள் காரணர் ஆகார்; நாமே காரணம். நம் அகத்துள் இருப்பவையே புறத்தில் அடிதடி வம்புவழக்கு சண்டைபோர்கள் ஆகின்றன. நம்மைத் திருத்தினால் உலகம் திருந்தும்” என்று கணியன் பூங்குன்றனும் சொல்வதாகக் கருதிக் கொண்டு அவதிப் படுபவர்களும் உள்ளார்கள். கணியன் பூங்குன்றன் சொன்னது ‘முறை’ என்ற சொல்லைத்தான். அதற்கு மிகவும் பிற்காலத்தில் வந்த ஊழ்வினைக் கொள்கையர்/விதிவாதத்தினர்(fatalists), ‘முறை’ என்ற சொல்லுக்கு ‘ஊழ்/ஊழ்வினை’ என்று பொருள் தந்ததற்குக் கணியன் பூங்குன்றன் என்ன செய்வார்? அவர் சொன்ன ‘முறை’ என்பதும் கணினி அறிவியலில் வரும் ‘system’ என்பதும் ஒன்று. அது தனியாக இருக்க வேண்டாம் என்று எண்ணியோ என்னவோ திரு மா. ஆண்டோ பீட்டர் தன் ‘கணினி கலைச்சொற்கள்’ என்ற அகராதியில் அதனோடு ‘மை’யையும் சேர்த்து ‘முறைமை’ என்று போட்டு விட்டார். விளக்கம் தேவைப்படத் தேவைப்பட எழுத்துகள் கூடிக்கொண்டே போகின்றன. பனை ஓலையும் எழுத்தாணியும் குறைந்த அளவு எழுத்துகளிலேயே சொற்களை எழுதவைத்து அரும்பொருள் உணர்த்தின. எப்படி ‘ரோட்டரி’ வந்து எழுத்துக்குப்பைகளை மலைபோல் குவித்ததோ, அப்படி ஒருபக்கத்தாள்களும்[பழைய பேப்பர் கடையில், ஒருபக்கம் மட்டுமே எழுதத்தக்க ‘பளபள’ தாள்கட்டு எட்டு ரூபாக்குக் கிடைக்கிறதாமே?] ஏ4 தாள்களும் வகைவகையான எழுதுபொருள்களும் கிடைப்பதால் பழைய சொற் கட்டுமானம் /சொற் செட்டு தளர்ந்துபோய் விட்டது. வினையெச்சங்கள் முற்றுகளாக நின்ற காலம் தமிழில் மலையேறி விட்டது. மலையாளம் அந்தப் பழைமையை இன்னும் பிடித்து வைத்திருக்கிறது.

தமிழில் அன்று – ‘வருகிறார்’ என்றால் போதும். புரியும். இன்று, “வருகிறார்.. வருகிறார்.. வந்துகொண்டே இருக்கிறார்” என்று பல எழுத்துகள் கூடியுள்ளன. தலைவர் வந்து கொண்டே இருப்பதை அவையினர்க்கு ‘அறிவுறுத்த’ கூடவே ஒரு ‘க்’கும் போட்டு, ” வருகிறார்.. வருகிறார்.. வந்துக்கொண்டே இருக்கிறார்” என்று மொழி ‘வளர்ப்பவர்’களை என்னவென்று சொல்வது?

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்