சக்தே இண்டியா – தூள் கிளப்பு இந்தியா – இந்தியா வயது : 60

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

கே. ஆர். மணி



இந்திய சினிமா போகவேண்டிய தூரம் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு சில சூத்திரங்களுக்குள் கட்டுப்பட்ட அதனது இயக்கத்தை ஒவ்வொரு முறையும் அடுத்த தளத்திற்கு தள்ளி அதனை உலகத்தரத்திற்கோ அல்லது நல்ல தரத்திற்கோ எடுத்துசெல்ல இடைவிடாது நடக்கும் போராட்டத்தில் பல தோல்விகளுக்கு பிறகு கிடைக்கிற சில வெற்றிகள் சினிமா நீரோட்டத்தின் திசையை மாற்றிவிடுகின்றன. சுகந்திர போராட்டத்தின் கருவியாகி இருந்த சினிமா, 50களின் மெல்ல தனிமனித நோக்கி தவழ்ந்துவர ஆரம்பித்த காலம் இந்தி சினமாவின் பொற்காலம் என்கிறார்கள். புதுத்தொழில்நுட்பம் நோக்கிய எழுச்சி, வானத்தை தொட்டுவிடும் வண்ணக்கனவுகளுடன் புதுபுது இயக்குநர்களின் காலமாகயிருந்தது அது. [ (படம், வருடம், இயக்குநர் ) பியாசா 1957 குருதாத் , ஸ்ரீ 420 1955 ராஜ்கபூர் , காகஸ்கா பூல் 1959 குருதத் ஆவாரா 1951 குருதத், சிஐடி 1956 ராஜ்கோச்லா, தேவதாஸ் ]

1960களின் பெரிய ஸ்டுடோடியோக்களின் எழுச்சியும், லதாமங்கேச்கரின் குரலையும் விடுத்து பெரிதான மாற்றத்திற்கான அடையாளங்களில்லை. அந்த கால கம்யூனிசத்தின் சின்ன உள்நாட்டுப் புரட்சியை ஒரு சில புரட்சி படங்கள் பதிவு செய்தன. விடுதலைக்கு பிறகு சினிமாவிற்கான மூலச்சரக்காக எப்போதுமிருந்தது பாட்டும், பாடலும், பாகிஸ்தானை எதிர்த்த தேசப்பற்றும்தான். அதற்கு பின் காதல் செய்யவும், கோபப்பட்டு உலகத்தை திருத்த கதாநாயகர்கள், அவர்களுக்காக கதாநாயகிகள், ஐட்டம் குத்துபாட்டு என 70களின் கடைசியிலும் 80களிலும் அது முழுக்க, முழுக்க மசாலத்தனத்தின் உச்சத்தை எட்டியது. பேரலல் சினிமா தனது தனிப்பாட்டை தொடர்ந்து கொண்டேயிருந்தாலும், மெயின் ஸ்டிரிம் ( வெகுஜன ) சினிமாவில் அதனது பாதிப்பு கொஞ்சம் கூடயில்லாதது மட்டுமின்றி, அதற்கு எதிர்வினையாய் அதீத மசாலத்தனத்தின் முனையை நோக்கி நகர ஆரம்பித்தது ஒரு சோகமான தொடக்கம். 80களை தொடர்ந்து அவர்களின் வெற்றி மரத்தை பார்த்து பாதிப்படைந்து சில பல ஐஸ்கீர்ம் நாயகர்களின் தொடர்ச்சியும் 90களின் ஆரம்பத்தில் கிடைத்தது செக்குமாடு கொஞ்சம் மாடர்னாக சுத்திவர வாய்ப்பாய் அமைந்தது. 90களின் மத்தியில் வலம் வரத்தொடங்கிய எம்.டிவி, வீ-டிவிக்கள் இந்தி சினமாவின் மீதி பதித்த அழுத்தமே அதன் மற்றொரு பாதை நோக்கிய சிந்திப்புக்கு வழிவகுத்தது என்கிறார்கள் சினிமா ஆய்வாளார்கள்.

முதன்முதலில் பேசும்படம் ஆலம் ஆரா. நமக்கெல்லாம் தெரியும். பேசாப்படம் 1897ல் ஜுலையில் வெளியான ஒரு பத்துநிமிட படம். அது வாட்சன் ஹோட்டலில் திரையிடப்பட்டது. லெயுமூர் பிரதர்சால் தயாரிக்கப்பட்ட அந்த படத்தில் கதையெல்லாம் இல்லையாம். ஒரு இரயில் வருவது, கடல் காட்சி, ஒரு மில்லில் தொழிலாளர்கள் வேலை முடிந்து போவது என்பது போன்ற வெறும் காட்சித்தொகுப்புதானாம். இந்திய சினிமா பயணப்பட்ட தூரமும் அதிகம். பயணப்பட வேண்டிய தூரமும் அதிகம்.

அதிக நீளமான முத்தக்காட்சி 1926ல் வெளியான கர்மா படத்தில்தானாம். ஹ¤மான்சு ராயுக்கும், தேவிகா ராணிக்கும் நடக்கிற இந்த வாக்கு சுத்தமான நாக்கு யுத்தம் நாலு நிமிடங்கள் நீடிக்கிறதாம். 80 களில் அதிகமாக பேசப்பட்ட வினோத்கண்ணா, மாதுரி தீட்சத்தின் முத்தத்தை விட நாலு மடங்கு நீளமாம். இத்தகைய காட்சிகளை இந்திய படத்துறை கூட தங்களின் நூலகத்தில் வைக்காதது எவ்வளவு பெரியயிழப்பு என்பது எல்லோருக்கும் புரியும். 1897 – 1930 வரை கிட்டத்தட்ட 1200 பேசப்படங்கள் வந்திருக்கின்றன
என்பது கொசுறுச் செய்தி. டி.ஜே.பால்கே தனது லண்டன் பயணத்தில் பார்த்த, லைப் ஆப் கிரிஸ்ட் என்ற படத்தின் பாதிப்பால் நம் ஊரிலும் ஏதாவது செய்யலாமே என்று நினைத்து எடுத்த புராண வரலாற்று படம் தான் ராஜ ஹரிசந்திரா. அது படைத்த வரலாற்றிற்கு பின் சினிமா உலகம் திரும்பி பார்க்கவேயில்லை. ஹ¤மான்சு ராய், தேவிகா ராணியின் பம்பேய் டாக்கீஸ் – ஸ்டிடோயோ கலாச்சாரத்திற்கு அடிக்கோலிட்டது. ‘கர்மா’ படத்திற்குபின் தேவிகா ராணி இந்தியாவின் பெண் சூப்பர் ஸ்டாரானது தனிக்கதை. பேசும்படம் வருவதற்கு முன் இந்தியா ஏன் உலகம் முழுவதும் ஒன்றுபட்டிருந்தது என்றும், பேசும்படத்திற்கு பின், வடக்கு பகுதி முழுவதும் ஹ¤ந்தி சினிமாவை சுவிகரித்துகொண்டதும், தெற்கு தமிழ், தெலுங்கு சினிமா சந்தைகள் உருவானது வளர்ச்சியின் பகுதியாகக் கொள்ளலாம். அதற்கு பிறகு ஒவ்வொரு மாநிலமும், மொழியும் கிட்டத்தட்ட தங்களுக்கான சினிமா சந்தையை உருவாக்கிக்கொண்டாலும், இந்தி சினிமா அதனது அதிகமான சந்தையின் பங்கால், அதிகமான வாடிக்கையாளர்களால் அசுர வளர்ச்சி பெறலானது.

இந்திய சினமாவின் மிகப்பெரிய சந்தை பாலிவுட்தான். அதை அளவுகோலாகக்கொண்டுபார்த்தால் இந்திய சினிமாவே பாட்டும், கூத்தும் கொண்ட மசாலாத்தனமான ஒரு இசைக்கலவையின் தொகுப்பாகத்தான் உலகசினிமா இந்தியசினிமாவை பார்க்கிறது. காதல், குடும்பம் என்கிற மைய அச்சை விட்டு வெளி வந்ததது மிகமிக அரிதே. பொதுவாய் விளையாட்டை, அரசியலை, பொதுவாழ்க்கையை, தனிமனித வளர்ச்சியை, கொள்கைகள், தத்துவங்களின் வளர்ச்சி, வீழ்ச்சிகளை மையப்படுத்தி வந்த படங்களின் எண்ணிக்கையை
விரல்விட்டு எண்ணிவிடலாம். வெகுஜன சினிமாவில் மேற்சொன்ன விடயங்கள் ஊறுகாய் போல அவ்வப்போது வந்தாலும் தங்களின் மைய அச்சிலிருந்து விலகியபடங்களாக, யதார்த்த சினிமாவாக அவை மிளிர்ந்ததேயில்லை. விளையாட்டை மையப்படுத்தி ஏராளமான ஹ¤லிவுட்டிலிருந்து வந்தது நமக்கு தெரியும். இந்திய சினிமாவில் அதுவும் இந்தி சினிமாவில் அத்தகைய படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இவைகள் மட்டும், ஒரு ஆரோக்கியமான சினிமாவின் வளர்ச்சியில்லையென்றாலும் இவைகள் மாறுதள, யதார்த்த, சூத்திரத்திற்குட்படாத சினிமா எடுத்தலுக்கு விதையாய் அமையலாம் என்பது கவனிக்கப்படவேண்டிய, ஊட்டமுட்டவேண்டிய மைல்கல்லாகிறது. அதுவும் அது வெறும் பரிட்சார்த்த முயற்சியாய் இல்லாமல், வெகுஜன தளத்தின் நட்சத்திர
கதாநாயகனாலே நடிக்கப்பட்டு வியாபார வெற்றி பெறும்போது அதன் முக்கியத்துவம் பன்மடங்காகுகிறது. அதற்குபிறகு வருகிற பரிட்சார்த்த முயற்சிகளுக்கு அதுவே ஒரு திசைகாட்டியாகவும், ஊக்கியாகவும் மாறுவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சினிமாதான் ஸாருக்கான் நடித்த யஸ்ராஸ் பிலிம்மின் சாட்கே இண்டியா..[ தூள் கிளப்பு இந்தியா என்று தோராயமாய் பொருள் கொள்ளலாம்] சக்கை போடு போடும் இந்தப்படம் இந்திய சினிமா கிணற்றில் எல்லா திசைகளிலும் சில,பல சலனங்களை ஏற்படுத்தியதாக கூறுகிறார்கள் சினிமா விமர்சகர்கள். [ இயக்குநர் : சாமிட் அமின், தயாரிப்பாளர் : ஆதித்யா சோப்ரா ; இசை : சலீம் மற்றும் சுலைமான் மெர்சண்ட்]

இந்தக்கதை, மிர் ரன்ஞன் நிகி என்பவரது உண்மைக்கதை என்று சொல்லப்படுகிறது. இந்தப்பட உருவாக்கத்திலும் அவர் உழைத்ததாக செய்தி. மிர்ரின் 1982 ஆசிய கோப்பைக்கான ஹாக்கி விளையாட்டில், பாகிஸ்தானுக்கு எதிரான அவரது விளையாட்டு மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்குப்பிறகு அவர் நமது நாட்டின் ஆண், பெண் ஹாக்கி கோச்சாகி செய்த சாதனைகளின் ஒரு
சின்ன அடிக்கோடே, கற்பனை நீட்சியே , ஸாருக்கானின் (SRK) சக்தே இண்டியா.

லாகனுக்குப்பிறகு, விளையாட்டை அடிப்படையாக கொண்டு ஒரு படம் வெற்றி பெறுவது இந்திய சினிமாவின் ஆரோக்கியமான வளர்ச்சி. கிரிக்கெட்டை நாடே பூசை செய்துகொண்டிருந்த்ததும், நமது மன்னர்களின் உலகக்கோப்பை தொடர் வீழ்ச்சியும், அதனால் ஏன் கிரிக்கெட்டுக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் என்று எழுகிற கேள்வியும், இந்திய நாடு எதிலும் அடிமை ( அண்டர்டாக்) இல்லை என்கிற எண்ணமும் உருப்பெற்று எழுந்ததே இந்தக்கதை.

அவ்வப்போது இந்திப்படங்கள் விளையாட்டை மையப்படுத்தி வந்ததென்றாலும், [ஜோ சித்தா வா சிகந்தர், லாகான்,இக்பால்] அதில் விளையாட்டு வெறும் ஊறுகாயகாத்தானிருக்கும். இக்பால் இதற்கு சற்று விதிவிலக்கு. எனினும் கதாபாத்திரங்களின் விளையாட்டை தவிர்த்த மற்ற நிகழ்ச்சிகளே அதீத மையப்படுத்தலுக்கு உள்ளாகும். ஆனால் சக்தே இண்டியா அதற்கும் விதிவிலக்கு. விளையாட்டு, குழு அமைத்தல், தேசத்திற்கான ஒருமைப்பட்ட எண்ணம், வேற்றுமையில் ஒற்றுமை காணல் போன்றவற்றை போரடிக்காத
நேரான கதைத்தளத்தின் மூலம் சொல்லியிருக்கிறது சக்தே இண்டியா. அடைய முடியாத உச்சங்களை கூட உறுதியான வழிகாட்டல், சீர்பட்ட தொலைநோக்கு திட்டங்கள், ஈகோ தொலைத்தல், கடின உடல் மற்றும் மன உறுதியால் வெல்லுதல் போன்றவற்றால்
அடைய முடியும் என்கிற நீதியை பக்கம் பக்கமாக வசனமின்றி காட்சித்தையல் வித்தை செய்திருக்கிறார் இயக்குநர். தேவையற்ற காட்சிகள், பாட்டுக்கள், வசனங்கள், ஆட்டங்கள் என எதுவுமில்லாமல் நேரிடையான கதை, சுவாரசியமான, பொய்த்திருப்பங்களின்றி, சமரசமற்ற, திரைக்கதை, உலகத்தரமான ஒளிப்பதிவு, நெருடாத இசை இவைகளின் கூட்டுக்கலவையாய் சிலபடங்கள் வந்து ஜெயித்துவிடுவதும் உண்டு. இந்த வெற்றிகள் நடுத்தட்டு பார்வையாளர்களின் ரசனையை ஒரளவிற்கு உயர்த்திகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஸாருக்கின் ஓவர் ஆக்டிங் இல்லாமல் பாத்திரமறிந்து நடிப்பு பிச்சையிட்ட படங்கள் குறைவு. சுவேதிசிக்குப்பிறகு சக்தே அந்த வரிசையில் சேரும்.

ஒவ்வொரு படமும், நபரும் வெற்றி பெறும்போதும், இதனால் அறிவதுயாதெனின் என்றும், இதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய மேலாண்மை தத்துவங்களென்ன என்றும் ஒரு பெரிய மேலாண்மை கூட்டமே ஹார்வார்டு, ஐஐஎம்மிலிருந்தும் மற்ற மேலாண்மை தாதாக்களிடமிருந்தும் கிளம்பும். இதுபோலத்தான் லகான் படத்திற்குப்பிறகும் நிறைய மேலாண்மை பாகவதர்கள் டிசம்பர் சீசனின் இசைமழை போல, கொட்டித்தள்ளினார்கள். நல்லது சொல்வது மாண்டூக உபநிடமோ, ஜென் தத்துவமோ நமக்கென்ன. சரக்குதானே முக்கியம், பாட்டிலையா சாப்பிடப்போகிறோம். ஊரோடு இயைந்து வாழ்வோம், நிறைய கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இந்தப்படத்திற்கு கொண்டுசென்று பார்க்கவைப்பதன் மூலம் தனிமனிதனை விட நிறுவனத்தின் கொள்கைகள் எவ்வளவு இன்றிமையாதது என்றும், அதை அடைய குழுவேலையே சிறந்ததுதென்றும் உணர்த்தமுயற்சிக்கின்றன.

ஊரெல்லாம் மழை. நம் குடைக்குள்ளும் சற்று மழை பெய்யட்டும்.

1. தலைமைக்காரனுக்கு முதல் தவறே, கடைசித்தவறாகவும் அமையலாம். [SRKன் பெனால்டி கோல்]

2. வெற்றி பெற அணிக்கு பலம் தேவையில்லை. அதற்கு முன் வெற்றிக்கான மனம் வேண்டும். வெற்றிக்கான மனத்தை
தயார் செய்வது போல தோல்விக்கான மனதையும் தயார் செய்தாகவேண்டும்.

3. கோல் முதலில் மனதில் அடி. களத்தில் அதுவாகவே நிகழும்.

4. தனி மனித சாதனைகளை விட அணியின் சாதனைகளே முதன்மை பெறல் வேண்டும். தங்களின் வெற்றி மட்டுமே, [கோல்]
முக்கியமென கருதுகிற தனிநபர்கள் ஆபத்தானவர்கள். அவர்களை ஆரம்பித்திலிருந்தே கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.

5. இல்லாததை, கிடைக்காததை நினைத்து புலம்பி அல்லது அதை தோல்விக்கு, இயலாமைக்கு காரணம் காட்டுவதை விட, கிடைத்ததை கொண்டு சாதிப்பது தேவையானது. அதை சரியான விதத்தில் பயன்படுத்தும்போது அசாத்திய வித்தைகள் வெளிவரும்.

6. சொல்லவந்த கருத்துக்களை சின்ன சின்ன உதாரணம் மூலம் விளக்குதல் அவசியமும், முக்கியமும் கூட.

7. தலைமையாளன் தேவையானதுபோது உறுதியாகவும், நெகிழ்வாகவும் பேசுதல் முக்கியம். அவனது வார்த்தைகள் வெறும் எழுத்துக்கள் அல்ல. அவை மூளையிலிருந்து விசயத்தை இருதயத்திற்கு எடுத்து செல்லும் காரியர்கள். [இந்த அறுபது நிமிடங்கள்தான் உங்கள் வாழ்க்கையின் சொத்து. இதை யாரும் உங்களிடமிருந்து பறிக்கமுடியாது. நான் சொல்லப்போவதில்லை, எப்படி விளையாடவேண்டுமென்று. ஆனால் விளையாட்டின் மூலம் நீங்கள் சொல்லப் போகிறீர்கள் எப்படி விளையாடவேண்டுமென்ற்று – SRK]

8. சிதறிக்கிடக்கிற வீரர்கள் குழுவாகாது. குழு மனத்தாலும் கொள்கையாலும் தங்களுக்காக ஒரே குறிக்கோளை கொண்டவர்கள்.
எல்லா வீரர்களின் பலத்தை தேவையான அளவு உபயோகிப்பதன் மூலமும், பலவீனங்களை மற்றவர் கண்ணுக்கு தெரியாது
குறைப்பதன் மூலமுமே வெற்றியின் விலாசத்தின் மீதான பனித்திரை விலகுகிறது.

9. குறிக்கோளின் மீதான வெறி, அளவுகடந்த பாசமே சாதாரணமானவர்களையும், அசாதாரணமாக்கும். வெற்றிகள் பெரும்பாலும்
சாதராண மக்களிடமிருந்துதான் கிளம்புகின்றன. அதுவே மற்றவர்களிடமிருந்து நம்மை பிரிக்கும் முக்கியமான காரணி.( Main
differentiator )

10. சித்தரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். பழகுவோம். மறுபடி பழகுவோம். பழகியதை பகிர்ந்து மறுபடி பழகுவோம்.
பழகும் பழக்கத்தை இடைவிடாது பழகுவோம். [SRKன் கடினமான தொடர்ந்த உடற்பயிற்சி கட்டளைகள் மற்றும் மனப்பயிற்சிகள்,
வீரர்களின் பலம், பலவீனங்களை நேரிடையாக சொல்லுதல் ]

11. பெரிய வெற்றிகள் மட்டுமே கொண்டாடப்படவேண்டுமென எந்த மனுசாஸ்திரத்திலும், மாண்டூக உபநிடததிலுமில்லை. சின்ன
சின்ன வெற்றிகளும் கொண்டாடப்படவேண்டியவையே. வெற்றி மகிழ்ச்சியில் நம் நரம்பில் பாய்கிற மகிழ்ச்சி குழம்பு
நம்மை வெற்றியை நோக்கி வெறியாய் ஒடவைக்கும்.

12. எதிர்பாராதது நடக்கலாம். அவற்றையும் மீறி நடைபோடுதல் அவசியமான ஒன்று. [ஈகோவே உருவான பழைய கேப்டன்,
மற்றவர்க்கு ஒத்துழைக்காதது மற்றுமின்றி மற்ற வீரர்களின் மனத்தை கலைக்கவும் செய்கிறார். தீடிரென அசோசிசன்,
பெண்கள் ஹாக்கியை அனுப்பமுடியாதென்கிறது. வீரர்கள் எல்லாம் தன் கீழ் விளையாடமுடியாதென விண்ணப்பம்
கொடுக்கிறார்கள் ]

13. கடினமான கணங்களில் தெய்வத்தின் அருட்பேராற்றல், தனிப்பெருங்கருணையை வேண்டி நிற்பதன் மூலம் தனக்கான
மனபலத்தை நிறுத்திகொள்ளல் , பிரபஞ்சத்தை, தன்னை தருவித்த அந்த பேராற்றலின் முன் சரணாகதியாய் நிற்றலின் மூலம்
அளவிட முடியா ஆற்றலில் ஒரு துளி பருகல், தன்னை ஐயக்கியப்படுத்திகொள்ள. [ முதல் மேட்சில் மரண அடிவாங்குகிறது இந்தியா ஆஸ்திரேலியாவிடம். நனைகிற மழையில் தனது பழைய வெள்ளி பதக்கத்தோடு அல்லாவை பிரார்த்திக்கிறார் SRK. மனிதனின் பலவ £னமான நேரங்களில் தம்மை மீறிய இறைச்சக்தியிடம் இறைஞ்சுவது. ]

14. திறமைகளை தேவையான நேரங்களில் பயன்படுத்துதல். ஈகோவின்றி குழுவின் தலைவன் தேவைப்படுகி

சில வித்தியசமான காட்சிகள்:
– ‘சொந்த நாட்டிலே விருந்தாளி என அழைக்கப்படுவதில் என்ன சந்தோசமிருக்கமுடியும்.’ என்கிற ஒரு மிசோரத்திலிருந்து
வருகிற ஒரு விளையாட்டு இளைஞியின் குரல் இந்தியாவின் சமச்சீரான வளர்ச்சியின்மையின் வடுக்கள் தெரிகிறது.
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது – தேய்ந்து போன கோசமாயிற்று. நாமெல்லாம் நம்மில் வளராத பீகாருக்கும்,
ஜார்கண்டுக்காகவும், தனித்து செவலைப்பிள்ளையாயிருக்கிற வடகிழக்கு மாநிலங்களுக்காகவும் வருந்தவேண்டாமா.

– ‘எதுவும் மாறவில்லை.. எதுவும் மாறாது.. அதே மாநிலம்.. அதே …வார்த்தைகள் ‘ ஸாருக்கானின் சோகமான மெல்லிய
ஈழையோடும் வருத்தம், தேசிய அரசியல் மட்டுமல்ல, தேசிய விளையாட்டும் மனதால் பிளவுபட்டிருப்பதை காட்ட முயற்சிக்கிறது.
[இனிமேலாவது, தமிழகத்திலிருந்து ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்காரர் கூடயில்லையே என்று புலம்பாமலிருக்க முயற்சிப்போம்.]
விளையாட்டில் அரசியல் அப்பட்டமானது. ஒவ்வொரு மாநிலமும் தனக்கான இடஒதுக்கீடைத்தான்
கேட்கிறதேயொழிய தேசநலனும், வெற்றியும் முக்கியமாக கருதப்படவேயில்லை.

– சினிமாத்தனமான திருப்பங்களின்றி பெண்கள் ஹாக்கி ஆண்கள் டிமிடம் தோற்றுப்போதல். பொதுவாக இதுபோன்ற
காட்சிகளில் பெண்கள் அணி வெற்றிதாக காட்டப்படும். ஆனால் தோற்றுப்போகிற ஆண்கள் அணியின் பாராட்டு அசோசிசனின் மனத்தை மாற்றுகிறது. எதிர்பார்த்த திருப்பங்கள் இல்லாமல் போதலும், எதிர்பாராத யதார்த்த திருப்பங்களும் ஒவ்வொரு காட்சியையும் முக்கியமானதாய் காட்ட முனைகிறது.

– ‘சாக்கா மாதிரி பின்னாலிருந்து அடிக்காதே. ஹாக்கியில் சாக்கா கிடையாது.. ‘ [சாக்கா என்பதற்கு அலி மற்றும் கிரிக்கெட்டின் ஆறு ரன் என்று இரண்டு பொருளுண்டு.

இந்தியாவில் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுக்கள் கார்ப்ப்ரேட்டுகளால் ஸ்பான்சர் செய்யப்படாதது, கவனிக்கப்படாதது ஒர் கவலைக்கிடமான பேரிழப்புதான். கல்வி மற்றும் கட்டுமான துறைகளில் எவ்வாறு தனியார், அரசாங்க கைகோர்ப்பு தேவையோ, அதைப்போலவே, எந்த ஒரு விளையாட்டும் சிறப்படைய வெறுமனே அரசாங்கம் மட்டும் கைதட்டினால் போதாது. ஒரு கை ஒசை எழுப்புவதில்லை. வளர்ந்த நாடுகள் எல்லாம் தங்களது விளையாட்டின் வைட்டமின் எம்மை (M – Money) பெரும்பாலும்
கார்பரேட்டின் லாபங்களிலிருந்துதான் பெறுகின்றன. எந்த ஒரு விளையாட்டும் ஒரு பெரிய பண பலம் பெருந்திய துறையாக மலரும்போதுதான் அது நிறுவனப்படுத்தப்படுகிறது. நிறுவனப்படுத்துதல் மூலம் அதன் வளர்ச்சியின் வேகம், அதிதீவிரமாகிறது. அது எல்லாமட்டத்திற்கும் சென்றடைகிறது. அதுவும் விளையாட்டும், விளையாட்டு சார்ந்த நிறுவனங்களுக்கும் பயனளிக்கிறது. அதற்கான சந்தையும் பெரிதுபடுத்தப்படுகிறது. வருகிற காலம் சந்தைகளின்
காலம், நுகர்வோர்களின் காலம்.

அதன்வாசம், எல்லாதிசைகளிலும் வீசும். எட்டுத்திக்கும் சென்றிடிவீர்.. கலைச்சந்தைகளை கொணர்ந்திங்கு சேர்ப்பீர்..


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி