இளைஞர்களை சுட்டெரிக்கும் வெள்ளித் தீ ரை!!

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

கோட்டை பிரபு


இளைஞருக்கு வழிகாட்டும் தீப்பந்தமாக இருக்கவேண்டிய திரைப்படமானது அவனையே சுட்டெரிக்கும் சூனியமாகிறது!
சிங்கப்பூர் கேலாங்மேற்கு சமூகமன்றத்தின் இந்திய நற்பணிக்குழுவின் ஏற்பாட்டில் சிறப்புப் பட்டிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை உமறுப் புலவர் தமிழ்மொழி மையத்தில் முனைவர். ரத்தின வெங்கடேசன் அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக அரங்கேறியது.
“இன்றையத் திரைப்படங்கள் இளையர்களை நல்வழிப்படுத்தவில்லை” – ஆம், எனும் தலைப்பில் திரு.ஸ்டாலின் போஸ் தலைமையில் திரு. மணிசரவணன், கண்டனூர்.திரு.சசிகுமார் அவர்களும்,’ இல்லை, எனும் தலைப்பில் திரு.இனியதாசன் தலைமையில் திரு. தமிழ்க்கோ, திரு.கோவிந்தராஜ் அவர்கள் அடங்கிய இரு குழுக்கள் சொற்போரிட்டனர்.
இந்த சொற்போருக்கு நடுவர் பதவி வகிப்பது சற்று சிரமமான காரியம், எனினும், சொல்லருவி திரு.சிவக்குமார் அவர்கள், அப்பதவிக்கு மிகச்சரியாகப் பொருந்தி நடுநிலைகாத்தார். மேலும், இந்நாள்வரை அணித்தலைவராக அனல் வீசிக்கொண்டிருந்த அவர், முதல்முறையாக நடுவர் பதவி ஏற்கிறார் என்பது சிறப்பம்சமாகும்.

சமூகத்தின் பிரதிபலிப்பே திரைப்படம். ஆனால், இன்றையத் திரைப்படங்கள் அதை சரியாகத்தான் செய்கிறதா? இன்றும் தரமான சமூகப்பார்வையுடனான படங்கள் வந்துகொண்டு தானே இருக்கின்றன, இத்தகைய கேள்விகளுக்கும்,பல சந்தேகங்களுக்கும், தெளிவான பதில்களை தங்களது சிறப்பான பேச்சுக்களால் எடுத்து வைத்தனர் பட்டிமன்ற பேச்சாளர்கள்.
பார்வையாளர்கள் அங்கத்தில் தமிழ்த்தொண்டர் திரு.புருஷோத்தமன் அய்யா அவர்கள் புதியதாக பதவிவகித்த நடுவருக்கும், அணித்தலைவருக்கும் வாழ்த்துக்களையும், தனது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.
ஓவ்வொருப் பேச்சாளரின் பேச்சுக்களையும் வரிசைப்படுத்தி, ஆய்ந்து தனது சிறப்புரையுடன், “இன்றையத் திரைப்படங்கள் இளையர்களை நல்வழிப்படுத்தவில்லை” – ‘ஆம்’ எனும் மிகச்சரியான தீர்ப்பை தனது அழகுத் தமிழில் பதியவைத்தார் நடுவர்.
உண்மைதான், அன்றைய திரைப்படங்கள் முதல், இன்றைய திரைப்படங்கள் வரை, தனிநபரை மையப்படுத்தியே சுழலும் கதையம்சங்கள் கொண்ட படங்கள் என்றுமே இளையர்களை நல்வழிப்படுத்த இம்மியளவும் முயலவில்லை.
தொடர்ந்து பேச்சாளர்களுக்கும், நடுவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. செவிக்கு சிறப்பான உணவை பரிமாறிய இப்பட்டிமன்றம், கவிஞர். இறைமதியழகன் அவர்களின் அன்பான ஏற்பாட்டில் மிகச்சிறப்பான சிற்றுண்டியையும் பரிமாறியது ,
வாழ்த்துக்களுடன்,
கோட்டை பிரபு


kottaiprabhu@yahoo.com

Series Navigation

கோட்டை பிரபு

கோட்டை பிரபு