பிழைதிருத்தம் தொடர் 14 நிலைபாடு – நிலைப்பாடு

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

கரு.திருவரசு


“சுதேசி என்ற பெயரில் உள்ளூர்த் தொழில்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்பது ஒரு குழுவினரின் நிலைபாடு” என்பது இணைய மின்னிதழில் நான் படித்த ஒரு கட்டுரையின் சொற்றொடர்.

இத்தொடரில் வரும் இறுதிச் சொல்லான “நிலைபாடு” எனும் சொல்லாட்சி பிழையானது. குழுவினரின் நிலைப்பாட்டைச் (stand) சொல்லவந்தது தவறாகக் குழுவினரின் நிலையைப் பாடுகிறது.

நிலை + பாடு எனும் சொற்களுக்கிடையே “ப்” எனும் மெய்யெழுத்து இல்லாததால் ஏற்பட்ட பொருட்பிழை இது. கொஞ்சம் விளக்கமாகக் காண்போமா?

“நிலை” எனும் சொல் வினைச்சொல்லாக வரும்போது, நீண்ட காலத்திற்கு நீடித்து அமைதலைக் குறிக்கும்.

காட்டாக: இந்த ஆட்சி நிலைக்கும்.

“நிலை” பெயர்ச்சொல்லாக வரும்போது “இருக்கும் தன்மை”யைக் குறிக்கும்.
காட்டாக ஒரு சொற்றொடர் பார்ப்போம்:
“இப்போது அவர்நிலை தலைகீழாக மாறிவிட்டது.”

பாடு எனும் சொல்லைக்கொண்டு “பாட்டுப் பாடு” என்று சொல்லலாம். அவர் பட்ட பாடு “பெரும்பாடு” என்று சொல்லலாம். “பாடுபட்டு”த் தேடிய சொத்து என்று சொல்லலாம்.

விடு = வீடு, கெடு = கேடு என்பதுபோலப் படு = பாடு.

நிலைபாடு என்பது குறிப்பிட்ட நிலையைப் பற்றி பாட்டுப்பாடு அல்லது கவிதை பாடு என்று பொருள்படும். நிலைப்பாடு என்பதுதான் நிலைமை, உறுதிப்பாடு எனும் பொருள்களைத் தரும்.

மேலே நாம் பார்த்த “குழுவினரின் நிலைப்பாடு” என்பது ஒரு காரியத்தில் அவர்களின் நிலையைச் (stand) சொல்கிறது. அதை வலிமிகாமல் “நிலைபாடு” என்று குறிப்பிட்டது தவறு.

நிலைபாடு = நிலையைப் பாடு
நிலைப்பாடு = உறுதிநிலை (stand)


thiruv36@yahoo.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு