பாட்டு வாத்தியார் – ஜெ. ராம்கியின் பாகவதர்

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

பாலமுருகன், பெங்களூரு


தமிழ் சினிமாவில் உயரத்துக்குப் போன நடிகர்களில் தியாகராஜ பாகவதர் முக்கியமானவர். பாகவதருக்கு கிடைத்த பிரபல்யத்தை பற்றி மக்கள் இன்றும் சிலாகித்துப் பேசுகிறார்கள். தமிழ் சினிமாவில் பாகவதரின் பொற்காலம் முடிந்து கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இடையே எம்.ஜி.ஆர், ரஜினி என மக்கள் திலகங்கள் வந்துவிட்டாலும் இன்னும் பாகவதரின் பெயர் நிலைத்திருக்க காரணம் அவரது பாட்டுக்கள்தான்.

பாகவதரின் வாழ்க்கை, சினிமாவில் அவர் உச்சத்தில் இருந்ததற்கு காரணம் எது, சறுக்கி விழுந்ததற்கு காரணம் எது என்பதையெல்லாம் பாகவதர் புத்தகம் துல்லியமாக அலசியிருக்கிறது. பாகவதரின் சினிமா சாதனைகளைப் பற்றிய புத்தகங்கள் படிக்க கிடைக்கின்றன. ஆனால் பாகவதரின் வெற்றிக்கான காரணங்களை அலசுவது இது மட்டும்தான்.

எல்லா சூப்பர் ஸ்டார்களையும் போலவே வறுமைதான் பாகவதரையும் சினிமாவுக்கு வரவழைத்தது என்கிறார் புத்தகத்தின் ஆசிரியர். நூறு சதவீதம் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. குடும்பத்தின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டுதான் எம்.ஜி.ஆரும் அவரது அண்ணனும் கும்பகோணத்திலிருந்து கிளம்பி நடிப்பதற்காக சினிமா வாய்ப்பு தேடி கோவைக்கு வந்தார்கள். நடிப்புக் கல்லூரியில் பயிற்சி பெற்று முறைப்படி வந்தாலும் ரஜினிக்கும் சினிமா மூலம் பணம் சம்பாதிப்பதுதான் ஆரம்ப கட்ட லட்சியமாக இருந்தது.

எம்.ஜி.ஆர் நாடக மேடைகளில் நடித்துக்கொண்டிருந்த போது யாரும் கவனிக்கவில்லை. ரஜினியும் வில்லன் வேடங்களில் நடித்தபோது மக்களின் கவனத்தை பெறவில்லை. ஆனால் பாகவதரோ நாடகத்திலும் பிரபலமாக இருந்தார். அதே புகழோடுதான் சினிமாவுக்கும் வந்தார். இன்னும் சொல்லப்போனால் நாடக மேடையிலிருந்து சினிமாவுக்கு வந்து பாகவதர் வெற்றிகளை குவித்துக்கொண்டிருந்ததை பார்த்துதான் நிறைய பேர் சினிமாவுக்கு வந்தார்கள். இந்த விஷயத்தையும் புத்தகம் நன்றாகவே பதிவு செய்திருக்கிறது.

ஓகோவென்று இருந்த பாகதவதரை ஒரே நாளில் கீழே தள்ளிவிட்ட லட்சுமிகாந்தன் கொலை விவகாரம் பற்றிய செய்திகள் சுவராசியமாக இருக்கின்றன. சாதாரண ரிக்ஷாவில் வந்து கொண்டிருந்த லட்சுமிகாந்தனை கீழே தள்ளிவிட்டு நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இதற்காக பாகவதரின் புகழை பறிகொடுக்க காரணமாக இருந்தது இந்த சாதாரண கொலைதானா என்கிற எண்ணம் ஏற்படுவதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

பாகவதர் நடித்த படங்களின் மீதான விமர்சனம், படம் பற்றிய தகவல்களும் புத்தகத்தில் கிடைக்கின்றன. பாகவதர் படம் பார்த்திராத என்னைப் போன்றவர்களுக்கு உபயோகமாக இருந்தது. பாகவதர் படத்தில் காணப்படும் பொதுவான அம்சங்களை மென்மையாக கிண்டலடித்திருப்பதும் ரசிக்க வைக்கிறது.

ஹரிதாஸ் மூன்று தீபாவளிகளை தாண்டி ஓடியது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். சிந்தாமணி, அம்பிகாபதி போன்ற படங்களும் ஒரு வருடத்தை தாண்டி ஓடியது என்கிற தகவல் வியப்பை தந்தது. ஹரிதாஸ் படத்தோடு சந்திரமுகியை ஒப்பிட்டு நிறைய விஷயங்களில் ஒற்றுமை காண முடிந்தது. பாகவதர் படம் மட்டுமல்லாமல் கூடவே வெளியான சின்னப்பாவின் படங்கள் பற்றிய தகவலையும் படிக்கும்போது சிவாஜி- எம்ஜிஆர், ரஜினி – கமல் போட்டிகளை நினைவூட்டியது.

புத்தக ஆசிரியரான ராம்கியின் முதல் புத்தகமான ‘ரஜினி – சப்தமா, சகாப்தமா’ புத்தகத்தை படித்திருக்கிறேன். இரண்டாவது புத்தகமான மு.க இன்னும் படிக்க கிடைக்கவில்லை. முதல் புத்தகத்தை விட சிறப்பாக வந்திருக்கிறது ராம்கியின் மூன்றாவது புத்தகம் என்று சொல்ல முடியும். புத்தகத்தின் குறையாக நான் சொல்வது, பாகவதரின் குடும்ப வாழ்க்கை பற்றி இன்னும் நிறைய எழுதியிருக்கலாம். பாகவதருக்கு கணக்கிலடங்கா மனைவிகள் உண்டு என்று சொல்வார்கள். அதுபோல அவரது பிள்ளைகளை அவருக்கே அடையாளம் தெரியாதாம்! இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. பாகவதரின் பாடல்களை பற்றியும் அதன் ராகங்களை பற்றியும் இன்னும் அலசியிருக்கலாம். ஆனாலும், பாகவதரின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த புத்தகம்தான் சரியான தேர்வு. வாழ்த்துக்கள் ராம்கி!

பெயர் : பாகவதர்

நூலாசிரியர் : ஜெ. ராம்கி

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்.

விலை ரூ. 70/- பக்கங்கள் 143


balamurukanv@gmail.com
http://balamuruganvazha.blogspot.com

Series Navigation

பாலமுருகன், பெங்களூரு

பாலமுருகன், பெங்களூரு