நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914)

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

முனைவர் மு.இளங்கோவன்



பழந்தமிழர்களின் வாழ்க்கைமுறையை அறிவதற்குப் பெருந்துணைபுரிவன சங்கநூல்களாகும்.

இச்சங்க நூல்களுள் ஒன்று நற்றிணை.இந்நூல் தமிழர்தம் அகவாழ்க்கையைக் கூறுவதோடு அமையாமல்

பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளையும் தாங்கி நிற்கின்றது. ஓலைச்சுவடிகளிலிருந்து இந்நூலை அறிஞர்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு வகைகளில் மூலமாகவும்,உரையாகவும் பதிப்பித்துள்ளனர். அவ்வகையில் கற்றோர் அனைவரும் களிப்புறும் வண்ணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரையுடன் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் ஆவார்.அவர்தம் வாழ்க்கையையும் உரைச்சிறப்பையும் இங்குக்காண்போம்.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் இளமைப்பருவம்

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்கள் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த பின்னத்தூர் ஆகும். பெற்றோர் அப்பாசாமி ஐயர் என்னும் வேங்கடகிருட்டிணன்-சீதாலட்சுமி.இவர் 1862 ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம் பத்தாம் நாள் பிறந்தார்.இவர்தம் இயற்பெயர் இலட்சுமிநாராயண அவதானிகள் என்பதாகும்.அவதானி என்பது அவதானக்கலைகளில் வல்லவர்களைக் குறிப்பதாகும.(அவதானம்=நினைவுக்கலை). பின்னத்தூர் நாராயணசாமியாரின் முன்னோர் காலம்தொட்டு இவர்தம் குடும்பம் நினைவுக்கலையில் வல்லவர்களாக விளங்கினர். நாராயணசாமியாரின் தந்தையார் மருத்துவ அறிவுபெற்றவர்.அனைவருக்கும் அறத்திற்கு மருத்துவம் பார்த்தார்..நாராயணசாமியாருடன் உடன் பிறந்தவர்கள் எழுவர்..நாராயணசாமியார் மூத்தவர்.

கல்வி

நாராயணசாமியார் பள்ளிக்கல்வியை உரியகாலத்தில் பெற்றார்.பின்னர் வடமொழியைச்சிறிது கற்று

மறையோதுதலை மேற்கொண்டார்.பின்னத்தூரில் பள்ளிநடத்திய கிருட்டிணாபுரம் முத்துராம பாரதியார் என்பவரிடம் தமிழ்கற்றார்.மன்னார்குடியில் வாழ்ந்திருந்த நாராயணசாமிப்பிள்ளை என்பவர் நிகழ்த்திய

இராமாயண சொற்பொழிவைக் கேட்டபிறகு நாராயணசாமி ஐயருக்குத் தமிழின்பால் மிகுந்த பற்று ஏற்பட்டது.இராமாயணம் முழுவதையும் கற்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.இதன்பிறகு தமிழின்மேல் அளவிறந்த ஈடுபாடு தோன்றியது.ஐயர் அவர்களின் குடும்பமே நினைவாற்றல்கலையில்

சிறந்துவிளங்கியதால் ஐயருக்கும் நினைவாற்றல் கலை கைவரப்பெற்றிருந்தது. எனவே கற்றவை யாவும் மனப்பாடமாகப் பதிந்தது.

நாராயணசாமியார் எப்பொழுதும் நூல்களைப் படிப்பதில் நாட்டம் கொண்டிருந்ததை அவர்தம் அத்தை விரும்பில்லை.குடும்பத் தொழிலைக் கவனிக்கும்படி அடிக்கடி கூறுவார்.அதனால் வீட்டிற்குத் தெரியாமல் வயல்வெளிகளில் அமர்ந்து தமிழைப் படிக்கத் தொடங்கினார். நாராயணசாமியார் தாமே தமிழ்படித்ததால் பல்வேறு ஐயங்கள் ஏற்பட்டன.அவர்தம் விருப்பம் நிறைவேறும் வண்ணம் நல்ல சூழலொன்று வாய்த்தது.யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் மருகர் பொன்னம்பலபிள்ளை அவர்கள் அப்பொழுது திருமரைக்காட்டில்(வேதாரண்யம்) தங்கித் தமிழ்ப்பணி செய்துவந்தார்.அவரிடம் சென்று தம் தமிழ் ஈடுபாட்டைக் கூறி ஐயங்களைப் போக்கிக்கொண்டார்.மேலும் முத்தமிழ்க்காப்பியமாகிய சிலப்பதிகாரத்தைப் பாடங்கேட்டார்.

நாராயணசாமியார் மன்னார்குடியில் பொன்னம்பலப்பிள்ளையின் முன்னிலையில் தாம் பாடிய நீலகண்டேசுரக் கோவை என்னும் கோவை நூலை அரங்கேற்றினார். மேலும் அவர் விரும்பியவாறு வடமொழி நூலான காளிதாசரின் பிரகசன நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். மேலும் கோவில்களில் இருந்த கல்வெட்டுகளைப் படித்து அறியும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.தமிழ்ப்புலவர்களின் வரலாறு, அவர்தம் பாடல்களை நன்கு அறிந்திருந்த நாராயணசாமியார் அவற்றை வேண்டிய பொழுது வெளிப்படுத்தும் பேராற்றலைக் கொண்டிருந்தார்.

நாராயணசாமியார்க்குத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் நல்ல பயிற்சி இருந்தது.அதன் விளைவால் பொருளதிகாரத்தில் இடம்பெற்ற மேற்கோள்களை அகரவரிசைப்படுத்தி வைத்திருந்தார்.நாராயணசாமியார்

1899 ஆம் ஆண்டு முதல் தாம் இறக்கும் வரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்ததார்.

நாராயணசாமியார் சங்கநூல்கள் பலவற்றையும் உரையுடன் வெளியிடத் திட்டமிட்டிருந்தார்.குறுந்தொகை,

நற்றிணை,அகநானூறு முதலான நூல்களில் அதிக கவனம் செலுத்தி ஆய்வுகளைச் செய்தவர்.நற்றிணை உரை அச்சாகிக் கொண்டிருந்தபொழுது புலவர் அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டது.நற்றிணை உரையை இறப்பதற்குள் காணவேண்டும் என்ற அவர்தம் எண்ணம் ஈடேறவில்லை. நீரிழிவுநோய் மேம்பட்டு 1914 ஆம்ஆண்டு சூலைத்திங்கள் 30 ஆம்நாள் தம்பிறந்த ஊரான பின்னத்தூரில் இயற்கை எய்தினார். நாராயண சாமியார்க்கு மணப்பரிசிலாய் இரண்டு பெண்மக்கள் பிறந்தனர்.


பின்னத்தூர் நாராயணசாமியார் இயற்றிய நூல்கள்:

1. நீலகண்டேசுரக்கோவை

2 .பிரகசன நாடகம்

3. இடும்பாவன புராணம்

4. இறையனாராற்றுப்படை

5. சிவபுரானம்

6. களப்பாள் புராணம்

7. அரதைக்கோவை

8. வீரகாவியம்

9. சிவகீதை

10.நரிவிருத்தம்

11.மாணாக்கராற்றுப்படை

12.இயன்மொழி வாழ்த்து

13.தென்தில்லை உலா

14.தென்தில்லைக் கலம்பகம்

15.பழையது விடுதூது

16.மருதப்பாட்டு

17.செருப்புவிடு தூது

18.தமிழ் நாயகமாலை

19.இராமயண அகவல்

20.நற்றிணை உரை

மேற்கண்ட நூல்களுள் இயன்மொழிவாழ்த்து,மாணாக்கராற்றுப்படை,களப்பாள் புராணம்,நற்றிணை உரை என்னும் நூல்கள் பார்வைக்குக் கிடைக்கின்றன. இந் நூல்கள் நாராயணசாமியார் மிகச்சிறந்த பாட்டியற்றும்ஆற்றல்கொண்டவர் என்பதையும்,உரைவரையும்ஆற்றல் கொண்டவர் என்பதையும் மெய்ப்பிக்கின்றன.

இவற்றுள் இயன்மொழி வாழ்த்து என்பது புதுக்கோட்டை மன்னர் இராஜா மார்த்தாண்ட பைரவத்தொண்டமான் பற்றியும் அவர்தம்ஆட்சிக்கு உட்பட்டு இருந்த புதுக்கோட்டை நகரின் சிறப்புப்பற்றியும் கூறும் நூலாக விளங்குகிறது.570 ஆசிரியப்பா அடிகளைக்கொண்டு விளங்குகிறது.நூறாண்டுகளுக்கு முன்பிருந்த புதுக்கோட்டயைப்பற்றி வருணனை செய்யும் நூலாக இது உள்ளது.புதுக்கோட்டை மன்னரின் பிறந்தநாள் வாழ்த்தாகப் பாடப்பட்டுள்ளது.

பின்னத்தூர் நாராயணசாமியார் கும்பகோணத்தில் பணிபுரிந்தபொழுது அவ்வூரின் அழகில் மயங்கினர் போலும்.அதன்பயனாய் மாணாக்கராற்றுப்படை என்னும் நூலை இயற்றியுள்ளார்.395 நேரிசை ஆசிரியப்பா அடிகளால் இந்நூல் அமைந்துள்ளது.பாலசுப்பிரமணியபிள்ளை என்பவரால் 1900 இல் கும்பகோணத்தில் லார்டு ரிப்பன் அச்சாபிசில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில கும்பகோணத்தில் புகழ்பெற்றிருந்த நாகரிக ஆங்கிலேய வித்தியாசாலை என்னும் கல்வி நிறுவனம் பற்றிப் புகழ்ந்துரைக்கும் வண்ணம் இம் மாணவராற்றுப்படையைப் பாடியுள்ளார்.

.’கல்வி பயிலக்கருதி அதற்கு வழி காணாது வறுமையா லேக்கமுற்று வருந்திய மாணாக்கனொருவனைக் கல்வி பயின்று மேம்பட்டு அதனால் இராசாங்கத்தாராற் சிறப்புப்பட்டமும் பெற்று அதிகாரமும் பெற்றானொருவன் ஆற்றுப்படுத்தியதாகப் பொருள் கூறுக’ என நூல் நுவல்பொருளை நூலாசிரியர் குறித்துள்ளார்.கும்பகோணத்தின் இயற்கை அழகு பேசப்பட்டுள்ளது.


நற்றிணை உரைச்சிறப்பு

நற்றிணையின் உரை இனிய தமிழ்நடையாகவும்,இறைச்சி,உள்ளுறை,துறைவிளக்கம்,மெய்ப்பாடு,பயன்

என்ற கூறுகளை விளக்குவனவாகவும் உள்ளது.உரை பழந்தமிழ் மரபில் நின்று எழுதப்பட்டுள்ளது.பண்டைய உரையாசிரியர்களின் உரை என்று சொல்லும்படி உராயாசிரியர் ஆழ்ந்த,அகன்ற புலமைத்திறம் வெளிப்படும்படி எழுதியுள்ளார். பின்னத்தூர் நாராயணசாமியார் தம் உரை நூல் உருப்பெறுவதற்கு உதவியவர்களை நன்றிப்பெருக்குடன் குறிப்பிட்டுள்ளார்.அவர்களுள் ஏடு கிடைக்கச்செய்த சுவாமிவேதாசலம்,உ.வே.சாமிநாத ஐயர், தி.த.கனகசுந்தரம்பிள்ளை, மதுரைத்தமிழ்ச்சங்கத்தார் உதவி குறிப்பிடத்தக்கன.

நற்றிணை உரையைப் பின்னத்தூர் நாராயணசாமியார் பதிப்பித்தபொழுது 234 ஆம் பாடல் முழுமையாகவும் 385 ஆம்பாடல் பிற்பகுதியும் கிடைக்கவில்லை என்பதைக்குறிப்பிட்டுள்ளாமை அவரின் உழைப்பார்வத்தைக் காட்டுகின்றது.

உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் உரைவரைவதில் ஒவ்வொரு போக்கினைக் கைக்கொண்டுள்ளனர். பின்னத்தூர் நாராயணசாமியார் தாம் வரைந்த நற்றிணை உரையில் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி யுள்ளார்.ஒவ்வொரு செய்யுளுக்கும் உரைவரையும்பொழுது திணை,துறை,துறைவிளக்கம்,இலக்கணவிளக்கம்,

பாடல்,பாடல் பொருள் விளக்கம் இவற்றைத் தந்துள்ளார். ஒவ்வொரு பாடலடிக்கும் தெளிவான விளக்கம்

தருவதில் வல்லவராக விளங்குகிறார்.அரிய சொல்விளக்கம்,எடுத்துக்காட்டு, இலக்கணக்குறிப்பு,அணி அழகு,இலக்கண,இலக்கிய மேற்கோள்,இறைச்சி,உள்ளுறை,பயன்,மெய்ப்பாடு,பயன் போன்ற அகப்பொருள்செய்திகளை விளக்கியுள்ளார்.

பின்னத்தூரார் உரைவரையும் காலத்தில் பழந்தமிழ் நூல்கள் அச்சேறத்தொடங்கியிருந்தன. தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் முதலானவர்களுடன் பழகும் வாய்ப்பும் பின்னத்தூர் நாராயணசாமியார்க்கு வாய்த்ததால் இவர்தம் உரைச்செழுமை கொண்டமையை உணரலாம்.

பின்னத்தூர் நாராயணசாமியாரின் உரையை ஆராய்ந்த ஆய்வாளர்கள் பல்வேறு உண்மைகளைக்கண்டு வெளிப்படுத்தியுள்ளனர். சு.இராசாராம் அவர்கள் தம்கட்டுரை ஒன்றில் பின்னத்தூர் நாராயணசாமியார் 111 நற்றிணைப் பாடல்களுக்கு உள்ளுறை கண்டும்,100 பாடல்களுக்கு இறைச்சி கண்டும் விளக்கியுள்ளதைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

பின்னத்தூர் நாராயணசாமியார் வரைந்த நற்றிணை உரையைக் கற்கும்பொழுது அவர்தம் பரந்துபட்ட இலக்கணஅறிவு, இலக்கியஅறிவு, வடமொழிப்புலமை,உலகியல் அறிவு,பிறதுறைப் புலமை யாவும் தெளிவாக விளங்குகின்றன. ஒரு நூலுக்கு உரைவரைந்தாலும் அவர்தம் உரை மாண்பால் உலகம் உள்ள அளவும் அவர்தம் பெருமை நின்று நிலவும்.

பின்னத்தார் நாராயணசாமியார் உ.வே.சாமிநாதருடன் நெருங்கிப்பழகியுள்ளார்.எனவே உ..வே.சா தம் வாழ்க்கை வரலாற்றில் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்.

‘பிற்காலத்தில் என் புத்தகப்பதிப்புக்கு உதவியாக இருந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கம்பர் சம்பந்தமான இவ்விஷயங்களை என்னிடம் தெரிந்துகொண்டு இவற்றையும் வேறு சில விஷயங்களையும் சேர்த்துத் தாம் பதிப்பித்த தமிழ்ப்பாட புத்தக உரையில் வெளியிட்டிருக்கிறார்’. (என் சரித்திரம்,பக்கம் 720).

முனைவர் மு.இளங்கோவன்

புதுச்சேரி,இந்தியா


muelangovan@gmail.com

muelangovan.blogspot.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்