விமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

மலர்மன்னன்


தலைமுறைகள் தோறும் லா. ச. ரா. அவர்களின் எழுத்தை ஆராதிப்பவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள் என்பதை அறிந்துள்ளேன். ஒரு தலைமுறை ஆராதனையாளர் அடுத்த கட்டத்திற்குச் சென்றதும், பின் வரும் தலைமுறையில் புதிய ஆராதனையாளர்கள் வந்த வண்ணமிருப்பார்கள். எனவேதான் அவரைப் பற்றிய எனது முந்தைய நினைவுக் கட்டுரையில் (அஞ்சலிக் கட்டுரை அல்ல) அவர் வாசகர் ரசனையில் ஒரு கட்டம் என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டிருந்தேன். இவ்வாறு ஒவ்வொரு தலைமுறையிலும் ஓர் ஆராதனையாளர் வட்டத்தைப் பெறுவது லா.ச.ராவுக்குக் கிடைத்த அங்கீகாரம்தான். அதனை எனது முந்தைய கட்டுரையில் பதிவு செய்ய நான் தவறவில்லை.

ஒருவர் மறைந்த சமயத்தில் அவரது செயல்பாடுகள் குறித்து இழிவாகப் பேசுவதும் எழுதுவதுமே அநாகரிகமாகும். ஒருவர் படைப்பாளியாக இருக்கும் பட்சத்தில் அவர் மறைந்துவிடுகையில் அவரது படைப்பு தொடர்பானவைகளை தனது கோணத்தில் விமர்சனம் செய்வதும், அவரோடு தனக்கு இருந்த தொடர்புகளை நினைவு கூர்வதும் மரபிற்கு முரண் அல்ல. ல. ச.ரா . பற்றி நானோ, நண்பர் ஷங்கர நாராயணனோ மரியாதைக் குறைவாகவோ, அலட்சியப்படுத்துகிற விதமாகவோ நிச்சயமாக ஏதும் எழுதிவிடவில்லை. ஒரு எழுத்தாளரின் படைப்புகளை அவரது மறைவையொட்டி நினவுகூர்ந்து அவற்றை விமர்சனம் செய்வது அவருக்குச் செய்யப்படும் ஒருவகையான அஞ்சலியேயன்றி, ரசக் குறைவானது அல்ல். அந்த எழுத்தாளரின் படைப்பு முயற்சிகள் எல்லாம் வெறும் குப்பை என்று அந்தச் சமயத்தில் சொல்வதுதான் ரசக்குறைவாகவும் அநாகரிகமாகவும் இருக்கும். ஒருவரின் பங்களிப்பு பிரயோஜனம் அற்றது எனத் தோன்றும் பட்சத்தில் அது பற்றி ஏதும் எழுதாமலும் பேசாமலும் இருந்துவிடுவதே நாகரிகமும், மறைந்தவருக்குக் காட்டும் மரியாதையும் ஆகும். பலர் விஷயத்தில் இதைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.

மிகச் சாதாரணமானவர்கள் மறைகையில்கூட, அவர் மறைந்துவிட்டார் என்பதற்காகவே அவரைப் பற்றி மிகைபடப் புகழ்ந்தும் புலம்பியழுதும் எழுதுதலும் பேசுதலும் சம்பிரதாயமாகிவிட்டிருப்பதால்தான் ஒரு படைப்பாளி மறைந்துவிடுகையில் அவரது பங்களிப்பை மிகையாகப் புகழ்ந்து பேசுவதுதான் முறை எனத் தோன்றுகிறது. அவரை மதிக்கும் அடையாளமாக அவரது எழுத்தை விமர்சிப்பது ரசக்குறைவாகப் படுகிறது.

ல. ச. ரா. வை முதன் முதலில் சந்தித்தபோது அவர் அச்சமயம் எழுதிய நாவலுக்குப் புத்ர எனத் தலைப்பிட்டது ஏன் எனக் கேட்டதையும் அவ்வாறு நான் கேட்பேன் என அவர் எதிர்பார்க்காததையும் எனது முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டதோடு நிறுத்திக்கொன்டேனே யன்றி, அதனையொட்டி மேலும் விளக்க முற்படவில்லை. ஏனெனில் அது ரசக் குறைவாகப் போய்விடக்கூடும் என்பதால்தான். காரணம் எனக்கு பூடகமாகவும் நாசூக்காகவும் பேசவோ எழுதவோ தெரிவதில்லை. வெளிப்படையாகவே எழுதவோ, பேசவோ செய்துவிடுகிறேன். புத்ர என்கிற நாவல் தலைப்பையொட்டி நான் விமர்சனப்பாங்கில் மேலும் எழுத முற்பட்டிருந்தால் நிச்சயமாக அது ரசக்குறைவாகப் போயிருக்கும். ஆனால் கூரிய பார்வையுள்ளவர்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்பது புரிந்திருக்கும்.

அசோக மித்திரன் தாம் சொல்ல விரும்பும் கருத்தை எவர் மனமும் புண்படாத விதத்தில், அதே சமயம் சாமர்த்தியமாக அதனைச் சொல்லிவிடவும் முடிகிற எழுத்தாளரும், பேச்சாளருங்கூட. தம் எழுத்தின்மீதான ஏளனமான விமர்சனத்தைக்கூட அவ்வாறு விமர்சனம் செய்தவரே வாய் விட்டுச் சிரிக்குமாறும் சிறிதளவும் நோகாமலும் தக்க பதிலடி கொடுக்கிற சாமர்த்தியமும் அவருக்கு உண்டு (சென்னை திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அரங்கில் 2005 ல் நடந்த தமக்குரிய பாராட்டுக் கூட்டத்தில் இப்படித்தான் அசோகமித்திரனாகத் தம்மையே கற்பித்துக்கொண்டு சுந்தர ராமசாமி தெரிவித்த மிக நீண்ட விமர்சனப் பாராட்டுக்கு அசோக மித்திரன் பதிலளித்தார். எனக்குத் தெரிந்து சென்னையில் சுரா பங்கேற்ற கடைசி பொது நிகழ்ச்சி அதுதான். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு சுராவை நான் சந்தித்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்ததும் அப்போதுதான். என்னைத் தெரிகிறதா என்று நான் கேட்டபோது உங்கள் மூக்கு மறக்குமா என்று சொல்லி, அதை வைத்தே அடையாளம் கண்டு கொண்டு விடலாமே என்று சொன்ன சு ரா., ஏன் இந்தக் கோலம்? தலை மறைவில் இருக்கிறீர்களா என்று கேட்டு, நமது உளவாளிகள் கொஞ்சமும் வேலைக்கு ஆகாதவர்கள், நீங்கள் என்னதான் உருமாறினாலும் உங்கள் மூக்கை வைத்தே உங்களைப் பிடித்துப் போட வேண்டாமா என்றார்!). எனக்குத் தெரிந்து, தமிழகச் சூழலில் ஒரு யூதனைப் போல உணர்வதாகத் தம்மைப் பற்றித் தெரிவித்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் அசோகமித்திரன் கடுமையான கண்டனக் கணைகளை ஏற்க நேரிட்டது. அந்த அளவுக்கு எந்த விஷயத்தையும் மிக நாசூக்காகப் பேசி அனைவருக்கும் இனியராக இருப்பவர். லா.ச. ரா. மறைவையொட்டி அவர் எழுதிய சிந்தா நதி சகாப்தம் என்கிற கட்டுரையில் அவர் மிக மிகச் சரியாக, அதே சமயம் மிக மிக மிகச் சாமர்த்தியமாகத் தமது விமர்சனத்தை வைத்திருந்தார். லா. ச. ரா. தமது நடையில் தத்துவச் சொற்களை அதிகமாகப் பயன்படுத்தியவர் என்பதாக. இவ்வளவு ரத்தினச் சுருக்கமாகவும் நாகரிகமாகவும் எனக்கும் எழுதத் தெரிந்திருந்தால் அப்புறம் அசோகமித்திரனுக்கு என்ன பெருமை?

தத்துவச் சொற்களைப் பயன்படுத்துவது வேறு, தத்துவச் சொற்களின் நுட்பங்களையும் பிரயோக சந்தர்ப்பங்களையும் ஆழ்ந்து ஆராய்ந்து, பொருத்தம் தேர்ந்து அவற்றுக்குத் தனது படைப்பில் இணை காட்டுவது வேறு அல்லவா?

மஹா ரதர் பீஷ்மர் அரச பீடத்தில் அமர்ந்திருப்பவன் எவனாக இருப்பினும், அவனது அவையில் அமர்ந்திருப்பதால் சொந்த விருப்பு வெறுப்புகளையும் தர்ம அதர்மங்களையும் பொருட்படுத்தாமல் அவனுக்காகவே இயங்குவதுதான் ஒரு ஷத்திரியனுக்குரிய தர்மம் எனத் தேர்ந்து, அதற்குப் பரிசாகக் குருட்சேத்திரப் போரில் அம்புப் படுக்கையில் விழுமாறு விதிக்கப்பட்டவர். தொங்கிய தலை நிமிர வேண்டிக் கழுத்தின் இடமும் வலமும் மேலுமிரு அம்புகளைத் தமது பிரியத்திற்குரிய அருச்சுனனிடம் யாசித்துப் பெற்றவர். இந்தப் பொருத்தம் பார்த்து அதற்கு ஒப்புமை அமைக்கப்படுமானால் அது இதிகாசத் தத்துவத்தைப் பயன்படுத்தியமையாகும். அவ்வாறின்றி, ஒருவர் முள்புதரில் தவறி விழுவதைச் சொல்லும்போது, அம்புப் படுக்கையில் வீழ்ந்த பீஷ்மரை ஞாபகப் படுத்துமாறு எழுதுவது இதிகாசத் தத்துவச் சொற்களைப் பயன் படுத்தியமை என்கிற வரம்போடு குன்றிப் போய்விடும்.

தமது நாவலுக்குப் புத்ர என்று தலைப்பிட என்ன காரணம் என்று லா.ச.ராவிடம்கேட்டு, அந்தச் சொல் எதனைச் சுட்டுவதற்காக உருவானது என அவருக்கு நினைவூட்டியது இந்த அடிப்படையில்தான். இது அவரது படைப்பினைப் பற்றிய விமர்சனப் பார்வையேயன்றி, அவரைப் பற்றிய விமர்சனம் அல்ல.

நான் சந்தித்து நெருங்கிப் பழகிய பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தொடர்புள்ளவர்கள் பலரைப் பல சந்தர்ப்பங்களில் அந்தந்தத் தருணத்திற்கேற்ப எழுத நேரிடுகிறது. சந்தர்ப்பம தவறினால் பிறகு எனது பார்வையிலான அவர்களைப் பற்றிய பதிவுகள் நிகழாமலேயே போய்விடக்கூடும். உதாரணமாக லா.ச. ரா. பற்றி எழுதும் எண்ணமே எனக்கு இருந்ததில்லை. அவரது மறைவுச் செய்தி கேட்டதும் அவரைப்பற்றிய நினைவுகள் எழுந்து, அவற்றைப்பதிவு செய்துவிட்டேன். மரபு, சம்பிரதாயம் என்றெல்லாம் யோசித்துப் பதிவு செய்வதைத் தவிர்த்திருந்தால் பிற்பாடு அவரைப்பற்றிய எனது நினைவுகள் பதிவாகாமலேயே போய்விட்டிருக்கும். மேலும் லா.ச.ரா. பற்றிய இவ்வாறான எனது பதிவு பயன் தருவதாகத்தான் உள்ளது என்பதை எனக்கு வந்த மின்னஞ்சல்களின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்