அ. முத்துலிங்கம் கதைகள் / உயிர்களின் மீதான வற்றாத கருணை

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

எம். கோபாலகிருஷ்ணன்


இருபதாம் நு¡ற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழத்தின் பங்களிப்பும் கணிசமானது. அவ்வாறான பங்களிப்பை ஈழப்போருக்கு முன், பின் என்று வகுத்துக் கொள்ளமுடியும். போருக்குப் பின்னான காலகட்டத்தில் சு.வில்வரத்தினம், யேசுராசா, சோலைக்கிளி, சேரன், செல்வி, சிவரமணி, அகிலன் முதலான கவிஞர்களிடமிருந்து வெளியான தீவிரமான கவிதைகள் தமிழ் கவிதையுலகில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. எஸ்.பொ, செ.யோகநாதன் போன்றவர்களின் படைப்புகளும் சமீப காலங்களில் ஷோபா சக்தியின் நாவல்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சிறு கதைகளைப் பொறுத்தவரையில் இது பூர்த்தி செய்யப்படாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இலங்கையிலிருந்தும் அயலிலிருந்தும் வெளியான சில சிறுபத்திரிக்கைகள் வெளியானபோதும் கூட சிறுகதைகளுக்கு அவை ஆற்றிய பங்களிப்புகள் குறைவானவையே. இதற்கான காரணங்களை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக முடியும்.

புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற ஒரு வகைப்பாட்டை சுட்டுமளவு இலங்கையிலிருந்து வெளியேறி வெவ்வேறு உலக நாடுகளிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சொந்த மண் குறித்த ஏக்கமும், தவிப்பும், போரின் உக்கிரமும், அது சிதைத்தழித்த வாழ்வு குறித்த கண்ணீருமாக இந்த வகை இலக்கியம் வெளிப்பட்டபடி உள்ளது.

இந்த பிண்ணனியிலிருந்து அ. முத்துலிங்கத்தின் மொத்தத் தொகுப்பை அணுகும்போது இரண்டு விஷயங்களை நினைவில் கொள்வது முக்கியம் என்று தோன்றுகிறது.

01 அ.முத்துலிங்கம் இலங்கையைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது எழுத்துக்கள் புலம் பெயர்ந்தோர் என்ற இலக்கிய வகைமைக்குள் அடங்காதது.
02 அவரது எழுத்துக்கள் சொந்த மண் குறித்த ஏக்கம் அல்லது கவலை அல்லது கனவு என்ற எல்லைக்கு வெகு வெளியே இன்னும் விரிவான உலகளாவிய மனித குலம் சார்ந்த அக்கறையைக் கொண்டது.

1959 முதல் 2003 வரை அ.முத்துலிங்கம் எழுதி 5 தொகுப்புகளாக வெவ்வேறு காலகட்டத்தில் வெளியான கதைகளுடன் தொகுக்கப்படாத சில கதைகளும் சேர்த்து மொத்தமாய் 75 கதைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது. புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துக்கான பொது வரையறைக்குள் இத் தொகுப்பை அடக்கிவிட முடியாத வண்ணம் இதன் கதை எல்லைகளும் தளங்களும் விகாசம் கொண்டுள்ளன. உலகமெங்கும் பயணிக்கும் ஒரு யாத்ரீகனின் கண்களின் வழி தரிசனமாகும் காட்சிகளின் விநோதங்களையும் ஆழங்களையும் இத்தொகுப்பு வாசிப்பின் வழியாக சாத்தியப்படுத்துகிறது. தமிழ் சிறுகதை இதுவரையிலும் காட்சிப்படுத்திய வாழ்க்கையின் பரிணாமங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது இது. நமக்கு இதுவரை பழக்கப்பட்ட நிலங்களும், அதன் மனிதர்களும், கலாச்சாரமும் நமக்குள் கட்டமைத்திருக்கும் வாழ்க்கை சார்ந்த பல அடிப்படைகளை உலுக்கும் வகையிலான பல கலாச்சார அம்சங்களின் பிண்ணனியை இத்தொகுப்பு முன்வைக்கிகறது. கணவன் இறந்த பின்பு அவனது தம்பிக்கே வாழ்க்கைப்படவேண்டும், அவன் 5 வயது பாலகனாக இருந்தாலும் அவனுக்காகக் காத்திருக்கவேண்டும் என்பதையும் ( யதேச்சை ), ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டி வீட்டில் உள்ள முதியவர் ஒருவர் தானாக மரணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் ( பீனிக்ஸ் பறவை ) வாசகனுக்குத் தரும் அதிர்ச்சிகள் சாமானியமானதல்ல. பனிக்கால அக்டோபரின் போது அரசாங்கம் ஒரு மணி நேரத்தை பின்னகர்த்தி விடும் என்கிற வழக்கமோ வலது கால் செருப்புக்கு ஒரு பெயர் இடது கால் செருப்புக்கு ஒரு பெயர் என்பதோ நமக்குத் தரும் அனுபவங்கள் முற்றிலும் வேறுபட்டவை.

அறிமுகமற்ற சூழலில் சந்திக்க நேரும் அனுபவங்களையும், கலாச்சார அம்சங்களையும் எதிர்கொள்ளும் மனம் எப்போதும் அவற்றை தனது சொந்த கலாச்சார பிண்ணனியைக் கொண்டே தரப்படுத்த முயலும். அவ்வாறான தரப்படுத்தலின்போது மேலை கருத்தாக்கங்கள் குறித்தும், கலாச்சாரம் குறித்தும் எப்போதும் ஒரு தகுதிக் குறைவையே உத்தேசிக்கத் தோன்றும். முத்துலிங்கம் அவ்வாறான பொதுவான உத்தேசங்களுக்கு சற்றும் இடம் தராமல் உள்ளவற்றை உள்ளபடி சொல்லுவதோடு நின்றுவிடுகிறார்.

ஆனால் அதே சமயம் பல்வேறு நாடுகளின் கலாச்சாரக் கூறுகளை பகுத்துணர்வதில் எப்போதும் ஒருவருக்கு துணையாக, உரைகல்லாக விளங்குவது அவரவர் அடிமனதில் கால்கொண்டுள்ள சுய பண்பாட்டுக் கூறுகளே. கதைகளாக, பாடல்களாக, புராணங்களாக, இலக்கிய வடிவங்களாக உருக்கொண்டிருக்கும் இக் கூறுகளே முத்துலிங்கத்துக்கு அவர் எதிர்கொண்ட பல்வேறு நிறங்களையும், வெளிகளையும் உள்வாங்கிக்கொள்ள உதவியுள்ளன. கம்பரும், ஒளவையாரும், திருக்குறிப்பு நாயனாரும், புறநானு¡றும், புராணக் கதைகளும் அவருக்கு தன் தரப்பைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும், உறுதி செய்து கொள்ளவும் துணை நின்றுள்ளன. கதைப்போக்கில் வெகு இணக்கமாக இவற்றைப் பொருத்தி வாசகனிடத்திலும் அவ்வாறான ஒரு அனுபவத்தை உறுதி செய்திருக்கிறார். முத்துலிங்கத்திடம் நாம் காணும் இந்த அம்சம் தமிழ் சிறுகதையாளர்களிடத்தில் அவ்வளவாக காணமுடியாதது. இதுவே முத்துலிங்கத்தின் முதற் சிறப்பாகும்.

அடுத்தது ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளது போல முத்துலிங்கத்திடம் நாம் காணும் புன்னகை. கதை வடிவம், மொழி, சித்தரிப்பு நேர்த்தி என்று ஒரு சிறுகதையாளரின் அத்தனை பலங்களையும் கொண்டிருக்கும் முத்துலிங்கத்தின் கதைகளை மேலும் சிறப்புமிக்கதாக்கும் தனித்துவமான அம்சம் அவர் கதைகளில் காண முடிகிற அங்கதமே. அவருடைய எல்லாக் கதைகளிலுமே, அவை எந்த தளத்தில் அமைந்தவையானாலும், சின்னச் சின்ன வரிகளில் இந்த அங்கதத் தன்மை கொப்புளித்து நிற்கிறது. ‘உடையார் என்ன செய்வார்? ஒண்ணுக்கு போறதை பாதியிலேயே நிற்பாட்டுகிற வித்தையை இன்னும் அவர் கற்கவில்லை. ‘ (செல்லரம்மான்). ‘வரையாது கொடுக்கும் வள்ளல் போல இந்த என்ஜின் குறையாது ஒழுகும் வரம் பெற்றது’ (பருத்திப் பூ). கதைகளின் வாசிப்புத்தன்மையை உத்தரவாதப்படுத்தும் இந்த அம்சத்தை இவ்வளவு நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் கையாண்டிருக்கும் இன்னொரு எழுத்தாளர் தமிழில் இல்லை என்று உறுதியாய் சொல்ல முடியும்.

முத்துலிங்கத்தின் ஒட்டு மொத்த கதை உலகமும் பசி, காதல், மரணம் என்ற மூன்று புள்ளிகளை சுற்றி அமைந்திருப்பதை உணர முடிகிறது.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் தத்தமது தேசம், மொழி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலை என்று எல்லா வேறுபாடுகளையும் தாண்டி இந்த மூன்றையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இதற்கான போராட்டமே மனித வாழ்வு. இம் மூன்றையும் ஏதோவொரு விதத்தில் வெல்லும் முயற்சியில்தான் மனிதனின் சகல ஆற்றல்களும் குவிந்து செயல்படுகின்றன.
போர் எனும் தீங்கொடுமையால் சிதைத்தழிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஒரு கோப்பைக் கஞ்சிக்காக தனது சகோதரனுடனும் பசியுடனும் நாளை விடியும் என்கிற நம்பிக்கையுடனும் அலையும் சிறுவனிடத்திலும் ( நாளை ), யாருமறியாத ஆப்பிரிக்கக் காட்டில் முன்பின் தெரியாத ஒருவர் தரும் விருந்திலும் வைனிலும் பலநாள் பசி மறக்கும் விருந்தாளியிடத்திலும் ( விருந்தாளி ), அடைக்கலம் தந்தவரின் வீட்டில் தினம் தினம் நல்ல உணவு வாய்த்திருந்தபோதும், உணவுப் பண்டத்தை தன் பெட்டிக்குள் பதுக்கிவைத்துக்கொள்ளும் பாகிஸ்தானிய சிறுமியிடமும் (கிரகணம்) பசியின் கரங்களில் வதைபடும் வெவ்வேறு மனிதர்களை நாம் தரிசிக்கமுடிகிறது.

அகதியாய் நாடு தாண்டி வந்து துப்புரவுத் தொழிலாளியாய் நிலவறையில் வாழ்ந்தபடி தனது துயர வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கும் இளைஞன் தனது இருப்பைப் பற்றிய உத்தரவாதமின்மையில் தத்தளித்திருப்பவனின் தேடலுக்கும் ( கறுப்பு அணில் ) கிழவியின் வறிய நிலைக்கு மனமிரங்கி வாய்க்காலை திசை மாற்றி வெட்டி, அதன் பொருட்டு வேலை இழக்க நேரும் பொறியாளரின் தியாகத்திற்கும் (பருத்திப் பூ) தாய்மையடைய வாய்ப்பில்லாதது உறுதியானதும் கறுப்புப் பெண்ணின் குழந்தையை ஸ்வீகரித்துக்கொண்டு தோளில் சுமக்கும் நங்கையின் தாய்மைக்கும் ( முழு விலக்கு ) பிண்ணனியில் மனிதனின் இருப்பு குறித்த கேள்வியொன்று வலுவாக முளைத்து நிற்பதை நாம் உணர முடிகிறது.

மனித இருப்பை பசி எந்த அளவு ஆட்கொண்டுள்ளதோ அதைவிட பன்மடங்கு ஆட்கொண்டிருப்பது காதல் என்பதை பலவகைப்பட்ட நிற பேதங்களுடன் இத் தொகுப்பில் உள்ள பல கதைகளும் அடிக்கோடிட்டுள்ளன. கணவன் பிரிந்திருக்க, உள்ளுர் காதலனுடன் களவொழுக்கம் புரிவதைப் பற்றிய கதையான ‘சங்கல்ப நிராகரணமும்’, பதினெட்டு மைல் தினம் நடந்து தண்ணீர் சுமக்கும் கொடுமையிலிருந்து விடுபடவேண்டி கொண்ட காதலையும் துறந்திடத் துணியும் பெண்ணைப் பற்றிச் சொல்லும் கதையான ‘ஒட்டகமும்’, மனைவியின் மீதான தாபம் தணியாத கணவன் அவள் மார்பில் பச்சை குத்திக் கொண்டுள்ளதைக் கண்டு பின்வாங்கும் மனச் சரிவைச் சொல்லும் ‘ஐந்தாவது கதிரையும்’ காதலின் பல்வேறு நிறங்களை துல்லியப்படுத்தி நிற்கின்றன.

பசிக்கான போராட்டத்தையும், காதலுக்கான தியாகம் உட்பட அனைத்தையும் பொருளற்றதாக்கி கவியும் மரணத்தின் முகங்கள் புன்னகையுடனும், புதிருடனும் வெவ்வேறு கதைகளில் வெளிப்படுகின்றன. பலர் கூடி வேடிக்கை பார்த்து நிற்கும் பொது மைதானத்தில் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் தன் தலையைத் துளைக்கப் போகும் தோட்டாக்களை எதிர்பார்த்து மண்டியிட்டிருக்கும் குற்றவாளியின் முன் கண்ணாமூச்சியாடும் சாவின் நிழல் நம்மை நடுங்கச் செய்கிறது (யதேச்சை) என்றால், வறுமையின் பிடியிலிருந்த சிறுமியின் மேதாவித்தனம் மெல்ல மெல்ல மொட்டவிழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் அவளை வசப்படுத்திக் கொள்ளும் மரணம் நம்மை உறைய வைக்கிறது ( கிரகணம் ). அதே சமயம் வாழ்நாள் முழுக்க பெரும்பாடுபட்டு சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள மொனார்க் வகைப் பட்டாம்பூச்சியைக் காண விசா கிடைத்து, அதைப் போய் பார்த்துவிட்ட பின்பு அவரை சாந்தத்துடன் தழுவிக்கொள்ளும் மரணம் குறித்து நமக்கு புகார் ஒன்றுமில்லை.

முத்துலிங்கத்தின் புனைவுலகை கட்டியமைத்துள்ள பசி, காதல், மரணம் என்ற மூன்று புள்ளிகளையும் இணைக்கும் ஆதாரமான கோடாகவும் இத் தொகுப்பின் உட்சரடாகவும் அமைந்திருப்பது உயிர்களின் மீதான கருணை என்னும் அம்சமே.

மண்ணின் மீதும் மண்ணுயிர்களின் மீதும் மனிதர்கள் கட்டவிழ்த்து விடுகிற வன்முறை சார்ந்த கவலைகள் முத்துலிங்கத்தின் கதைகளில் துலக்கமாக இடம்பெற்றுள்ளன. கானுயிர்களின் மீது ஆராய்ச்சி என்ற பெயரில் தொடுக்கப்படும் கொடுமைகளையும் ( ஞானம் ), தந்தத்தின் மீதான அளப்பரிய மோகத்தின் பொருட்டு யானைகளை கொலைசெய்யத் துணியும் மனிதர்களின் சுயநலத்தையும் ( குதம்பேயின் தந்தம் ), உடும்புகள், நாய்கள், பூனைகள், பாம்புகள், பறவைகள் என்று எண்ணற்ற உயிர்களின் மீது மனித சமூகம் தொடர்ந்து புரிந்துகொண்டிருக்கும் பாதகங்களையும், சற்றும் பிரச்சாரத் தொனியின்றி நம் உள்ளுணர்வின் ஆழத்தில் பெரும் வலியாக உணரும் வண்ணம் முத்துலிங்கம் சித்தரித்துள்ளார். இக் கருணையின் ஈரமே சாத்தியப்பட்ட இடங்களில் எல்லாம் உலகின் பல்வேறு பிரதேஷங்களில் வாழும் விதவிதமான உயிரினங்களைக் குறித்தும், பறவையினங்கள் குறித்தும் ஆர்வத்துடன் சொல்லத் து¡ண்டியுள்ளது எனலாம். ஆப்பிரிக்காவில் கிழங்குகளை உண்டு கொழுக்கும் கட்டிங் கிராஸ் என்ற பெருச்சாளிகள், பாகிஸ்தான் மலைப் பகுதிகளில் அழிந்துவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள மலை ஆடுகள், சேகர் பால்கன், டோ டோ போன்ற பறவைகள், மொனார்க் வகை பட்டாம்பூச்சி, நாய்களை சீண்டும் றக்கூன், குரங்குகள், ஆந்தை என்று ஒவ்வொரு பிராணியைப் பற்றியும், பறவைகள் பற்றியும் அவர் விஸ்தாரமாக நமக்குச் சொல்வது வெறும் தகவல்களாக மட்டும் நின்றுவிடுவதில்லை.

உலகமயமாக்கல் மெல்ல மெல்ல மனித இனத்தின் பல்வேறுபட்ட கலாச்சார, இனக்குழு அடையாளங்களை தேய்த்தழித்து ஒற்றைத்தன்மைக்கு இட்டுச் செல்வதைக் குறித்த பல்வேறு விதமான மனவோட்டங்களை இத் தொகுப்பு சாத்தியப்படுத்தியுள்ளது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும், கணிணிமயமாக்கலினாலும் மனிதர்கள் எதிர்கொள்ள நேரும் அபத்தங்களை, மனித உறவில் ஏற்படும் தலைகீழ் மாற்றங்களையும் வலுவாக முன்வைக்கும் கதைகள் ( கம்ப்யூட்டர், பூமாதேவி, .23 சதம் ) உலகமயமாக்கலின் இறுதி நோக்கமான ஒற்றைத் தன்மையைக் குறித்த பல்வேறு மனவோட்டங்களை சாத்தியப்படுத்துகின்றன.

சிறுபருவத்தில் நாம் கண்ட காட்சிகள், சந்தித்த மனிதர்கள், நுகர்ந்த வாசனைகள் போன்றவை வாழ்வின் பிற்பகுதியில் நம் அடிமனதிலிருந்து மேலும் மேலும் துலங்கி எழுந்தபடியே உள்ளன. முத்துலிங்கத்தின் கதைகளில் அவ்வாறான சம்பவங்களும், வாசனைகளும் தனிச் சிறப்புடன் வெளியாகியுள்ளன (ஒரு சிறுவனின் கதை, உடும்பு, அக்கா, செல்லாரம்மாள், சிலம்பு செல்லப்பா ). ஆசிரியர்கள், அக்காக்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருக்க முடிகிறது. தனது சொந்த மண்ணிலிருந்து வெகு காலமாய் பிரிந்து எங்குமே கால்பாவாமல் அலைந்தபடியிருக்கும் ஒருவனின் மனம் தன்னியல்புடன் மனதின் அடியாழத்தில் உரங்கொண்டிருக்கும் இந்த நினைவுகளுக்குள் இளைப்பாறுவதன் சுகத்தையும் நிம்மதியையும் இக் கதைகளின் வழியாக உணர முடிகிறது. அதே போல, முத்துலிங்கத்துக்கு சமையலைக் குறித்தும் ருசியைக் குறித்தும் விஸ்தாரமாக எழுதுவதில் அபாரமான ரசனை இருக்கிறது. நாஞ்சில்நாடனுக்குப் பிறகு சமையல் வாசனை கொண்ட எழுத்தை முத்துலிங்கத்திடமே காண முடிகிறது. உணவு குறித்த இந்த ரசனையும் விஸ்தாரமும்கூட இழந்து வரும் ஒன்றைக் குறித்த மீட்டுருவாக்கத்தின் ஏக்கம் என்றே படுகிறது.

முத்துலிங்கத்தின் கதைகள் அனைத்துமே நேரடியான சித்தரிப்பு உத்தியைக் கொண்டவை. நவீன இலக்கியத்தின் உத்தி சார்ந்த மயக்கங்களுக்கு அவர் இடம்தராமல் நாற்பதாண்ட காலமாக தனக்கே உரிய யதார்த்தமும், அங்கதமும் இழைந்தோடும் எளிமையான சித்தரிப்பு பாணியை தொடர்ந்து கைகொண்டுள்ளார். விதிவிலக்காக அமைந்த கல்லறை, குந்தியின் தந்திரம், செங்கல், ஸ்டராபரி ஜாம்.. போன்ற கதைகள் முத்துலிங்கத்தின் கதையுலகிற்கு பொருந்தாமல் துருத்திக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. அதேசமயம் உத்தி ரீதியிலான சிறு பரிசோதனையுடன் அமைந்த ‘வடக்கு வீதி’ அந்தக் கதையின் உட்சரடு காரணமாக மிக வெற்றிகரமான கதையாக அமைந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

முத்துலிங்கத்தின் பெரும்பாலான கதைகளிலும், கதையின் புலன் தளத்துக்கு அப்பால் அழுத்தமான உட்சரடுகள் மிக நுட்பமாக நெய்யப்பட்டுள்ளதை மிக முக்கியமான ஒன்றாக குறிப்பிட வேண்டியுள்ளது. அவரது கதைப்பாணி வாசகனை சரளமாக உள்ளிழுத்துக் கொள்ளுவது. ஆழ்ந்த வாசிப்பையும் அதிக கவனத்தையும் கோராதது. இதனால் கதைகளின் உட்சரடுகள் மேலும் துலக்கமற்றதாக்கிவிடுவதால் பல சமயங்களில் கதையின் உள் அடுக்குகளை நாம் உணரத் தவறிவிடலாம். இதுவே அவரது கதைகளை மேலும் சிறப்புமிக்கதாகவும், மீண்டும் மீண்டும் வாசிப்பிற்குரியதாகவும் ஆக்கித் தருகிறது.

‘ஐவேசு’ என்றொரு சிறுகதை இத்தொகுப்பின் மிக முக்கியமான கதை. பனி மலைகள் சூழந்த ஒரு பள்ளத்தாக்கின் ஏதோவொரு நுனியில் மனித சஞ்சாரமற்ற இடத்தில் தன் மனைவி, ஒரு சிறுமி, ஒரு சிறுவன் இவர்களுடன் ஒரு குடிசையில் வசிக்கிறான் ஒரு கிழவன். வழி தப்பி வரும் பிரயாணிகளுக்கு தன்னிடத்தில் உள்ள ஆடுகளிடமிருந்து பால் கறந்து, பழைய பெட்டியொன்றில் பாதுகாத்து வைத்திருக்கும் உடைந்த விளிம்புகள் கொண்ட பீங்கான் கோப்பையில் தருகிறான், எதையும் எதிர்பார்க்காமல். அந்தக் கிழவனின் முகத்தில் காணும் கருணையின் ஒளியே, பசியின் பொருட்டும் காதலின் பொருட்டும் இருப்பிற்கான போராட்டத்தின் பொருட்டும் மனித இனம் மேற்கொள்ளும் சகலவிதமான தந்திரங்களில் இருந்தும், செய்யத் துணியும் துரோகங்களில் இருந்தும் விமோசனம் அளிக்கிறது என்று தோன்றுகிறது.

தமிழினியின் நேர்த்தியான பதிப்பில் வெளியாகியிருக்கும் இத் தொகுப்பிற்கு க.மோகனரங்கன் எழுதியுள்ள முன்னுரை அ. முத்துலிங்கத்தின் சிறுகதை உலகை வெகு துல்லியமாக பகுத்துத் தந்திருக்கிறது.

அ. முத்துலிங்கம் கதைகள்,
776 பக்கங்கள், விலை ரூ. 350
தமிழினி, சென்னை


murugesan.gopalakrishnan@gmail.com

Series Navigation

எம். கோபாலகிருஷ்ணன்

எம். கோபாலகிருஷ்ணன்