“படித்ததும் புரிந்ததும்”.. (2) நினைவுச் சின்னம்

This entry is part of 39 in the series 20070920_Issue

விஜயன்


“200 ஆண்டுகளாக நடந்து வந்த குதிரை
பந்தயத்தை நிறுத்துவதென்று 18.8.1974 தேதியில்
தமிழக அரசு அறிவித்ததின் நினைவுச் சின்னம்”

சென்னை ஜெமினி மேம்பாலம் (அண்ணா மேம்பாலம்) கீழே, நீங்கள் பயனித்திருந்தீர்களேயானால் ஒரு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு கீழே நிற்கும் இளைஞனின், இரண்டு சிலைகளைப் பார்த்திருப்பீர்கள். சற்று உற்று பார்த்தீர்களானால், அதன் பீடத்தில் மேலே சொன்ன வாசகங்களை படிக்கலாம். அது சரி ஒரு நினைவுக்கு எதற்கு இரண்டு சின்னங்கள் (சிலைகள்) இந்த நினைவுச் சின்னத்தின் அபத்தம் பற்றி புரிந்து கொள்வோம்.
சென்னைக்கு முதல் நினைவுச் சின்னமே 1639ம் ஆண்டு கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டைதான்! அது தொடங்கி சென்டரல் ஸ்டேஷன், ரிப்பன் பில்டிங், உயர்நீதி மன்ற கட்டிடம், கன்னிமாரா லைப்ரரி போன்று 1680களில் தொடங்கி 1890 வரை வந்த கட்டிடங்கள் தான் நினைவுச் சின்னம். பின்னர் 1959ல் அண்ணா சாலையில் கட்டப்பட்ட எல்.ஐ.சி 14 மாடி கட்டிடம்; கண்டிப்பாக எல்ல சினிமாவிலும் மெட்ராஸ் என்பதற்கு அடையாளமாய் காட்டப்படும் சின்னம், சிலை என்று சொன்னால் மெரினா பீச்சில் உள்ள காந்தி சிலை, உழைப்பாளர் சிலை, தீவுத்திடலில் உள்ள குதிரை மேல் உள்ள மன்றோ சிலை.
பின்னால் உலகத் தமிழ் மாநாட்டில் மெரினா பீச்சில் வந்த பல தமிழறிஞர்கள், கண்ணகி சிலை உட்பட வந்தவை கூட நினைவுச் சின்னங்கள் அல்ல. நினைவுச் சின்னம் என்றால் குறைந்தது 50 வருட காலமாவது அந்த நினைவுகள் அசை போடுவதாய் இருக்கவேண்டும்.
மேலே சொன்ன அந்த குதிரை சிலை, முதலில் கல்கியின் “படைப்பான வந்தியத்தேவனின்” வரைபட வார்ப்பு என்றுதான் சொல்லப்பட்டது. பின்னால், இந்த நினைவுச் சின்ன சேர்க்கை சிலையின் பீடத்தில் தனியாக ஒரு சாதனையாகச் செதுக்கப்பட்டது. இதில் அபத்தம் என்னவென்றால் சென்னை கிண்டி மற்றும் ஊட்டியில் நடைபெற்ற குதிரைப் பந்தயம் இன்றும், அன்றும் நீதிமன்ற ஆணையால் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான். அர்த்தமற்ற அறிவுப்புகள் எல்லாம் நினைவுச் சின்னமா? அதை பீடத்தில் செதுக்க வேண்டுமா? மேலை நாடுகளில் சிலைகள் சிற்பக்கலையின் வெளிப்பாடாய் இருந்தது, பண்டைய தமிழகத்திலும் அப்படித்தான் இருந்தது கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழ் குடியின், இன்றைய சிக்கலே இதுதான் அபத்தமான அறிவுப்புகளை, சாதனையாக பீடமேற்றிக் கொள்வதுதான். ஜெயகாந்தன் சொல்வது போல உண்மையான “ஞானத்திற்கு எதற்கு பீடம்” ஞானபீடம்?
“குதிரை பந்தயம் பல ஆண்டுகளாக ஒரு பொழுதுபோக்காக இருப்பினும் அதில் பணம் பண்ணும் விஷயம் ஒரு காலகட்டத்தில் பெரிய சமூக பாதிப்பை எல்லா தட்டு மக்களுக்கும் ஏற்படுத்தியது. அந்த காலத்தில், சீட்டாட்டம், குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு போன்றவை எளிதாக பணம் பண்ணும் வியாதியாய் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது” அதை நடத்தியவர்கள் பெரும்பணம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அன்றைய அரசும் மக்கள் பால் உள்ள கரிசனத்தால் அல்ல, “எம்ஆர்சி” என்கிற குதிரைப் பந்தயக் கிளப் வசதிமிக்க செட்டியார்கள் வசமிருந்தால் அரசியல் வாதிக்கும், வசதியான குடும்பத்திற்கு ஏற்பட்ட மானப் பிரச்சனை காரணமாக, சட்டமியற்றும் அதிகாரம் தவறாக பிரயோகிக்கப்பட்டது. 1974ல் ஓர் அவசரச் சட்டம் மூலம் குதிரைப் பந்தயம் நிறுந்த சட்டமியற்றப்பட்டது.
ஆனால் நீதிமன்ற வழக்கின்; இடைக்கால உத்திரவின் மூலமும், 2001ல் வந்த இறுதித்தீர்ப்பின் மூலமும் அரசின் நினைவுச் சின்னமாகிய இந்த அறிவிப்பு சட்டப்படி செல்லாது என்று டாக்டர் கே.ஆர். லட்சுமணன் என்ற வழக்கில் முற்றுப் பெற்றது.
மேற்சொன்ன இந்த தீர்ப்பிலும் ஒரு அபத்தம் உள்ளது. இந்த தீர்ப்பின் சாரம் என்னவென்றால் “குதிரைப்பந்தயம்” ஒரு சூதாட்டம் அல்ல, ஸ்கில் என்று சொல்லப்படுகிற திறமை எனவே அதை சூதாட்டம் என்று சொல்லி சட்டமியற்றி தடை செய்தது செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
குதிரை பந்தயம் வேண்டுமானால் திறமையால் நடத்தப்படும் ஒரு பந்தயமாக இருக்கலாம் ஆனால் அதை வைத்து நடத்தப்படும் “பெட்” எனப்படுவது சந்தேகமற்ற சூதாட்டம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். இந்த தீர்ப்பு சில நீதிமன்ற தீர்ப்புகளின் அவலத்திற்கு ஒரு உதாரணம்.
1968ல் உலகத் தமிழ் மாநாட்டில் வைத்த பல சிலைகளில் “சிலப்பதிகாரக் காப்பியத் தலைவி” கண்ணகி சிலை பற்றிய கூத்து அனைவருக்கும் தெரியும் ஒரு அரசியல் தலைவிக்கு மலையாள ஜோசியர் பனிக்கரின் பரிகாரமாய், தடையாக தோன்றிய ஒரு சின்னம், ராவோடு ராவாக நீக்கப்பட்டு சில நாட்கள் மிய+சியத்தில் குப்புறப்படுத்துக் கொண்டு, பின்னர் மீண்டும் மற்றொரு தலைவர் ஆட்சியில் வர்ணம் ப+சப்பட்டு அதே இடத்தில் நிறுவப்பட்டு “பந்தாடப்படும் சிலைகள்” நினைவுச் சின்னமா? அல்லது அரசாட்சியின் கலாச்சார சீர்கேடா? துக்ளக் ராஜ்யம் டில்லியில் மட்டுமே நடந்தது என்பது சரித்திரம், சரித்திரம் மீண்டும் மீண்டும் எங்கு வேண்டுமானாலும் அரங்கேறும் என்பது நிகர்சனம். 50 ஆண்டுகளாய் நசுக்கப்பட்ட சிறுபான்மையரின் உயர்வுக்காக, என்று சொல்லி சமிபத்தில் அறிவிக்கப்பட்ட 7% இட ஒதுக்கீட்டுக்கு கூட ஒரு நினைவுச் சின்னம் என்று அறிவிக்கப்படலாம், ஆயிரம் விளக்கு பகுதியிலும் சாந்தோமிலும் ஒரு நினைவு சின்னம் வந்தால், அந்த எண்ணத்தை விதைத்தற்காக என்னை சபிக்காதீர்கள்!


kmvijayan@gmail.com

Series Navigation