கதை சொல்லுதல் என்னும் உத்தி

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

தேவமைந்தன்



கதை சொல்லுதல் என்னும் உத்தி நாட்டுக்கு நாடு, மனிதர்க்கு மனிதர் வேறுபடுகிறது. உணவு சமைத்தல் போலத்தான். இரேகை கைக்குக் கை மாறியிருக்கும் என்ற தடயவியல் உண்மை போல, நாக்கின் சுவையுணர்வும் மாறித்தான் இருக்கும். தடயம் எதையாவது விட்டுச் செல்லாமல் குற்றவாளி குற்றம் இழைக்க முடியாது என்ற தடயவியல் மெய்ம்மை போலவே தன் சுவட்டை விட்டுச் செல்லாத கதைசொல்லி உலகில் இருக்க இயலாது.

தனக்கெனத் தனித்தன்மை வாய்ந்த கதை சொல்லும் உத்தி இல்லாத கதைசொல்லி, ஆதாரத்துக்கு அச்சில் வரும் தன் பெயரைத்தான் நம்பியிருக்க வேண்டும். தேர்ந்த கதைசொல்லிகள் எழுத்து வணிக வெளிச்சத்தில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எளியதொரு குக்கிராமத்திலும் இருக்கலாம்.

கதைசொல்லி என்பது, விரிவான வட்டத்துக்குள் கதைசொல்லிகள் பலவகையினரையும் அடைத்துப் போட்டுவிடும் கலைச்சொல். இராமாயண பாரதப் பெருங்கதைகளைக் குக்கிராமத்தில் விடிய விடியச் சொல்லும் கதைசொல்லி முதல் இத்தாலி நாட்டில் உள்ள கிலார்க் பல்கலைக் கழகத்தில் கதைசொல்லும் கலை குறித்த இலக்கணங்களை இணையதளம் வழி பகிர்ந்து கொள்ளும் கதைசொல்லி வரை எல்லாருமே கதைசொல்லிகள்தாம்.

தென்கொரியாவில் வாழும் நண்பர் நா.கண்ணன் சொற்களில் உள்ளபடி “அச்சு உலகை விட்டு இன்னும் அகலாத தமிழர்களுக்கு.. புரியாத புதிராகவே இருக்கும்” மின்னுலகத்திலும் இன்று கதைசொல்லிகள் குறிப்பிடும்படியாக உருவாகியுள்ளனர். இன்று உலகத் தமிழர்களில் முப்பத்தந்து முதல் ஐம்பது வயது வரையுள்ள தமிழர்கள் நாள்தோறும் இணையம் அலசுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இளைஞர்கள் மட்டும்லாமல் சிறுவர்களும் தங்களுக்கென்று கூகிளிலும் யாஹூவிலும் எண்ணற்ற வலைப் பதிவுகள் வைத்திருக்கிறார்கள். இவர்கள் யாவரே ஆயினும் கதை என்று வந்து விட்டால் கண்மேயாமல் போவதில்லை.

“பாட்டீ! ஒரு கதை சொல்லு!” என்று பேரப்பிள்ளைகள் கேட்ட காலம் வேண்டுமானால் கூட்டுக் குடும்பச் சிதைவின்பின் மலையேறியிருக்கலாம். கதை கேட்கும் வழக்கம்போய் கதை வாசிக்கும் வழக்கம் அதிகமாகி விட்டதை உண்மையாக உணர்ந்துள்ளவை அமேசான்.காம் போன்ற வலைத்தளங்கள். அவை புத்தகச் சந்தைக்கு இளைய தலைமுறையை இழுப்பதில் வெற்றி கண்டுள்ளன. சுருக்கமாகச் சொன்னால் அச்சு – எழுத்துலக மேதாவிகள், “தமிழக முதல்வர் நூலகங்களுக்கு ஆயிரம் பிரதிகள் எடுத்துக் கொள்ள உத்தரவிட்டிருக்கிறாராம்!” என்று ‘இறும்பூது’ எய்தியிருக்கும்பொழுது சத்தமே இல்லாமல் அந்த வலைத்தளங்கள், புத்தக அடுக்குகளை மின்வெளியில் பிரம்மாண்டமாக நிறுவி இலவசமாக[முதலில்] புதிய புனைகதைகளையும் பழைய சிந்தனை நூல்களின் புதிய பதிப்புகளையும் வாசிக்க உறுப்பினர் சேர்க்கிறார்கள் என்பது இணைய உலக நண்பர்களுக்குத் தெரிந்ததுதான். என்னைவிட நாற்பது வயது குறைந்த இளைஞன் அந்தத் தளத்தில் என்னைச் சேரச்சொல்லி மின்னஞ்சல் போட்டுவிட்டு, அதன் வயணம் வந்ததும் நான் உறுப்பினரானதற்கு மகிழ்ச்சியும் தெரிவிக்கிறான். மின்னுலகில் வயது வித்தியாசம் ஒரு பொருட்டே அல்ல என்பதை நண்பர்கள் உணர்வார்கள். இங்கு பணி ஓய்வதில்லை, அதாவது ‘ரிட்டையர்மெண்ட்’ கிடையாது.

ஹாரி பாட்டர் கதைகள் அடைந்த வெற்றியைக் குறித்து ஆத்திரப்பட்டு “இதெல்லாம் இன்னும் ஒரு பத்தாண்டுகள்தான்!” என்று பல்லைக் கடிக்கிறவர்கள் குறித்து எனக்கு இரக்கம்தான் வருகிறது. எதைப்பற்றி அவர்கள் எழுதினால் என்ன? உன்னதம் மிகுந்த கதைசொல்லியாகத் திகழ்வதால் அல்லது தனக்கேயுரிய கதைசொல்லும் உத்தியை ஜே.கே.ரவுலிங் கொண்டிருப்பதால்தான் அவ்வளவு வெற்றி. ‘மோடி மஸ்தான் வேலை’யல்ல அந்த உத்தி. பலநாள் பயிற்சியில் வருவது. கற்பனையாற்றலும் அடிப்படைத் தேவைதான்.

”சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்றான் பாரதி. அந்தக் கலையைப் போன்றதுதான் கதை சொல்லும் கலை” என்று விந்தன் தன் கடைசிக் கட்டுரையில் குறிப்பிட்டார்.(1) அதேபொழுது, ‘ஜீவா’ ‘லியோ’ முதலான புனைபெயர்களில் கதை எழுதிய நாரண.துரைக்கண்ணன், கதைசொல்லும் ஆற்றல் கருவிலேயே அமைந்திருக்க வேண்டும் – அதற்கு இறைவனின் திருவருள் பாலிப்பு இருக்க வேண்டும் என்று சொன்னார். அதற்கு அவர் காட்டிய மேற்கோள்கள், கதை சொல்லுதல் என்னும் உத்தி, விடாத பயிற்சி-முயற்சி-ஈடுபாடு ஆகியவற்றால்தான் ஒருவருக்குத் திறன் மிக்கதாக அமைகிறது என்று உணர்த்தின.

கதை சொல்லாமல் வெறுமனே எழுதுபவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்பதை முதன்முதல் உணர்த்தியவர் ஆர்.எல். ஸ்டீவன்ஸன். எங்காவது கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு தனக்குத் தானே கதை சொல்லிப்பார்த்து, தான் தன்னிடமிருந்து கேட்டதை எழுத்து வடிவமாக்கியவர் அவர். புதுச்சேரியில் உள்ள கி.ரா. அவர்களின் நண்பர்கள் அவருடைய கதைகளை வாசிப்பதைக் காட்டிலும் அவர் கதைசொல்லக் கேட்பதையே அதிகம் விரும்புகிறார்கள்.

சிட்னி ஷெல்டன், கதை சொல்லுவதில் திறம் மிகுந்தவராக விளங்கினார். திரைப்படங்களுக்குக் கதை(film script)யெழுதுவதில் வல்லவராக இருந்தவர். தற்செயலாக நாவலொன்றை(‘The Naked Face’) எழுதப்போக, அது வெளியானபின் எதிர்பாராமல் வாசகர்களின் பேராதரவு கிடைக்கவே புனைகதை உலகின் முடிசூடா மன்னராக ஆனவர். அவருடைய புத்தகங்கள் உலகம் முழுதும் 300 மில்லியன் பிரதிகளுக்கு மேல் புழங்கப்படுகின்றன. ‘The Sky Is Falling’ முதல் ‘The Other side of Me’ வரையுள்ள அவருடைய நாவல்களில் பல ‘பெரிய பட்ஜெட்’ திரைப்படங்களாகவும் தொ.கா.தொடர்களாகவும் வந்து வெற்றி பெற்றன. அவருடைய கடைசி நாவலான ‘The Other side of Me’ அவர் வாழ்க்கையையே கதைக்கருவாகக் கொண்டு எழுதப்பட்டது. ”எல்லாக் காலங்களிலும் மக்களால் மிகவும் போற்றப்பட்ட தலையாய கதைசொல்லிகளுள் சிட்னி ஷெல்டன் ஒருவராக”ப் போற்றவும் படுகிறார். மற்றபடி டானியல் ஸ்டீல் முதலானவர்கள் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரவலாக வாசிக்கவும் படுகிறார்கள். நம் பகுதிகளுள் உள்ள வாடகை நூலகங்களில், ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மொழிபெயர்த்த மேற்படி நாவல்களும் விரும்பி வாசிக்கப்படுகின்றன.

கீழைநாட்டின் ஆன்மிகம், மறையியல் நம்பிக்கைகள், இயற்கை வழிபாடு ஆகிய விழுமியங்களைக் கலந்து கதை சொல்லுதலில் வல்லவராகத் திகழும் – பிரேசில் நாட்டில் பிறந்த பாவ்லோ கொயெல்ஹோ(Paulo Coelho) படைத்த ‘By the River Piedra I sat down and wept,’ ‘Maktub,’ ‘The Alchemist,’ ‘Veronika decides to die,’ ‘Eleven Minutes'(2) ஆகிய நாவல்களுள் ‘The Alchemist’ அச்சுலகில் பரவலான ஆதரவைப் பெற்று 43 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளது.(தமிழில் ‘ரஸவாதி’ என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக 2006 திசம்பரில் வந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர்: பொன்.சின்னத்தம்பி முருகேசன்.) வழக்கம் போலவே, பாவ்லோ கொயெல்ஹோ அப்படி என்ன சாதித்து விட்டார்..தேவையில்லாமல் அவர் பெரிதுபடுத்தப்படுகிறார் என்ற முணுமுணுப்புகள் ‘டெக்கான் கிரானிக்கிள்’ முதலான இதழ்களில் வரத் தொடங்கிவிட்டன. கீழைநாடுகளில் வாழும் வாசகர்களைவிட மேலைநாட்டு வாசகர்களே பாவ்லோ கொயெல்ஹோவால் அதிகம் கவரப்படுவார்கள் என்பதுவே உண்மை. ஆனால் மிகவும் சிக்கலாக, அறிவுஜீவிகள் மட்டுமே ஆர்வமுறும் வண்ணம், கிறித்துவ உள்மதங்களின் மறையியல் கோட்பாடுகளையும் கீழைநாட்டு யோகமும் சித்தர் பரம்பரையும் சொல்லும் குண்டலினி யோகத்தையும் எகிப்தின் தொன்மவியல் – கோணக் கட்டுமானவியல் நம்பிக்கைகளையும் ‘கபாலா’ மறையியலையும்(The Mystical Qubalah) ஐரோப்பிய மந்திரவியல் நம்பிக்கைகளையும், கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ பாணியில் கலந்து ஓர் அறிவு முப்பரிமாண வீரதீரசாகசப் பயணமாகக் கதை சொல்லிய மேலையுள்ளம் வாய்ந்த உம்பர்ட்டோ எகோ இவர்களால் முணுமுணுக்கப்படவில்லை என்பது கொஞ்சம் ஆறுதல் தரக் கூடியதுதான்.

இவர்களையெல்லாம் மீறி, தமிழ்நாட்டு அரசுகூடத் தடை செய்யும்படி உருவான திரைப்படத்தின் அடித்தளமான ‘டாவின்சி கோட்’ நாவலின் வழியாக உலகமும் அதிலுள்ள உலகுதழுவிய கத்தோலிக்கத் திருச்சபை மதபீடம்சார் அறிவுஜீவிகளும் அதிர்ச்சியடையுமாறு, “திருச்சபை செய்த வரலாற்றுத் திரிபை முன்னுக்குக் கொண்டு வருவதோடு, வரலாற்றில் பெண்ணுக்குரிய இடத்தை மீட்டுத் தருவதற்கான நோக்கத்தை வெளிப்படுத்துகிற”(3) கதைசொன்னார் டான் பிரவுன். ஜே.கே.ரவுலிங்கின் கதைசொல்லல் இளந்தலைமுறையினரைத் தம் அன்றாட யதார்த்த வாழ்விலிருந்தே பல மணிகள் தப்பிக்கும்படிச் செய்திருக்கிறது. ஆனால் டான் பிரவுனின் கதைசொல்லலோ உலக மத வரலாற்றில் பெண்ணின் நிலை என்ன என்பதைத் தீவிரமாகச் சிந்திக்க வைத்திருக்கிறது. முதலாவது, எதிர்காலத்திய-வளர்ந்த தலைமுறையினருக்கு இருந்தே ஆகவேண்டிய அறிவு முதிர்ச்சியை, இப்பொழுதே கிள்ளிப்போடுகிறது. அடுத்தது, உலக மக்களில் சரிபாதியான பெண்ணின் தொன்றுதொட்டே மதரீதியாக உண்டாக்கப்பட்டுவரும் கீழ்மையைப் போக்கிச் சமன்செய்ய முயலுகிறது. இரண்டும் அடிப்படையில் கதைசொல்லல்தான், அதில் ரவுலிங்கும் டான் பிரவுனும் சாதித்த சாதனைதான் என்பதை மட்டும் நாம் மறந்துவிடக் கூடாது.

ஆராய்ச்சியின் மூலமே அறிவை அடைய முடியும் என்ற கோட்பாட்டுக்குக் கிடைத்த பெருவெற்றியாக ‘ஃபூக்கோவின் பெண்டுலம்'(Foucault’s Pendulum) என்ற நாவல் கருதப்படுகிறது. அதன் ஆசிரியர் உம்பர்ட்டோ எகோ’வின் கதைசொல்லும் திறன் நேர்த்தி மிக்கது. ஆதிமனத்திலிருந்து பொங்கிவரும் உணர்ச்சிகள் இகோ’வின் கதைசொல்லுதலில் ஊடாடிப் பெருகுகின்றன. சான்றாக, ‘ஃபூக்கோவின் பெண்டுல’த்தில் வரும் பெல்போவின் பேச்சில், மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அவன் பல்லைக் கடித்துக் கொண்டு பேசும் பொழுதும் இயல்பாக வந்து விழும் துரின்(Turin) வட்டாரமொழிச் சொலவடை(“Ma gavte la nata” = Be so kind as to remove the cork)யச் சொல்லலாம். அதன் விளக்கத்தைக் கேட்கும் லொரென்ஃசாவுக்கு அவன் தரும் விளக்கமும்(Foucault’s Pendulum, First Ballantine Books U.S.Edition December 1990, p.419) வித்தியாசமானதே. பிரேசிலியனான பாவ்லோ கொயெல்ஹோவின் கதைசொல்லலில் கீழைநாட்டுப் பாமரத்தன்மை மிகுந்திருக்கிறது என்றால் உம்பர்ட்டோ எகோவின் கதைசொல்லலில் மேலைநாட்டு அறிவுஜீவித் தன்மையே மிகுந்திருக்கிறது. அந்த அறிவுஜீவித் தன்மையை மீறி அவன் ஆதிமனத்திலிருந்து(கூட்டுநனவிலியின் உருவாக்கம் என்றார் கார்ல் குஸ்தாவ் யுங்.) வந்து விழுவதுதான் – மேலே சொன்ன சொலவடை.

வளர்ந்துவரும் ‘நானோ டெக்னாலஜி’ என்ற அறிவியல் தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன ஆகும் என்பதைத் தன் திறம்பட்ட கதைசொல்லல்மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பே மிஷேல் கிரிஷ்டன் உலகுக்குக் காட்டினார். ஜான் கிரிஷாம் சட்டத்துறை, தனிமனிதன் உரிமை போன்ற சட்டவியல் நுணுக்கங்களைத் தன் கதைசொல்லலுக்கு உட்கிடக்கையாகத் தேர்ந்து கொண்டார்.

கதைசொல்லலில் உருக்கம் மிகுந்ததும், மென்மையாகக் கதைசொல்லியே மரபு -மதச்சார்பான விழுமியங்களை வற்புறுத்துவதில் வெற்றி பெற்றதும், ‘தெய்வத்தை உறுதியாக நம்புவதன் அடையாளம் சகமனிதர்பால் உண்மையான-நிபந்தனை+நிர்ப்பந்தங்களற்ற அன்பு செலுத்துதல்தான்; தெய்வம் செயல்புரிவது மனிதர் வழியாகத்தான்; மனிதர் சிலர் மற்றவர்க்கு உண்டாக்கும் ஆழமான மனக்காயங்கள் தெய்வத்தின் செயல்பாடாக வேறு சில மனிதர்களால் ஆற்றவும் படும்’ என்ற எளிமையான உண்மையை வாசகர் நெஞ்சில் விதைத்ததுமான சாதனைகளைச் சத்தமில்லாமல் சாதித்த நாவல் ‘The Simple Truth.’ ஆசிரியர் டேவிட் பால்டாக்கி(David Baldacci). அமெரிக்க சட்டம்-நீதித்துறையின் மையத்தில் நடக்கும் ஒரு கொடிய அரசியல் சதித்திட்டத்தால் எவ்வாறு அன்பே உருவான, ஆரோக்கியமே வடிவான ரூஃபுஸ் ஹார்ம்ஸ் என்னும் இளம் இராணுவ வீரனொருவன், பள்ளி மாணவி ஒருத்தியைக் கொடுமையாகக் கொன்ற பழி ஏற்கிறான் என்பதையும் இருபத்தைந்து ஆண்டுகள் கொடிய இராணுவச் சிறைவாசம் அனுபவித்த பின்பு அவன் விடுதலை அடைய உதவ முன்வரும் திறமைமிக்க குற்றவியல் வழக்கறிஞர் எவ்வாறு உள்ளொற்று அறியப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார் என்பது முதலான பலவும் ஆகவும் திறமையாகக் டேவிட் பால்டாக்கியின் கதைசொல்லுக்கு உள்ளடக்கம் ஆகின்றன. ரூஃபுஸ் ஹார்ம்ஸுக்கு உதவ முன்வரும் அவனுடைய சகோதரன் ஜோஷ் ஹார்ம்ஸின் முரட்டு வீரமும் – அவ்வாறே ஹார்ம்ஸுக்கு உதவ முன்வந்து பலியான குற்றவியல் வழக்கறிஞரான தன் இளம் சகோதரனுக்காகவும்; தொடர்ந்து மிரட்டப்பட்டுவரும் தன் காதலிக்காகவும்; எல்லாவற்றுக்கும் மேலாக, ‘எப்படியாவது ரூஃபுஸ் ஹார்ம்ஸைக் கொன்றொழித்து உண்மை வெளியாவதைத் தடுத்துவிட வேண்டும்’ என்ற வெறியோடு விரட்டும் சதிக்கும்பலிடமிருந்து அவனைக் காப்பதோடு விடுதலையும் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்று போராடும் ஜான் ஃபிஸ்க்’கின் இராணுவத்தில் பணியாற்றிய பட்டறிவும், பின் ‘கிரிமினல் அட்டார்னி’யாக அடைந்த அனுபவ ஞானமும் கூரறிவுத்திறனும் டேவிட் பால்டாக்கியின் மிகவும் திறமையான கதைசொல்லலுக்கு ஏற்ற கலவை ஆகின்றன. சிகரமாக, அமெரிக்க அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த செனெட்டர் ஒருவர் இத்தனைச் சதிகளுக்கும் மூலமாக இருந்தது வெளிப்படுத்தப்படுகிறது. உண்மையறிந்ததும் அதுவரை தன் கணவரை உயர்ந்தவர் என்று எண்ணி ஏமாற்றமடைந்தவரும் அமெரிக்க நீதித் துறையின் உச்சபதவியை வகித்தவருமான அவர் துணைவி அவரைக் ‘கைநெகிழ்க்கும்’ கட்டம் கதைசொல்லலின் உச்சம். இதில் மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று, வீழ்ந்து வரும் விழுமியங்களைத் தன் கதைசொல்லும் உத்தியால் டேவிட் பால்டாக்கி தூக்கி நிறுத்தியதுதான். ‘தேவி பாகவதத்தில்’ ‘சுகர்-ஜனகர் சம்வாதம்’ இடம் பெற்ற முதன்மையின் அளவு, ‘The Simple Truth’-இல் ரூஃபுஸ் ஹார்ம்ஸ்-ஜோஷ் ஹார்ம்ஸ் உரையாடல் முதன்மை பெறுகிறது என்பதும் குறிப்பிட வேண்டியதே.

உலக அளவில் வாசகர்களைப் பெருமளவு ஈர்த்த கதைசொல்லிகளை அளித்ததில் ருஷ்யாவுக்கும் பிரான்சுக்கும் உள்ள பங்களிப்பைச் சொல்ல தனியொரு பெருங்கட்டுரை தேவைப்படும். ருஷ்யாவின் லெவ் தல்ஸ்தோய், மக்ஸீம் கோர்க்கி, நிக்கலாய் ஒஸ்த்ரோவ்ஸ்க்கியே, ஆன்டன் செகாவ், அலெக்சாந்தர் குப்ரின் முதலான அனுபவமிக்க கதைசொல்லிகளைப்போல் அல்லாமல் விளதிஸ்லாவ் தித்தோவ் என்ற எழுத்துத் தொழில் அல்லாத சுரங்கத்தொழில் சார்ந்த இளைஞர் ஒருவர், பற்களால் பென்சிலைக் கவ்வியபடியே எழுதிய நாவலும் கதைசொல்லுதல் என்னும் உத்திக்குச் சரியானதொரு ஆவணம்.(4)

காலஒட்டத்தை விஞ்சிக்கொண்டு தம் கதைசொல்லுதல் உத்திகளை மாற்றிக்கொண்ட நலமான போக்கு, பிரெஞ்சுக் கதைசொல்லிகளிடம் உள்ளது. எமிலி ஃசோலாவின் உத்தி வேறு. கீ த மாப்பசானின் உத்தி வேறு. அந்த்வாந்த் சேந்த்-எக்சுபெரி(Antoine de SAINT-EXUPERY, LE PETIT PRINCE(1943), Editions GALLIMARD. 1946. பிரெஞ்சிலிருந்து தமிழில்: ச.மதனகல்யாணி, வெ.ஸ்ரீராம். வெளியீடு: க்ரியா, சென்னை அல்லியான்ஸ் பிரான்சேஸ், புதுச்சேரி – இந்திய ஆய்வுக்கான பிரெஞ்சு நிறுவனம்.) கதைசொல்லிய விதம் முற்றிலும் வேறுபாடானது. ஜான் இர்விங், இ.ஜி.கரனின் உளவியல்-தத்துவக்கோட்பாட்டைத் தன் கதைசொல்லும் ஆற்றலால் உலக முழுதும் இளந்தலைமுறையினராலும் விரும்பி வாசிக்கப்பட்ட நாவலாக்கியதற்கு(The World According To Garp) மிக முந்திய முன்னோடி- அந்த்வாந்த் சேந்த்-எக்சுபெரி ஆவார். எக்சிஸ்டென்ஷியலிசத் தத்துவத்தைப் புனைகதையாக அவர் சொல்லிய விதம், தத்துவ ஞானியான மார்டின் ஹைடேக்கராலேயே மிகவும் பாராட்டப்பெற்றது. உயிரோடமுள்ள தன் சித்திரங்களுடன் அவர் அந்த அழகான கதையைச் சொல்லியுள்ளார். தமிழாக்கத்திலும் அவருடைய மூலச் சித்திரங்கள் உரிய கதைப்பகுதிகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. அந்தத் தமிழ்ப் பதிப்பில் உரிய பங்காற்றிய ‘க்ரியா’வின் செய்நேர்த்தியை 1993இல் அன்னம் வெளியிட்ட லூயி கரோலின் ‘ஆலிஸின் அற்புத உலகம்’ – எஸ்.ராமகிருஷ்ணனின் தமிழாக்கப் பதிப்பில் காண முடியவில்லை. இன்னொன்று, இது குழந்தைகளுக்கேயானது. ‘குட்டி இளவரசன்’ குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் என்றைக்கும் வாசித்து – தம் வாழ்வை நிகழ்நிலையில் சீர்திருத்திக்கொள்ளக்கூடிய வழிகள் காட்டும் அழகான கதை. இதற்கு முழுக்காரணம், வானத்தில் பறந்தே வாழ்ந்த, ஆபத்துகளை விரும்பி வரவேற்று அவ்வாறே கடைசியில் 31-07-1944 அன்று கார்சிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து விமானத்தில் பறந்து சென்று, அவருக்கு என்ன ஆயிற்று என்றெ எவரும் தெரிந்துகொள்ள முடியாமல் மறைந்துபோன சேந்த்-எக்சுபெரியின் பிற்கால வாழ்க்கைதான்.

இந்தியாவின் முதுபெரும் கதைசொல்லிகளுள் முதன்மையான சிவராம காரந்த்தின் கதைசொல்லுதல் உத்தி சாலவும் அருமையானது. தென்கர்நாடகத்துக்காரரான சிவராமகாரந்த் 1968இல் படைத்ததும் 1977இன் சிறந்த நாவல் விருதுக்குப் பாரதிய ஞானபீடம் ஏற்றுக்கொண்டதுமான ‘மூக்கஜ்ஜிய கனஸுகளு’ தமிழில் ‘பாட்டியின் கனவுகள்’ என்ற டாக்டர் டி.பி.சித்தலிங்கையா அவர்களின் தகுதிமிக்க தமிழாக்கமாகத் திரு சோமலெ அவர்களின் சோமு நூலகத்தால் 1981இல், வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் வெளியிடப்பெற்றது. சோமலெ அவர்கள் அதன் விற்பனை உரிமையையும் குருகுலத்துக்கே கொடுத்தார். அந்தப் புத்தகத்தைக் கையில் தாங்கும் இந்தக்கணத்தில் சிவராமகாரந்த் கதையில் வரும் பாட்டியின் உள்ளறிவுணர்(psychometry)வின் தாக்கத்தாலோ என்னவோ நான் வேதாரண்யம் சென்றதும் அந்தக் குருகுலத்துக்கே சென்று புத்தக வெளியீட்டுப் பகுதியில் அதைப் பதினாறே ரூபாய் விலை கொடுத்து(424 பக்கங்கள்) வாங்கியதும் உணர்வுபூர்வமாக நினைவில் நிழலாடின. அந்தக் குருகுலத்தில் தங்கிப் படித்த மாணாக்கியர்களுள்[இது அந்தக் குருகுல மேலாளர் திரு. அப்பாக்குட்டியின் வார்த்தை] ஒருவரான திருமதி சு.தமிழ்ச்செல்வி, பெண்ணிய-நிகழ்சமூக நாவல் எழுத்தாளராக இப்பொழுது விருத்தாசலத்தில் உள்ளார். கணவர் திரு கரிகாலனும் எழுத்தாளரே. எதற்கு இதைச் சொல்கிறேனென்றால், ஓர் அருமையானதும் பாரம்பரியத்தை[மூகிப்பாட்டி] தன் கற்பனைச் சிறப்பால் துருவிப்பார்ப்பதாக அமைந்ததுமான கதைசொல்லல், அதன் மொழியாக்கத்தையும் வெளியீட்டையும்கூட எப்படித் ‘திட்டம்'(‘programme’) பண்ணிக் கொள்கிறது என்பதை உணர்வதற்குத்தான். ஆனால், “அந்தப் பாட்டி பேரன் இருவருமாகச் சேர்ந்து, நான்கு அல்லது ஐயாயிரம் ஆண்டுகளாகப் பறந்து வந்துள்ள ‘படைப்பின் ரகசியத்தை’ அறிவுக்கண் கொண்டு பார்க்க முயல்கிறார்கள். இப்படி ஓர் உண்மையல்லாத பாட்டி, பல உண்மையான வரலாற்றுப் பகுதிகளைத் தன் உள்ளறிவால் நமக்கு முன்னால் கொண்டுவந்து வைக்கிறாள்” என்று சிவராமகாரந்த்தே தன் முன்னுரையில் சொல்லிவிடுகிறார்.(5) கிரீஷ் கர்னாடின் ‘நாக மண்டலம்’ என்ற நாட்டுப்புறக் கதைசொல்லலைத் தமிழில் பாவண்ணன் உயிரோட்டத்துடன் தந்திருப்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.(6)

கதைசொல்லுதலுக்கு முகாமை கொடுக்கும் வலையேடுகளில் திண்ணை.காம் முதன்மையானது. உலகின் பல இடங்களிலிருந்து பலவகையாகவும் இயல்பான கதைசொல்லுதலாகவும் மொழியாக்கங்களாகவும் வருகின்ற கதைகள் திண்ணை.காம் வலையேட்டுக்குப் பெருமை சேர்க்கின்றன. அவ்வப்பொழுது திண்ணையில் வரும் அறிவியல் கதைகள் இன்றைய தமிழிலக்கிய உலகின் தேவையை நிறைவு செய்கின்றன. முன்னர் வந்தவை தொகுப்பாகி, எனிஇந்தியன்.காம் வெளியீடாக வந்துள்ளதும் பாராட்டுக்குரியதே.

****
குறிப்புகள்:

1. விந்தன் ஏமாற்றி விட்டாரா?’ – மகரம் தெரிவித்த செய்தி. குமுதம், 37:42, 26-7-1984, பக்கம் 20. 30.6.1975 அன்று காலமாவதற்கு முன், பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பாளருக்கு விந்தன் கட்டுரை அனுப்பி வைத்ததற்கும் பின்னர் அது தனக்குக் கிடைத்ததற்கும் உள்ள கால இடைவெளியில், மகரம் அவர்களின் மனம் பட்ட பாடு அச்சேதியில் தெரிகிறது.

2. இவை தவிர, புதிய நாவலொன்றும் வந்துள்ளது.

3. ‘தாவின்சி கோடு கற்பனையா? வரலாறா?’, ஞானி, எஸ்.வி. ராஜதுரை, அருள்திரு. செ.சோ. பிலிப் சுதாகர், தமிழ்நேயம் வெளியீடு, 24, வி.ஆர்.வி.நகர், ஞானாம்பிகை மில் அஞ்சல், கோயமுத்தூர் – 641029. பக்கங்கள் 60. ரூ.12/-

4. சுரங்கத் தொழில் நிபுணர்; 32 வயதில் சுரங்க விபத்தால் கைகளிரண்டையும் இழந்து, சென்ற நூற்றாண்டின் எழுபதுகளின் முதற்பாதியில், ‘சாவுக்கே சவால்’ என்ற தன் நாவலைப் பற்களால் பென்சிலைக் கவ்வியபடியே எழுதியவர்; ரீத்தா என்ற அருமையான துணைவியை அடைந்தவர்; அவர் எழுதிய நாவலை ருஷ்ய மொழியிலிருந்து தமிழில் பூ.சோமசுந்தரம் சிறப்பாக மொழிபெயர்த்திருந்தார்.

5. சிவராம காரந்த், மூக்கஜ்ஜிய கனஸுகளு. தமிழில்: பாட்டியின் கனவுகள், தமிழாக்கம்: டாக்டர் டி.பி. சித்தலிங்கம். பதிப்பு: சோமு நூலகம், சாஸ்திரி நகர் அஞ்சலகக் கட்டடம், சென்னை-600 020. வெளியீடு&விற்பனை உரிமை: குருகுலம் வெளியீட்டுப் பகுதி, கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம், வேதாரண்யம்-614 810. முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1981. விலை ரூ. 16-00. பக்கம் vi.

6. கிரீஷ் கர்னாட், நாகமண்டலம். தமிழில்: பாவண்ணன். வெளியீடு: காவ்யா, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024. பக்கங்கள்: xx+96=116. விலை ரூ.50.00.


karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்